
— ராம் மாதவ் —
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

இந்திய விடுதலைப் போராட்டம் 21 ம் நூற்றாண்டின் வசீகரிக்கும் சாகச வரலாறு . ஆனால் அந்த போராட்டத்தில் ஹிந்து கலாச்சாரத்தின் ஹிந்து மதத்தின் செல்வாக்கு என்ன என்பதுதான் மிகவும் சுவாரஸ்யமான அதேவேளையில் மிகவும் குறைவாக பேசப்பட்ட விஷயம். ஜின்னா போன்ற எதிர்ப்பாளர்கள் இந்திய தேசிய காங்கிரசை ஹிந்து கட்சி என்று வெளிப்படையாக எதிர்த்து சவால் விட்டனர். பி ஆர் அம்பேத்கர் அதை ஆமோதித்தார். காங்கிரசுக்குள் இருந்த ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் இதை அருவருத்தனர். ஆனால் அதுதான் மிக முக்கியமான அடிநீரோட்டமாக இறுதிவரை இருந்தது.
21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸில் ‘தீவிர’ தேசியவாத தலைவர்களாக இருந்த பாலகங்காதர திலகர், லாலா லஜபதி ராய், அரவிந்த கோஷ் போன்றவர்கள் எல்லாம் பாரம்பரியமிக்க ஹிந்து பண்பாடு, மரபுகளின் உயர்வை ஏற்றுக்கொண்டு அதை பின்பற்றுபவர்களாக இருந்தனர். அவர்களது ஏகாதிபத்திய எதிர்ப்பு ஹிந்து தேசியத்துடன் பின்னி பிணைந்திருந்தது. அந்த பிரிவின் ஒளி விளக்காக வழிகாட்டிக் கொண்டிருந்த திலகர் , மதம் மக்களை இணைக்க கூடியது. தொன்மையான ஹிந்து கலாச்சாரத்திலிருந்தும் மரபிலிருந்தும் ஊக்கம் பெற்று இந்திய தேசியம் எழுச்சி பெறும், என்று உறுதியாக நம்பினார்.
வீட்டுக்குள் இருந்த சமய விழாக்களான விநாயகர் சதுர்த்தி, சிவாஜி ஜெயந்தி போன்றவற்றை வெகு ஜனங்கள் பங்கேற்கும் சமூக விழாக்களாக கொண்டாட துவங்கினார். இந்த விழாக்கள் மூலம் சமுதாயத்தின் சுய அடையாளம் குறித்த உறுதியான உணர்வை ஊட்டினார். அதன் மூலம் தேசபக்தியும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் எழுச்சி பெற்றது. பகவத் கீதைக்கு அவர் எழுதிய கீதா ரகசியம் என்ற விளக்கவுரை புகழ்பெற்றது. கீதா ரகசியம் என்றால் கீதையின் உட்பொருள். தேசத்திற்காக ஆற்ற வேண்டிய கடமை, அந்த கடமையை நிறைவேற்ற செய்ய வேண்டிய செயல்கள், தியாகங்கள் இதுவே கீதையின் சாரமான செய்தி என்று விளக்கினார். இவ்வாறு மத குறியீடுகளை பயன்படுத்தி தேசிய உணர்வை தூண்டினார்.
திலகரின் தீவிர ஆதரவாளரும் கூட்டாளியுமான பஞ்சாப்பை சேர்ந்த தீவிர தேசியவாத தலைவர் லாலா லஜபதிராய் ஆரிய சமாஜத்தை சேர்ந்தவர். ஆரிய சமாஜம் தயானந்த சரஸ்வதியால் எழுச்சி பெற்றது. ஹிந்து பண்பாட்டு அடையாளத்தை முன்னிறுத்துவது. லஜபதிராய் கிலாபத் இயக்கத்தை எதிர்த்தார். அதை முன்னெடுத்ததற்காக காந்தியை கடுமையாக விமர்சித்தார். 1921 இல் கேரளாவில் முஸ்லிம்களால் நடத்தப்பட்ட மாப்ளா கலவரத்தையும் அவர் கண்டனம் செய்தார். காங்கிரசில் இருந்த ஹிந்து மகாசபை பிரிவின் தலைவராக இருந்தார். 1925 இல் சில்ஹெட்டில் நடந்த ஹிந்து மகாசபை மாநாட்டை தலைமை ஏற்று நடத்தினார்.
தீவிர தேசியவாத பிரிவின் மூன்றாவது முக்கிய தலைவர் வங்காளத்தை சேர்ந்த பிபின் சந்திர பால். இன்று வங்கதேசத்தில் இருக்கும் சில்ஹெட்டில் வைணவ ஹிந்து குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பத்தில் பிரம்ம சமாஜத்தில் ஈடுபட்டிருந்தார். காங்கிரஸின் தீவிர தேசியவாத பிரிவில் இணைந்தார் . சுயமரியாதை, தற்சார்பு ஆகியவற்றை வலியுறுத்துவதன் மூலம் சுதந்திரத்தை பெற வேண்டுமேயன்றி கெஞ்சி பிச்சை எடுத்தல்ல என்று அவர் வலியுறுத்தினார். லால் – பால – பால் என்று அடையாளப்படுத்தப்பட்ட இந்த மும்மூர்த்திகளும் வந்தே மாதரம் இயக்கத்தின் போது தேசியவாதத்தை தீவிரமாக முன்னெடுத்து செய்தவை விடுதலை போராட்ட வரலாற்றில் முக்கிய பக்கங்களாகும்.
காங்கிரஸ் இயக்கத்தின் ‘ஹிந்து மணத்தை’ அதிகரிக்க செய்ய மற்றொரு முக்கிய தலைவர் அரவிந்த கோஷ் . அலிப்பூர் வெடிகுண்டு வழக்கிலிருந்து விடுதலையானதும் 1909 மே 30 தேதி அவர் ஆற்றிய ‘உத்திரபாரா உரை’ தேசியவாதிகள் பலருக்கும் மந்திரமாகி அடுத்த சில தசாப்தங்களுக்கு விடுதலை போராட்ட இயக்கத்தை தீவிர படுத்தியது. “தேசியம் என்பது இனியும் ஒரு சமய கருத்தல்ல, ஒரு மதமல்ல, ஒரு நம்பிக்கை அல்ல, சனாதன தர்மமே நம்முடைய தேசியம் . ஹிந்து தேசம் சனாதன தர்மத்துடனே பிறந்தது. அத்துடனே அது தவழ்ந்தது , முன்னேறியது. சனாதன தர்மம் சரிந்தால் தேசம் சரியும். சனாதன தர்மம் சீர்குலைந்தால் அத்துடனே இதுவும் சீரழியும். சனாதன தர்மம் அதுவே தேசியம்”
விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய அரவிந்தர் 1910 இல் ஆன்மீக சாதனைகளுக்காக அரசியலில் இருந்து விலகிய சில ஆண்டுகள் கழித்து 1915 இல் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்திய அரசியலில் நுழைந்தார். காந்தியும் மதவுணர்வில் மூழ்கியவர். தன்னை சனாதனி ஹிந்து என்று பலமுறை கூறியவர். ‘என்னுடைய ஒவ்வொரு தசைநாரும் ஹிந்து’ என்று யங் இந்தியாவில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு தேசியம்:
காந்தி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட போது அவரது மூன்று முக்கிய ஹிந்து நம்பிக்கைகள் நேரடி சவாலை சந்தித்தன. அவர் முதலில் எதிர்கொண்ட சவால் முகமது அலி ஜின்னா. காந்தி ஹிந்துக்களின் தலைவர் என்று ஜின்னா தொடர்ந்து வசைப் பாடினார். அந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காந்தி, ‘என்னுடைய ஹிந்துயிசம் குறுகிய மத கருத்தல்ல. அது இஸ்லாம், கிறிஸ்துவம், புத்த சமயம், பார்சி மதம் ஆகியவற்றில் உள்ள சிறந்த கருத்துக்களை உள்ளடக்கியது. இந்த மத உணர்வோடுதான் நான் அரசியலை அணுகுகிறேன். உண்மைதான் என்னுடைய மதம்; அகிம்சைதான் அதை அடையும் வழி ‘ என்றார் . அனைத்தையும் அரவணைக்கின்ற காந்தியின் இந்த அணுகுமுறைதான் ஜின்னாவுக்கும் அவரது சகாக்களுக்கும் அவரை அதி ஹிந்துவாக பார்க்க வைத்தது.
‘ முஸ்லிம்களின் கருத்தை கவருவதற்காக காந்தி மேற்கொண்ட முயற்சிகள் அவரது ஹிந்து தோற்றத்தை மேலும் வலுவாக்கியது. எடுத்துக்காட்டாக, அவர் தான் எப்படி ஒரு இந்துவோ அது போலவே ஒரு முஸ்லிம் அல்லது ஒரு யூதன் என்று கூறிக் கொண்டார். ஏனெனில் அவரது நம்பிக்கை எல்லா மதங்களையும் அரவணைத்துக் கொள்வது. இது சந்தேகத்திற்கு இடமில்லாதபடி அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளும், வெளிப்படை தன்மை கொண்ட ஹிந்துயிசம்தான். இது இஸ்லாத்தில் இல்லாத ஒரு விஷயம். இவ்வாறு முஸ்லிம்களின் ஆதரவை பெற காந்தி மேற்கொண்ட முயற்சிகள் அவரை ஒரு ஹிந்துவாகவே காட்டின’, என்கிறார் அமெரிக்கா எழுத்தாளரான ஆலன் ஹேய்ஸ் மெரியம்.
இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தனி தேசியம் என்று ஜின்னா வாதிட்டதை, இந்திய முஸ்லிம்களின் முன்னோர்கள் ஹிந்துக்கள்தான் என்று கூறி காந்தி அதை உடைத்தெறிந்தார். ‘லட்சக்கணக்கான முசல்மான்கள் ஹிந்து வம்ச வழியினர்தான். இந்தியாவை தவிர வேறெது அவர்களது தாய் நாடாக இருக்க முடியும் ? என்னுடைய மூத்த மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவினார். அவரது பிறந்த ஊர் போர்பந்தரா அல்லது பஞ்சாப்பா ? நான் முசல்மான்களைப் பார்த்துக் கேட்கிறேன்: இந்தியா உங்கள் தாய்நாடு இல்லை என்றால் நீங்கள் வேறு எந்த நாட்டை சேர்ந்தவர்கள்? ‘ என்று அவர் வாதிட்டார்.
1944 செப்டம்பரில் ஜின்னாவுக்கு எழுதிய கடிதத்தில், ‘மதம் மாறியவர்களும் அவர்களது வாரிசுகளும் தங்கள் நாட்டை மறுத்து வேறு நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறுவதை வரலாற்றில் வேறெங்கும் நான் பார்க்கவில்லை. இஸ்லாம் வருவதற்கு முன்பு இந்தியா ஒரு தேசமாக இருந்தால் அவளது பிள்ளைகளில் பெரும் பகுதியினர் தங்கள் மத நம்பிக்கையை மாற்றிக் கொண்டாலும் இந்தியா ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்’ என்று காந்தி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க செய்தியாளரான லூயிஸ் பிஷரிடம், ‘ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஹிந்துதான்’ என்று கூறினார். அது மட்டுமல்ல ‘ஒவ்வொரு முஸ்லிமும் தன் குடும்ப வரலாற்றில் ஆழ்ந்து பார்த்தால் ஒரு ஹிந்து பெயர் இருப்பதை பார்க்க முடியும்’ என்று காந்தி அவரிடம் குறிப்பிட்டுள்ளார்.
தீண்டாமை!
காந்தியின் அடுத்த விவாதம் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் தலைவரான பி ஆர் அம்பேத்கரிடம் நடந்தது. அம்பேத்கர் தாழ்த்தப்பட்டதாக சொல்லப்படும் சமுதாயத்தில் பிறந்தவர். அவரது ஆரம்ப காலத்தில் பல தசாப்தங்கள் கடுமையான பாகுபாட்டை அனுபவித்தார். அதற்கு மாறாக காந்தி உயர் ஜாதி எனப்படும் குடும்பத்தில் பிறந்த போதிலும் இளம் வயதிலேயே தீண்டாமை போன்ற சமூக கொடுமைகளுக்கு எதிராக இருந்தார்.
தனது இளம் பருவ அனுபவத்தை அகமதாபாத்தில் நடந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் மாநாட்டில் விவரித்தார். ‘எனக்கு அப்போது 12 வயதிற்கும். அப்போது இந்த எண்ணம் எனக்கு உதித்தது. உக்கா என்ற தூய்மை பணியாளர் , அவர் தீண்டத்தகாதவர். எங்கள் வீட்டு கழிப்பறையை சுத்தம் செய்வார். நான் இவரை தொடக்கூடாது என்று சொல்லக் காரணம் என்ன ? என்று என் தாயாரிடம் பலமுறை கேட்டுள்ளேன் . எதிர்பாராத விதமாக உக்காவை தொட்டுவிட்டால் என்னை நீரினால் சுத்தம் செய்து கொள்ள சொல்வார்கள். சிரித்துக் கொண்டே அவர்களை மறுத்தவாறு நான் சுத்தம் செய்து கொள்வேன். இந்த விஷயத்தில் (என் பெற்றோர்களுடன்) எனக்கு அடிக்கடி முட்டிக் கொள்ளும் ‘.
தீண்டாமை தீயது என்ற காந்தியின் நம்பிக்கை அம்பேத்கர் 1927 மார்ச் மாதம் நடத்திய மஹர் சத்தியாகிரகம் போன்ற முயற்சிகளை பரிவுடன் பார்க்க வைத்தது.மஹர் சத்யாகிரகத்தின் போது மகாராஷ்டிராவில் மகத் என்ற ஊரில் நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் சாவ்தார் குளத்தில் இறங்கி நீரை பருகினர் . அதனால் ஹிந்து சமுதாயத்தில் உள்ள பழமைவாதிகளால் தாக்கப்பட்டனர். அம்பேத்கர் தன் தொண்டர்களை திருப்பி அடிக்கவோ தாக்குதலை தடுக்கவும் வேண்டாமென தடுத்து விட்டார். இது காந்தியின் பாராட்டுதலை பெற்றது.
ஒரு மாதம் கழித்து யங் இந்தியாவில் காந்தி ஒரு கட்டுரையை எழுதி இருந்தார். அதில் போராட்டக்காரர்களின் ‘முன்னுதாரணமான சுய கட்டுப்பாட்டை’ புகழ்ந்திருந்தார். ‘பழமைவாத கட்சி’யினர் ‘மிருகபல’த்தை பிரயோகித்ததை சாடியிருந்தார் . ‘ தீண்ட தகாதவர்களை அந்த குளத்தில் இறங்கி தாகம் தீர்த்துக் கொள்ள சொன்ன டாக்டர் அம்பேத்கரின் அறிவுரை நியாயமானதே ‘என்று எழுதிய காந்தி ‘ஒவ்வொரு ஹிந்துவும் தீண்டாமையை எதிர்க்க வேண்டும்’ என்றார் . ‘மண்டை உடைபடலாம் என்ற போதிலும்’ மஹத்தில் தீரமுடன் போராடிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் செயலை அவர் ஆதரித்தார்.
ஆனால் அவரது மகிழ்ச்சி குறுகிய காலமே இருந்தது. ‘தீண்டதகாதவர்கள்’ என்ற பிரச்சனையில் முரண்பாடு ஏற்பட்டது. அம்பேத்கரை பொறுத்தவரையிலும் இதுவொரு அரசியல் கேள்வி. இதன் சமூக பரிமாணங்களை அவர் ஏற்க மறுத்தார். ‘தீண்டதகாதவர்களை பொறுத்தவரையிலும் கோவிலுக்குள் நுழைவது முக்கியமான விஷயம் அல்ல. அதைவிட முக்கியமானது சம உரிமையும் சம அந்தஸ்தும்தான். உயர் பதவிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் அமர்வதற்கு வாய்ப்புகள் வேண்டும்’, என்றார். அது அவர்களுடைய ‘தன்மான’த்தை உயர்த்தும் என்பதுடன் முக்கியமான ‘பதவி’களை பெறுவார்கள் என்று அவர் வாதித்தார். சுருக்கமாக சொன்னால், தீண்டதகாதவர்களின் துன்பங்களை போக்க அரசியல் நடவடிக்கைகள் தேவை என்றார் . காந்தியோ சமூக சீர்திருத்தம் மற்றும் ஆன்ம பரிசோதனையை முன்னெடுத்தார்.
ஹிந்து நூல்கள் நான்கு வர்ணங்களை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பை, அதன் தத்துவ அடித்தளத்தை அகற்ற வேண்டும் என்றார் அம்பேத்கர். ஆனால் காந்தி, குறைந்தபட்சம், ஆரிய சமாஜத்தை (1875) நிறுவிய சுவாமி தயானந்த சரஸ்வதியின் கருத்தை ஏற்றுக் கொண்டிருந்தார். ‘ஜாதி என்பது தீண்டாமையை அடிப்படையாகக் கொண்ட அமைப்பாக இருக்கும் வரை அது ஒரு தீமைதான். அதை எவ்விலை கொடுத்தாவது நீக்கி விட வேண்டும். ஆனால் நான் மீண்டும் மீண்டும் விளக்கியுள்ளேன், ஜாதியின் பின்புலமாக இருக்கும் வர்ண தர்மம் எப்போதும் இருக்கக்கூடிய சாஸ்வதமான சட்டங்களின் அடிப்படையிலானது. அதை உடைப்பது நம்மை நாமே அழித்துக் கொள்வது போல்தான். நம் முன்னோர்கள் பற்பல காலங்களுக்கு முன்பு வர்ண விதிகளை கண்டெடுத்தனர். அது மட்டுமன்றி அது நமக்கு மிகவும் நன்மை தரக்கூடிய விதிகள் என்றே நான் கருதுகிறேன்’, என்று 1934 இல் காந்தி எழுதியுள்ளார்.
அம்பேத்கர் இதை ஏற்கவில்லை. வர்ண தர்மம் தான் பிரச்சனைகளுக்கு ஆணிவேர் என்று அவர் நம்பினார். ஆலய நுழைவு, சமபந்தி விருந்து போன்ற மேம்போக்கான விஷயங்களை தவிர்த்து விட்டு தீண்டாமைக்கு எதிரான ‘புனித நூல்’களை காட்டுமாறு கேட்டார். தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் காந்தியை தங்கள் நண்பராக கருதக்கூடாது என்றார் . அவர் ‘ஜாதியை (வர்ணத்தை) வைத்துக்கொண்டு தீண்டாமையை ஒழிக்க வேண்டும்’ என்கிறார். ஜாதியும் தீண்டாமையும் வெவ்வேறு என்ற கருத்து அவர் கூற்றின் அடிநாதமாக இருக்கிறது. இது தவறான கருத்து. இரண்டும் ஒன்றுதான். பிரிக்க முடியாதவை’ என்று அம்பேத்கர் வலியுறுத்தினார்.
1932 ல் லண்டனில் நடந்த மூன்றாவது வட்ட மேஜை மாநாட்டில் தீண்டதகாதவர்களுக்கு தனி தொகுதி என்ற விஷயத்தில் காந்திக்கும் அம்பேத்கருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதை அனைவரும் அறிவார்கள். சீக்கியர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இந்தியாவில் உள்ள ஐரோப்பியர்களுக்கும் தனித் தொகுதி இருக்கும்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏன் இருக்கக் கூடாது ? என்று அம்பேத்கர் தொடர்ந்து வாதிட்டார். காந்தி தனி தொகுதி என்ற ஆலோசனையும் அதற்கு ஆதரவான வாதத்தையும் ஏற்க முடியாது என்று உறுதியாக மறுத்துவிட்டார். ‘ சீக்கியர்கள் எப்போதும் சீக்கியராகவே இருக்கலாம். அதுபோல் முகமதியர்களும் ஐரோப்பியர்களும். ஆனால் தீண்டதகாதவர்கள் எப்போதுமே தீண்டதகாதவராகத்தான் இருக்க வேண்டுமா ? ‘ என்று அவர் பதில் வாதமிட்டார்.
பிரிட்டிஷ் அரசு கம்யூனுவல் அவார்ட் (வகுப்புவாரி ஒதுக்கீடு) என்ற பெயரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி தொகுதிகளை அறிவித்த போது காந்தி அதை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டார். “காந்தியின் உண்ணாவிரதம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. காந்தியின் உண்ணாவிரதத்தால் நாடு முழுக்கவும் பல நூற்றாண்டுகளாக ‘தீண்டதகாதவர்’களுக்கு மூடப்பட்டிருந்த கோயில் கதவுகள் திறக்கப்பட்டன. பிராமணர்கள் தங்கள் வீட்டில் விருந்துண்ண தலித்துகளை அழைத்தனர். பேரரசு தன் பங்கிற்கு எரவாடா சிறைக் கதவை திறந்தது. காந்தியுடன் உரையாற்ற அம்பேத்கர் சென்றார்’, என்று ராஜ்மோகன் காந்தி எழுதுகிறார்.
பூனா ஒப்பந்தம் என்ற பெயரில் சமரச திட்டம் உருவானது. தனித்தொகுதி என்பதை காந்தி ஏற்றுக் கொண்டார். ‘தீண்ட தகாதவர்’களுக்கென தொகுதி ஒதுக்கீடு என்று அம்பேத்கரும் ஏற்றுக்கொண்டார். ஆனால் அம்பேத்கருக்கு முழு திருப்தி இல்லை. ஜாதி முறைமையில் பெரிய சீர்திருத்தத்திற்கான முதல் அரசியல் சலுகை தனித் தொகுதி என்று அவர் கருதினார். ஒப்பந்தம் தொடர்பாக இருவரிடையே நடக்க விவாதத்தை கூர்ந்து பார்த்தால் அவர்களிடையே குறிப்பிடத்தக்க, அடிப்படையான வேறுபாடு இருப்பதை தெரிந்து கொள்ளலாம். இருவரும் நடைமுறையை கருதி அந்த விஷயத்தை முடிவுக்கு கொண்டு வந்ததையும் புரிந்து கொள்ளலாம்.
1935 அக்டோபர் 13 தேதி மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் உள்ள யோலா என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் உணர்ச்சிகரமாக பேசிய அம்பேத்கார் தானொரு ஹிந்துவாக பிறந்தாலும் ‘ஹிந்துவாக சாகமாட்டேன் என்று உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று சொன்னார். காந்தி அதிர்ந்து போனார். அம்பேத்கரை ‘மெத்தப் படித்தவர்’ , ‘உயர்ந்த ஆன்மா’ என்று கூறிய காந்தி அவர் தம் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார். ஏனென்றால் ‘ஆங்காங்கே சில சம்பவங்கள்’ நடக்கின்றன என்ற போதிலும் தீண்டாமை அதன் ‘இறுதி கட்டத்தை’ எட்டி விட்டது என்றார் . அம்பேத்கர் தனது ‘பரம்பரை மத’த்தை அதன் சிறப்புகளுடன் பார்க்க வேண்டுமேயன்றி அதை ‘உண்மையாக பின்பற்றாதவர்களின்’ பலவீனத்தைக் கொண்டு எடை போடக்கூடாது என்றார்.
அம்பேத்கர் இந்த அடிப்படை விஷயத்தில் காந்தியுடன் முரண்பட்டார். ‘உண்மையாக பின்பற்றாதவர்கள்’ என்று காந்தி குற்றம் சாட்டியதை ஹிந்துயிசத்தின் அடிப்படை போதனைகள் என்று அம்பேத்கர் சாடினார். ஜாதியும் வர்ணமும் இருக்கும் வரை ‘தீண்டதகாதவர்’களுக்கு விடுதலையே கிடையாது என்றார்.
மதமாற்றம்:
காந்தி ஒருபுறம் ஜின்னாவுடன் அரசியல் விவாதமும் அம்பேத்கருடன் சமூக விவாதமும் நடத்திக் கொண்டிருந்த அதே வேளையில் கிறிஸ்துவ மிஷனரிகளுடன் மதம் குறித்து தீவிர விவாதத்தில் ஈடுபட்டார். மிஷனரிகளுடனான மோதல் அவருக்கு இளம் பிராயத்திலேயே ஏற்பட்டது. ராஜ்கோட்டில் பள்ளி மாணவராக இருந்தபோதே ‘அவர்களை எனக்கு ஏனோ பிடிக்காமல் போய்விட்டது’ என்று கூறியுள்ளார் . ‘அந்த காலத்தில் கிறிஸ்தவ மிஷனரிகள் உயர்நிலை பள்ளிக்கூடத்தில் அருகில் நின்று கொண்டு ஹிந்துக்களை பற்றியும் அவர்களது கடவுளர்களைப் பற்றியும் அவதூறாக பேசுவார்கள். எனக்கு இது பிடிக்கவில்லை. ஒரே ஒருமுறை அருகில் நின்று அவர்களின் அவதூறுகளை கேட்டுள்ளேன். அதன் பிறகு அந்த பக்கமே போவதில்லை’, என்று எழுதியுள்ளார். ஒரு பிரபல ஹிந்து மதம் மாறிய நிகழ்ச்சியின் போது மாட்டிறைச்சியை உண்டு, மது அருந்தி, ஐரோப்பியர்களைப் போல உடை அணிந்த செய்தியை கேள்விப்பட்டார். அது அவருக்கு அருவருப்பை ஏற்படுத்தியது.
காந்தி இங்கிலாந்தில் இருந்த போது பல மத நூல்களை படித்தார் . அதிலொன்று புதிய ஏற்பாடு. ‘மலை பிரசங்கம் என் மனதுக்குள் நேரே நுழைந்து விட்டது’ என்று கூறியுள்ளார். ‘ஜீசஸ்தான் கடவுளின் ஒரே பிள்ளை, அவரை நம்புபவர்கள் மட்டுமே பரலோகத்தை அடைய முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. கடவுளுக்கு பிள்ளைகள் உண்டு என்றால் நாம் அனைவரும் அவரது பிள்ளைகள்தான். ஜீசஸ் கடவுள் மாதிரி அல்லது கடவுள் என்றால் எல்லா மனிதர்களும் கடவுள் மாதிரிதான் அல்லது கடவுளாக முடியும். ஜீசஸ் தியாகி என்றும் தியாகத்தின் திரு உருவம் என்றும் ஏற்க முடியும். தெய்வீக ஆசான் என்று கூறலாம். ஆனால் மனித இனத்திலேயே முழுமையாக , மிககச்சிதமாக பிறப்பிக்கப்பட்ட மனிதர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது’, என்று எழுதியுள்ளார்.
” தத்துவம் என்று பார்த்தால் கிறிஸ்துவத்தில் மகத்தான கொள்கை என்று ஏதுமில்லை. தியாகம் என்று எடுத்துக் கொண்டால் ஹிந்துக்கள் கிறிஸ்தவர்களை விட மேலானவர்கள். கிறிஸ்துவம் மிகச்சரியான மதம் என்றோ இருக்கின்ற மதங்களிலே மேலானது என்றோ ஏற்றுக் கொள்ள முடியாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்துவ மிஷனரிகளின் மதம் மாற்றும் செயல்களுக்கு காந்தி கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார் . அமெரிக்காவிலிருந்து ஒரு மாணவர் இந்தியாவில் கிறிஸ்துவ மிஷனரிகள் செய்யும் பணிகள் பற்றி அவருடைய கருத்தை மனம் திறந்து தெரிவிக்கும்படி கேட்டபோது, ‘என்னுடைய கருத்தில் கிறிஸ்தவ மிஷனரிகள் எங்களுக்கு மறைமுகமாக நல்லது செய்துள்ளனர். அதைவிட அதிகமாக தீமையை நேரடியாக செய்துள்ளனர். அவர்களது நவீன மதமாற்று முயற்சிகளையும் செயல்களையும் நான் எதிர்க்கிறேன். தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் பல ஆண்டுகளாக நடந்த மதம் மாற்ற செயல்களால் மதம் மாறியவர்களின் தார்மீகம், நன்னெறிகள் உயர்ந்து விடவில்லை. ஐரோப்பிய கலாச்சாரத்தில் மேம்போக்கான சில விஷயங்கள் மட்டுமே அவர்களிடம் பதிந்துள்ளது. இயேசுவின் போதனைகள் எதுவும் அவர்களிடம் இல்லை’, என்று காந்தி பதிலளித்துள்ளார்.
தீண்டாமையை ஒழிக்க மிகப்பெரிய மக்கள் இயக்கத்தை கட்டமைப்பதில் கிறிஸ்துவ மிஷனரிகள் மிகவும் உதவியாக இருக்க முடியும் என்று அமெரிக்க கிறிஸ்துவ பாதிரியார் ஜான் ஆர் மோட் சொன்னார். அதற்கு, ‘இதுபோன்ற வெகுஜன இயக்கங்களை நான் ஏற்கவில்லை. அவர்களது நோக்கம் தீண்டதகாதவர்களை உயர்த்துவது அல்ல. மதம் மாற்றம் செய்வது மட்டுமே அவர்களது இறுதி நோக்கம். வெகுஜன மதமாற்றம் என்ற உள்நோக்கம் மிஷனரிகளின் ஒத்துழைப்பை நான் ஏற்க முடியாதபடி செய்து விடுகின்றன’, என்று காந்தி பதிலளித்தார்.
சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் கிறிஸ்தவ மிஷனரிகளின் செயல்பாடுகளை அனுமதிப்பது பற்றி காந்திக்கு உறுதியான கருத்துக்கள் இருந்தன. 1931 மார்ச் மாதம் ஒரு நேர்காணலில் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மிஷனரிகளின் செயல்பாடுகளை அனுமதிப்பீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு மிகவும் கறாராக , ‘மனிதாபிமான அடிப்படையில் ஏழைகளுக்கு சேவை செய்வதுடன் நிறுத்திக் கொள்ளாமல் மருத்துவம், கல்வி போன்றவற்றின் மூலம் அவர்கள் மதமாற்றம் செய்ய முனைந்தால் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று நிச்சயம் சொல்வேன் . அந்தந்த தேசத்தில் உள்ள மதம் மற்றவற்றை போல உயர்ந்ததுதான். இந்தியாவில் உள்ள மதங்கள் இம்மக்களுக்கு போதுமானதாக உள்ளன. எங்களுக்கு மதம்மாற்றும் ஆன்மீகம் வேண்டாம்’, என்று காந்தி பதிலளித்தார்.
செவிலியராக பணிபுரிந்த கிறிஸ்தவ மிஷனரி ஒருவர்க்கு காந்தி அளிக்க நேர்காணல் 1935 மே 11 தேதியிட்ட ஹரிஜனில் வெளியாகி உள்ளது. அதில் காந்தி தெளிவாக கூறுகிறார், ‘எனக்கு அதிகாரம் இருந்தால் எல்லாவிதமான மதமாற்றங்களையும் தடை செய்ய சட்டம் இயற்றுவேன் ‘.
மதம் மாற்றத்தை காந்தி எதிர்ப்பதற்கு காரணம் ‘கிறிஸ்தவம் மேற்கத்திய கலாச்சாரத்தின் மறுபெயர். மேற்கத்திய கலாச்சாரம்தான் கிறிஸ்துவ கலாச்சாரம்’ என்ற அவரது புரிதல்தான். மேலும் “இந்திய கலாச்சாரத்தை ஹிந்து கலாச்சாரம் என்றுதான் கூற முடியும்” என்று அவர் வலியுறுத்தி சொல்லியுள்ளார்.
ஆனால் காந்தி எல்லா மதங்களையும் சமமாக மதிக்க வேண்டும் என்ற கருத்துடையவர். கிறிஸ்தவர்கள் மீது அவர் எப்போதும் மரியாதை வைத்திருந்தார். 1947 டிசம்பர் 24 தேதி கிறிஸ்மஸ்க்கு முந்தின தின மாலை பிரார்த்தனை கூட்டத்தில், ‘நாளை கிறிஸ்துமஸ். இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்களுக்கும் வெளிநாடுகளில் உள்ள கிறிஸ்தவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவுக்கு உள்ளும் வெளியிலும் உள்ள கிறிஸ்தவர்கள் எல்லோரும், உண்மையான அர்த்தத்தில், சுதந்திரமாக வாழ வேண்டும். அவர்கள் சுய கட்டுப்பாட்டை மேற்கொண்டு இயேசு கிறிஸ்து காட்டிய தியாக வழியில் நடக்க வேண்டும். அவர்கள் சுதந்திரம் பெற்றவர்களாகட்டும். உலகில் சுதந்திரத்தின் பரப்பளவு அதிகரிக்கட்டும்’, என்று வாழ்த்து கூறினார்.
பிரிட்டிஷ் நிர்வாகியும் எழுத்தாளருமான எட்வர்ட் பென்ட்ரல் மூன், காந்தி தேசிய இயக்கத்தை ஹிந்து மயமாக்குவதை ஊக்குவித்தார். அதன் அடையாளமாக இருந்தார், என்று கூறியுள்ளார். அது மட்டுமல்ல, ‘காந்தியின் அடிப்படை கருத்துக்கள், அவரது தார்மீக நெறிகள், லட்சியங்கள், அவரது விருப்பு வெறுப்புகள், சிறப்புகள் எல்லாம் ஹிந்து அடிப்படையில் அமைந்தவை. அவரது எழுத்து, பேச்சு, சிந்தனை, அடையாளங்கள் எல்லாம் சந்தேகத்திற்கு இடமின்றி ஹிந்துவில் இருந்து கிளைத்தவை. விடுதலைக்கு நிகராக ஹிந்துயிச சீர்திருத்தத்தை வலியுறுத்துகிறார். சொல்லப்போனால் அவருக்கு இரண்டும் ஒன்றுதான்’, என்று எட்வர்ட் எழுதியுள்ளார்.
காந்தியின் லட்சியங்கள் அவருக்கு முன்பிருந்த திலகர், லஜபதி ராய், அரவிந்தர் போன்ற அரசியல் தலைவர்களின் தொடர்ச்சியாகவே இருந்தன. பட்டேல் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் மீது அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. ஆனால் விரைவில் அவரது கருத்துக்களுக்கு ஜவஹர்லால் நேருவின் வடிவில் சவால் எழுந்தது. அவர் காந்தியை அவமதிக்கவில்லை என்றாலும் அவரது லட்சியங்களுடன் முரண்பட்டார்.
சுதந்திரத்துக்கு பிறகு காந்தியை விட நேரு மேலாதிக்கம் பெற்றார் . விடுதலைக்கு பிறகு திலகர் – ராய் – அரவிந்தர் – காந்தி ஆகியோரின் ஒளிப்பிழம்பை வேறு சில அரசியல் சக்திகள் ஏந்த வேண்டியதாயிற்று. இந்த சூழலில்தான் ஹிந்து தேசிய இயக்கம் இந்த நாட்டில் மேலெழுந்து வந்தது. ஏழு தசாப்தங்களில் தேசிய அரசியலின் மையத்தை பிடித்தது.
நன்றி: ஓப்பன் மேகசீன்
கட்டுரையாளர் பாஜகவின் தேசிய துணைத் தலைவராக உள்ளார்

