
தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும் : இடதுசாரிகளின் இரட்டை வேடம்
— முனைவர் பிரஜேஷ் பணிக்கர் –
தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்
37 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் நிர்வாகத்தில் உள்ள ஊழலை அகற்றவும் அரசியல் சீர்திருத்தமும் ஜனநாயக சுதந்திரமும் கோரி பெய்ஜிங் நகர சாலையில் இறங்கினார்கள்.
தியானமென் சதுக்கத்தின் உள்ளும் புறமும் கூடி மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை ராணுவத்தைக் கொண்டு நசுக்கியது சீன மக்கள் குடியரசு. இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கும் அரசு சாராத சுதந்திரமான கணக்கிற்கும் இடையே பெருத்த வேறுபாடு இருந்தாலும் ஒரு உண்மை மட்டும் மறுக்க முடியாமல் இருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசின் நடவடிக்கையில் கொல்லப்பட்டார்கள் என்பதே அது.
மூன்று தசாப்தங்களை கடந்த பிறகும் கூட , 1989 ஜூன் 4 தேதி நடந்ததை பற்றி , இன்றும் சீனாவில் மிகவும் கடுமையாக தணிக்கை செய்யப்பட்ட விஷயமாகவே அது இருக்கிறது. பொது விவாதங்களில் அந்த படுகொலை பற்றி பேச முடியாதபடி தடை உள்ளது. மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசினாலும் கடுமையான நடவடிக்கை பாய்கிறது. பொது சமூகத்தின் நினைவே அரசின் தணிக்கையால் ஒடுக்கப்பட்டுள்ளது.
அந்த போராட்டத்தை ராணுவத்தைக் கொண்டு நசுக்கியதற்காக சீன அரசு மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக சமூக அமைதியை நிலைநாட்ட ராணுவ நடவடிக்கை தேவைப்பட்டது என்று அதை நியாயப்படுத்தி வருகிறது. சீன அரசின் பதிவுகளில் வன்முறையை கொண்டு மாணவர்கள் போராட்டம் நசுக்கப்பட்டதை , சோக நிகழ்வாக கூட இல்லாமல் , நியாயப்படுத்திய விளக்கப்படுகிறது.
அரசியல் சீர்திருத்தம் கோரிய நிராயுதபாணியான மாணவர்கள் மீது சீன ராணுவம் துப்பாக்கி சூடு நடத்திய கொடூரத்தை உலகமே அதிர்ச்சியுடன் கண்டனம் செய்த போது இந்தியாவில் ஒரு பெரிய அரசியல் கட்சி அதைக் கண்டனம் செய்யவில்லை . அதற்கு மாறாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயலை ஆதரித்தது. ராணுவ நடவடிக்கை பொது அமைதியை காக்க தேவைப்பட்டது என்று தீர்மானம் போட்டது.
அமைதியாக நடந்த மாணவர் போராட்டம் கொடூரமாக நசுக்க பட்டதை கண்டு ஜனநாயக உலகம் அதிர்ந்து நின்ற போது அந்த கொடூரத்தை நிகழ்த்திய அரசை சிபிஎம் ஆதரித்தது.
37 ஆண்டுகள் கடந்த பின்னரும் தியானமென் சதுக்கப் படுகொலை இந்திய இடதுசாரிகளின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இன்று அது பளிச்சென்று வெளிச்சமாகி உள்ளது. குடிமை சமூகத்தின் உரிமைகள், அரசு எதிர்ப்பு போராட்டங்கள், ஜனநாயக உரிமைகளை பற்றி பேசுவோருக்கு தியானமென் சதுக்கம் அசௌகரியத்தை தருவதாகவே உள்ளது. ஜனநாயக கொள்கைகள், பேச்சுக்கள் எல்லாம் கம்யூனிஸ கருத்தியல் விசுவாசத்தின் முன்பு கைவிடப்பட்டன.
சிபிஎம் 1989 சம்பவத்தை ஆதரித்தது ஏதோ உணர்வெழுச்சியில் நடந்தது அல்ல. உலகமே அந்த சம்பவத்தை கண்டனம் செய்த போது கம்யூனிச கட்சிகள் பலவும் போட்டி போட்டுக்கொண்டு சீன அரசின் செயலுக்கு முட்டு கொடுத்தன. தியானமென் சதுக்க படுகொலையை ஆதரித்தது சிபிஎம் கட்சியின் நிலைப்பாடு மட்டுமல்ல பல கம்யூனிஸ்ட் தலைவர்களின் கருத்தியல் நிலைப்பாடாகவே அது இருக்கிறது.
தியானமென் சதுக்க படுகொலை நடந்து மூன்று தசாப்தங்களுக்கு பிறகு 2021 இல் கேரளாவில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எம் வி கோவிந்தன் சட்டமன்றத்தில் கட்சியின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதியாக பதிவு செய்துள்ளார். அந்த படுகொலை சம்பவம் பற்றி பரவலாக உள்ள பதிவுகளை மறுத்து , ஆர்ப்பாட்டம் நடந்த தியானமென் சதுக்கத்தில் ரத்தக்கறை எதுவும் படியவில்லை என்ற சிபிஎம்மின் நிலைப்பாட்டை உறுதியாக சட்டமன்றத்தில் சொன்னார்.
” அங்கு இக்கட்டான சூழல் நிலவியது. எதிர் புரட்சியாளர்கள் சோவியத் ருசியாவில் ஏற்பட்டதை போன்ற சூழலை சீனாவிலும் கொண்டு வர முயன்றனர். சீன அரசு அதை வெற்றிகரமாக தடுத்து விட்டது. சோசியலிச பொருளாதார வழியில் தொடர்ந்து பயணிக்க பாதை அமைத்தது”, என்று அவர் சட்டமன்றத்தில் கூறினார்.
சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த அறிக்கை சீன அரசின் செயலை நியாயப்படுத்துவது மட்டுமின்றி வேறொரு விஷயத்தையும் மறைமுகமாக உறுதிப்படுத்தியது. கருத்தியல் காரணங்களால் ஜனநாயக பூர்வமான மாணவர் போராட்டத்தை வன்முறை கொண்டும் நசுக்கலாம், அப்படி ஒடுக்கியதை நியாயப்படுத்தலாம் என்பதே அது.
இந்த ( கடந்த) வாரம் அதே எம் வி கோவிந்தன் கேரளா சிபிஎம்மின் மாநில செயலாளர் என்ற முறையில் பத்திரிக்கை, ஊடகவியலாளர்கள் சந்திப்பில் டில்லி ஜந்தர்மந்தரில் நடந்த மாணவர் போராட்டத்தை பற்றி பேசினார். இந்த போராட்டம் ‘வரலாற்றில் குறிப்பிடத்தக்கது’ என்று கூறிய கோவிந்தன் தில்லி போராட்டம் ‘புதிய அத்தியாயத்தை’ ஆரம்பித்துள்ளது. உச்ச நீதிமன்றம் இந்த போராட்டத்தில் தலையிட்டுள்ளது. ₹ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும்’ இது வலு சேர்ப்பதாக உள்ளது, என்றார்.
பல இடங்களில் ஆட்சியாளர்கள் போராடிய மாணவர்களை ஏ கே 47
துப்பாக்கி மூலம் எதிர்கொண்டனர் என்று கோவிந்தன் குற்றம் சாட்டினார். ‘ இப்போது தான் முதல் முறையாக மிளகாய் பொடி குண்டு என்பதை கேள்விப்படுகிறேன்’ , என்று கூறிய அவர் வீரிய வகை மிளகாய் பொடி போராட்டக்காரர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது என்ற பத்திரிகை செய்தியை பற்றி குறிப்பிட்டார். இந்தப் ‘போராட்டத்தின் உயிராக’ இடதுசாரி மாணவர் அமைப்புகள் செயல்பட்டதாக அவர் பாராட்டினார்.
கண்ணிலும் கருத்திலும் படாமல் தப்ப முடியாத மாற்றம் இது. 2021 இல் இதே அரசியல் தலைவர் தியானமென் சதுக்கத்தில் நடந்த மாணவர் போராட்டத்தை வன்முறை கொண்டு நசுக்கிய சீன அரசின் செயலை நியாயப் படுத்தினார். உலகம் முழுவதும் ஜனநாயக படுகொலை என்று கண்டனம் செய்ததை புறம் தள்ளினார். இதே தலைவர் இன்று ஜனநாயகம் , அரசமைப்பு கொடுத்த உரிமை என்று டில்லி மாணவர் போராட்டத்தை பற்றி கூறுகிறார்.
இதுபோன்ற இரட்டை தன்மை இடதுசாரி அரசியலில் அடையாளமாக நீண்ட காலம் இருக்கிறது. தீ நுண்மீ (கொரோனா – கோவிட் 19 ) காலத்தில் கேரள அரசில் சுகாதார துறை அமைச்சராக இருந்த பெண்மணி சட்டமன்றத்தில், ‘(கம்யூனிச) வடகொரியா இந்த சிக்கலை (தீநுண்மீ) சிறப்பாக கையாண்டது’ என்று பேசினார். சபைக்கு வெளியே இந்திய மாநிலங்கள் பலவும் , குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலம், இந்த சிக்கலை எதிர்கொள்வதில் திணறின என்று குறிப்பிட்டார்.
மற்றொரு சிபிஎம் அமைச்சர் , கூபாவில் இருந்து (கியூபா – கம்யூனிச அரசு) கோவிட் 19 க்கான மருந்துகளை தருவிக்க கேரளா அரசு முயல வேண்டும். ஏனெனில் மற்ற நாடுகளை விட கூபா நாட்டு அரசும் அதன் மருத்துவர்களும் இந்த பிரச்சினையை சிறப்பாக எதிர்கொண்டனர், என்றார். அவர் பேசிய பின் கொஞ்சம் காலத்திலேயே கூபாவில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் வெடித்தது. பல தசாப்தங்களாக இல்லாத வகையில் மிகப் பெரிய போராட்டமாக அது வெளிப்பட்டது. தீநுண்மீ பிரச்சனையை கூபா அரசு சரியாக கையாள தெரியாமல் தோல்வியடைந்தது , அதை தொடர்ந்த பொருளாதார சரிவுகள் ஆகியவற்றுக்கு எதிராக அந்த நாட்டு மக்களின் கோபத்தின் வெளிப்பாடாக அது இருந்தது.
இந்திய இடதுகளின் இரட்டை வேடம் அண்மையில் ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி மக்கள் கட்சி முன்னின்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மிக தெளிவாக வெளிப்பட்டது. வினாத்தாள் கசிவு, தேர்வு சம்பந்தமான முறைகேடுகள் பலவற்றை முன்னிறுத்தி நடத்தப்பட்ட அது விரைவில் அரசியல் தன்மை பெற்றது.
இடதுசாரி கட்சிகளும் அவற்றின் மாணவர் அமைப்புகளும் தாங்கள் தான் மாணவர்களின் உரிமைகளுக்காக சமரசம் இன்றி போராடுபவர்கள் என்றும் ஜனநாயகத்திற்காக போராடுபவர்கள் என்றும் கூறிக்கொண்டு அவர்களுக்கே உரிய தீவிரபாணியில் போராட்டத்தில் சேர்ந்தனர். தேர்வுகள், மாணவர்கள் போராட்டத்திற்கான அரசின் எதிர்வினை பற்றி இடதுசாரிகளின் வரலாற்றை சற்று பார்ப்பது அவசியம். இடதுசாரி அரசுகளும் இடதுசாரி மாணவர் அமைப்புகளும் இது போன்ற போராட்டங்களையும் சச்சரவுகளையும் தாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது எப்படி அணுகினார்கள் என்ற வரலாற்றை யாரும் பார்ப்பதில்லை. நினைவில் கொள்வதில்லை.
சிறந்த உதாரணம் கேரளாவில் உள்ள பல்கலைக்கழக கல்லூரி. இது கேரளத்தில் உள்ள மிகப் பழமையான கல்வி அமைப்பு. கேரள பல்கலைக்கழகத்துடன் இணைந்தது. இந்த கல்லூரியில் பல தசாப்தங்களாக சிபிஎம்மின் மாணவர் அமைப்பான எஸ் எப் ஐ (ஸ்டூடண்ஸ் பெடரேஷன் ஆஃப் இந்தியா) வலுவாக உள்ளது.
2019 இல் கல்லூரி வளாகத்தில் நடந்த மாணவர்களை அச்சுறுத்தல் சம்பவம் வளாகத்தையும் தாண்டி அரசியல் கவனத்தைப் பெற்றது. அதனை அடுத்து நடந்த விசாரணையில் எஸ் எப் ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் வகுப்பறையையே மற்ற மாணவர்களை மிரட்டவும் தாக்கவும் பயன்படுத்தியது தெரியவந்தது. அவ்வாறு தாக்குதல் நடத்திய எஸ் எஃப் ஐ மாணவர் தலைவர்களில் ஒருவர் அரசு பணியாளர் தேர்வில் முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல் துறையினரின் சோதனையில் எஸ் எப் ஐ யின் தலைவர்களின் அறையில் இருந்து வெற்று விடைத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேர்வு முடிந்த பிறகு மாணவர்கள் எழுதிய உண்மையான விடைத்தாள்களுக்கு பதிலாக இவற்றில் சரியான விடை எழுதி மாற்றி விடுகிறார்கள் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகப் பட்டார்கள். பிறகு நடந்த சான்றாதார விஷயங்களும் சட்டபூர்வமான செயல்பாடுகளும் பொது விவாதத்திற்கு உரிய விஷயங்களாகின. எதிர்ப்பு வலுத்த பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்களை கட்சியிலிருந்து நீக்கினார்கள்.
விமர்சனங்களில் இருந்தும் களங்கத்திலிருந்தும் காத்துக் கொள்ள அப்போதிருந்த கட்சி செயலாளர் வெற்றுதாள்களை விடைதாள் களாக கருத முடியாது. காரணம் அதில் விடைகள் இல்லை , என்ற கோமாளித்தனமான வாதத்தை முன் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் உயர் கல்வி என்பது தகுதியை விட அரசியல் செல்வாக்கினால் தான் கிடைக்கிறது என்று பல ஆண்டுகளாக இடதுசாரி ஆதரவு தளத்திற்கு வெளியே இருப்பவர்கள் நினைக்கிறார்கள். அதில் உண்மை இருக்கிறது. பணி நியமனம் , சந்தேகத்திற்குரிய முனைவர் பட்டங்கள் , தரமற்ற ஆய்வுகள் ஆகியவற்றுக்கு அரசியல் தலையீடும் , செல்வாக்கும் தான் காரணம் என்ற புகார் பலமுறை எழுந்துள்ளது அறிவு தகுதியை விட கருத்தியல் சாய்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது தான் இதற்கான காரணம்.
வினாத்தாள் கசிவு, தேர்வு தொடர்பான முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தில் இடதுசாரிகளும் அவர்களது மாணவர் அமைப்புகளும் முக்கிய பங்கெடுப்பது போராட்டத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுவதை தடுக்க முடியாது. கல்வி அமைப்புகளிலும் கல்வி துறையிலும் அவர்களின் கடந்த கால செயல்பாடுகளையும் சர்ச்சைகளையும் பார்க்கும் போது, குறைந்தபட்சம் இதில் உள்ள கடுமையான முரண்பாடுகள் தெரியாமல் போகாது. இந்திய இடதுசாரிகள் தார்மீக உயர் பீடத்தில் ஏறி கொள்வதும் அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் , ஆட்சியில் இருந்த காலத்தில் மரண அமைதி காப்பது என்பது மீண்டும் ஒருமுறை அரங்கேறியுள்ளது.
அமைதியான மாணவர்கள் போராட்டத்தை ஒரு அந்நிய நாட்டு கம்யூனிச அரசு பல இளைஞர்களை கொன்று ஒடுக்கியதை இந்திய இடதுசாரிகள் கருத்தியல் ரீதியில் அவசியமானது என்றும் ‘ எதிர் – புரட்சியாளர்கள்’ முயற்சி வெற்றிகரமாக தோற்கடிக்கப்பட்டது என்றும் வர்ணிப்பது ஒரு புறம். தில்லியில் நடந்த மாணவர் போராட்டத்தில் எந்த கருத்தியலும் இல்லை. அது மட்டுமன்றி அது வன்முறையை நோக்கி திரும்பியது. அப்போது அரசமைப்புக்கு உட்பட்டு, சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம் இந்திய காவல் துறை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த முனைந்தால் அதை ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று சாடுவதும் போராட்டத்தை ‘வரலாற்று முக்கியத்துவம்’ வாய்ந்ததாக கொண்டாடுவதும் மறுபுறம்.
அலங்கார பேச்சுக்களையும் மீறி முரண்பாடு தெள்ளென வெளிப்படுகிறது. ஒருபுறம் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுகின்ற, கல்வி அமைப்புகளில் ஊழல் செய்கின்ற, அரசியல் செல்வாக்கினால் கல்வி களத்தை ஆக்கிரமிக்கும் மாணவர் அமைப்புகள். மறுபுறம் அதே அமைப்புகள் தங்களை கல்வித்துறையின் காவலராக முன்னிறுத்திக் கொண்டு வினாத்தாள் கசிவு, அமைப்பு சீர்கேடுகளுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்பது.
தனது கருத்தியலுக்கு ஆதரவானவர்களுக்கு ஒன்றும் மற்றவர்களுக்கு வேறொன்று என்று தார்மீக கோபத்தை தேவைக்கேற்ப வெளிப்படுத்துவது இந்திய இடதுசாரிகளின் நம்பகத் தன்மையையே சந்தேகப்பட வைக்கிறது. ஜனநாயகத்தை பற்றி அவர்கள் பேசுவது கருத்தியல் வசதிக்காகவேயன்றி ஜனநாயக மாண்பிற்காக அல்ல.
நன்றி : நியூஸ் 18

