srivilliputhur andal rangamannar adi pooram ther - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

சற்றுமுன் ஆன்மிகச் செய்திகள் மதுரை லைஃப் ஸ்டைல் விழாக்கள் விசேஷங்கள்
srivilliputhur andal rangamannar adi pooram ther - 2026

ஸ்ரீவில்லி ஆண்டாள் கோவில் ஆடிபூர தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். பக்தர்கள் திரண்டதால் குலுங்கியது கோதை நகர் ஸ்ரீவில்லிபுத்தூர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிபூரத்தன்று தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் குவிந்ததால் கோதை நகர் குலுங்கியது. பக்தர்கள் கோபாலா கோவிந்தா என உற்சாக கோஷமிட்டு தேரை விரைவாக இழுத்து நிலையம் சேர்த்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர்த் திருவிழா தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும். இந்த ஆண்டு ஆடித் தேர்த் திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனம், ஐந்து கருட சேவை என, பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஆக.14ம் தேதி இன்று, வெகு விமர்சியாக நடைபெற்றது. அதிகாலை 4:30க்கு ஆண்டாள் ரங்கமன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் அலங்காரங்கள் செய்விக்கப்பட்டு திருத்தேரில் எழுந்தருளினார்கள். அப்பொழுது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

இதனை தொடர்ந்து காலை 8:45 மணிக்கு திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக தொடங்கியது. தேரோட்டத்தை அமைச்சர்கள் ச. கீர்த்தனா கு. ஜெகதீஸ்வரி ராம்கோ நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் பி. ஆர்.வெங்கட்ராம ராஜா மாவட்ட ஆட்சியர் சுகபுத்திரா, சட்டமன்ற உறுப்பினர் எ. கார்த்திக் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

மாவட்ட எஸ். பி. கௌதம் கோயல் மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தி, சிவகாசி சார் ஆட்சியர் முகமது இர்பான், மதுரை அறநிலையத் துறை இணை ஆணையர் செ. மாரியப்பன், உதவி ஆணையர் மற்றும் கோவில் தக்கார் மு. நாகராஜன், கோவில் செயல் அலுவலர் சௌ. சக்கரை அம்மாள் உட்பட, பல்லாயிரக் கணக்கான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து நிலையம் சேர்த்தனர்.தேர் சரியாக 11:55 மணியளவில் நிலையம் சேர்ந்தது.

திருவிழாவை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் நீர் மோர் வழங்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக மருத்துவ வசதி போக்குவரத்து வசதி பாதுகாப்பு வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தேர் நிலையம் அடைந்ததும் கோயில் நிர்வாகம் சார்பாக தேரை இழுத்து நிலையம் சேர்த்த பக்தர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தேரின் மீது ஏறிச்சென்று ஆண்டாள் ரங்கமன்னாரை தரிசித்தனர். தேரோட்டத்தினை முன்னிட்டு ஆண்டாள் கோவில் பகுதி முழுவதும் பக்தர்களுக்கு இடை விடாமல் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தின் போது போலீசார் கோயிலை சுற்றி பல இடங்களில் தடுப்பு வேலி அமைத்து பக்தர்களை திசை திருப்பி விட்டதால் ஸ்ரீவில்லிபுத்தூர் முழுவதும் நேற்று கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.