இன்று பிர்சா முண்டா பிறந்த நாள்
(நவம்பர் 17, 1875- ஜூன் 9, 1900).
கட்டுரை: ராஜி ரகுநாதன் – ஹைதராபாத்- 62
முண்டா இனத்தவரின் போற்றப்படும் தலைவர் பிர்சா முண்டாவின் பிறந்தநாள் இன்று.
இன்றைக்கும் மலைவாழ் மக்களின் பூமி போராட்டங்கள் பலவற்றுக்கும் அடித்தளம் அமைத்தவர் பிர்சா முண்டா. பிர்சா முண்டா மலைஜாதிச் சிறுவன். இப்போதைய ஜார்கண்ட் நகரில் சோட்டாநாக்பூரில் பிறந்த இந்த சிறுவன் பிரிட்டிஷ் ஆட்சியாளரின் கொடுமையால் மலைவாழ் மக்கள் சந்தித்த தீய விளைவுகள் குறித்து யோசிக்கத் தொடங்கினான்.
மலைவாசிகளின் நீர், காடு, பூமி உரிமைகள் குறித்து கடுமையாக விவாதித்த அந்த சிறுவனுக்கு புரட்சி ஆலோசனைகள் இருப்பதாக குற்றம்சாட்டி இங்கிலீஷ் மீடியம் மிஷன் பள்ளியில் இருந்து துரத்தி விட்டார்கள்.
பதினோறாம் வயதிலேயே சுய கௌரவத்தோடு தலைநிமிர்ந்து நின்ற அந்த சிறுவன் பதினைந்தாம் வயதில் போராட்டத் தலைவனாக ஆனான். தன் மக்கள் வரட்சியிலும் இனம் தெரியாத நோயிலும் சிக்கித் தவிக்கையில் அவர்களுக்கு சேவை செய்தான்
தம் பூமி, தம் நீர்வளம், தம் காடுகள் மீது மலைவாழ் வனவாசிகளுக்கு உள்ள உரிமைகள் குறித்து பிரச்சாரம் செய்து பிரிட்டிஷ் படையோடு வில்லும் அம்பும் கொண்டு போராடினான். மத மாற்றங்களை எதிர்த்தும் தம் கலாச்சாரம் குறித்தும் ஆதிவாசிப் பிரிவினருக்கு மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறினான் புரட்சித் தலைவனான அந்தச் சிறுவன்.
முண்டா மலைவாழ் மக்களிடையே மத மாற்றத்தை எதிர்த்து ‘பிர்சாயித்’ என்ற புதிய மதத்தை எடுத்து வந்து ஆதிவாசிகள் தங்கள் கலாச்சாரத்தையும் சம்பிரதாயத்தையும் விட்டுவிடக் கூடாது என்று போதித்தான்.
தொடர் போராட்டத்தால் கைது செய்யப்பட்டு தம் தோழர்களை தூக்கிலிடும் போது அருகிலிருந்து பார்த்தான். சிறையில் இருக்கும் போதே காலரா நோய் கண்டு இருபத்தைந்தாவது வயதில் மரணம் அடைந்தான்.
பிர்சா முண்டா வறண்ட பூமியில் வாழ்ந்த தம் மக்களுக்காகவும் தம் கலாச்சாரத்துக்கும் தம் கடவுளுக்காகவும் தம் மக்களின் சுதந்திரத்திற்காகவும் போராடினான்.
தம் மக்களின் பூமி, தண்ணீர், காடுகளுக்காக தவித்த அந்த சின்னஞ்சிறு உள்ளத்தில் எத்தனை உணர்வுகள்…! அவன் எண்ணங்களில்தான் எத்தனை முதிர்ச்சி! அந்தச் சிறுவயதில் எத்தனை தைரியம்…!
பதினோரு வயதில் நம் வீட்டுப் பிள்ளைகள் இன்னமும் தாயின் இடுப்பை விட்டு இறங்கி மாட்டார்கள். பதினைந்து வயதிலும் தாய் உணவு ஊட்ட பின்னாலேயே துரத்தி வர வேண்டும்.
25 வயதில் வேலை, காதல், பணம் கணக்கிடுவது என்று செலவழிப்பார்கள். நல்லது தான்…! நம் பிள்ளைகள் வாழ்வது சுதந்திர பூமியில்…! பொறுப்பில்லாமல் நடந்து கொண்டாலும் அவர்களை யாரும் கேட்கப் போவதில்லை.
ஜார்கண்ட் மக்கள் பிர்சா முண்டாவை பெரிதும் கௌரவிக்கிறார்கள். ராஞ்சியில் பிராசா சௌக் புகழ் பெற்ற இடம். அங்கு பள்ளிப்பாடத்தில் பிர்சா முண்டா பற்றிய பாடம் உள்ளது. ரூர்கேலாவில் பிர்சா முண்டாவுக்கு சிலை உள்ளது.
இன்றைய சூழலில் நாம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு பிர்சா முண்டாவின் வரலாறு. இப்போது இது போன்று போராடும் உள்ளங்கள் தேவையாக உள்ளது.
தண்டாக்களில் சேவை என்ற பெயரில்… என்ஜிஓ என்ற முகமூடியில் மிஷனரிகள் செய்யும் மதமாற்றம் தற்போது 100 மடங்கு அதிகரித்துவிட்டது.
இவர் குறித்த பாடங்களை மாணவர்கள் பயில வேண்டும். நம் வரலாற்றைச் சிதைத்து நாம் பாராட்டி நினைவுகூர வேண்டிய நம் வரலாற்று கதாநாயகர்களை இருட்டடிப்பு செய்து நமக்கு கரிபூசி விட்டார்கள். அதை வருங்காலத்திலாவது நாம் மாற்ற வழி செய்வோம்!