alice huang woman nvidia ceo jensen huang admitted affair - 2026

பழைய உளவு உத்தி… புதிய இலக்கு! சீனாவின் ‘ஹனிட்ராப்’ வலையில் என்விடியா தலைவர்?

உரத்த சிந்தனை அடடே... அப்படியா? கட்டுரைகள் லைஃப் ஸ்டைல்
alice huang woman nvidia ceo jensen huang admitted affair - 2026

✍️ ஜி.எஸ்.பாலமுருகன்

பெண்களைப் பயன்படுத்தி எதிரிகளை நெருங்குவது, அவர்களிடமிருந்து ரகசியத் தகவல்களைப் பெறுவது என்பது உளவு உலகிற்கு ஒன்றும் புதிய உத்தி அல்ல. காலம் காலமாகப் பல்வேறு நாடுகளின் உளவு அமைப்புகள் பயன்படுத்தி வந்த பழைய தந்திரம் இது. தொழில்நுட்பம் வளர்ந்திருக்கலாம்; உளவு பார்க்கும் முறைகள் நவீனமடைந்திருக்கலாம். ஆனால், மனித உறவுகளைப் பயன்படுத்தி ஒருவரை நெருங்கும் உத்தி மட்டும் இன்னும் மறைந்துவிடவில்லை.

ஆம்! உலகின் ஏஐ எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நிறுவனத்தின் தலைவரை நெருங்குவதற்கு, பல ஆண்டுகளாக உளவு அமைப்புகள் பயன்படுத்தி வரும் ‘ஹனிட்ராப்’ எனப்படும் காதல் வலை உத்தி முயற்சிக்கப்பட்டதா? இந்தச் சர்ச்சையின் பின்னணி என்ன?

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்குத் தேவையான அதிநவீன சிப்களை உருவாக்கும் என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங். அமெரிக்காவின் தொழில்நுட்ப வலிமையில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த நிறுவனத்தின் தலைவரைச் சுற்றி, ஒரு தனிப்பட்ட உறவும் அதன் பின்னணியில் சீன உளவுத்துறையின் தலையீடு இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

1993-ஆம் ஆண்டு என்விடியா நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் ஒருவர் ஜென்சன் ஹுவாங். கணினிகளுக்கான கிராபிக்ஸ் சிப்களை உருவாக்கத் தொடங்கிய நிறுவனம், இன்று செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்குத் தேவையான அதிநவீன சிப்களை உருவாக்குவதில் உலகின் முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்தில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், என்விடியாவின் சிப்கள் மிக முக்கியமான தொழில்நுட்ப வளமாக மாறியுள்ளன. இதனால் ஜென்சன் ஹுவாங் ஒரு நிறுவனத்தின் தலைவராக மட்டுமல்லாமல், அமெரிக்காவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதாரக் கொள்கைகளிலும் செல்வாக்கு செலுத்தக்கூடிய நபராக உருவெடுத்துள்ளார்.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

குறிப்பாக, என்விடியாவின் மேம்பட்ட சிப்களைச் சீனாவுக்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்று அவர் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனும் அவருக்கு நேரடித் தொடர்பு உள்ளது.

இப்படிப்பட்ட செல்வாக்கு கொண்ட ஜென்சன் ஹுவாங் விவகாரத்தின் மையத்தில் இருப்பவர் ஆலிஸ் ஹுவாங். இவர் சீனக் குடிமகள். சிங்கப்பூரைச் சேர்ந்த மெகாஸ்பீட் (Megaspeed) என்ற தொழில்நுட்ப நிறுவனத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்.

என்விடியாவுடன் வணிகத் தொடர்பு கொண்ட நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்ததால், ஜென்சன் ஹுவாங்குடன் அவருக்குத் தொழில்முறைத் தொடர்பு ஏற்படுவதற்கான சூழல் இருந்தது.

ஆனால், இருவரும் முதன்முதலில் எப்போது சந்தித்தார்கள்? யார் முதலில் அறிமுகப்படுத்தினார்கள்? அந்த அறிமுகம் எப்போது தனிப்பட்ட உறவாக மாறியது? இந்தக் கேள்விகளுக்கான தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை.

இந்தச் சூழலில்தான் மெகாஸ்பீட் நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்த ஆலிஸுக்கும், என்விடியாவின் தலைவருக்கும் இடையே தனிப்பட்ட உறவு இருந்ததாக வெளியான தகவல்கள் அமெரிக்க உளவுத்துறையின் கவனத்தை ஈர்த்தன.

சர்ச்சை தீவிரமடைந்த நிலையில், ஜென்சன் ஹுவாங் தனது நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தியில், தனது மனைவிக்கு உண்மையாக நடந்துகொள்ளவில்லை என்று ஒப்புக்கொண்டார். தனது செயல்களால் மனைவி, குடும்பத்தினர், சக ஊழியர்கள், இயக்குநர்கள் குழு மற்றும் பங்குதாரர்கள் பாதிக்கப்பட்டதற்காக மன்னிப்புக் கேட்டார்.

எனினும், நிறுவனத்தின் ரகசியங்களோ அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு தொடர்பான தகவல்களோ சமரசம் செய்யப்பட்டதாக நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று என்விடியா விளக்கம் அளித்தது.

ALSO READ:  புற்றுநோயுடன் போராட்டம்; பலருக்கு நம்பிக்கை அளித்த ராஜஸ்ரீ ஜெய்சன்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜென்சன் ஹுவாங்குக்கு ஆதரவு தெரிவித்ததுடன், அவரை ‘மரியாதைக்குரிய மனிதர்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரியாக அவர் தொடர்ந்து நீடிப்பார் என்று நிறுவனமும் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தனிப்பட்ட உறவு என்ற எல்லையைத் தாண்டி அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புப் பிரச்சினையாக மாறியதற்கு மெகாஸ்பீட் நிறுவனத்தின் மீதான சந்தேகங்களும் ஒரு காரணம்.

அமெரிக்காவின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட என்விடியாவின் அதிநவீன ஏஐ சிப்களை, சீன நிறுவனங்கள் பெறுவதற்கு மெகாஸ்பீட் உதவியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

சீனாவின் சில தடைப்பட்ட நிறுவனங்கள் என்விடியாவின் சிப்களைப் பெறுவதற்கு இந்த நிறுவனம் உதவியதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 2024 ஜூன் மாதத்திலிருந்து மெகாஸ்பீட் நிறுவனம் 4.8 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பிலான சிப்களை வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி அவை தவறானவை எனத் தாங்கள் நிரூபித்துவிட்டதாக என்விடியா ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

அமெரிக்க உளவுத்துறை அளித்ததாகக் கூறப்படும் தகவல்களை மேற்கோள் காட்டி வெளியான செய்திகளின்படி, சீன அரசுப் பாதுகாப்பு அமைச்சகம் (Ministry of State Security), ஆலிஸ் ஹுவாங்கைத் தனது உளவு நடவடிக்கைக்குப் பயன்படுத்தியிருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை மதிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் நோக்கம், என்விடியாவின் தொழில்நுட்ப ரகசியங்களைத் தெரிந்துகொள்வது மட்டுமல்லாமல், சீனாவுக்கான சிப் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த ஜென்சன் ஹுவாங்கை வலியுறுத்தச் செய்வதாகவும் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால், ஆலிஸ் ஹுவாங் சீன உளவுத்துறையால் திட்டமிட்டு பயன்படுத்தப்பட்டார் என்பதோ, அவர் ஜென்சனிடமிருந்து ரகசியத் தகவல்களைப் பெற்றார் என்பதோ இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

இந்த விவகாரம் அமெரிக்கா, சீனா இடையிலான தொழில்நுட்பப் போட்டியுடன் முடிந்துவிடுவதில்லை. இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களும் என்விடியாவின் சிப்களைப் பெரிதும் சார்ந்துள்ளன.

அமெரிக்கா தனது ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கினால், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் நிறுவனங்களும் கூடுதல் கண்காணிப்புக்கு உட்பட வாய்ப்புள்ளது.

ஒரு நிறுவனத்தின் தொழில்நுட்பத்தையும் அதன் ரகசியங்களையும் பாதுகாப்பதற்கு அதிநவீன இணையப் பாதுகாப்பு அமைப்புகள் மட்டும் போதாது. அந்த நிறுவனத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும் தலைவர்களின் வெளிநாட்டுத் தொடர்புகளும் தனிப்பட்ட உறவுகளும் கூடப் பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்துக்கு வரலாம் என்பதை இந்தப் பழைய உளவு உத்தி உணர்த்துகிறது.

Posts by தினசரி செய்திகள்: