
ென்னை, திருவண்ணாமலை ஆகிய இடங்களில், தமிழக மாநில அமைச்சர் எ.வ.வேலு வீடு உட்பட 80 இடங்களில் வருமான வரி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கோவை, கரூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தமிழக மாநில அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, கல்லூரிகள், அவருக்கு நெருக்கமானவர்கள், ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்கள், கட்டுமான நிறுவனங்கள் என 80 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் கவனித்து வரும் பொதுப்பணித் துறையின் கீழ் பல்வேறு அரசு அலுவலக கட்டடங்கள், அரசு மருத்துவமனைகள், குடியிருப்புகள், பள்ளி வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலைத் துறை சார்பில் பாலங்கள், சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் பட்டுவருகின்றன.
குறிப்பாக திமுக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு பாலங்கள், குறிப்பாக, கிராமங்களில் இருக்கும் நல்ல நிலையில் இருந்த பாலங்கள் கூட இடிக்கப்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, அல்லது மாற்று பாதையில் விடப்பட்டு, மீண்டும் கட்டப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் பல்வேறு புகார்களை இது தொடர்பாக தெரிவித்து வந்தனர்.
இதற்கான ஒப்பந்தங்கள், பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், ஆதாய நோக்கத்துடன் செயல்பட்டதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதன்மூலம் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் குவித்து, வரிஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதுதொடர்பாக வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தகவல்களை திரட்டி ஆய்வு மேற்கொண்டனர். இதில், வரி ஏய்ப்பு நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக தெரியவந்த நிலையில், அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்கள், கட்டிட ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
சென்னையில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.