
கார்போரேட்டுகளில் படித்த அனுபவசாலிகளான பலரும் கூட ரெகுலர் சம்பளம், போனஸ் என்றெல்லாம் அவசியமானவற்றை உதறித்தள்ளி ஸ்டார்ட் அப் முயற்சிகளில் இறங்கி – கூடப் பணி புரிந்தோர்/ஜென் சீ க்களுடன் இணைந்து ரிஸ்க் cum ரிவார்ட் தொழிலகங்களை நடத்தி வரும் காலம் இது.
முயற்சிகள் வெற்றி பெரும் வரை, “இதோ தீபாவளி வந்து விட்டது.. ஹையா ..”.என்று பெருத்த மகிழ்ச்சி என்றெல்லாம் துள்ளிக்குதிக்க முடியாது. நிறுவனம் தொடங்கியோர் சிலர் கூட சில மாதங்கள்/வருடங்களுக்கு தங்கள் சம்பளம் போன்றவற்றை தியாகம் செய்துதான் தொழில் நடத்துகிறார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.சில நிறுவனங்கள் 7 டு 8 ஊழியர்களுடன் தொடங்கி, ஏழெட்டு வருடங்களில் 100 ஊழியர்கள் என்று நிறுவனம் வளர்ந்திருக்கலாம்.
இருந்தாலும், பெரிய அளவிற்கு போனஸ், சம்பளம் என்றெல்லாம் அது வரை கொடுக்க இயலாத சூழல். இத்தகைய சூழலில், தீபாவளிக்கு இவர்களது நிறுவனத்தில் பணிபுரியும் அனைவருக்கும் சிலவருடங்களுக்கு வெறும் இனிப்பு பாக்ஸ்கள்தான் போனஸ். ஆனால், வளர வளர சிறிய சிறிய அளவுகளில் இன்சென்டிவ் என்றெல்லாம் கொடுத்து ஊழியர்களைத் தக்க வைக்கப் பெரும் பாடு படவேண்டிய சூழலும் உள்ளது.வருடங்கள் செல்லச் செல்ல பணி ஆணைகள் (ஆர்டர் புக் )நிலை நிறைய, நன்கு வளர்ந்து வருகிறது என்கிற பாராட்டத்தக்க நிலை வந்தால் கேட்கவே வேண்டாம்…
நிறுவனம் தொடங்கியோர் மற்றும் ஊழியர்களு க்கு பெருத்த அளவில் கை நிறைய சம்பளம், போனஸ் என்றெல்லாம் நிச்சயம் கொடுப்பர். Caterpillar போன்ற நிறுவனங்கள் ESOP எனப்படும் நிறுவனப் பங்குகளை சந்தை விலையை விடக் குறைந்த விலையிலோ அல்லது இலவசப் பங்குகளாகவோ வழங்கி டபுல் தமாகா வாக ஊழியர்களை குஷிப்படுத்தும் நவீன அரங்கேற்றமாக விளங்கி வருகின்றன.
துளிர் விட்டு வளரத் துடிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தொடங்கி ஒரு தசாப்தம் முடிந்த சூழலில், இனிப்புகளுடன் சேர்த்து ஒரு வெள்ளி நாணயத்தைப் பரிசாக வழங்கியுள்ளனர். நிறுவனம் தொடங்கிய காலகட்டத்தில், நிறுவனத்தின் தலை தீபாவளியின் போது மூன்று கிலோ இனிப்பு வாங்கி அதனையே அனைவருக்கும் பகிர்ந்து கொண்டனர். இன்றோ, வெள்ளி நாணயங்களை வழங்கும்போது, ”முன்பெல்லாம் அனைவருக்கும் தீபாவளிப் பரிசுகளை ஏற்பாடு செய்வதே ஒரு பெரிய சவாலாக இருந்த காலம் ஒன்று இருந்தது.
தற்போது Light at end of the tunnel என்ற சொலவடை போல வளரத் தொடங்கி உள்ளோம். வெள்ளி போல வலிமையான, உறுதியான ஒரு அமைப்பை உருவாக்கி யிருக்கிறோம். நமது நம்பிக்கைகளும் கனவுகளும் லட்சியங்களும் தங்கம் போல இன்னும் பிரம்மாண்டமானவை; ஒருநாள் நிச்சயம் அந்த தங்க இலக்கையும் அடைவோம். இது வெறும் தீபாவளிப் பரிசு மட்டுமல்ல; இது நமது பயணம்,நமது வளர்ச்சி மற்றும் நம்மை இதுவரை கொண்டு வந்த அந்த அசைக்க முடியாத நம்பிக்கையின் அடையாளம்.”” என்று நம்பிக்கையுடன் பல தகவல்களை நிறுவன குழுவினரிடம் திறந்த மனதுடன் பகிர்ந்தார்கள்.
பல தசாப்தங்களாக தொழிலில் சக்கைப்போடு போடும் சில பல நிறுவனங்கள் ஊழியர்கள் அனைவரும் தீபாவளியை கொண்டாட வேண்டி ஒரு மாத போனஸ் என்று வழங்குவது வாடிக்கை என்கிற சூழலை பார்த்த ஊழியர்கள் நிர்வாகம் கூறிய பிராக்டிகல் வார்த்தைகளை கேட்டு “வாஸ்தவமான அறிவுரைதான். ஆனாலும், துளிர் விட்டு வளர்ந்து வரும் தமது நிறுவனச் சூழலை நாமும் உணர்ந்து செயல்படுவோம்,” குழுவினரும் நன்கு புரிந்துகொண்டனர்.
அவர்கள் எந்த எதிர்பார்ப்பும் வைக்கவில்லை, கூடுதல் சலுகைகளையும் கேட்கவில்லை. முடிந்ததை வைத்துக்கொண்டு தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாட முனைந்தனர். மிகுந்த நெகிழ்ச்சி தந்த தருணம் இது.
ஒரே வித்யாசம்: நிறுவனம் தொடங்கும்போது எட்டு பேர். இன்றோ அதோ பல்கிப் பெருகி 80 பெருக்கும் மேல். பல மைல் தூரம் கடந்து வந்திருக்கிறார்கள். தொழில் முனைவு என்கிற நாணயத்தின் விடியல் காணவேண்டிய மறுபக்கம் இது.
நன்கு வளர்ந்த நிறுவனங்களுக்கு இடையே சவால்கள் பலவற்றை சந்தித்து முன்னேறத் துடிக்கும் இத்தகைய நிறுவனக் குழுக்களை பாராட்டுவோம்!
- ஆர்.கே.



