
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக கன்னியாகுமரியில் இருந்து காசிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது.!
இந்த ரயிலை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி, குமரி மாவட்ட பாஜக தலைவர் கோபகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தி வரும் “காசி – தமிழ் சங்கமம்” என்ற கலாச்சார நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் காசி ஆகிய இரு பகுதிகளின் கலை, பண்பாடு, மரபு ஆகியவற்றை ஒன்றிணைக்கும் முக்கிய நோக்கம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று புறப்பட்டது.
மொத்தம் 320 பேர் பயணிக்கும் இந்த ரயிலில் 216 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டவர்கள். 50 பேர் தமிழ் இலக்கிய வல்லுநர்கள், மேலும் 54 பேர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த கலாச்சார அறிஞர்கள்.
காசி சென்றடைந்த பிறகு, பயணிகள் வரணாசி, அயோத்தியா, பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல புனித மற்றும் பாரம்பரிய தலங்களை பார்வையிட உள்ளனர்.
பின்னர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கிலும் அவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாபெரும் காசி–தமிழ் சங்கம நிகழ்ச்சியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழ் மற்றும் வடஇந்திய கலாச்சாரங்களை இணைக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த பயணம், தமிழகத்தின் கலாச்சார பாரம்பரியத்தை காசி மக்களிடம் கொண்டு சேர்க்கும் அரிய நிகழ்வாக அமைந்துள்ளது.





