
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
அமைதியும் அகிம்சையும் பாரத தேசத்தின் முக்கியமான குணங்கள். “அஹிம்ஸோ பரமோ தர்ம:” என்பது வேதங்களில் தொடங்கி இதிகாசம், புராணங்களின் வழியாக எடுத்துரைக்கப்பட்டு, பாரதத்தின் நீதியாகவும் வழக்கமாகவும் பரவியது. அதே நேரம், அமைதியையும் அஹிம்சையையும் குலைக்கும் எதிரிகளின் கூட்டத்தை வீரமும் பராக்கிரமும் காட்டி அமைதியின்மையையும், ஹிம்சையையும் துரத்துவதும் பாரத தேசத்தின் குணமே என்று காட்டுவோம். “அஹிம்சைக்காக ஹிம்சையும் தர்மமே” என்பது போர் நீதி.
அமைதியை விரும்பும் தேசமான பாரதம், ‘வசுதைவ குடும்பகம்’ என்ற எண்ணத்தோடு அனைவரையும் சேர்த்துக் கொண்டு, பொறுமை, இணக்கம், சமசரம், கருணை, நட்பு ஆகியவற்றோடு நடந்து கொள்கிறது. இப்படிப்பட்ட புனித பாரத பூமியையும், இதில் பல யுகங்களாக வளர்ந்து வரும் தர்மத்தையும் சிதைக்க வேண்டுமென்று பார்க்கும் தீய சக்திகளுக்கு வீரத்தோடு பதில் கூறுவதற்கான சாமர்த்தியமும் பாரத தேசத்திற்கு உண்டு. போர்க்களத்தில் வேதாந்த போதனை செய்த ஜகத்குருவை வழிபடும் தேசம் இது. அதுவே இந்த தேசத்தின் ஆதர்சம்.
பதவிக்கு வந்த நாள் முதல் மீண்டும் தேர்தலில் வெற்றி பெறுவதொன்றையே குறியாகக் கொண்டு கவர்ச்சியான திட்டங்களை அறிவிப்பது, அரசியல் சதிகள் செய்வது என்று செயல்படும் தலைவர்களையே பார்த்துள்ளோம். ஆனால் அதிகாரத்திற்கு வந்தது முதல், தேச வளர்ச்சியின் மீதும் தேசப் பாதுகாப்பின் மீதும் மட்டுமே பார்வையைச் செலுத்தி, அரசியல் ஆதாயத்தை விட நாட்டு நலனே முதன்மையானது என்று உழைக்கும் தலைவர்களையே ‘உண்மையாக ஆட்சி புரிபவர்கள்’ என்று கூறவேண்டும். அப்படிப்பட்ட தலைவர்களைக் கொண்ட ஆட்சி, நீண்டகால நலனைக் கருத்தில் கொண்டு, எதிரிகளால் தாக்க முடியாத திடமான தேசப் பாதுகாப்பு அமைப்பினை ஏற்படுத்தி தேசத்தின் முன்னேற்றமே முக்கிய இலக்காகக் கொண்டு உழைத்து வருகிறது. அவ்விதமான ஆட்சித் திறன் பதினொன்று ஆண்டுகளாக அதிர்ஷ்டவசமாக நம் தேசத்திற்கு கிடைத்துள்ளது.
சமரசம் செய்து கொள்ளாத விதத்தில் பாதுகாப்பு, கண்காணிப்பு ஆகியவற்றை திடப்படுத்தியதன் காரணமாகத்தான் பகைவர்களின் ஊடுருவல் தாக்குதலுக்கு சாமர்த்தியமாக பதிலடி கொடுக்க முடிந்தது.
விடுதலை பெற்றபோது பாரத தேசம் இரண்டு துண்டுகளாகி, அதன் பின் மூன்றாகி புதிதாக எதிரி நாடுகளை சிருஷ்டித்துக் கொள்ளவேண்டி வந்தது. துண்டான பாரத தேசத்தின் பகுதி முதலில் இருந்தே மக்களின் நலன், தேசத்தின் முன்னேற்றம் ஆகியவற்றை விட பகைமைக்குக் வெறுப்புக்கும் முக்கியத்தும் அளித்து வன்முறையையும் பயங்கரவாதத்தையும் மத வெறியையும் மட்டுமே வளர்த்து வருகிறது. வியாபார நோக்கத்தோடு வெளிநாட்டு அமைப்புகள் செய்யும் ஆயுத விற்பனை பகைவர்களின் பயங்கரவாதத்தை வலுப்படுத்தி வருகிறது.
உலகில் பல தேசங்களில் அழிவையும், தாக்குதலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் பயங்கரவாதத்திற்குத் தம் தேசத்தைக் கோட்டையாக உருவாக்கிக் கொண்டது பகை தேசம். அந்தக் கொடுமைகளுக்கு பல்வேறு துல்லியமான தாக்குதல்கள் (சர்ஜிகல் ஸ்ட்ரைக்ஸ்) மூலம் பாரதம் புத்திசாலித்தனமாக பதிலளித்தது. பயங்கரவாத தாக்குதல்களை நடக்க விடாமல் முன்பு எப்போதும் இல்லாத விதமாக திறம்பட ஏற்பாடுகளை செய்தது.
ஆனால் அண்மையில் காஷ்மீருக்குள் புகுந்து பஹல்காமில் அங்கிருந்த மத வெறியர்களின் உதவியோடு சுற்றுலா வந்த மக்களை மதத்தின் பெயரால் கொடூரமாகக் கொலை செய்த பயங்கரவாதிகளின் அக்கிரமத்திற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாரதம் சரியான பதிலடி கொடுத்தது. வளர்ந்த நாடுகளின் அகம்பாவம் அடங்கும் விதமாக, உலகம் முழுவதும் வாயைப் பிளக்கும் விதமாக பாரத தேசப் பெண் சக்தியின் தலைமையில் முப்படை வீரர்கள் வீறு கொண்டெழுந்தார்கள். ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் எத்தனை வலிமையாகவும், தரமாகவும் பாரதம் தயாரித்து வைத்திருந்தது என்பதை உலகிற்கு நிரூபித்தார்கள்.
பகை நாடு போர் நிறுத்தத்திற்குத் தானாகவே இறங்கிவந்தது. வாக்கை மீறி மீண்டும் இரு முறை தாக்குதல் நடத்தியது. பாரதம் முன்வைத்த காலைப் பின் வைக்காமல் கடினமாக அடித்துத் துரத்தி, பகை நாட்டை மண்ணைக் கவ்வ வைத்தது. வீர பாரதம். வெற்றி பாரதம். பகைவர்களின் பலமான பயங்கரவாத தளங்களை துவம்சம் செய்து, “எங்களுடையது தர்ம யுத்தம். பயங்கரவாதிகளோடு மட்டுமே எங்கள் போராட்டம்” என்று அடித்துக் கூறி இலக்கை மட்டுமே குறிபார்த்துத் தாக்கியது. ஆனால் பகை தேசமோ பயங்கரவாதம், தேசம், ராணுவம் மூன்றும் தமக்கு ஒன்றே என்று நிரூபித்தபடி எதிர்பாராத அடி வாங்கிச் சரிந்தது.
பாரதத்தில் சுகமாக இருந்து கொண்டு பகை நாடுகளுக்கு வக்காலத்து வாங்கும் சில தீய உயிரினங்களைத் தவிர எதிர்க்கட்சிகளும் மக்கள் அனைவரும் மெச்சிக் கொள்ளும் விதமாக சமயத்திற்கேற்ப சாமர்த்தியமாக நடந்து கொண்ட ஆட்சி அமைப்பைப் பாராட்டியே தீர வேண்டும்.
பொருளாதார முன்னேற்றத்தில் உலகின் முதன்மையிடத்தை நோக்கி விரைந்து செல்லும் பாரதம், தன்னைத் தான் பாதுகாத்துக் கொண்டு பகைவர்களை அழிக்கக் கூடிய அற்புதமான ராணுவ அமைப்பைப் பெற்றுள்ளது என்பதை உலகிற்குப் பெருமையோடும் தெளிவோடும் பிரத்தியக்ஷமாகக் காட்டியது.
கெஞ்சுவது, விட்டுக் கொடுப்பது போன்ற எதுவும் இல்லாமல் நேரத்திற்கேற்ப சரியான முடிவெடுத்து பகை நாட்டையும் அதை ஆதரிக்கும் நாடுகளையும் ஒரே நேரத்தில் சங்கோஜம் சிறிதுமின்றி எச்சரித்தது.
நிதானம் நிரம்பிய பெரும் தேசமான பாரதத்திற்குக் கட்டுப்பாடு, சாமர்த்தியம், பொறுப்போடு கூடிய தீர்மானம், நிர்வாகம் போன்ற நல்ல குணங்கள் எல்லாம் உண்டென்று கம்பீரமாக அறிவித்தது.
தர்மத்தில் உறுதி, தேசபக்தி, தளராத, ஓய்வில்லாத, தீட்சையோடு கூடிய உழைப்பு ஆகிய எல்லாம் ஓருருவமாகக் கொண்ட ஆளுமை, பாரத தேசத்திற்கு முதன்மையாக நின்று திறமையான பாதுகாப்பு, வெளியுறவு, ராணுவம் ஆகிய துறைத் தலைவர்களின் உதவியோடு நடத்திய ஆபரேஷன் சிந்தூர், பாரத மாதாவின் நெற்றியில் குங்கும ஒளிக் கிரணத்தைத் தீட்டி அதை மேன்மையோடு உலகிற்கு வெளிப்படுத்தியது.
அச்சமின்மை, வீரம், சிறந்த பாதுகாப்புணர்வு போன்றவற்றைத் தோற்றுவித்த அரசாங்கத்தை நாட்டுமக்கள் பாராட்டியே தீர வேண்டும். இந்த மாபெரும் யக்ஞத்தில் உயிர் துறந்து சுவர்க்கத்தை அலங்கரித்த வெற்றி வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியபடி விஸ்வ குருவாக, வீரத்திற்கு உதாரணமாக சஸ்திரத்திற்கும் சாஸ்திரத்திற்கும் ஐஸ்வர்யத்திற்கும் நம் தேசமே முதன்மையானது என்று நிரூபித்ததைப் பாராட்டிப் பெருமையோடு மகிழ்வோம்.
(தலையங்கம், ருஷிபீடம் மாத இதழ், ஜூன், 2025)





