
அக்டோபர் 1 முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள் …
வீட்டு பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் பெறும் நுகர்வோருக்கு அக்டோபர் 1, 2026 முதல் புதிய விதி அமலுக்கு வருகிறது.
மானிய விலையில் வீட்டு எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்ய, ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரம் (Biometric Aadhaar Authentication – BAA) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை முடித்தவர்கள் மீண்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை.
சிலிண்டரை வீட்டுக்கு கொண்டு வரும் ஊழியர், சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரத்தைச் செய்து தர முடியும்.
உங்கள் சிலிண்டர் விநியோகஸ்தரின் அலுவலகத்துக்குச் சென்று அங்கீகாரத்தை முடிக்கலாம். மானிய விலையில் எல்பிஜி சிலிண்டர் பெற விரும்பி, இதுவரை ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரம் செய்யாதவர்கள் அக்டோபர் 1, 2026-க்கு முன் இந்த நடைமுறையை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
எல்பிஜி சேவைகள் தொடர்பான உதவிக்கு 1800 2333 555 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
எல்லா பேருந்துகளிலும் பெண்களுக்கு இனி… கட்டணமில்லா பயணம்
*தமிழகத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தில் மாநகரம், நகர்ப்புறங்களில் சாதாரண மற்றும் மலைப்பகுதிப் பேருந்துகளில் 40 கி.மீ. வரை மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது.
எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் பேருந்துகள் மற்றும் புறநகர்ப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் அனுமதிக்கப்படுவதில்லை.
இதனைக் கருத்தில் கொண்டு, மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் பயனளித்திடும் விதமாக, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில், தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி முதல் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, முதல் கட்டமாக மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி மாநகரம், நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம்.
மேலும் கூடுதலாக, மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில், சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

