
தங்களது மருத்துவக் கல்லூரிகள் மூலம் முறையற்ற சொத்துக் குவிப்புக்கு வழி தேடிக் கொண்டிருந்த தமிழக அமைச்சர்கள் சிலர், இப்போது நீட் தேர்வு எதிர்ப்பு அரசியலை, மக்களிடம் பொய்யான வகையில் முன் வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில், திமுக அமைச்சர் எ வ வேலுவின் வீடு, மருத்துவக் கல்லூரி உள்பட பல இடங்களில் வருமான வரி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள எ. வ. வேலுவுக்கு சொந்த ஊர் திருவண்ணாமலை. திருவண்ணாமலையில் பல்வேறு இடங்களில் அவருக்கு, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, கிரானைட் குவாரி, பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
திருவண்ணாமலையை அடுத்த தென்மாத்தூர் வேலு நகரில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக உள்ள அருணை கல்வி நிறுவன வளாகத்தில், அருணை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, பொறியியல் கல்லூரி, ஃபார்மஸி கல்லூரி, செவிலியர் கல்லூரி உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன.
இந்த வளாகத்தில் தான் சர்வதேச நட்சத்திர விடுதிக்கு இணையாக பல்வேறு முக்கிய பிரமுகர்கள் தங்கும் விருந்தினர் மாளிகை மற்றும் எ.வ.வேலுவின் வீடும் உள்ளது.
இந்நிலையில், நேற்று காலை சுமார் 6 மணி அளவில் அமைச்சர் எ.வ.வேலு தனது வீட்டில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, 25 கார், வேன்களில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புடன், 75-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள், அவரது கல்வி நிறுவன வளாகத்தில் நுழைந்தனர்.
அவர்கள் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் துணையுடன் தனித்தனியாக பிரிந்து, அறக்கட்டளை அலுவலகம், பன்னாட்டு பள்ளி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, வீடு மற்றும் விருந்தினர் மாளிகை என 6 இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கணினிகளில் உள்ள தரவுகள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர். இது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு, அவரது மனைவி ஜீவா வேலு, மகன் குமரன் மற்றும் இவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை நடத்தினர்.
பல்வேறு இடங்களிலும் சோதனை நடக்கும் தகவல் அறிந்து, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அமைச்சர் எ.வ.வேலு வீட்டுக்கு வந்து காத்திருந்தனர். ஆனால், அங்கு சோதனை எதுவும் நடக்கவில்லை.
தமிழகத்தில் எ.வ.வேலு, அவருக்கு நெருக்கமானவர்கள், ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய 80-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில் பல டிஜிட்டல் தரவுகள், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. சோதனை முழுமையாக முடிந்த பிறகே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தெரிவிக்க முடியும் என வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எ.வ. வேலுவுக்குச் சொந்தமான இடங்களில், சோதனை மேலும் ஓரிரு நாள் நீடிக்கும் என்று தெரிகிறது.