
விடுதலைக்கு வழி: ஒரு எழுத்தாளரின் வாழ்க்கையை மாற்றிய சங்கம்!
— அத்வைத கலா —
தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்
நான் எப்போதும் ஒரு நாடோடி போல ஊரை விட்டு வேறொரு ஊருக்கு குடியேறுவது, நாட்டை விட்டு வேறொரு நாட்டுக்கு போய் வாழ்வது என்பதை இயல்பாக கொண்டவள். இந்த நாடோடி வாழ்க்கை என்னை இந்தியா முழுக்கவும் மட்டுமன்றி அதற்கு அப்பாலும் கொண்டு சென்றுள்ளது. கூடவே நான் எழுத ஆரம்பித்தேன். நாவல்கள் திரைக்கதைகள் எழுதினேன். மக்கள் அதை படித்திருக்கிறார்கள், பார்த்திருக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியம் அளித்தது. சிலர் என் பெயரைக் கூட தெரிந்து வைத்திருந்தனர். இந்த அங்கீகாரம் கிளுகிளுப்பை கொடுத்தாலும் அதன் அடியில் அமைதியாக ஆனால் தொடர்ந்து ஒரு கேள்வி இருந்து கொண்டே இருந்தது. உண்மையில் நான் எந்த இடத்தை சேர்ந்தவள் ?
எல்லா பயணங்களுக்கும் பிறகு நான் ‘வந்தடைந்தேன்’ . அமெரிக்காவில் என்னுடைய புத்தகம் வெளியானது. நூல் வெளியீட்டுகளின் தலைமையிடமான நியூயார்க் நகரில் என்னுடைய வெளியீட்டாளர் எனக்கு ஒரு விருந்து கொடுத்தார். ட்ரூமன் கபோட்டின் அலங்காரம் நிஜ வாழ்க்கைக்கு வந்த மகிழ்ச்சி.
இருந்தாலும் லேசான வெறுமை எனக்குள் இருந்தது. மகிழ்ச்சி இல்லாமல் இல்லை. பெருமையாகவும் உவப்பாகவும் இருந்தது. ஆனால் ஏதோ ஒன்று இல்லாததை போல் இருந்தது. வூட்டி ஆலன் சினிமாவில் வரும் கதாபாத்திரம் போல் நான் ஒரே மாதிரியான, மகிழ்ச்சியுடன் இருந்தேன். அது நான் தான் ஆனால் நானில்லை.
சில ஆண்டுகள் கழித்து அதே உணர்வு மீண்டும் வந்தது. இந்த முறை வேறொரு வடிவில். என்னுடைய கஹானி (கதை) திரைப்படத்திற்கு விருதுகள் கிடைத்தன. அப்போது வான்கூவரில் கரன் ஜோகரிடமிருந்து விருது பெற மேடை ஏறினேன். அவர் கண்ணாலே என்னை அளந்தார். விருது பெற்றாலும் எனக்குள்ளே இருந்த ஆள் அந்த சூழ்நிலைக்கு நான் பொருந்தி போகாததை கண்டு கொண்டான். மீண்டும் ஒரு பெருமைமிகு தருணம். ஆனால் அதே அசௌக்கரியமான உணர்வு.
அறிமுகமான பாதையில் சரியான மைல்கல்களை பார்த்தபடியே பயணித்து ஆனால் காணாமல் போய் விடுவதை கற்பனை செய்து பாருங்கள். அது நான்தான். இந்த நிலையில்தான் என்னுடைய பாதை வேறு திசையில் திரும்பியது.
புத்தக உலகத்திற்கு முன்பொரு வில்லன் இருந்தார். அவர் பெயர் தீனாநாத் பாத்ரா . அவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் . ஆர் எஸ் எஸ் ஐ சேர்ந்தவர். புத்தகங்களை தடை செய்யும் பணியை தானே விரும்பி ஏற்றுக் கொண்டவர். வென்டி டோனிகரை எதிர்த்து அவர் நடத்திய போராட்டம் மிகவும் பிரபலம். நான் அப்போது ஒரு செய்தித்தாளில் தொடர்ந்து எழுதிக் கொண்டு இருந்தேன். இணைய சீண்டலுக்கு (Troll) முந்தைய காலம் அது. என்னுடைய கீச்சக நண்பர் (முன்பு ட்விட்டர் இப்போது எக்ஸ் தளம்) ஒருவர் பாத்ராவை சந்திக்க வருகிறாயா என்று கேட்டார். அவர் ஒரு ஸ்வயம்சேவகர் . எனக்கு இணையம் வழி நண்பர்.
புத்தகங்களை தடை செய்ய வேண்டும் என்பவர்களை எனக்கு பிடிக்காது என்று அவரிடம் கறாராக சொல்லிவிட்டேன் . ‘சும்மா வந்து பாரேன்’ என்றார் அவர். சீரிய முற்போக்கு சிந்தனையின்படி, எழுத்துலக எதிரியை சந்திக்கலாம் என்று முடிவெடுத்தேன். போவதற்கு முன்பு அவரைப் பற்றிய விஷயங்களை தேடி தெரிந்து கொண்டேன். எல்லா விஷயங்களிலும் அவருடன் முரண்படுவேன் என்று நினைத்துக் கொண்டு சென்றேன்.
மாறாக , நான் என்ன நினைக்கிறேன் என்பதை பற்றி கவலைப்படாமல் தன்னுடைய நம்பிக்கைகளுக்காக உறுதியோடு நிற்கும் ஒரு முதியவரை சந்தித்தேன். ஊடக செல்வாக்கு மிக்க மிகப்பெரிய வெளியீட்டாளர், வழக்கறிஞர்கள் பட்டாளத்தையே வைத்திருப்பவர், அந்த முதியவரை எதிர்கொண்டு தனது நூலாசிரியரை பாதுகாக்க வருவார் என்று எதிர்பார்த்த போது அவர் நீதிமன்றம் பக்கமே வரவில்லை.
பாத்ராவுடன் நான் உடன்படவில்லை. அதேவேளையில் அவரது அர்ப்பணிப்பை பொறாமை கலந்த மரியாதையுடன் பார்ப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை. எரிச்சலுடன் தொடங்கிய உரையாடல் நட்பான சூழலில் முடிந்தது. என்னை வழியனுப்ப படிக்கட்டு வரை வந்தவர், படிக்கட்டை பயன்படுத்து. அது நீரிழிவை தள்ளி வைக்கும். சுறுசுறுப்பாக இரு, என்றார். அதுவரை மோதிக் கொண்டு இருந்தவர் இப்பொழுது அக்கறை உள்ள பாட்டனாக மாறிவிட்டார். நான் அங்கிருந்து கிளம்பும்போது என் கருத்தில் இருந்து மாறவில்லை. அவரை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஆனால் நெகிழ்ந்து போனேன்.
நாம் பலருடன் தீவிரமாக முரண்படலாம். சந்திப்பு, உரையாடலுக்கு பின்னால் இருக்கும் உள்நோக்கத்தை சந்தேகப்படலாம். ஆனால் இறுதியில் உங்கள் மனதில் நிற்பது மனிதநேய செயல்கள் தான். விவாதம் செய்த விஷயங்கள் அல்ல, எதிர்பாராத இடத்திலிருந்து வெளிப்பட்ட அன்பு தான் என்ற புரிதல் ஏற்பட்டது. சந்திப்பை பற்றி என்னுடைய பத்தியில் எழுதினேன். அவரை புகழ்ந்து அல்ல, நியாயமாக எழுதினேன். அதுவரை அவர் பெற்றதை விட சற்று கூடுதலாக இருக்கும் என்று நினைத்தேன். அப்படி அல்ல அது தொடக்கம் மட்டுமே.
பிறகு சர்சங்கசாலக் உடனான சந்திப்பு. அவர் ஒவ்வொரு முறையும் என்னை சந்திக்கும் போது ‘எல்லாம் ஓகே தானே?’ என்று கண்களில் குறும்பு மின்ன வரவேற்பார். அது சாதாரண முகமது தான் ஆனால் எனக்கு முதல் சந்திப்பை நினைவூட்டியது. வேக வேகமாக வந்து உறவுகளுடன் சேர்ந்த முதல் நிகழ்வு. அதன் பிறகு அவர் கூறிய காலத்தை வென்று நிற்கும் ஆலோசனை, மெதுவாக வேகமெடு , நினைவில்லாடும்.
அந்த ஆரம்ப நாட்களை நினைக்கும் போது சவுண்ட் ஆஃப் மியூசிக் படத்தில் வரும் மரியா என்ற கதாபாத்திரம் மனதில் வந்து போகும். தீவிர கருத்தியலாளர்களையோ, கடுமையாக வழிநடத்தும் தலைவர்களையோ நான் பார்க்கவில்லை. ஆனால் கன்னியாஸ்திரி சகோதரிகளுக்கிடையே பொருந்தாத மரியா போல் நானும் ஒன்றுக்கு பின் ஒன்றென தவறான காலடி வைத்தேன். தங்கள் பழக்கத்திற்கு அடியில் மென்மையான, ஆளை எடை போட்டு கட்டம் கட்டாமல் வழிநடத்தும், கன்னியாஸ்திரிகள் படத்தில் வருவார்கள். அது போன்ற அனுபவத்தை பெற்றேன் . சினிமாவில் வந்ததற்கு இணையானது அது.
மரியாவை போலவே நானும் கேள்விகளுடனும் ஆரோக்கியமான அவநம்பிக்கைகளுடனும் பாறை போல் இறுக்கத்தை எதிர்பார்த்திருந்தேன். எதிர்பார்த்ததற்கு மாறாக நான் யார் என்று எடை போடாமல் புன்சிரிப்புடன் அரவணைத்த நேயத்தை பெற்றேன். வாழ்நாள் முழுக்க எனக்கான இடம் எது என்று அலைந்து கொண்டிருந்த நான், இங்கு தானாகவே பொருந்தினேன் . நீங்கள் யாரோவாக இருப்பதை எதிர்பார்க்கும் , அந்த பெயர் சொல்லி அழைக்கும் புத்தக பதிப்பலகத்திற்கும் பாலிவுட்டிற்கும் பழகிய எனக்கு இது ஆச்சரியம் அளித்தது. இங்கு அதெல்லாம் பொருட்டே அல்ல. இங்கு மரியாதை இருந்தது ஆனால் பழகுவதில் படிநிலைகள் இல்லை.
எனது முதல் சங்க அறிமுகத்திற்கு ஓராண்டுக்குப் பிறகு ஜெய்ப்பூரில் சர்சங்கசாலக் உரையாற்றும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்தது. சில பெண்களுடன் சேர்ந்து கொண்டு ரயிலில் பயணமானேன். மற்றொரு வியப்பு. எங்கள் எல்லோரையும் ஒரு ஹாஸ்டலில் தங்க வைத்தார்கள் . அங்கிருந்த வசதிகளை நான் நீண்ட பார்வை பார்த்தேன். அது குளிர்காலம். நீண்ட டார்மெண்டரியில் படுக்கைகள் வரிசையாக சுருட்டி வைக்கப்பட்டிருந்தன. அங்கு ஒரு குளியல் அறை. அதில் ஒரு குண்டு பல்பு தொங்கிக் கொண்டிருந்தது. நான் ஓட்டம் எடுத்தேன். இதுதான் ஆர்எஸ்எஸின் சொகுசா ?. எனக்குத் தெரிந்த குடும்பத்தினருடன் தங்குவதாக சொல்லி விட்டு மாரியார்ட் ஹோட்டலில் போய் தங்கினேன். நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
முதல் நாள் இரவு சற்று அதிகமாக தூங்கி விட்டேன். கூட்டத்துக்கு அரை மணி நேரம் தாமதம். கடைசியில் போய் உட்கார்ந்து கொள்ளுவோம், யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். தவறு . என் ஆடையின் நிறத்தில் தொடங்கி, அடர் ரோஜா நிறம், அமைதியான அந்த கூட்டத்தில் தாமதமாகவும் பரபரப்பாகவும் வந்தது எனக்கும் மற்றவர்களுக்கும் நினைவில் நிற்கும். வழக்கத்திற்கு மாறான தாமதமான வருகையாளரின் அசைவுகள் அந்த மங்கலான ஒளியூட்ட பட்ட அரங்கில் பலரின் தலையை திருப்பும்படி செய்தது.
சங்கம் பல விஷயங்களுக்கு பெயர் பெற்றது. அதில் முதன்மையானது அதன் நேரம் தவறாமை. அது இந்தியர்களின் தளர்வான நேரத்தை பின்பற்றுவதில்லை. இங்கு நேரம் வீணடிக்கப்படுவதில்லை. எப்போது எந்த நிகழ்ச்சி தொடங்க வேண்டும் எப்போது முடிய வேண்டும் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. இப்போது என்னால் அவர்களை பின்பற்ற முடிகிறது. ஆனால் முதல் முறை எனக்கு அதெல்லாம் புதிதாக இருந்தது. படப்பிடிப்பு இடமாக இருந்தாலும் புத்தக வெளியீட்டு அரங்கமாக இருந்தாலும் தாமதமாக வருவது சாதாரண விஷயம் என்று நானே சொல்லிக் கொண்டேன்.
சர்சங்கசாலக் உடனான சந்திப்புக்கு பிறகு அவர் என்னை எப்போது சந்தித்தாலும் ‘எல்லாம் ஓகேவா? ‘ என்று கண்ணை மினுக்கி கேட்பார். அது எளிய முகமன் தான் ஆனால் எனக்கு அது முதல் சந்திப்பை நினைவூட்டும். அடுத்து அவர் சொன்ன, மெதுவாக வேகமெடு , என்ற அறிவுரை. எளிய ஆனால் காலத்தை வென்று நிற்பது அது. முதலில் அது முரண்பாடு போல தெரியும். வேகமாக ஆனால் பொறுமையாக. மீண்டும் மீண்டும் என் மூளையில் போட்டு பார்க்க சங்கத்தின் ரிதம் எனக்கு புரிந்தது. அவர்களது செயல் திட்டங்கள் அதன் வீச்சு தசாப்தங்களுக்கு விரிவடைவது. அதே வேளையில் அவற்றின் இலக்கு தலைமுறைகளுக்கு அப்பால் இருப்பது. அவர்கள் லட்சிய பற்றுடன் வேகமாக வேலை செய்கிறார்கள். ஆனால், அதன் பலன்கள் மெதுவாக தான் கிடைக்கும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள் . இது எனக்குள் நங்கூரம் போல் உறுதியாக உட்கார்ந்து கொண்டது. உலகத்துடன் பயணிக்க புதிய வழி கிடைத்தது. வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற தாகமோ வேகமோ இல்லாமல் பயணிக்க புதிய வழி. இது எனக்கு பெரிய விடுதலையை அளித்தது.
சில உவகைகளும் உள்ளே மறைந்திருந்தன. நான் சுவைத்ததிலேயே மிகவும் ருசியான மாம்பழ சாறு நாகபுரியில் ரேசம்பாக்கில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் சின்ன எவர்சில்வர் டம்ளரில் கொடுக்கப்பட்டது தான். அதற்கு பதிலீடாக நாகபுரி பற்றிய சதி கோட்பாடுகளை மனதில் வைத்து பாருங்கள். நிச்சயம் முடியாது. சங்கத்தை தெரிந்து கொள்ள ஒரே வழி அவர்களுடன் சேர்ந்து பழகுவது தான்.
பல ஆண்டுகளாக, நான் எந்த ரயில் நிலையத்தில் இறங்கினாலும் என்னை வரவேற்க குடும்பம் நின்றிருக்கும் . தலைவர்களைப் போல பிரம்மாண்டமான வரவேற்பு இல்லை. எளிய ஆனால் நேசமிக்க செயல். யாரோ ஒருவர் தன் மனைவி, குழந்தைகளுடன் வந்து வரவேற்பார். என் பெட்டியை எடுத்துக் கொள்வார். இப்போது தான் முதல் முறை சந்தித்தாலும் ஏதோ நன்கு தெரிந்தவரை மீண்டும் சந்திப்பது போல பயணம் எப்படி இருந்தது என்று கேட்பார். அவர் ஒரு ஸ்வயம்சேவகராக இருப்பார்.
நான் இந்தியா முழுக்கவும் பயணித்திருக்கிறேன். மாநிலத்திற்கு மாநிலம் சங்கத்தின் நடவடிக்கை வெவ்வேறாக உள்ளது. ஹரியானாவில் நகைச்சுவை உணர்வுடன், கேரளத்தில் செயலுக்கம் கொண்டதாக இருக்கிறது. ஆனால் ஸ்வயம்சேவகர்கள் எல்லோரும் குடும்பத்தினரை போலவே இருக்கிறார்கள். உச்சரிப்பு, உணவு மாறுபடலாம். ஆனால் அன்பும் பரிவும் ஒன்று போலவே இருக்கிறது.
நான் பல இடங்களில் வாழ்ந்திருக்கிறேன். நீங்கள் வெளியே போனதும் அந்த நிலப்பரப்பை தெரிந்து கொள்கிறீர்கள். அங்குள்ள நல்லவற்றை கற்றுக்கொள்கிறீர்கள். அங்குள்ளவற்றுடன் உறவை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். ஆனால் எப்போதும் மக்களை இணைத்து வைத்திருப்பது உறவு கயிறு தான்.
சங்கத்துடன் பழகிய பிறகுதான் ரத்த உறவுகளுக்கு அப்பால் குடும்பம் விரிவடைய முடியும் என்பதை தெரிந்து கொண்டேன். சங்கத்திற்கென்று நம்பிக்கை இருக்கிறது. அது மதம் சார்ந்த நம்பிக்கை அல்ல. மாறாக அது சமுதாயத்திற்கு, தேசத்திற்கு, பண்பாட்டுக்கு உரியது. அது இறுகிய கருத்தியலில் வேர்கொண்டது என்று தவறாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால் அது ஒரு கோட்பாட்டிலோ அதன் மீதான பிடிவாதத்திலோ இல்லை. மாறாக சமுதாயத்தில் வேர் கொண்டுள்ளது. அதனால் அது சங்கம். அது பரிவார் (குடும்பம்).
சங்கத்துடனான தொடர்புக்கு நான் விலை கொடுக்க வேண்டியிருந்தது. நான் ‘சங்கி’களுடன் சுற்றுவதாக செய்தி பரவியது. என் உலகத்தைச் சேர்ந்த சிலர் அமைதியாக பின் வாங்கினார்கள் . இலக்கிய விழாக்களுக்கான அழைப்புகள் வருவது நின்று போனது. விருதுகள் வாங்கி இருந்தாலும் திரைப்பட வாய்ப்புகள் அருகின. எனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் இல்லை. ஒரு பெரிய செய்தித்தாள் தொடர்ந்து எழுத எனக்கு வாய்ப்பளிப்பதாக சொன்னது. ஆனால் பிறகு கண்டுகொள்ளவில்லை. ‘எப்படி இருக்கே?’ என்று தொடங்கி சகஜமாக தொடரும் உரையாடல்கள் எல்லாம் இப்பொழுது தடுமாறி அமைதியாகி விட்டன. இது எனக்கு புதிதாக இருந்தது. ‘பண்பட்ட’ சமூகம் ஆர் எஸ் எஸ் ஸை எப்படி நடத்தியது என்பது அதுவரை எனக்கு தெரியாமல் இருந்தது.
புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் பாதையில் பயணித்தேன். யாருடைய சிறகை சிதைத்தேன் என்பதை பற்றி கவலைப்படாமல் நான் பயணித்தேன். என்னை தெரிந்ததற்காக எத்தனை பேர்கள் கூச்சப்பட்டார்கள் என்று தெரியவில்லை. நேசமுள்ளவர்கள் நான் மூளை சலவைக்கு ஆளானதாக நினைத்தார்கள். மாம்பழ சாறுக்கு அந்த சக்தி இருந்தால், அவர்கள் நினைத்தது சரிதான். மற்றபடி, அது தவறான சத்துருண்டை சாப்பிட்ட கற்பனை தான். நான் எப்போதும் போல் புதியவர்களை சந்தித்தேன். புதுமையான அனுபவங்களை பெற்றேன்.
ஒரு நாள் சங்கத்தில் மூத்தவர் ஒருவரிடம், நண்பர்கள் என்னை தவிர்க்கும் விஷயத்தை பற்றி சொன்னேன். அவர் கவனத்துடன் கேட்டுக் கொண்டார். உலகின் பிற்போக்குதனத்தை அனுபவத்தில் பார்த்து, அது மீண்டும் நிகழ்வதை பார்க்கும் முதியவர்களின் கண்களில் தெரியும் சந்தோஷம் அவர் கண்களில் வெளிப்பட்டது. பிறகு, உனக்கு பெரிய விடுதலைதான். யாரையாவது சந்திக்கும்போது அவர்களுக்கு நீ எப்படி தெரிவாய் என்ற கவலை இனி உனக்கில்லை . அந்தப் பிரச்சினை இனி அவர்களுடையது, என்றார். அவர் சரியாகச் சொன்னார். திருகலான புரிதல்களில் இருந்து நான் எதிர்பாராமல் விடுதலை பெற்றேன் . என்னுடைய இருப்பும் நட்புறவும் நடிப்பாக இல்லாமல், இயல்பாக இருந்ததால் எனக்கு அந்த விடுதலை கிடைத்தது.
சங்கத்துடன் பயணிக்க என்னுடைய வாழ்க்கையின் போக்கு மாறியது. ஆனால் எப்போதும் போல் நான் நானாகவே இருந்தேன். எந்தவிதமான பழமைவாதத்தையும் கடைபிடிக்கவில்லை. நானாகவே தொடர முடிந்தது. மேலும் முற்போக்கான தனிமனிதத்துவத்திற்கு அப்பால் செல்ல முடிந்தது. என்னுடைய உலகம் விரிவடைந்தது. என்னுடைய தேசம் எனக்கு உயிர்ப்புள்ளதாக ஆனது. என்னுடைய எழுத்துக்கு ஒரு நோக்கம் கிடைத்தது. அது புத்தக விற்பனையையும் திரைப்பட வசூலையும் மட்டுமே நோக்கமாக கொண்டதாக இல்லை.
மரியாவை போல, அவள் தன் பாடல்களை விட்டுவிட்டு கன்னியாஸ்திரி மடத்தை விட்டு வெளியேறிய போது புதிய ஒத்திசைவை கண்டு கொண்டாள் . என்னுடைய பயணமும் அதுபோலவே இருந்தது. என் குரலை இழக்கவில்லை. மாறாக அது புதிய குழுவுடன் சேர்ந்து பெருகியது. சங்கத்தை அனுபவத்தில் தான் புரிந்து கொள்ள முடியும். ஒரு கட்டுரையிலோ அல்லது ஒரு புத்தகத்தை படித்தோ தெரிந்து கொள்ள முடியாது.
அதை ஒரு கருத்தியலோடு பிணைக்க முடியாது. ஏனெனில் சங்கம் அதைவிட மேலானது. அது ஒரு மனிதனைப் போல் உயிர்ப்புள்ளது . சில நேரங்களில் அதன் உரையாடல் உங்களை 1800 க்கு இழுத்துச் செல்லும். சில வேளைகளில் 2047க்கு கொண்டு செல்லும். சங்கம் இந்தியாவைப் போல் பன்முகம் கொண்டது. தேசத்தின் எல்லா பகுதிகளும் தனக்கே உரிய வகையில் அதில் எதிரொலிக்கும் . அதே வேளையில் ஆர்எஸ்எஸ் மெதுவாக மலர்ந்து கொண்டே வரும்.
நாம் இந்த பயணத்தில் கொஞ்ச காலம் சேர்ந்து போவோம் . நமக்கு முன்னால் பலரும் பயணித்துள்ளனர். வருங்காலத்திலும் பலர் அதுபோலவே பயணிப்பார்கள். அவ்வப்போது , சுதந்திரமாக பறக்கும் ஆன்மாக்கள் இதனை புரிந்து கொண்டு மெதுவாக தரையிறங்கும்.
நன்றி : தி ஓப்பன் மேகஸீன்
கட்டுரையாளர் விருது பெற்ற நாவலாசிரியர். திரைத்துறையிலும் விருதுகள் பெற்றவர்.





