
சிறுநீரகக் கல்லும் கால்சியம் நிறைந்த உணவுகளும்!
— Dr. B.R.J. கண்ணன், மதுரை
ஒரு விருந்தில், நண்பர் ஒருவர் என்னை அணுகி, சிறுநீரகக் கற்கள் தன் குடும்பத்தில் பலருக்கும் இருப்பதால் தனக்கு வராதிருக்கக் கால்சியம் நிரம்பிய உணவுகள் மற்றும் கால்சியம் மாத்திரைகளைத் தவிர்ப்பதாகக் கூறினார். அவருடைய அணுகுமுறை சரியானதா என்பது குறித்து என்னிடம் கருத்து கேட்டார்.
ஒன்று சொன்னால் நம்புவீர்களா? கால்சியம் நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது சிறுநீரகக் கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. இது என்ன முரண்பாடாக இருக்கிறது என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள்?
சிறுநீரகக் கற்கள் பலவகைப்படும் என்றாலும் பெரும்பாலானவற்றில் உள்ளது கால்சியம் ஆக்ஸலேட் (calcium oxalate) ஆகும். சிறுநீரில் ஆக்ஸலேட் வெளியேற்றத்தைக் குறைப்பதே அவற்றைத் தடுப்பதற்கான முக்கிய வழி. அதற்கு உணவில் உள்ள ஆக்ஸலேட் குடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்க வேண்டும்.
உணவில் உள்ள கால்சியம், குடலில் செரிமானம் ஆகிக்கொண்டிருக்கும் உணவில் உள்ள ஆக்ஸலேட்டுடன் பிணைக்கப்பட்டு, கரையாத கால்சியம் ஆக்ஸலேட்டை உருவாக்குகிறது. பின்னர் அது மலத்தில் வெளியேற்றப்படுகிறது. உணவில் கால்சியம் சத்து குறைவாக இருக்கும் பட்சத்தில், அதிக ஆக்ஸலேட் உறிஞ்சுதலுக்கு வழிவகுக்கிறது, இது சிறுநீரில் வெளியேற்றப்பட்டு, சிறுநீரகக் கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆக, உணவில் தேவையான அளவு கால்சியம் இருத்தல் அவசியம்.
பச்சைக் கீரை வகைகள், விதைகள், பழங்கள், பீட்ரூட், தேனீர், சாக்லேட் என அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளில் நம் உடலுக்குத் தேவையான பல நல்ல தாதுப் பொருட்கள் உள்ளன. கூடவே ஆக்ஸலேட்டும் உண்டு. காய்கறிகள், பருப்பு வகைகள், பாதாம், பால், தயிர், சீஸ், சில வகை மீன்கள் போன்ற பலவும் கால்சியம் நிறைந்த உணவுகள். இந்த உணவுகளில் உள்ள கால்சியம், ஆக்ஸலேட் உறிஞ்சுதலைத் தடுக்க உதவுகிறது. அதன் மூலம் சிறுநீரில் அதிகப்படியான ஆக்ஸலேட் வெளியேறாமல் தடுக்கிறது. கல் உருவாகும் அபாயத்தைக் குறைக்கிறது.
எனவே, சிறுநீரகக்கல் வராதிருக்கவும், ஏற்கனவே இந்த நோய் பாதிப்பு உள்ள நபர்களும் கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
சிலருக்கு யூரிக் அமிலம் (uric acid) கொண்ட கல் உருவாகும். அவர்கள் அசைவு உணவுகளைக் குறைக்க வேண்டும். குறிப்பாகச் சிவப்பு இறைச்சியைத் (ஆடு, மாடு – red meat) தவிர்க்க வேண்டும்.
கல் உருவாவதைத் தடுக்க சற்று அதிகப்படியான நீர் அருந்துவதும் அவசியமான ஒன்று.




