
‘மனதின் குரல் (136ஆவது பகுதி)’
ஒலிபரப்பு நாள் : 26.07.2026
தமிழில் / குரல் : ராமஸ்வாமி சுதர்ஸன்
இந்த செய்தி / கட்டுரையின் உள்ளே…
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை.
ஊக்கம் அளிக்கும் வெற்றித் திருநாள்!
இன்று, ஜூலை மாதம் 26ஆம் தேதி அப்படிப்பட்டதொரு தேதியாகும். இன்று தான் கார்கில் விஜய் நன்னாள்-வெற்றித் திருநாள். இந்த நாள் நமக்குள்ளே பெருமிதத்தை இட்டு நிரப்பி விடுகிறது. இந்த நாளன்று நாம் நமது தீரம்நிறை வீரர்களின் அற்புதமான சாகஸத்தை நினைத்துப் பார்க்கிறோம். கார்கிலின் உயரமான சிகரங்கள், கடினமான பருவநிலை, எதிரிகளின் சவால் என, அனைத்துச் சூழ்நிலைகளையும் நமது இராணுவவீரர்கள் எதிர்கொண்ட அதே வேளையில் அவர்களுடைய நெஞ்சுரம் அனைத்துச் சவால்களையும் விட மிகப் பெரியதாய் இருந்தது. அவர்கள் பாரத அன்னையைப் பாதுகாக்க தங்களுடைய அனைத்தையும் அர்ப்பணித்திருந்தார்கள். இன்று கார்கில் வெற்றித் திருநாளன்று அனைத்து வீரம்நிறை உயிர்த்தியாகிகளுக்கும், இராணுவ வீரர்களுக்கும் சிரத்தையுடன்கூடிய வணக்கங்களைச் செலுத்துகிறேன்.
ஒரு பயணம், ஒரு தேசம், ஒரு வணக்கம்
நண்பர்களே, இன்றைய பாரதம் தனது வீரர்களை நினைவு கொள்வதோடு கூடவே, புதிய தலைமுறையினர் வரை அவர்களின் சாகஸங்களைக் கொண்டு செல்லவும் செய்கிறது. இந்த உணர்வோடு தான், இந்த ஆண்டு, சிறப்பானதொரு ’ஷௌர்ய விஜய் யாத்ரா, அதாவது துணிச்சல் வெற்றிப் பயணம்’ மேற்கொள்ளப்பட்டது. ஜூலை மாதம் 14ஆம் தேதியன்று தில்லியின் தேசிய போர் நினைவகத்திலிருந்து தொடங்கிய இந்த மோட்டார்சைக்கிள் பயணம், த்ராஸில் உள்ள கார்கில் போர் நினைவகம் வரை பயணிக்கும். இது தாங்கிச் செல்லும் செய்தி என்னவென்றால், “ஒன் ரைடு, ஒன் நேஷன், ஒன் சல்யூட்”, அதாவது ஒரு பயணம், ஒரு தேசம், ஒரு வணக்கம். தேசத்திற்காக அளிக்கப்பட்ட உயிர்த்தியாகம் என்றும் மறக்கப்படாது என்பதையே இந்தப் பயணம் நமக்கு நினைவூட்டுகிறது.
பாரதத்தின் தொழில்நுட்பத் திறன்
நண்பர்களே, இன்று பாரதம் தனது இராணுவ வீரர்களின் சாகஸத்தோடு கூடவே, தனது தொழில்நுட்பத் திறனையும் தொடர்ந்து பலப்படுத்திக் கொண்டு வருகிறது. சில நாட்கள் முன்னதாக, பாரதநாட்டுக் கடற்படையோடு ஐ.என்.எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பல் இணைக்கப்பட்டது. இந்த நவீன போர்க்கப்பல், பாரத நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, பாரதத்திலேயே தயாரிக்கவும்பட்டது. இதிலே 75 சதவீதத்துக்கும் அதிக அளவிலே உள்நாட்டுத் தயாரிப்புப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுவே தற்சார்பு பாரதத்தின் பெருகிவரும் சக்தியின் அடையாளம். இந்த மாதத்திலேயே டிஆர்டிஓ நிறுவனமானது, பினாகா தொலைதூர வழிநடத்தப்படும் ராக்கெட் ஏவுகணையையும் வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. இந்த வெற்றியின் பின்னணியில் நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் கூட்டுமுயற்சி இருக்கிறது. 2-3 நாட்கள் முன்பாகத் தான் டிஆர்டிஓ நிறுவனம், குஷா ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்திருந்தார்கள்.
நண்பர்களே, இன்று பாதுகாப்புத்தளவாட உற்பத்தியாகட்டும், அவற்றின் ஏற்றுமதியாகட்டும், அல்லது நட்பு நாடுகளோடு ராஜீய ஒத்துழைப்பாகட்டும், பாரதம் தொடர்ந்து புதிய சிகரங்களை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்கிறது. இந்த மாதத் தொடக்கத்திலே, நான் இந்தோனேசியா பயணித்திருந்தேன்; அங்கே ப்ரம்மோஸ் மற்றும் ஆயுத ஏவுகணைகளுக்கான ஒரு பெரிய புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டது. பாரதத்தின் பாதுகாப்புத் தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான உலகின் நம்பிக்கை வளர்ந்து வருகிறது. இந்த கார்கில் வெற்றித் திருநாளன்று நாம் நமது அமரத்துவம் பெற்ற உயிர்த்தியாகிகளை நினைவில் ஏத்துவோம்; பாதுகாப்பான, திறமைமிகுந்த, தற்சார்பு நிறைந்த பாரதத்தைப் படைக்கும் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துவோம், வாருங்கள்!!
கிடைக்கும் மழை நீரை சேகரிப்போம்
என் மனம்நிறை நாட்டுமக்களே, மனதின் குரலின் கடந்த பகுதியில், கேட்ச் தி ரயின் – மழைநீரைச் சேகரிப்போம் இயக்கம் பற்றி விவாதித்திருந்தேன். பருவமழையின் ஒவ்வொரு சொட்டையும் பாதுகாக்க, இந்த இயக்கத்தை மக்கள் இயக்கமாக ஆக்க வேண்டும் என்றும் நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன். ”மழைநீரை சேகரிப்போம்” என்பது தரும் செய்தி மிகவும் எளிமையானது – எங்கே மழை பொழிகிறதோ, எப்போது அது பொழிகிறதோ, அந்த நீரை அங்கேயே சேமியுங்கள்; ஆகையால் ஜூலை மாதம் 4ஆம் தேதி தொடங்கி தேசமெங்கும் ஒரு விசேஷமான இயக்கமும் நடைபெற்று வருகிறது. இதன்படி, மழைநீர் சேகரிப்பு, நிலத்தடிநீரின் மறுசெறிவு, பழைய நீர்நிலைகளுக்குப் புத்துயிரூட்டல் மற்றும் மரம் நடுதல் ஆகியவற்றுக்கு புதிய வேகம் அளிக்கப்பட்டு வருகிறது. கிராமம் ஆகட்டும் நகரமாகட்டும், பஞ்சாயத்தாகட்டும், சமூக அமைப்புகளாகட்டும், அனைத்து இடங்களிலும் மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு பங்கெடுத்துக் கொண்டார்கள். பழைய நீர்நிலைகளிலிருந்து வண்டல் வெளியேற்றப்பட்டது, சில இடங்களில் குளங்கள்-ஏரிகளுக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது. மூடிக்கிடந்த ஆழ்குழாய்க் கிணறுகள் இப்போது நிலத்தடி நீர் மறுசெறிவூட்டலுக்கான ஊடகமாக ஆகிவருகின்றன.
நண்பர்களே, மத்திய பிரதேசத்தின் சீதீ மாவட்டத்திலே சுமார் 1,500 ஏரிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. நரசிங்க்புரிலே அமுத நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டிருக்கின்றன. மகாராஷ்டிரத்தின் நாசிக்கில் நீரைச் சேமிக்கும் திறன் பெரிய அளவிலே மேம்படுத்தப்பட்டிருக்கிறது. ஆந்திர பிரதேசத்தின் நந்தியாலிலே அனைத்து கிராமப் பஞ்சாயத்துக்களும் இந்த இயக்கத்தில் இணைந்திருக்கின்றன, பழைய குளங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வருகின்றன. நமது நகரங்கள் ஒன்றும் பின்தங்கிவிடவில்லை. சத்திஸ்கட்டின் கோர்பா, ஓடிஷாவின் புவனேஸ்வர், ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் ஆகியன இந்த இயக்கத்தில் உற்சாகமளிக்கும் விளைவுகளை வெளிப்படுத்தி வருகின்றன. நாமும் கூட அக்கம்பக்கத்தில் இருக்கும் குளங்கள், ஏரிகள் அல்லது கண்மாய்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்வோம், ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிப்போம் வாருங்கள். இன்று சேமிக்கப்படும் நீரின் ஒவ்வொரு சொட்டும், வரவருக்கின்ற தலைமுறையினரின் எதிர்காலத்திற்கான மிகப்பெரிய முதலீடாகும்.
நெஞ்சம் நிமிர்த்திய இளைஞர் படை
என் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக, கிளாஸ்கௌவிலே காமன்வெல்த் போட்டிகள் தொடங்கின. நாட்டுமக்கள் அனைவரும் பாரதநாட்டின் அணிக்குத் தொடர்ந்து நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தவண்ணம் இருக்கின்றார்கள். அனைத்து விளையாட்டு வீரர்களும், தடகளவீரர்களும் மிகச் சிறப்பாகச் செயல்பட வேண்டும், மக்களின் இதயங்களைக் கொள்ளை கொள்ள வேண்டும் என்பதே அவர்களுடைய ஆசையாக இருக்கிறது. நண்பர்களே, நமது இளைஞர்கள் அண்மை நாட்களில் விளையாட்டுக்களில் பல அருமையான சாதனைகளைப் புரிந்திருக்கிறார்கள். பி.வி. சிந்து, ஜப்பான் ஓப்பன் பூப்பந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்ற முதல் பாரத நாட்டுப் பெண்ணாக ஆகியிருக்கிறார். அவரது இந்தச் சாதனையானது ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறது. பாரதநாட்டுப் பெண் கிரிக்கெட் அணியும் கூட லண்டனின் லார்ட்ஸ் அரங்கத்தில் தனது முதல் டெஸ்ட் ஆட்டத்தில் வென்றிருக்கிறது. இது ஒரு வரலாற்று வெற்றியாகும். நமது அணியானது 270 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியை ஜெயித்திருக்கிறது. ஆனால் விஷயம் இது மட்டுமல்ல. லார்ட்ஸின் நீண்ட வரலாற்றிலே இது பெண்கள் அணியின் முதல் டெஸ்ட் பந்தயமாகும். 1983ஆம் ஆண்டிலே இதே மைதானத்தில் பாரதம் தனது முதல் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது. இப்போது நமது பெண்சக்தி, இங்கே தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறது.
சம்ஸ்கிருத கிளப் எனும் வித்தியாச முயற்சி
நண்பர்களே, சில சின்ன முயற்சிகள் கூட பெரும் முக்கியத்துவம் பெறுகின்றன. கேரளத்தின் எர்ணாகுளத்தின் தெற்கு சிட்டூரில் விளையாட்டுக்கள் தொடர்பாக இப்படிப்பட்ட ஒரு முயற்சி பற்றி நான் கேள்விப்பட்டேன். அங்கே ஒரு பள்ளியிலே சம்ஸ்கிருத க்ளப் இருக்கிறது. இங்கே இருக்கும் ஆசிரியரான அபிலாஷ் அவர்கள், மிகவும் வித்தியாசமான முறையிலே சம்ஸ்கிருதத்தை பிரபலப்படுத்தி வருகிறார். இந்தத் திட்டத்திற்கு அக்ஷர்கந்துக் என்று பெயரிட்டிருக்கிறார். இதிலே சம்ஸ்கிருதத்தின் எழுத்துக்களை கால்பந்தாட்டத்தில் பயன்படுத்தப்படும் சொற்களோடு இணைத்து எளிமையான வகையிலே புரியவைக்கப்படுகிறது. இதன் மூலம் கற்கும் ஆனந்தம் கிடைக்கிறது, அதோடு கூடவே விளையாட்டுக்களோடு மக்களுக்கு உறவும் அதிகப்படுகிறது.
தனியார் துறையிலும் தனித்துவ வெற்றி
என் மனம்நிறை நாட்டுமக்களே, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று விக்ரம்-1இன் வெற்றிகரமான ஏவுதல் நாட்டுமக்கள் அனைவரின் மனங்களையும் பெருமையால் நிரப்பியது. விண்வெளித்துறையின் இந்த வரலாற்றுரீதியான கணத்தின் சாட்சிகளாக பாரதநாட்டவர்கள் நாமனைவரும் இருந்தோம். இது தனியார் துறை வாயிலாக மேம்படுத்தப்பட்ட பாரதத்தின் முதல் ராக்கெட் ஆகும். கற்பனை செய்யக்கூடக் கடினமான இதனை, நமது இளைய தலைமுறை புதுமைகள் படைப்போர் செய்து காட்டியிருக்கிறார்கள். அவர்கள் அலாதியான திறன், பேரார்வம் மற்றும் பொறுமையை வெளிப்படுத்தினார்கள். நீண்ட காலம்வரை நமது விண்வெளித்துறை, தனியாருக்கு மூடப்பட்டு இருந்தது. இந்தத் துறையில் ஆர்வம் கொண்ட பல இளைஞர்களுக்குத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைக்காமலேயே இருந்தது. இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நாங்கள் விண்வெளித்துறையை தனியாருக்காகத் திறந்து விட்டோம். இன்று இதன் விளைவு என்னவென்பதை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது.
பெருமை கொள்ள வைக்கும் இளைஞர் திறன்
நண்பர்களே, அறிவியலிலும் கூட நமது இளைய நண்பர்கள் பாரதத்தைத் தலைநிமிரச் செய்திருக்கிறார்கள். அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகள் என்பன உலகின் மிகவும் மகத்துவம்வாய்ந்த போட்டிகளில் ஒன்றாகும். இவற்றிலே அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பங்கெடுக்கிறார்கள். இந்த மாதம்தான் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகியவற்றின் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் பாரதநாட்டு அணியின் செயல்பாடு அருமையாக இருந்தது. இயற்பியல் ஒலிம்பியாடிலே நமது அனைத்து ஐந்து மாணவர்களும் தங்கப் பதக்கம் வென்றார்கள், பாரதம் முதல் இடத்தைப் பிடித்தது. கடந்த பத்தாண்டிலே நடந்த அனைத்து இயற்பியல் ஒலிம்பியாடிலுமே நமது நாட்டின் மாணவர்கள் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கங்களைக் கண்டிப்பாக ஜெயித்து வந்திருக்கிறார்கள். வேதியியல் ஒலிம்பியாடிலும் கூட நமது அனைத்து மாணவர்களும் தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். இதுவரையிலான ஆகச்சிறந்த செயல்பாடு இது. உயிரியல் ஒலிம்பியாடிலும் கூட நமது மாணவர்கள் அனைவரும் பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். இவற்றிலே ஒரு தங்கப் பதக்கமும் அடங்கும். அதேபோல, கணித ஒலிம்பியாடிலேயும் கூட நமது மாணவர்கள் இரண்டு தங்கப் பதக்கங்களையும், நான்கு வெள்ளிப் பதக்கங்களையும் வென்றிருக்கிறார்கள். தேசத்தின் இளைஞர் சக்தி மீது எனக்கு ரொம்பப் பெருமையாக இருக்கிறது. பாரதத்திலே ஒலிம்பியாடுகள், ஹேக்கத்தான்கள் ஆகியவற்றின் கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது பேருவகையை அளிக்கிறது. தேசத்தின் அதிக அளவிலான இளைஞர்கள் இப்படிப்பட்ட மேடைகளிலும் தங்களுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தி, பாரதத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
கலக்கலான காஷ்மீர் கம்பளம்
என் உளம்நிறை நாட்டுமக்களே, திறனும் இருக்கிறது, சாதிக்க வேண்டும் என்ற பேரார்வம் இருக்கிறது எனும் போது, அனைத்துப் பாதைகளும் எளிதாகி விடுகின்றன. கஷ்மீரின் பாரம்பரியமான கம்பளமான ”வகூ” தொடர்பாக இப்போது மேற்கொள்ளப்படும் முயற்சியிலே, இது பளிச்சிடுகிறது. கோரை மற்றும் வைக்கோலைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த கம்பளத்தைத் தயாரிக்கும் பாரம்பரியம் பல்லாண்டுகள் பழமையானது. இதற்காக முதன்மையாக, கஷ்மீரின் சதுப்புநிலப் பகுதிகளின் புற்கள் மற்றும் கோரைகள் வெட்டப்படுகின்றன. வெயிலில் உலர்த்தப்பட்ட பிறகு வகைப்படுத்தப்படுகின்றன. இதன் பிறகு கைகளால் நெசவு செய்யும் பணி தொடங்குகிறது.
ஒரு கம்பளத்தைத் தயாரிக்க இரண்டு கைவினைஞர்களுக்கு சுமார் நான்கு நாட்கள் பிடிக்கிறது. இந்தக் கம்பளம் அலாதியானது, சூழலுக்கு இசைவானதும் கூட. ஒரு பெரிய விசேஷ அம்சம் என்னவென்றால், கோடையிலே இது குளிர்ச்சியை அளிக்கும், குளிர்காலத்திலே வெப்பத்தைத் தரும். முதலில் இது கஷ்மீரின் ஒவ்வொரு வீட்டிலும் காணப்பட்டது ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இதன் பயன்பாடு குறையத் தொடங்கியது. இந்த நிலையில் ஸ்ரீநகரின் குலாம் ஹுசேன் அவர்களும் அவருடைய மகளான தஞ்ஜீலா அவர்களும் ஒரு உறுதி பூண்டார்கள். இருவரும் வகூ கைவினைத்திறன் பாரம்பரியத்திற்கு ஒரு புதிய வாழ்க்கை அளிக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாக்கிக் கொண்டார்கள்.
குலாம் ஹுசேன் அவர்கள் மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்தப் பணியிலே அவர் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவருடைய இந்த முயற்சியில் பலர் இணையத் தொடங்கினார்கள். குலாம் ஹுசேன் அவர்கள் இந்தத் திறமையை மேலும் முன்னெடுத்துச் சென்றார். அவருடைய குறிக்கோளுக்காக மாநில அளவிலே அரசு உதவிகளும் கிடைத்தன. இன்று விரைவாக மக்களின் விருப்பத்தைப் பெற்றுவரும் வகூவானது, தேசத்தின் பிற பாகங்களுக்கும் சென்று சேர்ந்து வருகிறது. இந்த முயற்சியில் இணைந்த அனைவரையும் நினைத்து நான் மிகவும் பெருமையடைகிறேன். இன்று நாம் அனைவரும் உள்ளூர் பொருட்கள் மீது அழுத்தம் கொடுத்து வருகிறோம். உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தைத் தாங்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் கஷ்மீரத்தின் வகூவும் கூட உங்கள் இல்லங்களிலே இடம்பெற வேண்டும் என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.
முன்னேற்றம் தரும் மூலிகை தேநீர்
நண்பர்களே, நமது தேசத்திலே தேநீர் என்பது ஒரு பானம் மட்டுமல்ல. இது நம்மோடு இரண்டறக் கலந்தது. காலையின் தொடக்கமாகட்டும், நண்பர்களின் சந்திப்பாகட்டும், குடும்பத்தோடு இணைந்து சில கணங்களைக் கழிப்பதாகட்டும், தேநீர் என்பது அனைத்து வேளைகளிலும் நம் வாழ்கையில் அங்கம் வகித்து வருகிறது. எனக்கும் தேநீருக்குமான உறவு பற்றி நீங்கள் நன்கறிவீர்கள், இல்லையா!! ஆனால் இன்று நாம் உரையாட இருக்கும் தேநீர், அது சுவையை மட்டும் அளிக்கவில்லை, பல சகோதரிகளுக்கு வாழ்க்கையையும் அளித்திருக்கிறது, தற்சார்பு என்ற புதிய நறுமணத்தையும் கலந்திருக்கிறது.
உத்தர பிரதேசத்தின் பிஜ்நோர் மாவட்டத்தின் லகீவாலா கிராமத்திலே சுயவுதவிக் குழுவோடு தொடர்புடைய பெண்கள், விதுர் பிரேர்ணா சுதேசி ஹர்பல் டீ – மூலிகைத் தேநீரைத் தயாரித்திருக்கிறார்கள். இதிலே லெமன்கிராஸ் எனும் காவட்டம்புல், சீந்தில், அதிமதுரம், துளசி, பச்சை மஞ்சள், பட்டை, ஏலக்காய், சோம்பு போன்ற இயற்கைப் பொருட்கள் அடங்கியுள்ளன. தனது வித்தியாசமான சுவை மற்றும் குணங்கள் காரணமாக இந்தத் தேநீரானது மிகக்குறைவான காலத்திலே மக்களிடம் விசேஷமான அடையாளத்தை அமைத்துக் கொண்டது. பிரயாக்ராஜின் மகாகும்ப மேளாவிலும், தில்லியின் சர்வதேச உணவு விழாவின் போதும் இந்த மூலிகைத் தேநீர் மிகவும் பாராட்டுக்களைப் பெற்றது. அயல்நாடுகளிலிருந்து வந்திருந்தவர்களும் கூட இதில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள்.
நண்பர்களே, மிகவும் உத்வேகம் அளிக்கும் விஷயம் இதன் தொடக்கம் தான். இந்த ஒட்டுமொத்த முயற்சியும் வெறும் ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து தொடங்கியது. இன்று இந்த பிராண்டானது தேசத்தின் பெரிய அமைப்புகள் வரை சென்றடைந்து விட்டது. உள்ளூர் ஞானம், இயற்கை மற்றும் பெண்களின் தன்னம்பிக்கை ஆகியன இணையும் போது, ஒரு சிறிய முயற்சி கூட பெரிய மாற்றத்தின் தொடக்கமாக ஆகி விடும் என்பதை இது முதன்மையாக நமக்குத் தெரிவிக்கிறது.
ஒரு மரம்… ஒரு காடு!
என் கனிவான நாட்டுமக்களே, இன்று நாடெங்கிலும் ஓர் மரம் அன்னையின் பெயரில் இயக்கம் வாயிலாக, இயற்கையின்பால் மக்கள் தங்களுடைய பொறுப்பையும் கடமையையும் ஆற்றி வருகின்றார்கள். இப்படிப்பட்ட உணர்வால் சமூகம் இணையும் போது, மிகவும் அழகான, உத்வேகம் அளிக்கவல்ல எடுத்துக்காட்டுகள் வெளிப்படுகின்றன. நண்பர்களே, அம்தாவாதிலே மக்களின் பங்களிப்புக்கான அற்புதமான சக்தி வெளிப்படுத்தப்பட்டது. பாடஜ் பகுதியிலே, ஒரு மணிநேரத்துக்கு உள்ளாக, 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன, இவற்றிலே 25,000த்திற்கும் அதிகமானவர்கள் தங்களை இணைத்துக் கொண்டார்கள். பள்ளிக்கூடத்தில் படிக்கும் தேசிய மாணவர் படை கேடட்டுகள், சுயம்சேவகர்கள், பொதுமக்கள் என அனைவரும் இந்த இயக்கத்திலே பங்கெடுத்துக் கொண்டார்கள். வரவிருக்கின்ற ஆண்டுகளிலே இந்த மரங்களெல்லாம், ஒரு அடர்ந்த நகர்ப்புறக் காடாக உருப்பெறும். இந்த முயற்சி கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்திலே இடம் பிடித்தது. நண்பர்களே, ஓர் மரம் அன்னையின் பெயரில் இயக்கத்தின்படி, உத்தர பிரதேசத்திலும் கூட மக்கள் பங்களிப்பின் அற்புதமான உறுதிப்பாட்டைக் காண முடிந்தது. அங்கே ஒரே நாளிலே, ஜூலை மாதம் 12ஆம் தேதியன்று, 35 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டன. உத்தர பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், எனக்கு இது விசேஷ கௌரவம் அளிக்கும் விஷயம்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, மரம் என்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல, இவை எண்ணிலடங்கா உயிரினங்களின் இருப்பிடமாகவும் இருக்கின்றன. குஜராத்தின் கிர் காடுகளில் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு Indian Grey Hornbill எனும் சாம்பல் இருவாயன் மீண்டும் கூடுகட்டத் தொடங்கியிருக்கிறது. பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பராமரிப்பு மற்றும் மீளுருவாக்க முயற்சிகளின் விளைவாகும் இது. இந்த இருவாயன் வனங்களின் விவசாயி என்று அழைக்கப்படுகிறது. இவை பழங்களை உண்டு, விதைகளை தொலைதூரங்கள் வரை கொண்டு சேர்க்கின்றன, இந்த விதைகளால் காடுகளில் புதிய மரங்கள் கிளைக்கின்றன, இந்த வகையிலே ஒரு பறவை காட்டினை மீண்டும் பசுமை கொழிக்கச் செய்வதில் உதவி புரிகிறது. நாமனைவரும் நம்முடைய வாழ்க்கையின் எந்தவொரு சிறப்பான சந்தர்ப்பத்தையும் இயற்கையோடு கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று நான் உங்கள் அனைவரிடத்திலும் கேட்டுக் கொள்கிறேன். ஓர் மரத்தை அன்னையின் பெயரில் நடுங்கள். இன்று நடப்பட்ட ஒரு சிறிய மரக்கன்று, வரவிருக்கும் தலைமுறையினருக்கு பசுமை, தூய்மையான காற்று, அழகான எதிர்காலத்தின் மரபாக ஆகக்கூடும்.
நெகிழி மாசை நீக்க சிறந்த வழி
எனதருமை நாட்டுமக்களே, இன்று நெகிழிமாசு என்பது உலகம் முழுவதிலும் சுற்றுச்சூழலுக்கு ஒரு பெரிய சவாலாக மாறிவிட்டது என்பதை நாமனைவரும் நன்கறிவோம். ஒருமுறை பயனாகும் நெகிழிக் குப்பையானது பல்லாண்டுகள் வரை இயற்கைக்குத் தீங்கு ஏற்படுத்தி வரும் என்பதால், நெகிழியை சரியான முறையிலே அப்புறப்படுத்தல் மிகவும் அவசியமான ஒன்றாகும். நண்பர்களே, பிஹாரின் சீதாமடீயிலே கழிவிலிருந்து செல்வம் என்பதற்கு அருமையான உதாரணம் வெளிவந்திருக்கிறது.
இங்கே குப்பை மறுசுழற்சி செய்யப்பட்டு அதிலிருந்து கருத்தைக்கவரும் அமரும் மேடை தயார் செய்யப்படுகிறது. ஒரு மேடையைத் தயார் செய்வதில் சுமார் 40 கிலோ ஒருமுறை பயனாகும் நெகிழி செலவாகிறது. இது பலமானதாகவும், நீடித்ததாகவும், ஓய்வளிப்பதாகவும் இருப்பதோடு கூடவே சூழலுக்கு இசைவானதாகவும் இருக்கிறது. இது அரசுப் பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் பொதுவிடங்களில் போடப்படுகிறது. இதன் வாயிலாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்து வருகிறது. இந்த முயற்சியில் உள்ளூர் அலகுகளோடு சேர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் மகத்துவம் வாய்ந்த பங்களிப்பும் கலந்திருக்கிறது. இதன் காரணமாக உள்ளூர் அளவிலே வேலைவாய்ப்புகளும் ஏற்படுகின்றன. சீதாமடீயின் இந்த முயற்சி, Reduce, Reuse and Recycle, அதாவது, குறைவாகப் பயன்படுத்தல் -மீள் பயன்படுத்தல்-மறுசுழற்சி செய்தல் என்பவை வெறும் கோஷங்கள் அல்ல, மாறாக இவை நமது வாழ்க்கையின் அங்கமாகவே ஆகிவிட்டன என்பதையே சீதாமடீயின் இந்த முயற்சி நமக்குத் தெரிவிக்கிறது.
உள்ளூர் மண்ணில் சதுர்த்தி பிள்ளையார்
நண்பர்களே, கடந்த முறை மனதின் குரலிலே, பிள்ளையார் சதுர்த்தி பற்றிப் பேசியிருந்தேனே, உங்களுக்கு நினைவிருக்கிறது இல்லையா?! நமது தேசத்தின் மண்ணாலான பிள்ளையார் சிலைகளையே வழிபட வேண்டும் என்று அப்போது நான் உங்களிடம் வேண்டிக் கொண்டேன். POP யால் செய்யப்பட்ட பிள்ளையார் விக்கிரகங்களையோ, அயல்நாடுகளிலிருந்து வரும் பிள்ளையார் சிலைகளையோ பயன்படுத்துவதற்கு பதிலாக, நம் நாட்டின் மண்ணாலான பிள்ளையார் சிலைகளை வீடுகளில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இது தொடர்பாக பலர் எனக்குச் செய்திகளை அனுப்பி இருக்கிறார்கள், தங்களுடைய கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். என்னுடைய வேண்டுகோளை அவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாகப் பலர் எனக்கு எழுதியிருக்கிறார்கள். உள்ளூரின் மண்ணைக் கொண்டு தயார் செய்யப்பட்ட பிள்ளையார் சிலையை மட்டுமே நிறுவுவோம் என்ற தங்களுடைய மனவுறுதிப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
மனதின் குரலில் முன்னமும் கூட இப்படிப்பட்ட விவாதம் நடைபெற்றிருப்பதாகவும், அதனால் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க முடிந்ததாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த முறை பிள்ளையார் சதுர்த்தியிலே நம் தேசத்தின் மண்ணாலான திருவுருவச் சிலையையே வழிபாட்டுக்கு நீங்கள் பயன்படுத்துங்கள் என்று நான் மீண்டுமொரு முறை என்னுடைய வேண்டுகோளை விடுக்கிறேன். உங்களுடைய இந்த முயற்சியும் கூட ஒருவகையிலே இயற்கைக்கு நீங்கள் செய்யும் வழிபாடாகும்.
மணிப்பூரின் மகத்துவ சாதனை மனிதர்
என் மனம்நிறை நாட்டுமக்களே, இப்போது நான் உங்களிடம் கூறவிருக்கும் ஒரு நபர் குறித்து தெரிந்து கொண்டால் நீங்கள் மிகவும் பெருமிதம் கொள்வீர்கள். இவர் அறிவியல் மற்றும் புதுமைகள் படைத்தல் துறையில் பெரிய அளவில் பணியாற்றி வருகிறார், தனக்கென உலகிலே ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும் கூட, இவர் தனது வேர்களின் ஆழங்களோடு இணைந்திருப்பவர், சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் தனது மண்ணுக்கு மரியாதை செலுத்துவதை மறக்காதவர் – அந்த மனிதர் தான் மணிப்பூரைச் சேர்ந்த டாக்டர் ரோனால்டோ லைஷ்ராம் அவர்கள்.
இவருடைய பெயர் ரோனால்டோ என்றாலும், இவர் ஒரு வானியற்பியலாளர். இவர் ஜப்பானிலே பணியாற்றி வருகிறார், இளம் பால்வெளி மண்டலங்களின் ஒரு பரந்த கூட்டத்தைப் பற்றி ஆய்வு செய்யும் குழுவின் அங்கமாக இருந்திருக்கிறார். அவர் என்னதான் செய்தார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள விரும்புவீர்கள், இல்லையா? உள்ளபடியே, இவர் ஒட்டுமொத்தக் கூட்டத்தின் பெயரை மணிப்பூரின் ஒரு அழகான ஏரியோடு இணைத்து, லோக்டக் ப்ரோடோ-க்ளஸ்டர் என்று பெயரிட்டிருக்கிறார். இந்த நன்னீர் ஏரிக்குள் மிதக்கும் மக்கிய தாவரங்களும் இதர கரிமப் பொருட்களும் (phumdis) ஒன்றிணைந்து மிதக்கும் திட்டுக்களைப் போல மாறுகின்றன. தனித்துவமான நிலப்பரப்பைப் போன்ற தோற்றத்தை இவை உருவாக்குகின்றன; இது ஏதோ பரந்த கடலிலே சின்னச்சின்ன தீவுகள் மிதப்பது போல இருக்கிறது.
இதைப் போலவே பேரண்டத்தில் இந்த இளம் பால்வெளி மண்டலங்கள் கூட ஒரு பரந்த படைப்பை நிர்மாணம் செய்கின்றன. இன்று மணிப்பூரின் லோக்டக், தேசத்தின் வரைபடத்தில் மட்டும் இடம்பெறவில்ல; மாறாக விசாலமான பேரண்டத்திலும் கூட தனது ஒளிவீச்சைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. இந்தச் சாதனை நாட்டவர் அனைவருக்கும் பெருமை சேர்ப்பது. இதனால் நமது இளைய நண்பர்களுக்கு ஒரு கற்றல் கிடைக்கிறது, தங்களுடைய பாரம்பரியத்தோடு இணைந்திருந்தாலும் கூட, புதிய சிகரங்களை நம்மால் எட்ட முடியும் என்பதை. இப்படிப்பட்ட வேர்கள் விண்மீன்கள் உலகைக்கூட பளிச்சிடச் செய்ய முடியும்.
கைத்தறிக்குக் கை கொடுப்போம்
என் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே, சில நாட்கள் கழித்து, ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதியன்று தேசிய கைத்தறி நாளினை நாடு கொண்டாடும். இந்த வேளையிலே நமது நெசவாளர் சகோதர சகோதரிகளின் திறன்கள், அவர்களின் படைப்பாற்றல் ஆகியவற்றுக்கு நாம் விழா எடுக்கிறோம். பல தலைமுறைகளாக தொடர்சங்கிலி போன்று செயல்பட்டுவரும் பாரம்பரியங்களை நமது நண்பர்கள் முன்னெடுத்துச் செல்கிறார்கள்.
நண்பர்களே, கைவினைத்திறத்தால் படைக்கப்பட்ட ஒவ்வொரு ஆடையும், ஏதோ ஒரு துறையினை, சமூகத்தை மற்றும் இதோடு தொடர்புடைய எண்ணிலடங்கா மக்களின் கதைகளை முன்னிறுத்துகிறது. இவர்கள் எல்லாம், பாரதத்தின் கலாச்சார மரபுகளைப் பராமரிப்பதை பெருமித உள்ளத்தோடு செய்கிறார்கள். நாமனைவரும் கைவினைத் திறத்திற்கு ஊக்கமளித்து, நமது நெசவாள நண்பர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பதையே இன்றைய நாளன்று நான் என் வேண்டுகோளாக விடுக்கிறேன். நாம் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற உணர்வுக்கு மேலும் வலு சேர்ப்போம், வாருங்கள்.
நண்பர்களே, இன்று தேசத்திலே எந்த வகையில் கைத்தறிக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறதோ, இதன் காரணமாக அதிக அளவிலே மக்களின் வாழ்க்கை சிறப்பானதாக ஆகிக் கொண்டிருக்கிறது. போச்சம்பள்ளியிலிருந்து பட்னா, குத்தம்பள்ளியிலிருந்து கட்ச்வரை இதற்கான பல எடுத்துக்காட்டுகள் காணக் கிடைக்கின்றன. இன்று கைத்தறியின் நமது பெருமைமிகு பாரம்பரியத்துக்கு புதிய சக்தியையும், புதிய அடையாளத்தையும் பல தனிநபர்களும், குழுக்களும் அளித்து வருகின்றார்கள். போச்சம்பள்ளி வகையின் அழகான பாரம்பரியத்தைச் சிலர் முன்னெடுத்துச் சென்றால், சில பெண் நெசவாளர்கள் ஒன்றிணைந்து, கம்பளிப் பொருட்களை உருவாக்குகிறார்கள். சிலர் கேரளத்தின் பாரம்பரியமான “கசாவு கலை”யைப் பாதுகாத்து வருகின்றார்கள். இதன் காரணமாக நமது சகோதரிகள்-தாய்மார்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகிறது.
நண்பர்களே, மேலும் ஒரு விஷயம் குறித்து விசேஷமாக நான் குறிப்பிட விரும்புகிறேன், அது தான் காதி. கதராடைகள் என்பவை அண்ணல் காந்தியடிகளுக்கு மிகவும் பிரியமானவை என்பதை நாமனைவரும் அறிவோம். கடந்த சில ஆண்டுகளில் மக்களால் கணிசமாக விரும்பப்படுவதாக காதி ஆகியிருக்கிறது. கடந்த 12 ஆண்டுகளில் இதன் விற்பனை 6 மடங்கு அதிகரித்திருக்கிறது. விற்பனையின் இந்தப் புள்ளிவிவரம் இப்போது கிட்டத்தட்ட 8,000 கோடி ரூபாய் என்ற அளவை எட்டியிருக்கிறது. வரவிருக்கின்ற பண்டிகைக்காலத்திலே காதி விற்பனை மையத்தின் ஏதாவது ஒரு பொருளை, கைத்தறியோ, கைவினைப் பொருளோ, ஏதோ ஒரு பொருளைக் கண்டிப்பாக வாங்குங்கள்.
மூங்கில் இசையில் மூழ்கலாம்
எனதருமை நாட்டுமக்களே, பாரதத்திலே எத்தனை வகையான இசைக்கருவிகள் இருக்கின்றன என்று உங்களிடத்திலே கேட்டால், நீங்கள் சிந்திக்கத் தொடங்கி விடுவீர்கள். ஏன் என்று சொன்னால், நம் நாட்டிலே ஏராளமான கருவிகளும், அவற்றோடு தொடர்புடைய பாரம்பரியங்களும் இருக்கின்றன. இவை போன்றதொரு கருவி தான், திரிபுராவின் சௌங்க்ப்ரேங்க். இது அங்கிருக்கும் பழங்குடி இனத்தவர்களிடம் மிகவும் பிரபலமாக இருக்கிறது. மூங்கிலாலான இந்த இசைக்கருவியிலே மூன்று தந்திகள் இருக்கின்றன. இதிலிருந்து வெளிப்படும் ஒலி மிகவும் இனிமையாக இருக்கிறது, சரோத் இசைக்கருவிக்கு சற்று நிகராக இதன் ஒலி இருக்கிறது. சில காரணங்களால், இளைஞர்களிடையே இதன் புழக்கம் குறையத் தொடங்கியது. இந்த கட்டத்தில், குமார் தேப்பர்மா அவர்கள் இதை மீண்டும் பிரபலப்படுத்த வேண்டும் என்று உறுதி பூண்டார். இன்று அவருடைய முயற்சி வளமாகியிருக்கிறது. இவர் சௌங்க்ப்ரேங்கோடு கூடவே அங்கே இருக்கும் பிற பாரம்பரிய இசைக்கருவிகளையும் இசைத்து வருகிறார். கோக்போரோக் பழங்குடிப் பாடல்கள், பௌல் பாடல்கள், பங்காலி பழங்குடிப் பாடல்கள் ஆகியன அவருக்கு மிகவும் பிடித்தமானவை. இப்போது நான் உங்களுக்கு ஒரு சிறிய இசைக் குறிப்பை இசைக்க விரும்புகிறேன். இந்த இசையை உங்களால் என்றைக்கும் மறக்க முடியாது.
#(இசை)#
நண்பர்களே, இதைக் கேட்டதும் உங்களுக்கு மிகவும் பிடித்துப் போயிருக்கும் என்று நம்புகிறேன். தேப்பர்மா அவர்களை நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது. பாரம்பரியமான இசையை, மக்களுக்கு விருப்பமானதாக ஆக்குவதில் அவருடைய முயற்சி மிகவும் பாராட்டுதற்குரியது. நீங்களும் உங்களுக்கு அக்கம்பக்கத்திலே இருக்கும் பாரம்பரியமான இசைக்கருவி பற்றிய தகவல்களை சமூக ஊடகத்திலே கண்டிப்பாக பகிருங்கள் என்று உங்களிடத்திலே கேட்டுக் கொள்கிறேன். உங்களுடைய இந்த முயற்சி மற்றவர்களையும் கூட பாரம்பரியமான பாரத நாட்டு இசையோடு அவசியம் இணையச் செய்யும்.
அப்துல் கலாமும் குருபூர்ணிமாவும்
எனதருமை நாட்டுமக்களே, நாளை ஜூலை மாதம் 27ஆம் தேதியன்று, பாரத் ரத்ன, டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஐயா அவர்கள் மறைந்த தினம். டாக்டர். கலாம் ஐயாவின் ஆளுமையில் கருத்தூக்கம் அளிக்கும் பல கூறுகள் இருந்தன என்றாலும், அவருடைய இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒன்று என்றால் அது ஆசிரியர் என்ற பங்களிப்புத் தான். அவர் சிறுவர்களையும், இளைஞர்களையும் பெரியபெரிய கனவுகளைக் காண உத்வேகப்படுத்தினார். தற்செயல் நிகழ்வாக, இந்த வாரம் நாம் குரு பூர்ணிமா புனிதமான நாளையும் கொண்டாட இருக்கிறோம். நமது தாய் தந்தை தாம் நமது மூத்த குருமார்கள். பள்ளியில் நமது ஆசிரியர்கள் நமக்கு எழுத்தறிவை அளிக்கிறார்கள். குரு பூர்ணிமையானது, இப்படிப்பட்ட அனைத்து குருமார்களிடத்திலும் நன்றியுணர்வை வெளிப்படுத்தவல்ல சந்தர்ப்பமாகும். நாட்டின் அனைத்து ஆசிரியர்கள்-குருமார்களுக்கும் நான் என் அர்ப்பணிப்புடனான வணக்கத்தைத் தெரிவிக்கிறேன்.
பெருமிதம் தரும் சுதந்திர தினம்
நண்பர்களே, சில வாரங்கள் கழித்து நாம் சுதந்திரத் திருநாளைக் கொண்டாட இருக்கிறோம். ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி என்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமிதம் தரும் தினமாகும். பாரத அன்னையின் சுதந்திரத்தின் பொருட்டு தங்கள் அனைத்தையும் அர்ப்பணித்த கணக்கேயில்லாத வீரர்களை நாம் நினைவில் கொள்ளும் தினமாகும் இது. அவர்களுடைய தியாகம்-தவம் காரணமாகவே இன்று நமது கைகளிலே மூவண்ணக் கொடி இருக்கிறது. இந்த மூவண்ணக் கொடியிலே தான் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் குறிக்கோள் இருக்கிறது.
நண்பர்களே, கடந்த சில ஆண்டுகளில் வீடுதோறும் மூவண்ணக்கொடி இயக்கமானது தேசம் முழுவதையும் ஒரு அற்புதமான உணர்வினால் இணைத்தது. ஒவ்வொரு வீடு, ஒவ்வொரு தெருவிலும் மூவண்ணக்கொடியின் விழா தென்பட்டது. இந்த ஆண்டும் கூட, நாம் வீடுதோறும் மூவண்ணக்கொடி இயக்கத்தை முழு உற்சாகத்தோடு முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நமது இல்லங்களில், முழு மரியாதையோடு மூவண்ணக்கொடியைப் பறக்கவிட வேண்டும்.
நண்பர்களே, ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்கு முன்பாகவும் நீங்கள் எனக்கு நிறைய கருத்துக்கள்-ஆலோசனைகளை அளிப்பீர்கள். இந்த ஆண்டும் கூட, நீங்கள் உங்களுடைய கருத்துக்களை மைகவ் தளத்தில் கண்டிப்பாக அனுப்பி வையுங்கள். உங்களுடைய கருத்துக்கள்-ஆலோசனைகளுக்காக நான் காத்திருப்பேன்.
நண்பர்களே, மனதின் குரலில் இந்த முறை இம்மட்டே. அடுத்த மாதம் நாம் மீண்டும் சந்திப்போம், நாட்டுமக்களின் பல புதிய சாதனைகள், உள்ளெழுச்சியளிக்கும் முயற்சிகளோடு இணைவோம், அதுவரை உங்களிடமிருந்து அனுமதி கோருகிறேன். பலப்பல நன்றிகள், வணக்கம்.



