
கவிதை: ஒருநாள் மாசு
தெலுங்கில்: உஷா துரகா ரேவல்லி.
தமிழில்: ராஜி ரகுநாதன்
பிளாஸ்டிக் கவர் எடுத்த ஒவ்வொரு முறையும்..
மோசமான மாசு!
தெரு முனைக்குச் செல்வதற்கு
கார் எடுத்தால் மாசு!
தேவையில்லாமல் மின் விளக்கு…
அணைக்காமல் ஏசி…
நிற்காமல் ஒழுகும் குழாய்…
கண்டுகொள்ளாமல் இருப்பது…
மாசு மாசு மாசு…!
மரம் வெட்டுவதைப் பார்த்தும்
சும்மா இருப்பது …
கின்லே பாட்டில் கீழிறக்காமல்
குடித்து வீசியெறிவது …
ஆபீஸ் பிரிண்டரில் குப்பல் குப்பலாக
பிரிண்ட் அவுட்டுகள்…
அவசரமாக எடுத்தெறியும் டிஷ்யூக்கள் …
டன் கணக்கில் குப்பை…
மைல் தூரத்திற்கு அடைந்த சாக்கடை…
எல்லாம் மாசு… மாசுதான்!
சுற்றுச்சூழல் மீது அக்கறை
ஓர் இரவுக்கே அன்று…
மாசு மீது அக்கறை
ஒரு ஸ்பூன் போதாதே!
பண்டிகைகளுக்கு ஒரு பாரம்பரியம் உண்டு…
ஒரு காரணமும் உண்டு…
புரிந்து கொள்ள வேண்டும்!
இல்லாவிடில் …
ஊர், பெயர், இருப்பு இல்லாத
வெற்றுக் காகிதமாகிப் போவோம்!
நம் வாழ்வே மாசு…
நம் பழக்கங்களே பூமிக்கு சாபம்…!
சுற்றுச்சூழல் மீது அக்கறை இருந்தால்
ஒவ்வொரு நாளும் …
ஒவ்வொரு கணமும்
விழிப்பு நம்முள் தலை தூக்கியிருக்கும்!
கொஞ்சமாவது ரோஷம் இருந்திருந்தால்
நம் இருப்பை சரியாக
அடையாளம் காண்போம்…
பாதுகாத்துக் கொள்வோம்!
பண்டிகை கொண்டாடாவிட்டால்
விட்டு விடுங்கள்…
அது அவரவர் இஷ்டம்!
அதற்கு காரணம் கூறுவது
மிகப் பெரும் நஷ்டம்!
கையாலாகாத விட்டேத்தியான வாழ்வுக்கு
கோழைத்தன மனசுக்கு
எந்த மாசானால் தான் என்ன?