
ஐந்தாண்டு புற்றுநோய்ப் போராட்டம்; பலருக்கு நம்பிக்கையளித்த ராஜஸ்ரீ ஜெய்சன் காலமானார்!
ராஜஸ்ரீயின் சிறு வீடியோ: https://www.facebook.com/share/v/19uwAvk8Qt/
“மனம்தான் மிகப்பெரிய ஆயுதம்” – இந்த வார்த்தைகளைத் தனது வாழ்க்கைப் போராட்டத்தின் மூலம் உணர்த்தியவர் ராஜஸ்ரீ ஜெய்சன்.
சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட ராஜஸ்ரீ, பட்டிமன்றப் பேச்சாளராகவும் சமூக வலைதளப் பிரபலமாகவும் அறியப்பட்டவர். புற்றுநோயுடன் ஐந்து ஆண்டுகளாகப் போராடி வந்த அவர் காலமானார்.
வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்டில் வசித்து வந்த ராஜஸ்ரீக்கு, நுரையீரல், மூளை, தண்டுவடம் உள்ளிட்ட பகுதிகளில் நான்காம் நிலைப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. நோயின் பாதிப்புகளுக்கு இடையிலும், தனது சிகிச்சை அனுபவங்களையும் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்களையும் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தொடர்ந்து பகிர்ந்து வந்தார்.
கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை குறித்த அச்சங்களையும் தவறான புரிதல்களையும் போக்கும் வகையில், தனது அனுபவங்களை வெளிப்படையாகப் பதிவு செய்தார். புற்றுநோய் சிகிச்சையால் தலைமுடியை இழந்தபோது, தனது இளம் மகளுடன் இணைந்து தலைமுடியை மழித்துக்கொண்டதையும் பகிர்ந்திருந்தார்.
நோயின் பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் தனது குரலை இழந்துவிட்டதாகத் தெரிவித்தார். பின்னர், உடலின் ஒரு பகுதி செயலிழக்கும் நிலையும் ஏற்பட்டது. இதையடுத்து, பெல்ஃபாஸ்டில் வலி மற்றும் நோயின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் வகையிலான இறுதிக்காலப் பராமரிப்புக்கு (Palliative Care) மாற்றப்பட்டார்.
உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், கடந்த அக்டோபர் 28ஆம் தேதி தனது கணவர் மற்றும் மகளுடன் 14ஆவது திருமண நாளைக் கொண்டாடியிருந்தார். அந்தத் தருணத்தையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
நோயின் தீவிரத்துக்கு மத்தியிலும் தன்னம்பிக்கையுடனும் நகைச்சுவை உணர்வுடனும் அவர் வெளியிட்ட பதிவுகள் பலரது கவனத்தை ஈர்த்ததுடன், அவர்களுக்கு நம்பிக்கையையும் அளித்தன. ராஜஸ்ரீ ஜெய்சனின் மனஉறுதியும் அவரது வாழ்க்கைப் பயணமும் பலராலும் நினைவுகூரப்படுகிறது.
✍️பதிவு: ஜி.எஸ்.பாலமுருகன்.



