அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

Published:

kadeswara subramaniam hindu munnani - 2026

தமிழக அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் போல செயல்படுவதை கண்டிப்பதாக, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் எதிர்கட்சிகள் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில் நேற்று அவசரஅவசரமாக தமிழக அரசின் உள்துறை செயலர் மற்றும் காவல்துறை டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்து பத்திரிக்கை சந்திப்பு நடத்தினர்.

அதில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய தகவல்களை எல்லாம் தெரிவித்து அரசியல்வாதிகள் போல பேட்டி அளித்தது அதிர்ச்சி இருக்கிறது.

மாநில அரசின் நடவடிக்கையை சென்ற ஆட்சியுடன் ஒப்பீடு செய்வது அரசியல்வாதிகளின் செயல்பாடு. அதனை அரசு அதிகாரிகளை கொண்டு தமிழக அரசு செய்ய வைத்துள்ளதை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

காவல்துறை அதிகாரிகள் ஆளும்கட்சியின் ஏவல்துறை போல தங்களது சுதந்திரத்தை இழந்து நிற்பது இதன்மூலம் வெட்ட வெளிச்சமாகிறது. மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை கண்டு மக்கள் வெகுண்டெழும்போது அதனை சமாளிக்க பொய்யான தகவல்களை தெரிவித்து மக்களை திசைதிருப்ப அதிகாரிகளே அரசியல் செய்வது ஏற்புடையது அல்ல.

இன்றும் காவல்துறையின் சட்டமீறல்கள், லாக்கப் மரணங்கள், பொதுமக்களை பகிரங்கமாக மிரட்டும் காணொளிகள் சமூகவலைதளங்களில் வந்தபோதும் காவல்துறை உயரதிகாரிகளும், தமிழக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேசத்திற்கு அச்சுறுத்தலான மதஅடிப்படை பயங்கரவாதிகள் தமிழ்நாட்டில் சுதந்திரமாக நடனமாடுகிறார்கள். கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் முன்பு நடந்த சிலிண்டர் வெடிகுண்டு வழக்கை திசைதிருப்ப நடந்த நாடகம் இதற்கு எடுத்துக்காட்டு.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் பயங்கரவாதிகள் தேசிய பாதுகாப்பு படையால் (NIA) தான் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக நுண்ணறிவு பிரிவு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

சிறைச்சாலை முதல் காவல்நிலையம் வரை அலுவலகத்தில் புகுந்து தாக்கும் அளவிற்கு குற்றவாளிகள் பயமின்றி நடமாடுகின்றனர். நீதிமன்றத்தில் கொலைகள் இந்த ஐந்தாண்டுகளில் தான் அதிகம் நடைபெற்றுள்ளது. இஸ்லாமிய பயங்கரவாதிகள் , கூலிக்கு கொலை செய்யும் குற்றவாளிகள் தமிழகத்தில் பெருகியுள்ளனர்.

பல வழக்குகளில் புகாரை பதிய காவல்துறை மறுத்ததுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதனால் வழக்குகள் குறைந்தது போல் தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறது தமிழக அரசு. காவல்துறை காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்ததை நீதிமன்றம் கண்டித்தது எல்லாம் நாம் கண்ட உண்மை தானே! இவையெல்லாம் காவல்துறைக்கு கிடைத்த விருதுகளா?

நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதித்து நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, மன்னிப்பு கேட்டு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கெஞ்சியதும் இந்த ஐந்தாண்டுகளில் தானே நடந்தது. அதேசமயம் நீதிமன்றத் தீர்ப்பு என்று காரணம் காட்டி மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தி தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகமாக பயன்படுத்தி பல கோவில்களை இடித்ததும் இதே ஐந்தாண்டுகளில் தான்.

ஆளும்கட்சி ரவுடிகள் பத்திரிகையாளர்களை கடத்தியதும், செய்தியாளர்களை தாக்குவதும், பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுப்பதும் அனைவரும் அறிந்ததே. அத்தகையோர் மீதும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிலும் கனிமவள கொள்ளையர்களுக்கு உடந்தையாக இருந்தது தானே உண்மை.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

ஆளும்கட்சியின் ஆதரவோடு பெட்ரோல் குண்டு வீசி அச்சுறுத்தும் போக்கு நடைபெற்றதும் இந்த ஐந்தாண்டுகளில் தானே! அத்தகைய குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

கஞ்சா முதலான போதை பொருட்கள் கல்லூரி, பள்ளி மாணவர்கள் வரை கொண்டு செல்வது பகிரங்கமாக நடக்கிறது. அதற்கு ஏஜெண்ட்கள் நியமிக்கும் அளவு போதை தொழில் வளர்ந்துள்ளது. ஆனால் இது எல்லாம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியவில்லை என்பது யாரை காப்பாற்ற?

அண்ணா பல்கலைக்கழகம் முதல் விளாத்திகுளம் வரை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் ஏராளம். ஆனால் இதில் காவல்துறையின் நடவடிக்கைகள் தாமதமாக காரணம் என்ன?

கடந்த ஐந்தாண்டுகளில் போதையால் நடந்த கொலை, கொள்ளை, கத்திகுத்து மனித உயிர்ப்பு அதிகம். ஆனால் காவல்துறைக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத நிலையில் இவற்றின் மீது யார் நடவடிக்கை எடுப்பார்கள்?

கடந்த ஐந்தாண்டுகளில் திமுக அரசுக்கு எதிராக ஆதாரப்பூர்வமாக கருத்திட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மீது காவல்துறை வழக்கு தொடர்ந்து கைது செய்தது.

அதேசமயம் பிரதமர் மீதும் நீதிபதிகள் மீதும் இந்திய குடியரசு தலைவரைக் கூட அவமதித்தவர்கள், அவதூறாக கருத்து பதிந்தவர்கள் மீது புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒருதலைப்பட்சமாக தான் காவல்துறை ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது.

இந்துமுன்னணி உட்பட பல அமைப்புகள் ஜனநாயக வழியில் ஆர்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தே வந்துள்ளது. நீதிமன்றத்தின் மூலமே அனுமதி பெற்றே ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. ஆனால் ஆளும்கட்சி அதன் கூட்டணி கட்சியினர் எவ்வளவு ஆபாசமாக, தேசத்திற்கு எதிராக பேசினாலும் வழக்கு பதிய வில்லையே.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

இதுபோல் காவல்துறையின் நூற்றுக்கணக்கான செயல்பாடுகள் மக்களின் கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு காவல்துறையின் கைகள் ஆளும் கட்சியின் அதிகாரத்தால் கட்டப்பட்டு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

எனவே காவல்துறை அதிகாரிகள் அரசியல் காரணங்களுக்காக பலிகடா ஆக்கப்படுவதை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் போல செயல்படக்கூடாது.

அரசியல் வாதிகள் அதிகாரம் ஐந்தாண்டுகள் தான். அரசு அதிகாரிகள் பதவி, அதிகாரம் என்பது மக்களின் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Related articles

Recent articles

spot_img