sengottai krishnan koil gokulashtami - 2026

செங்கோட்டையில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!

ஆன்மிகச் செய்திகள் நெல்லை லைஃப் ஸ்டைல்
sengottai krishnan koil gokulashtami - 2026

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!

ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி, ரோகிணி நட்சத்திரம் கூடிய தினத்தில் பகவான் கிருஷ்ணர் அவதரித்ததாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் வழக்கம் உள்ளது.

அந்த வகையில் இன்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஆற்றங்கரைத் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி கோயிலில் இன்று காலை முதலே கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணபகவானுக்கு சிறப்பு அபிசேகம், அலங்கர தீபாராதனை நடைபெற்றன.

இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து பகவானை வழிபட்டு சென்றனர். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு வெண்ணெய், வெண் பொங்கல், பால் பாயாசம், தயிர் சாதம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

முன்னதாக, கோகுலாஷ்டமி விழாவை முன்னிட்டு, கடந்த ஆக.21ம் தேதி ஸ்தம்ப பிரதிஷ்டை நடைபெற்றது. தொடர்ந்து ஆக.27ம் தேதி முதல் தினமும் வேதபாராயணம், கும்ப பூஜையுடன் சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இந்நாட்களில் காலை வேளைகளில் திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப பாகவதர் தம்பதியின் ஸ்ரீமத் பாகவத பாராயணமும், மாலை வேளைகளில் திருவனந்தபுரம் ஸ்ரீராம பிரித்யன் நரசிம்மனின் ஸ்ரீமத் பாகவத மாஹாத்மியம் பிரவசனமும் நடைபெற்றது.

மாலை வேளைகளில், செங்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீதர்மசம்வர்த்தினி பஜனை மண்டலி, ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் பஜனை மண்டலி, ஸ்ரீராமகிருஷ்ணா பஜனை மண்டலி, ஸ்ரீ ஆண்டாள் இசைக் குழு முதலியோரின் பக்திப் பாடல்கள், நாம சங்கீர்த்தனம் ஆகியவை நடைபெற்றன. செங்கோட்டை குருகுல மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சிகள், குழந்தைகளின் விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள், சுலோகம் பக்திப் பாடல்கள் இவற்றுடன் ஸ்ரீமதி விசாலம் ராமசுப்பிரமணியன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முத்துக்கிருஷ்ணன் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.