
சட்டத்தை மதிக்காத தமிழக அரசும், அதிகாரிகளும். இந்துக்களுக்கு எதிராக செயல்படும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள்.. இந்துக்களுக்கு எதிரான திமுகவின் போக்கு.. ஆகியவற்றை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது… என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கை:
திருப்பரங்குன்றம் மற்றும் திண்டுக்கல் பெருமாள் கோவில்பட்டி மண்டு கருப்பண்ணசாமி கோவிலிலும் கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு தந்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசும், காவல்துறை அதிகாரிகளும், மதுரை கலெக்டரும் மதிக்கவில்லை.
நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.
திருப்பரங்குன்றத்தில் அமைதியாக தங்கள் வழிபாட்டு உரிமையை வலியுறுத்தி பிரார்த்தனை செய்த மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்த தடுப்பு வேலி அமைத்து, பதட்டத்தை ஏற்படுத்தினர் மதுரை மாவட்ட அதிகாரிகள்.
திட்டமிட்டு செயல்பட்டு. வழிபாட்டை தடுத்துள்ளனர். வழிபாட்டை தடுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்ற ஆணையை புறந்தள்ளி, திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றியதாக பொய்யான செய்தியை ஊடகங்களில் பரப்பி மக்களின் முதுகில் குத்தி, முருக பக்தர்களை வெறுப்படைய செய்தது ஆளும் திமுக.
வேற்று மதத்தினர் இந்து நம்பிக்கைக்கு எதிராக இருப்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்துக்களுக்கு எதிராக, இந்து சமய நம்பிக்கைகளுக்கு எதிராக, இந்து சமய அறநிலையத்துறையே நீதிமன்றத்தில் அப்பீல் செய்கிறது என்றால், இந்து சமய அறநிலையத்துறை என்பதே கோவிலை அழிக்கும் அறங் கெட்ட துறையாக செயல்பட்டு வருகிறது என்பதற்கு இதுவே ஆதாரமாகும்.
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்து இரண்டு நாட்கள் அமைதியாக இருந்தது ஆளும் திமுக. மறுநாள் அப்பீல் போகிறார்கள் என்று கூறி நீதிமன்ற தீர்ப்பை காவல்துறை அவமதித்தது. தீபம் ஏற்றுவதை தடுத்த அதிகாரிகள் அனைவர் மீதும் மத்திய உள்துறை அமைச்சகம் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல் பெருமாள் கோவில்பட்டி திருக்கோவில் வளாகத்தில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு இரண்டு நபர் அமர்வில் அப்பீல் செய்த மனுவை அப்போதே நீதியரசர்கள் அரசை கடுமையாக எச்சரித்தனர். உங்களால் சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியவில்லை என்றால் நாங்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படையை அனுப்புகிறோம் 144 தடை உத்தரவை வாபஸ் வாங்குங்கள் என நீதிபதிகள் தெரிவித்த பிறகும் அதிகாரிகள் 144 தடை உத்தரவு போட்டு சர்வாதிகாரமாக நடந்து கொண்டது ஜனநாயக விரோதம் ஆகும்.
திண்டுக்கலை சுற்றியுள்ள பத்திற்கும் அதிகமான கிராமங்களில் இந்துக்கள் சிறுபான்மையாகவும் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாகவும் உள்ளனர். இந்துக்கள் சிறுபான்மையாக உள்ள கிராமங்களில் படிப்படியாக இந்துக்களை அச்சுறுத்தி மதமாற்றம் செய்ய கிறிஸ்தவ மிஷனரிகள் சதிசெய்கிறார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் N பஞ்சம் பட்டியில் கோவில் திருவிழாவில் அன்னதானம் வழங்குவதற்கு கூட அரசு தடை விதித்தது. சர்வதேச கிறிஸ்தவ மிஷனரிகளோடு கைகோர்த்து தமிழக அரசு நிர்வாகம் செயல்படுகிறது. கிறிஸ்தவ மிஷனரிகளின் கைக்கூலியாக மாறி அரசியல் சாசனம் வழங்கியுள்ள வழிபாட்டு உரிமையை தமிழக அரசு பறிக்கிறது. இதன் மூலம் இந்துக்களே இல்லாத 100% கிறிஸ்தவர்கள் மட்டுமே வாழும் கிராமங்களை உருவாக்க மிகப்பெரிய சதி நடக்கிறது. இதன் ஒரு படி தான் பெருமாள் கோவில் பட்டியில் திருக்கோவிலில் தீபம் ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்ட நிகழ்வு அரங்கேறி இருக்கிறது.
கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நீதியரசர்களை தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக விமர்சனம் செய்து நீதித்துறையின் மாண்பை சீர்குலைத்ததுடன், மக்களுக்கு தவறான தகவல் தருவதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
வன்முறையை தூண்டவும், மதக்கலவரத்தை ஏற்படுத்தவும் சமூக ஊடகத்தில் சிலர் பதிவிட்டு பரப்புவதை தமிழக உளவு துறை வேடிக்கை பார்ப்பதும் அரசின் கையாலாகாத செயலாகவே கருத வேண்டும்..
ஆளும் திமுகவின் அழுத்தம் காரணமாக காவல்துறை மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது என்பது வேதனையான உண்மை.
சுதந்திர நாட்டில் வழிபாட்டு உரிமைக்காக போராடுவதும், நீதிமன்ற கதவுகளைத் தட்டி சட்டத்தின்படி நீதி பெற்றாலும் அரசும், காவல்துறையும், ஆட்சித் தலைவரும் அதனை மதிக்காத நிலையில் மக்கள் சட்டத்தை கையில் எடுத்துவிடும் அபாயத்தை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
ஆட்சி, அதிகாரம் நிலையானது இல்லை. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பது தர்மத்தின் வாக்கு. எவரெல்லாம் தங்களை சர்வாதிகாரியாக நினைத்து ஆடிய ஆட்டத்தை, இறைவன் அடக்கி காட்டிய வரலாறை மறக்க வேண்டாம். நீதியின் மீதும் தெய்வத்தின் மீதும் இந்துக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
ஆயிரம் தடைகள் வந்தாலும் நீதி வென்றே தீரும். முருகனின் அருளால் இறை சக்தியால் இந்துக்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுத்தே தீருவார்கள். திருப்பரங்குன்றத்திலும், திண்டுக்கல் பெருமாள் கோவில்பட்டி – மண்டு கருப்பண்ணசாமி கோவிலிலும் தீபம் ஏற்றப்படும் வெற்றித் திருநாளை நாம் கண்ணால் காண்போம்.
எனவே, ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நீதித்துறையை அவமதிப்பதை கடுமையாக இந்து முன்னணி கண்டிக்கிறது. மேலும் உயர்நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த தமிழக அரசு அதிகாரிகள் அனைவர் மீதும் நீதிமன்றம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் சட்டரீதியிலான நடவடிக்கை எடுத்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.





