vandematharam backim chandrar - 2026

— கீதாஞ்சலி ஆங்மோ
தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்


செங்கோட்டையில் சுதந்திரதின கொண்டாட்டத்தின் போது “வந்தே மாதர”த்தை இசைக்க எண்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இதொரு விசித்திரமான உணர்வை ஏற்படுத்துகிறது. ஒரு நாவலிலிருந்து வெளிப்பட்ட இந்த போர்குரல் தெருக்களில் நுழைந்தது. வலிமையான பேரரசுக்கு கிலியூட்டியது. நெஞ்சுரத்துடன் சிறைச்சாலை சென்றவர்களுடன், தூக்குமேடை ஏறியவர்களுடன் துணை நின்றது. ஆனால் சுதந்திர இந்தியாவின் குறியீடாக இருக்கின்ற செங்கோட்டையை அடைய அதற்கு எண்பது ஆண்டுகள் ஆனது.

ஆனாலும் வாரிசுடைமையாக வந்த இந்த புனிதத்தின் மீது ஆட்சேபனைகளும் எழுப்பப்படுகிறது. பிரபல நடிகை ஷர்மிளா தாகூரும் மற்றும் பலரும், 1937 இல் காங்கிரஸ் செய்ததை போல, அந்த பாடலின் முதல் இரண்டு பத்தியுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்கள். அடுத்தடுத்த பத்திகளில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி போற்றப்படுவதை முஸ்லிம்கள் எப்படி ஏற்று வணங்குவார்கள் ? அந்த பாடல் இடம் பெற்றிருந்த பங்கிம் சந்திர சாட்டர்ஜீயின் ஆனந்த மடத்தில் முஸ்லிம்களின் ஆட்சி மோசமானதாக சித்தரிக்கப்பட்டுள்ளதால் அந்த பாடலை விலக்க வேண்டாமா ? அன்னையாக இந்தியாவை பங்கிம் சந்திரர் கற்பனை செய்த போது இந்தியா என்று ஒரு தேசம் இருந்ததா?

இவை சிறுபிள்ளைத்தனமான கேள்விகள் அல்ல. ஆனால் இதற்கான விடையில்தான் நாம் தொலைத்து விட்டதை மீட்டெடுக்க முடியும். தேசிய அரசு என்ற நவீன கொள்கை இந்திய வரலாற்று நீண்ட காலமாக இல்லை. வேறுவிதமாக இந்தியா தன்னை வடிவமைத்திருந்தது. பாஸ்போர்ட், நாடாளுமன்றம் அல்லது அரசியல் ரீதியான எல்லைகள் எல்லாம் வருவதற்கு முன்பு அது பாரதவர்ஷமாக – பண்பாடு மற்றும் ஆன்மீக பூமியாக – இருந்தது.

விஷ்ணு புராணம் பாரதம் என்பதை சமுத்திரத்துக்கு வடக்கேயும் இமயத்திற்கு தெற்கேயும் உள்ள நிலப்பரப்பு என்று விவரிக்கிறது. இந்த பரந்த பகுதியில் மொழிகள், பழக்கவழக்கங்கள், தெய்வங்கள், தத்துவங்களால் வேறுபட்ட போதிலும் இவற்றின் அடிநாதமாக ஒரே கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. எது இறுதியான உண்மை ? அதை எத்தனை மனிதர்கள் அறிந்திருக்கிறார்கள் ? என்பதே அது . காஷ்மீரம் தனது சைவத்தின் மூலம் இதற்கு பதில் அளித்தது. கர்நாடகம் மத்வரின் துவைதம் மூலமாக, துவாரகை கிருஷ்ணனை வழிபடுவதன் வழியாக பதில் அளித்தன.

ALSO READ:  எல்லைக்கு உள்ளும் புறமும்… பிரதமரை குறி வைக்கும் அபாயம்!

இந்தியா தன்னை அறிந்து கொள்ள தேசிய அரசு என்ற நவீன கொள்கை வரும் வரையில் காத்திருக்கவில்லை. ஆயிரக்கணக்கான கேள்விகளை, எண்ணற்ற வழிகளில் எழுப்புகின்ற நாகரீகத்தில் அவளது ஒற்றுமை உறைகிறது. இந்த இடத்தில்தான் ஸ்ரீ அரவிந்தர் “வந்தே மாதரம்” என்பதை புரிந்து கொள்ள நமக்கு உதவுகின்றார். இந்தியாவை கண்டுகொள்ள இந்தியர்களுக்கு கற்றுக் கொடுத்த ‘ரிஷி’ பங்கிம் சந்திரர் என்கிறார். “மந்திரம் கொடுக்கப்பட்டது….. அன்னை தன்னை வெளிப்படுத்தினாள் ” , என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.

அன்னை எப்படிப்பட்டவள் ? பங்கிம் சந்திரர் பாடலை மீண்டும் பாருங்கள். அவள் முதலில் ஆயுதங்கள் இல்லாமல், மணிமுடி இல்லாமல், கோபுரங்கள் இல்லாமல் வருகிறாள் . அவள் சுஜலாம் சுபலாம் : நீர் வளம், நிலவளம் மிகுந்தவள் . குளிர் தென்றல், பசுமையின் செழிப்பு, தன்னிலவொளியும் மலர்களை சொரியும் மரங்களையும் கொண்டவள். ஏனென்றால் அவள் தெய்வம். நம் காலுக்கடியில் இருக்கும் பூமி தெய்வம்.

குழந்தை பருவத்தில் மனதில் நிற்கும் நதி, பாட்டி கதைகள் சொன்ன மொழி, முதல் மழையின் மணம், உணவு, இசை, மலைகள், விழாக்கள், நினைவுகள் இதுபோன்ற நெருங்கிய உறவில்தான் தேசபக்தி ஆரம்பமாகிறது . மெதுவாக இந்த புவிப்பரப்பு நம்முடையதென்ற உணர்வு வருகிறது. பிறகு இந்த பூமி நம் அன்னையாகிறாள்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

ஸ்ரீ அரவிந்தர் இதை மேலும் விரித்தெடுக்கிறார். ஒரு தேசம் என்பது ‘துண்டு நிலம்’ அல்ல. அது பற்பல கோடிகளின் சக்தி. அதன் மக்களால், பண்பாட்டால், நாகரிகத்தால், பெரும் விழைவால் உயிர்ப்பு பெறுகிறது என்கிறார். இது பங்கிம் சந்திரரின் துர்கை, லட்சுமி, சரஸ்வதியை நாம் புரிந்து கொள்ள உதவுகிறது.

சாதாரணமாக படிக்கும் போது மூன்று ஹிந்து பெண் தெய்வங்களை காண்கிறோம். மற்றொரு தொலைக்காட்சியில் விவாதம் தவிர்க்க முடியாததாகிறது. ஆனால் இந்தியா எப்போதும் குறியீடுகள் மூலமாக பேசுகிறது. துர்கை என்பது வலிமை , லட்சுமி வளமை, சரஸ்வதி என்றால் அறிவு.

வல்லமை, செழிப்பு, அறிவு இம்மூன்றையும் தேவையில்லையென எந்த நாகரிகம் சொல்கிறது? தைரியம் வேண்டும் என்பதற்காக ஒரு முஸ்லிம் துர்கையை வழிபடத் தேவையில்லை. இந்தியா வளமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு கிறிஸ்தவர் லட்சுமியை வணங்க வேண்டியதில்லை. ஞானத்தை அடைவதற்காக ஒரு நாத்திகர் சரஸ்வதியை கும்பிட வேண்டியது இல்லை. இந்த உருவங்கள் கலாச்சார ரீதியாக இந்தியா இவற்றின் மூலம் குறிப்பிடப்படுவது அனைவருக்கும் பொதுவானவை.

‘ வந்தே மாதர’த்தை மத சண்டையாக குறுக்குவது சோகமானது. ஒருவர் ஹிந்து பெண் தெய்வத்தை பார்த்ததும் அதை விலக்க நினைக்கிறார். மற்றொருவர் ஹிந்து பெண் தெய்வத்தை பார்த்தால் தான் ஒதுக்கப்பட்டதாக கருதுகிறார். ஆனால் அவள் ‘பல கோடிகளின் சக்தி’ என்றால் . முஸ்லிம் விவசாயி, கிறிஸ்துவ செவிலியர், சீக்கியர் ராணுவ வீரர், ஜெயின வியாபாரி, புத்தபிக்கு ,இறை நம்பிக்கையற்ற அறிவியலாளர் இவர்களெல்லாம் யாருடைய இந்தியாவிலோ விருந்தினராக இருக்கவில்லை. அவளின் அங்கமாக இருக்கிறார்கள்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு; பக்தியும் பாதுகாப்பும்!

எனவேதான் செங்கோட்டை கணம் முக்கியமாகிறது. இப்போது எல்லோரும் “வந்தே மாதரம்” பாட வேண்டும் என்பதற்காக அல்ல. அந்த பழைய பாடல் நம் எதிர்காலம் குறித்த கேள்வியுடன் திரும்பி வருகிறது. அந்த இரண்டு சொற்கள் நம்மிடம் கேட்பது என்ன ?

இந்தியா என்பது வெறும் நிலப்பரப்பு, மாற்றிக் கொள்ளக்கூடிய குடியுரிமை என்றால் என்னுடைய உரிமைகள் என்னென்ன ? எனக்கு என்ன கிடைக்கும் ? மாறாக இந்தியா என்றால் அன்னை எனும்போது தேசபக்தியின் இலக்கணம் மாறிவிடுகிறது. உரிமைகள் அப்படியே இருக்கின்றன. ஆனால் கூடவே கடமையும் வந்து விடுகிறது. ‘இந்தியா எனக்கு என்ன செய்தது?’ என்ற கேள்வி மாறி ‘இந்தியாவுக்கு நான் என்ன கொடுக்க முடியும் ? ‘, என்றாகி விடுகிறது.

இதுதான் பங்கிம் சந்திரரின் இரண்டு சொற்களில் நீடிக்கும் சக்தி. அது தேசத்தை வழிபட அறிவுறுத்துவது அல்ல, மாறாக அவளுடன் உறவு கொண்டாட அழைப்பு விடுக்கிறது. தேசிய அரசு என்பது புதிய கருத்தாக இருக்கலாம். அன்னை தொன்மையானவள். அந்த உறவு புனிதமானது. எனவே நாம் அவளை வணங்குகிறோம்.
வந்தே மாதரம்

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

கட்டுரையாளர் லதாக்கில் உள்ள இமாலயன் இன்ஸ்டிடியூட் ஃபார் ஆல்டர்னேட்டிவ் நிறுவனர்
லதாக்கைச் சேர்ந்த சமுக செயற்பாட்டாளரான சோனம் வாங்சுகின் மனைவி என்பது கூடுதல் தகவல்


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending