
— Dr. BRJ. Kannan, Madurai
உங்களுக்குச் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மருத்துவர் எவ்வாறு சொல்வார்? ‘உப்புச் சத்துக் கூடியிருக்கிறது’. உடனே நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உணவில் எடுத்துக்கொள்ளும் உப்பைக் குறைத்து விடுகிறீர்கள். சிலர் சுத்தமாக உப்பே இல்லாமல் சாப்பிட்டுகிறேன் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வார்கள்.
நாம் உணவில் சேர்க்கும் உப்பு சோடியம் என்பதாகும். மருத்துவர் சொன்ன உப்புகள் யூரியா கிரியாட்டினின் போன்றவை. இவை உடலில் எல்லோருக்கும் சாதாரணமாகத் தினசரி உற்பத்தியாகும் கழிவுகள். இவைகளை வெளியேற்ற வேண்டியது சிறுநீரகங்கள். அதன் செயல்திறன் குறையும்பொழுது இந்த உப்புகள் இரத்தத்தில் கூடும். சாதாரணமாக யூரியாவின் அளவு 40க்கு கீழேயும், கிரியாட்டினின் 1.2க்குக் கீழேயும் இருக்கும். எந்த அளவிற்கு இவைகள் கூடுகின்றனவோ அந்த அளவிற்குச் சிறுநீரகங்கள் பாதிப்பு அடைந்திருக்கின்றன என்று அர்த்தம்.
உணவில் உப்பைக் குறைப்பதன் மூலம் இரத்தத்தில் கூடியுள்ள யூரியாவைக் குறைத்துவிடலாம் என்று நம்புவது தவறு. மாறாக, உடல் பலகீனப்படும். சிலருக்கு சோடியம் மிகவும் குறைந்து நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மயக்கமான நிலையில் வந்து மருத்துவமனையில் சேருவார்கள்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் வெளியேறும் சிறுநீரின் அளவு குறையும் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் ஆரம்பத்தில் ஒரு சிலருக்கு அளவுக்கு அதிகமாகச் சிறுநீர் வெளியேறும். அப்பொழுது நீர் மட்டும் வெளியே வருவதில்லை. அதனுடன் சோடியம் பொட்டாசியம் போன்ற நம் உடம்பின் அத்தியாவசிய உப்புகளும் சேர்ந்து வெளியேறும். உடலில் நீர் சத்து குறைந்து இரத்த அழுத்தமும் குறையும் பட்சத்ததில் உணவில் உப்பைக் கூட்ட வேண்டும். அவ்வாறில்லாமல் உடலில் நீர் சத்து அதிகரித்தாலோ (கால்கள் மற்றும் முகம் வீக்கம் அடைதல்) இரத்தஅழுத்தம் கூடினாலோ, அவர்களுக்குத்தான் உணவில் உப்பைக் குறைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அடுத்து, பொட்டசியம் என்று ஒரு உப்பு இருக்கிறது. இது இரத்தத்தில் அதிகப்படியாகச் சேர்ந்துவிடாதிருக்க நம் உடல் சிறுநீர் மூலமாகவும் குடல் (மலம்) மூலமாகவும் அதனை வெளியேற்றுகிறது. சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் இரத்தத்தில் பொட்டாசியம் அளவு கூடும். அதனால் இந்த உப்பை அதிகமாக் கொண்டுள்ள உணவுகளைக் குறைத்து உண்ணவேண்டும். முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. வாழை, ஆரஞ்சு போன்ற பழங்கள், கீரைகள், தக்காளி, மீன், மாமிசம் போன்ற நாம் அன்றாடம் உண்ணும் உணவுகள் எல்லாமே பொட்டாசியம் சத்து நிரம்பியவைகள். கேரட், முட்டைகோஸ், வெள்ளரி, கத்திரிக்காய், ஆப்பிள், திராட்சை, அன்னாசி போன்றவைகள் பொட்டாசியம் சத்து குறைவாக உள்ள உணவுகள்.
சிறுநீரகப் பாதிப்பு உள்ள ஒருவருக்கு மலம் சரியாக வெளியேறவில்லை என்று வைத்துக் கொள்வோம். அவர் என்ன செய்வார்? இரண்டு வாழைப்பழங்களைச் சாப்பிடுவார். ஏற்கனவே சிறுநீரகம் வெளியேற்ற வேண்டிய பொட்டாசியம் வெளியேறவில்லை. இப்பொழுது மலம் மூலமாக அவர் உடம்பிலிருந்து வெளியே போக வேண்டிய பொட்டாசியமும் போகவில்லை. அதனால் இரத்தத்தில் பொட்டாசியம் அளவு கூடத் துவங்கும். இப்பொழுது அவர் சாப்பிட்ட வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியமும் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் அதன் அளவை மிகவும் அபாயகரமான அளவிற்குக் கூட்டிவிடும் வாய்ப்பு உண்டு. ஆகையால், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் மலம் கட்டிக்கொண்டால், அந்த நேரத்தில் பொட்டாசியம் நிரம்பிய உணவுகளை அறவே தவிர்த்தல் நலம்.
அடுத்து, புரதத்திற்கு வருவோம். உப்புச்சத்து கூடிவிட்டால் உணவில் புரதத்தை மிகவும் குறைத்துக் கொள்ளவேண்டும் என்ற ஒரு தவறான நம்பிக்கை பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் மருத்துவர்கள் மத்தியிலும் நிலவுகிறது. நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் புரதத்தின் அளவு தேவையைவிடக் குறைவாகவே உள்ளது. சராசரியாக நமக்கு ஒரு நாளைக்கு 1g /kg என்ற அளவிற்குப் புரதம் தேவை. அதாவது 60 கிலோ எடையுள்ள நபர் 60 கிராம் புரதங்கள் ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நாம் 40 கிராம் தொடுவதே சிரமம். உணவு வகைகளில் மாமிசங்களில்தான் அதிகப் புரதம் உள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே. மேற்கத்திய நாடுகளில் மூன்று நேரமும் அசைவம் உட்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. அந்த அதிகப்படியான புரதம் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படபொழுது சிறுநீரகத்தையும் பாதிக்கும். ஆக, உணவில் புரதத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்னும் அறிவுரை அவர்களுக்குத்தான். நம் மக்களோ வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் சிறிதளவு அசைவம் எடுக்கின்றனர். மற்ற நாட்களில் பெரும்பாலும் சைவ உணவுகள்தான். பருப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டுமா? கண்டிப்பாக இல்லை. வேண்டிய அளவு எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால், பருப்புகளில் உள்ள புரதங்களின் அளவு குறைவே. ஏற்கனவே தேவையை விடக் குறைவாகப் புரதம் எடுக்கும் இவர்களிடம் மேலும் புரதத்தைக் குறைக்கச் சொல்வது மிகவும் தவறு.
ஒருவர் வாரத்தில் இரண்டு மூன்று முறை டயாலிசிஸ் செய்து கொள்ள வேண்டிய நிலைமையில் இருக்கிறார் என்றால் அவருக்குச் சாதாரண மக்களைக் காட்டிலும் அதிகமாகப் புரதம் தேவைப்படும். அதாவது 1.2g /kg தேவை. ஏனென்றால், டயாலிசிஸ் செய்யும் பொழுது நமக்குத் தேவையற்ற யூரியா கிரியாட்டினின் போன்ற கழிவுகள் மற்றும் வெளியேறுவதில்லை, அமினோ ஆசிட் (புரதங்கள்), கால்சியம் போன்ற சில அத்தியாவசியச் சத்துகளும் வெளியேறும். ஆகையால், டயாலிஸிஸில் உள்ள நபர்களுக்கு நிறையப் பருப்புகளையும், வேண்டிய அளவு மாமிசங்களையும் எடுத்துக் கொள்ள அனுமதிப்பதுதான் முறை.
உணவில் முக்கியப் பங்கு வகிப்பது தண்ணீர். சாதாரண மக்கள் எவ்வளவு நீர் குடித்தாலும் தேவைக்கு அதிகமான அளவை சிறுநீரகங்கள் வெளியேற்றிவிடும். ஆனால் அது பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும்பட்சத்தில் அந்த உபரி நீர் உடம்பில் தங்கிவிடும். அப்படியானால் அந்த நபர் தான் குடிக்க வேண்டிய நீரை எப்படிக் கணிக்க வேண்டும்? எவ்வளவு சிறுநீர் வெளியேறுகிறதோ அதனுடன் 300 அல்லது 400 மில்லி சேர்த்துக் கொள்ளவேண்டும். உதாரணமாக ஒருவருக்கு 24 மணி நேரத்தில் 800 மில்லி அளவு சிறுநீர் வெளியேறுகிறது என்று வைத்துக் கொள்வோம். அவர் 1200 மில்லி நீர் (800+400) எடுத்துக் கொள்ளலாம். இது ஒரு தோராயமான அளவே. எந்த அளவு எடுக்க வேண்டும் என்று உங்கள் சிறுநீரக மருத்துவர் அறிவுறுத்தி இருக்கிறாரோ அந்த அளவே எடுக்க வேண்டும்.
ஆக, சிறுநீரகப் பாதிப்பு உள்ளானவர்கள் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளைக் குறைத்துக் கொள்வதும், வேண்டியளவு நீர், சோடியம் (உணவில் சேர்க்கும் உப்பு) மற்றும் புரதங்களை எடுத்துக் கொள்வதும்தான் அவர்கள் தங்கள் உணவில் செய்து கொள்ள வேண்டிய மாற்றங்கள்.




