
தென்காசி மாவட்ட புதிய எஸ்பி-யாக டாக்டர் ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ் பொறுப்பேற்றார். மாவட்டத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
தென்காசி மாவட்டத்தின் 10-வது காவல் கண்காணிப்பாளராக டாக்டர் ஆர். ஸ்டாலின் ஐபிஎஸ் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன் இங்கு எஸ்பி-யாகப் பணியாற்றிய அசோக்குமார் மதுரைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.
2019-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த டாக்டர் ஸ்டாலின், இதற்கு முன்பு சென்னை வடக்கு மண்டல பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவின் (EOW) துணை ஆணையராகப் பணியாற்றி வந்தார். அதற்கு முன்னதாக, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சுமார் 20 மாதங்கள் சிறப்பாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. குமரி மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் கும்பல், ரவுடிசம் மற்றும் கேரளாவுக்குக் கடத்தப்படும் கனிம வள மாஃபியாக்கள் மீது இவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், டாக்டர் ஸ்டாலின் ஐபிஎஸ் கோப்புகளில் கையெழுத்திட்டு புதிய எஸ்பி-யாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு மாவட்டத்தின் பிற உயர் காவல்துறை அதிகாரிகள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்துகளையும், வரவேற்பையும் தெரிவித்தனர்.
பொறுப்பேற்றுக் கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய எஸ்பி ஸ்டாலின், மாவட்டத்தின் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதே தனது முதல் கடமை என்று தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிட்டதாவது:
மாவட்டத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காவல் நிலையங்களை நாடி வரும் பொதுமக்களின் புகார்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி தீர்வு காண முன்னுரிமை அளிக்கப்படும்.
எல்லையோர மாவட்டமான தென்காசியில் கனிம வளங்கள் கடத்தல் மற்றும் எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுக்க தீவிர கண்காணிப்புச் சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனைகள் பலப்படுத்தப்படும். – என்றார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் “நேர்மையான அதிகாரி” என்று பெயர் எடுத்த டாக்டர் ஸ்டாலின், தற்போது எல்லையோர மாவட்டமான தென்காசிக்கு எஸ்பி-யாக வந்துள்ளதால், குற்றச்செயல்கள் பெருமளவு குறையும் என்று மாவட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



