
திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் அதற்கு மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் முழு போலீஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்த அறிக்கையை அவர் நாளை காலை மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
முன்னதாக, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை கிளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவு சரிதான் என தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திற்குப் பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் ராம. ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில், மலை உச்சியில் உள்ள பழமையான தீபத் தூணிலும் தீபம் ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
ஆனால், இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தமிழக அரசு அதனை அமல்படுத்தாததால் நேற்று மாலையே மனுதாரர், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். தொடர்ந்து தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இன்று காலை முதல் இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக நடைபெற்று வந்தது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்து வாதம் செய்தது. மதப் பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் அவர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு குற்றம்சாட்டியது.
வழக்கின் விசாரணையில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. “தனி நீதிபதியின் உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதாலே சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறை தனது கடமையைச் செய்யத் தவறியதால் சிஐஎஸ்எஃப் உள்ளே கொண்டுவரப்பட்டது. இதில் எந்த விதிமீறலும் இருப்பதாகத் தெரியவில்லை. நீதிமன்ற உத்தரவை அரசு செயல்படுத்தியிருக்க வேண்டும்.
மாநில அரசு தனது கடமையைச் செய்யத் தவறியதால்தான் தனி நீதிபதி மீண்டும் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு எதோ உள்நோக்கத்துடன் வழக்குத் தொடர்ந்துள்ளது” என்று நீதிபதிகள் கூறி மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர்.



