
— அபிஜித் மஜூம்தார் —
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்
இந்த மாதம் முதல் வாரத்தில் சமூக ஊடகங்களில் ஒரு அசாதாரண நிகழ்வு நடந்தது. உலகின் பெரும் செல்வந்தர், இடதுசாரிகளால் மிகவும் வெறுக்கப்படும் முதலாளித்துவவாதி ஒருவர் புகழ்பெற்ற மார்க்சிய சிந்தனையாளரை பாராட்டி, அவரை மேற்கோள் காட்டி வெளியிட்ட எக்ஸ் பதிவு அது. பாசிச சர்வாதிகாரியான பெனிட்டோ முசோலினியால் சிறையில் அடைக்கப்பட்ட இத்தாலிய மார்க்சியர் அந்தோனியோ கிராம்சியை மேற்கோள் காட்டி ‘அவர் மிகச்சரியாக சொல்லி உள்ளார்’ என்று பாராட்டி எலான் மஸ்க் எழுதிய நீண்ட பதிவு அது.
தீவிரமான வலதுசாரிகளில் ஒரு பிரிவினரிடையே கிராம்சியின் செல்வாக்கு மிகவும் ஆழமாக இருக்கிறது. அவரது கருத்துக்களை அவர்கள் பாராட்டுகிறார்கள். அதை இடதுசாரிகளுக்கு எதிராக திரும்புகிறார்கள் . அதனால் தானோ என்னவோ இப்போதெல்லாம் மார்க்சியர்கள் அவரைப் பற்றி பேசுவதே இல்லை.
கூன் விழுந்த, ஐந்து அடி உயரம் கூட வளராத, கடுமையான நோய்வாய்ப்பட்டிருந்த அந்த மனிதரின் கருத்துக்கள் எப்படி இவ்வளவு உயரம் பெற்றன ? அவர் அப்படியென்ன சொல்லிவிட்டார் ?
கலாச்சார அதிகார பீடத்தை அடைவதற்குதான் உண்மையான போராட்டம் நடக்கிறது. ஓட்டு பதிவு இயந்திரத்தில் அதிகாரம் துவங்கவில்லை. மாறாக அது பாட நூல்களில், பள்ளி வகுப்பறைகளில், சமூக அறிவியல் கொள்கைகளில், செய்தியாளர்கள் அறையில், ஓடிடி தொடர்களில், ரிலீஸ்களில் தொடங்குகிறது. எது கலாச்சாரத்தை தீர்மானிக்கிறதோ அவை சமுதாயத்தின் சட்டங்களையும் அதன் நடத்தையையும் அதன் தலைவிதியையும் தீர்மானிக்கின்றன என்பதை அவர் படம் பிடித்து காட்டினார்.
லெனின் பெரும் திரள் ரஷ்யாவில் செய்தது போல ஐரோப்பிய நாடுகளை தொழிலாளிகள் கைப்பற்றவில்லை. ஏனென்றால் மேற்கத்திய நாடுகளில் அதிகாரம் நாடாளுமன்றங்களிலோ காவல் நிலையங்களிலோ மட்டுமேயில்லை. அது கலாச்சாரத்தால் கட்டமைக்கப்பட்ட ‘பொது புத்தி’யின் வழியாக பாய்கிறது. நன்மை தீமை, எது ஏற்புடையது மறுக்க வேண்டியது என்பதை பற்றிய கருத்தொற்றுமை அமைப்புகளை கருத்தியல் ரீதியாக கைப்பற்றுவதன் மூலம் உருவாக்கப்படுகிறது.
காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் பல்லவி ஜோஷி நடித்த ராதிகா மேனோனின் கதாபாத்திரம் அதிகாரத்தின் அடித்தளத்தை குறித்து சரியாக சொல்லும் : “அரசு அவர்கள் கையில் இருந்தால் என்ன, அமைப்பு இப்பவும் நம்முடையது.”
இந்த கலாச்சார ஆதிக்கத்தால் தான் ஒருவரால் தேர்தலில் தோல்வியடைந்தாலும் நாட்டை தன் பிடியில் வைத்திருக்க முடிகிறது. அரண்மனையை கைப்பற்றுவது குறுகிய போராட்டம். ஆனால் கலாச்சார போர்க்களத்தில் வெற்றி பெற சிக்கலான, நீண்ட கால முற்றுகையும் முன்னணியினர் விழுந்து விடாமல் காப்பதும் தேவை, என்று வாதிடுகிறார் கிராம்சி தனது சிறை குறிப்பேடுகள் என்ற நூலில்.
எடுத்துக்காட்டாக, இந்தியாவில் இன்று நரேந்திர மோடி தலைமையிலான பாஜக காஷ்மீர் விஷயத்தில் தொடங்கி முத்தலாக் , ஆரிய படையெடுப்பு தொடங்கி அயோத்தியா வரையிலும் மிக திறம்பட மக்கள் கண்ணோட்டத்தை மாற்றியுள்ளது. ஆனால் ஜவஹர்லால் நேருவினால் கட்டவிழ்த்து விடப்பட்ட இஸ்லாமிய – கம்யூனிச மேலாதிக்கத்தை கல்வித்துறையிலும் ஊடகங்களிலும் இன்னமும் பாஜக வெல்லவில்லை. அதேபோல் 1835 இல் தாமஸ் பாபிங்டன் மெக்காலேவின் ஆங்கில கல்வி முறையால் ஆழமாக பதிய வைக்கப்பட்டுள்ள காலனிய மனப்பான்மையை பாஜக இன்னமும் வென்று விடவில்லை.
இந்திய ஊடகங்களில், கல்வி புலத்தில் ஹிந்துத்துவ அல்லது தேசிய சிந்தனை சூழல் இப்போதுதான் துளிர்க்க தொடங்கியுள்ளது. ஆதரவான அரசு இல்லாமல் போனால் அது உயிர் பிழைக்குமா என்று தெரியவில்லை.
மோடி அரசு பதவிக்கு வந்து பத்தாண்டுகள் கழித்து கடைசியாக கல்வித்துறையை தொட்டது தவறு. கிராம்சி சொன்னது போல் இடதுசாரிகளின் கலாச்சார ஆதிக்கம் இந்திய நகர்ப்புற, படித்த இளைஞர்களிடையே இன்னமும் வலுவாக இருக்கிறது. அண்மையில் தலைமை நீதிபதியின் சர்ச்சைக்குரிய பேச்சால் ஆரம்பமான இயக்கம் இதை சுட்டிக் காட்டுகிறது.
‘ பொது புத்தி’யை திறம்பட உருவாக்கவும் நிரந்தரமாக அதை தக்க வைக்கவும் வலதுசாரிகளிடம் போதுமான அளவில் கலைஞர்கள், பல்கலைக்கழக வேந்தர்கள், அரசு சாராத அமைப்புகள், மனிதவள மேம்பாட்டு துறை நிர்வாகிகள் இல்லை. காலத்துக்கேற்ற நகைச்சுவை பேச்சு நிகழ்ச்சியாளர்களையும் விக்கிபீடியாவின் குரலையும் அது இன்னமும் கட்டுப்படுத்த முடியவில்லை. பிரதமரின் பதிவையே தடுக்க கூடிய அளவுக்கு ஆணவத்துடன் நடந்து கொள்கிறது மீட்டா. தேர்வு நிறுவனங்களில், திரைப்பட தயாரிப்பு நிதியில், அருங்காட்சியக அறக்கட்டளைகளில், அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையங்களில் தங்களது கருத்தியல் கூர்மையுடன் கூடிய புத்திசாலியான ஆட்களை அமர்த்த அவர்களால் முடியவில்லை.
அதுபோலவே கிராம்சி ‘இயல்பாகவே புத்திசாலி’ என்பதற்கு மதிப்பு கொடுக்கிறார். தொலைக்காட்சியில் சிறப்பு விவாதத்தில் பங்கேற்பவரை விட கிராம பள்ளி ஆசிரியருக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார்.
தேர்தல் முடிவுகளுக்கு அப்பாற்பட்டு தேசியவாதிகள் அடுத்த பல தசாப்தங்களுக்கு அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் இந்த கலாச்சார போரில் வென்றாக வேண்டும். தங்கள் கருத்தியல் பள்ளிக்கு எதிர் முகாமை சேர்ந்த இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய சிந்தனையாளர் இவர்களுக்கு படிக்கவும் அதன்படி களமாடவும் சீரியதொரு நூலை விட்டுச் சென்றுள்ளார் என்பது நகைமுரண்தான்.
நன்றி : நியூஸ் 18
கட்டுரையாளர் நூலாசிரியர்

