
பா.ம.க. குடும்ப அரசியல்: கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியா?
- ‘செய்திக்கதிர்’ ஜி.எஸ். பாலமுருகன்
“அன்புமணியை 2026இல் முதலமைச்சராக்க பாடுபடுவோம்” என்று பா.ம.க. சமூக ஊடகப் பேரவையின் கூட்டத்தில் புதன்கிழமை பேசிய ராமதாஸ், ஓர் இரவுக்குப் பின் அவரது ‘குற்றச்சாட்டுகள்’, குடும்ப உறவுகள் மீது அரசியல் அதிகாரத்தின் தாக்கத்தை வெளிப்படுத்தின.
பா.ம.க.வில் தந்தை – மகன் இடையேயான மோதல் கட்சியின் எதிர்காலத்தையும், அதன் அடிப்படை மதிப்புகளையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது. “வளர்த்த கிடா மார்பில் உதைத்துவிட்டது”, “35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்தேன்”, “அன்புமணிக்கு தலைமைத் திறன் இல்லை”, “எடுத்தேன், கவிழ்த்தேன்”, “அனைத்திலும் மருமகள் தலையீடு” – இவை அனைத்தும் கட்சியின் நிலையை பொது மக்கள் முன் சிக்கலாக்கும் வகையில் வெளிப்படையாகவே பேசிவிட்டார் ராமதாஸ்.

“வன்னியர்களுக்கு செய்து கொடுத்த சத்தியத்தையும் மீறி, எனக்கு விருப்பம் இல்லை என்றாலும், எனது குடும்பத்தினரின் நெருக்கடியால் 35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி, நான்தான் தவறு செய்துவிட்டேன். ஒரு நாள் இரவு தூங்காமல், சுகாதாரத் துறையை பெற்று கொடுத்தேன்” என்று ராமதாஸ் சொல்கிறார். இந்த இடத்தில் ஒன்று குறிப்பிட்டாக வேண்டும். “அன்புமணி போன்று திறமையானவர் எவரும் இல்லை. அவரை ஊடகங்கள் ஆதரிக்க வேண்டும்!” என்று 2020 ஜுலையில் ஒரு கடிதம் எழுதினார் ராமதாஸ்.
தலைமைப் பண்பு இல்லாதவர் என்று விமர்சித்த ராமதாஸ்-க்கு, அவரது கடிதத்தில் இருந்து ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டுவது இப்போது பொருத்தமாக இருக்கும். “சுகாதாரத் துறையில் கடந்த 50 ஆண்டுகளில் செய்ய முடியாத பணிகளை 5 ஆண்டுகளில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் செய்து முடித்துள்ளார் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஒரு நடமாடும் மருத்துவக் கலைக்களஞ்சியம் என்று அப்போதைய மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியும் பாராட்டி கவுரவித்தனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.
“நான்கு சுவரில் பேசி முடிக்க வேண்டியதை, நடுவீதிக்கு கொண்டு வந்துவிட்டார் அன்புமணி” என்று ராமதாஸ் குற்றம்சாட்டினார். ஆனால் அதே அவர், பத்திரிகையாளர்களை கூட்டி, “அன்புமணிக்கு தலைமைத் திறன் இல்லை” “தாயார் மீது பாட்டிலை வீசினார்” “காடுவெட்டி குருவை அவமதித்தார்” என்று பேசுவது, கட்சி தொண்டர்கள் மனதில் குழப்பத்தையும் அன்புமணி மீது மக்கள் கொண்டிருக்கும் நன்மதிப்பையும் சிதைக்கும் என்பது ராமதாஸ்-க்கு தெரியாமல் போய்விட்டதா? உண்மைகள் எவ்வாறிருந்தாலும், அதை சுவற்றுக்குள்ளும் பொதுமக்கள் முன்னிலையில் வெளியில் பேசுவதற்கும் இடையே ஒரு நேர்மையான சமநிலை தேவைப்படுகிறது.

“பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்காவிட்டால் எனக்கு கொள்ளி வைக்க நேரிடும்” என கூறி என் காலைப் பிடித்து அன்புமணி அழுததாக ராமதாஸ் கூறியிருப்பது, வெறும் வாயில் அவல் மெல்பவர்களுக்கு வசதியாக போய்விட்டது. இதில் பா.ஜ.க. தந்திர அரசியலின் பின்புலம் குறித்து சிந்திக்க வைத்துள்ளதாக பலரும் பேசுகிறார்கள் அல்லது அப்படி ஒரு கருத்துருவாக்கம் ஏற்படுத்தப்படுகிறது.
பா.ஜ.க. நாடு முழுவதும் கட்சிகளை உடைத்து, புதிய கூட்டணிகளை உருவாக்கும் கதை, பா.ம.க. மீதும் அதே அழுத்தம் இருக்கக் கூடும் என்ற அரசியல் வட்டாரங்களின் ஊகங்களை ஒரேயடியாக நிராகரிக்க வேண்டியதும் அல்ல! பா.ஜ.க. மீதான இந்த சந்தேகம், இந்திய அரசியல் சூழலில் அனைத்து கட்சிகளும் உணர வேண்டிய ஒரு சூழலைதான் பா.ம.க. விஷயத்தில் இருந்து நாம் எடுத்து கொள்ள வேண்டியது.
அதேசமயம், இது முற்றிலும் தந்தை – மகன் இடையிலான அரசியல் மோதலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. பா.ஜ.க. கூட்டணியை அன்புமணி விரும்பியதற்கும், அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம் என்று சொன்னதற்கும் பின்னணி இருக்கிறது.
சேலத்தில் (23/03/2024) பேசிய எடப்பாடி பழனிசாமி, “பாட்டாளி மக்கள் கட்சி வேடந்தாங்கல் பறவைபோல் அடிக்கடி கூட்டணி மாற்றிக் கொண்டுள்ளனர். ஏரியில் தண்ணீர் நிரம்பி இருக்கும்போது பறவைகள் வரும். தண்ணீர் வற்றினால் சென்றுவிடும். அது போலத்தான் பா.ம.க.” என பேசினார். இதன் பிறகே அதிமுக – பாமக கூட்டணி ஏற்படாமல் முறிந்து போனது. இதை பழனிசாமியும் பின்னாளில் உணர்ந்து பேசியிருக்கிறார்.
“இனி கட்சியை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்ற அன்புமணியின் வார்த்தைக்குப் பிறகு, என் கண்களில் இருந்து 2 சொட்டு கண்ணீர் விழுந்தது என ராமதாஸ் சொன்னது, குடும்ப அரசியல் சிக்கலைவிட கட்சியின் எதிர்காலத்தைப் பற்றிய கவலையாகவே கட்சியினர் பார்க்கின்றனர்.
இப்போது கட்சி இருக்கும் செல்வாக்கையும் எதிர்காலத்தையும் நினைத்து ராமதாஸ் ஆதங்கத்தை கொட்டி தீர்ப்பது புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இந்த வாரிசு அரசியல் சிக்கல்கள் இந்திய அரசியலில் பொதுவானவை. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி, பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், கருணாநிதி இருந்தபோது திமுகவில் ஸ்டாலின் – அழகிரி மோதல், மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் – அவை அனைத்தும் அதற்கான சான்றுகள். ஆனால், அந்த குடும்ப அரசியல் சிக்கல்களை கடந்தே மக்களுக்கு சேவை செய்யும் நிலையை கட்சிகள் அடைய வேண்டும் என்பதை உணர வேண்டும்.
பேருந்து பயணங்கள் மூலமே 95 ஆயிரம் கிராமங்களுக்கு நடந்த ராமதாஸின் கால்கள் கட்சியை உற்சாகமாக கட்டியெழுப்பியது. கருணாநிதி, ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்களுடன் இணைந்து அரசியல் களத்தை எதிர்கொண்டவர். பாமகவின் கூட்டணிக்காக இரு தலைவர்களையும் ஏங்க வைத்தவர். இவை அனைத்தும் அவரது அரசியல் ஆளுமைக்கு நம்பிக்கை அளிக்கின்றன. அதை வளர்த்தெடுக்கும் வகையில், “அரசியல் களத்தில் மருத்துவர் அய்யா அவர்களின் லட்சியங்களை வென்றெடுப்பதும், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்திச் செல்வதும் எனது முழு முதல் கடமை” என்று கடந்த மாதம் 12ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார் அன்புமணி.
அன்புமணி – தந்தையின் பாரம்பரியத்தை தொடரும் பொறுப்பில் இருக்கிறார். ஆனால் அவரது தலைமையின் திறனை அரசியலில் இன்னும் நிரூபிக்க வேண்டிய அவசியம் மிக முக்கியமான சவாலாக உள்ளது. அதை அன்புமணியும் நன்கு உணர்ந்திருப்பார் என்பதே அவரது சொல்லில் தெரிகிறது. அதற்கு அவர் முதுகில் தட்டிக் கொடுத்து உறுதுணையாகவே இருக்க வேண்டும்.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் தருணத்தில், இப்படி வெளிப்படும் குடும்ப அரசியல் மோதல், பாமக கூட்டணி பேச்சுகளையும், கட்சியின் எதிர்காலத்தையும் பலவீனப்படுத்தும் அபாயம் உறுதியாக இருக்கிறது.
கண்ணாடி உடைந்தாலும், ஒட்டிவைத்தும் பயன்படுத்தலாம்; அதற்கான முயற்சியை இருவரும் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், அது வரும் தேர்தலை மட்டுமல்ல – கட்சியின் எதிர்கால நம்பிக்கைக்கும் பெரும் சவாலாக மாறும்.
பா.ம.க. குடும்ப அரசியல் மேடையா? அல்லது பா.ஜ.க. அழுத்தத்தின் வெளிப்பாடா? அல்லது தலைமைச் சவாலின் வெளிப்பாடா? – இவை அனைத்தும் நுணுக்கமான அரசியல் சிக்கல்கள். ஆனால் கடைசியில், தமிழக அரசியல் வரைபடத்தில் தனி அடையாளம் கொண்ட பா.ம.க. போன்ற கட்சிகள் மக்களுக்கு, சமூக நலனுக்காக உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்பதே உண்மை.
ராமதாஸ் மற்றும் பாட்டாளிகளின் கடின உழைப்பால் தனித்த அடையாளம் கொண்ட பா.ம.க.வின் வளர்ச்சி ஒரு குடும்பத்தின் தாக்கத்தில் அல்ல; மக்களின் நம்பிக்கையில் தான் உறுதியடையும். இதற்கான பதிலை வரலாறே எழுதப்போகிறது!





