
— ராம் மாதவ் —
தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்
தில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் முன்னணி தொழில் நிறுவனங்கள் இரண்டின் தலைவர்களை அலட்சியப்படுத்தியது சமூக ஊடகங்களில் பேசு பொருளானது. அவர் தொடர்ந்து இந்திய பொருளாதாரத்தை விமர்சித்து கேலி செய்வதும் இந்திய கார்ப்பரேட்டுகளை வில்லனாக சித்தரிப்பதும் ஊடகங்களில் செய்தியாகி உள்ளன.
இவை சுதந்திரமடைந்த ஆரம்ப காலத்தில் சோசலிசம் ஆளும் வர்க்கத்தின் பார்வையாகவும் அது லாபம் ஈட்டுவோர் மற்றும் செல்வ வளங்களை உற்பத்தி செய்வோருக்கு எதிரான மன நிலையாகவும் இருந்ததை நமக்கு நினைவூட்டுகிறது.
அண்மையில் ஓ டி டி யில் ஒரு திரைப்படம் வெளியானது.சோசலிச மனோபாவத்தின் விளைவுகளை பற்றி எடுத்து சொல்வதாக அந்த திரைப்படம் உள்ளது. 1991 இல் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு ஒரு மில்லியனுக்கும் கீழே சரிந்து , அதனால் நம் நாட்டுக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டதை அந்த திரைப்படம் காட்டியது.
இந்தியாவின் பொருளாதார நிலை மாறியதற்கு காரணம் பி வி நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் கொண்டு வந்த பொருளாதாரம் சீர்திருத்தங்கள் என்று மக்கள் கருதுகிறார்கள். ஆனால் அந்த திரைப்படம் 1990 – 91 சப்பாணி அரசின் பிரதமராக இருந்த சந்திரசேகரின் பங்களிப்பை பற்றி பேசுகிறது.
பிரச்சனை மிகவும் கடினமானதாக இருந்தது. இந்திய அரசிடம் இருந்த தங்கத்தை இங்கிலாந்து வங்கி மற்றும் ஸ்விட்சர்லாந்தில் உள்ள வங்கியில் அடமானம் வைத்து டாலரை கடனாக பெறுவது மட்டுமே ஒரே வழி என்று அப்போதைய மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் எஸ் வெங்கடரமணன் கூறினார். ஆச்சார்யா நரேந்திர தேவ் , ராம் மனோகர் லோகியா போன்ற தீவிர சோசலிஸ்ட் தலைவர்களின் சீடராக அரசியலில் வளர்ந்த சந்திரசேகருக்கு கருத்தியல் ஊசலாட்டம் ஏற்பட்டது. ஆனால் சோசலிச கருத்தியலை விட தேசம் முக்கியமானது என்று வெங்கடரமணன் அவருக்கு புரிய வைத்தார்.
இந்த (80வது) சுதந்திர தினத்தின் போது இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 700 மில்லியன் டாலராகவும் தங்கத்தின் கையிருப்பு 880 டன்னாகவும் உள்ளது. இது நமக்கு ஆசுவாசம் அளிப்பதாக இருக்கிறது. நரேந்திர மோடியின் 12 ஆண்டு கால ஆட்சியில் நம்முடைய அந்நிய செலாவணி கையிருப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் 1991 இல் நடந்த நிகழ்வு நாம் சுதந்திரத்திற்கு பிறகான நான்கு தசாப்தங்கள் சோசலிச பார்வையை தவிர்த்து இருந்தால் இன்னமும் சிறப்பாக முன்னேறி இருப்போமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
1927 ல் ஜவஹர்லால் நேரு அக்டோபர் புரட்சியின் 10 வது ஆண்டு நினைவு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாஸ்கோ சென்றதில் இருந்து இது தொடங்குகிறது. அவர் அந்த பயணத்துக்கு பிறகு தன்னை சோசலிஸ்ட் என்று சொல்லிக் கொண்டார். 1929 இல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக ‘இந்தியா சோசலிச பாதையில் பயணிக்கும்’ என்று அறிவித்தார்.
அவர் அந்த பேச்சை தொடர்ந்து பேசப்பேச 1936 இல் காங்கிரஸ் செயற்குழுவில் எதிர்ப்பு வெடித்தது. சர்தார் பட்டேல், ராஜேந்திர பிரசாத், சி ராஜகோபாலாச்சாரி , ஜே பி கிருபளானி , ஜமன்லால் பஜாஜ் உட்பட ஏழு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்தார்கள். காங்கிரஸின் அதிகார பூர்வமான கொள்கையாக சோசலிசம் இருக்காது என்ற உறுதி மொழியை நேருவிடம் இருந்து காந்தி பெற்றார். காந்தியும் பட்டேலும் உயிருடன் இருக்கும் வரை நேரு அந்த உறுதிமொழியை மதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் . ஆனால் 1950 க்கு பிறகு அவர் தனது செல்லக்கருத்துக்கு திரும்பி விட்டார்.
1955 ல் ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ‘சோசலிச சமுதாயமே’ தனது அரசின் லட்சியம் என்று தீர்மானம் இயற்றினார். அரசின் முன்னெடுப்பிலான வளர்ச்சியை வலியுறுத்தி கொள்கைகள் உருவாக்கப்பட்டன. தனியார் தொழில் முனைப்பை பர்மிட் – லைசன்ஸ் – கோட்டா மூலம் கட்டுப்படுத்தும் ஐந்தாண்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன் விளைவுகள் விரைவில் வெளிப்பட்டன.
1965 யில் வெளியான பத்தாண்டு புள்ளி விவரங்களின்படி தேசத்தின் வறுமை 52.60 சதவீதத்தில் இருந்து 58.60 ஆக அதிகரித்துவிட்டது. இரண்டாம் உலக போருக்கு பிறகு உணவு கட்டுப்பாட்டை இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நடைமுறைப்படுத்திய ஒரே நாடு இந்தியாதான். விவசாய உற்பத்தி திறன் உலகிலேயே மிகவும் குறைவாக இருந்த நாடும் இந்தியா தான். 1963 இல் நாடாளுமன்றத்தில், நாளொன்றுக்கு மூன்று அணாவுக்கும் (18 பைசா) கீழ் ஊதியம் கொண்ட 270 மில்லியன் இந்தியர்கள் வாழும் நிலையில் நேருவின் நாய்க்கு நாள் ஒன்றுக்கு மூன்று ரூபாய் செலவழிக்கப்படுகிறது என்று குற்றஞ்சாட்டி பரபரப்பான சர்ச்சைக்கு வித்திட்டார் லோகியா.
மோசமான அனுபவங்களுக்கு பிறகும் பிரதமர் இந்திரா காந்தி அதே கொள்கைகளை பின்பற்றினார். 42 வது சட்ட திருத்தத்தின் மூலம் அரசியல் சாசனத்தில் ‘சோசலிசம்’ என்ற வார்த்தையை புகுத்தினார்.
1978 ல் டெங் ஜிப்பியாங் தலைமையில் சீனா ‘நான்கு நவீனங்கள்’ என்ற பெயரில் சோசலிசத்தை கை கழுவி விட்டது. 1990 களில் சோசலிச சோவியத் ஒன்றியம் சிதறியது. நாம் 1991 சோசலிச பாரத்தை இறக்கி விட்டுவிட்டு பொருளாதார வெளிப்படை தன்மை, சந்தை சீர்திருத்தம் என்ற புதிய பாதையில் பயணிக்க தொடங்கினோம்.
ஆனால் நாம் இழந்த தசாப்தங்களை மறக்க முடியாது. குறிப்பாக இப்போதுள்ள துடிப்பான பொருளாதாரத்தை எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து அருவருப்புடன் விமர்சித்து வரும் சூழ்நிலையில் அதை மறக்க கூடாது.
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்
கட்டுரையாளர் பாஜகவின் தேசிய துணைத் தலைவராக உள்ளார்

