
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கலைக்கூடம் ஒன்றால் நடத்தப்பட்ட 3 நாள் கலைக்கண்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது.
இதில் அக்சய் மாலி என்பவரின் புகைப்படங்கள் மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது. அதில் நிர்வாணக் கூறுகள் இடம்பெற்றிருப்பதாகச் சொல்லி கண்காட்சி இரண்டாம் நாளான சனிக்கிழமை அன்று நிறுத்தப்பட்டது.
‘இட்ஸ் மீ’ it’s me என்ற தீமில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியில் கலையின் எல்லைகள் உடைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிரபல புகைப்பட கலைஞரான அக்சய் மாலி, தனது புகைப்படங்கள் மூலம் இந்திய அளவில் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று வருகிறார். பல தீம்களில் இந்தியாவின் பல நாடுகளில் அவர் கண்காட்சிகளை நடத்தி பாராட்டுகளை குவித்து வருகிறார்.
ஆனால் அவ்வப்போது ஏதாவது சர்ச்சைகளில் சிக்குவதையும் வழக்கமாக கொண்டவர் இவர்.
இதுகுறித்து கலைக்கூடம் அமைந்துள்ள பாலகந்தர்வ் ரங் மந்திரின் பொறுப்பாளர் சுனில் மேட் கூறுகையில், அக்சய் மாலி அவரது புகைப்படங்கள் குறித்து முன்கூட்டியே நிர்வாகத்திடம் தெரிவித்திருக்க வேண்டும்.

“பிறரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருக்கும் எந்த ஒரு படைப்பையும் எங்கள் கலைக்கூடம் அனுமதிக்காது. அத்தகைய நிர்வாணம் எங்கள் கலைக்கூடத்தில் இடம்பெறுவது ஏற்புடையதாகவும் இல்லை.
” அந்த புகைப்படங்கள் மற்றும் அதன் தீம் குறித்து அறிந்த உடனே அவற்றை நீக்குமாறு புகைப்படக்கலைஞர் அக்சய் மாலியிடம் கூறப்பட்டது என்றார்.
இச்சம்பவம் குறித்து புகைப்படக்கலைஞர் அக்சய் மாலி கூறுகையில் , “கண்காட்சியில் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் இயற்கைச் சூழலில் எடுக்கப்பட்ட பிற மாடல்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. சனிக்கிழமை அன்று கலைக்கூடத்தின் நிர்வாகத்தினர் சிலர் என்னுடைய புகைப்படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவற்றை நீக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்தக் கண்காட்சிக்கு எனது ஸ்லாட்டை புக் செய்தபோது நிர்வாண தீம் குறித்து நான் ஏதும் தெரிவிக்கவில்லை; வெறும் புகைப்படக் கண்காட்சி என்று கூறியே முன்பதிவு செய்தேன்” என்றார்.
இதற்கு முன் ஆன்லைன் கண்காட்சிகளில் மட்டுமே வெளியாகி இருந்த எனது புகைப்படங்கள் ஒரு கலைக்கூட கண்காட்சியில் இடம் பெறுவது இதுவே முதன்முறை எனவும், முதல் வெளியீட்டிலேயே எனது படைப்புகள் இத்தகைய எதிர்ப்பைச் சந்தித்திருப்பதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும், கலைக்கு எந்த விதிகளும் எல்லைகளும் இல்லை; ஆனால் அதை ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் அடைத்து வைக்கும் முயற்சி இங்கே நடந்துள்ளதாகவும் அக்சய் மாலி கூறியுள்ளார்.