
‘மனதின் குரல் (137ஆவது பகுதி)’
ஒலிபரப்பு நாள் : 30.08.2026
தமிழில் / குரல் : ஆர். சுதர்ஸன்
இந்த செய்தி / கட்டுரையின் உள்ளே…
பாரம்பரியத்தைக் காட்டும் வலைத்தள உருவாக்கம்!
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலின் இந்தப் புதிய பகுதிக்கு உங்களனைவரையும் மீண்டுமொரு முறை நான் வரவேற்கிறேன். புதிய முயற்சிகளை பார்வைக்குக் கொண்டுவரக்கூடிய ஒரு மேடை தான் மனதின் குரல் என்பதை நீங்களனைவரும் நன்கு அறிவீர்கள். நாட்டு மக்களின் நூதனமான எண்ணங்கள் மீது விவாதம் நடக்கிறது. இவற்றில் பல கருத்துக்கள்-எண்ணங்களின் பின்புலத்தில் மக்கள் வாழ்க்கையின் மாபெரும் சக்தியை முதலீடு செய்திருக்கிறார்கள்.
நண்பர்களே, சில காலம் முன்பு சமூக ஊடகத்தில் யாரோ ஒருவர், ஆஷாட ஏகாதசியின் புனிதமான வேளையிலே, வரலாற்றை சுவாரசியமானதாக ஆக்கும் எனது முயற்சியை நான் தொடங்குகிறேன் என்பதைக் கூறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன், என்று எழுதியிருந்தார். அவர் தொடர்ந்து வெளிப்படுத்திய எண்ணம் மிகவும் எளிமையானது. நீங்கள் இந்த வலைத்தளத்திற்குச் சென்று ஏதோ ஒரு ஆண்டைத் தேர்வு செய்யுங்கள். அந்தக் காலத்தில் பாரதத்தின் எந்தப் பாகத்தில் யார் ஆட்சி செய்து வந்தார்கள் என்பது உங்களுக்கு சுலபமாகத் தெரிந்துவிடும். எனக்குமே கூட இது மிகவும் சுவாரசியமாக இருந்தது. இது குறித்து மேலும் தகவல்களைப் பெறலாமே என்று எண்ணமிட்டேன். மும்பையிலே வசிக்கின்ற கிருஷ்ண சேஷாத்ரி அவர்கள் தான் இந்தச் செயலை செய்திருக்கிறார் என்பது எனக்குத் தெரிய வந்தது. மேலும் சுவையான விஷயம் என்னவென்றால் கிருஷ்ணா அவர்கள் தனது வலைத்தளத்திற்கும் கூட எளிமையான பெயரைச் சூட்டியிருந்தார் என்பது தான் – www.bharatrajya.com இவர் மேற்கொண்ட இந்த முயற்சி பற்றிய தகவல்கள் மக்களிடம் சென்று சேர வேண்டும். ஆகையால், அவரோடேயே பேசிப் பார்க்கலாமே என்று தோன்றியது. நண்பர்களே, கிருஷ்ணா அவர்கள் இப்போது நம்மோடு தொலைபேசியிலே இணைகிறார்.
பிரதமர் – கிருஷ்ணா அவர்களே வணக்கம்.
கிருஷ்ணா சேஷாத்ரி – வணக்கம் சார் வணக்கம்.
பிரதமர் – சார் நீங்க தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர் இல்லை, வரலாற்று ஆசிரியரும் இல்லை அப்படீங்கறது தெரிய வந்திச்சு. ஆனாலும் கூட எப்படி நீங்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரலாறு தொடர்பான ஒரு தளத்தை உருவாக்கினீங்க? இதெல்லாம் எப்படி உருவாச்சுன்னு தெரிஞ்சுக்க நான் ஆவலா இருக்கேன்.
கிருஷ்ணா சேஷாத்ரி – நன்றி சார். உங்களோட பேசுவது எனக்கு மிகப்பெரிய சௌபாக்கியமான விஷயம் சார். என்னைப்பத்தி கொஞ்சம் சொல்லிக்கறேன். நான் ஒரு பொறியாளரா இருந்தேன், பிறகு நான் எம்பிஏ செஞ்சேன், பிறகு மார்கெட்டிங் துறைக்குப் போயிட்டேன். ஆனா, இதெல்லாம் நான் செஞ்சிட்டு இருந்தாலும், என் மனசுக்குள்ள என் சின்ன வயசு ஆசையான வரலாறு மேலேயே இருந்திச்சு. வரலாறு தொடர்பா ஏதாவது நான் செய்யணும்னு நினைச்சிட்டு இருந்தேன், எப்படி அதை சுவாரசியமா ஆக்குறது, இப்ப நமக்குக் கத்துக் குடுக்கற வழிமுறையிலேயே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தணும்னு கூட தோணும், இது மூலமா வரலாற்றை ஒரு கதை வடிவத்தில எல்லாருக்கும் கொண்டு சேர்க்க முடியும்னு நினைச்சுப்பேன்.
பிரதமர் – கிருஷ்ணா ஜி, பாரத நாட்டு வரலாற்றோட எந்தப் பக்கத்தைப் பத்தின தகவல்கள் அதிக அளவுல மக்களுக்கு தெரிஞ்சு இருக்கணும்னு நீங்க நினைக்கறீங்க?
கிருஷ்ணா சேஷாத்ரி – நம்ம பள்ளிகள்ல-கல்லூரிகள்ல கற்பிக்கப்படற பாரதநாட்டு வரலாறுன்னு நீங்க பார்த்தா, அதுல ஏதோ ஒரு சாம்ராஜ்யம், அல்லது ஒரு ராஜ்ஜியம், அதுபத்தின பார்வை, அதோட கண்ணோட்டம் கற்பிக்கப்படுது, அந்த சாம்ராஜ்ஜியங்களுக்கு அளவுக்கு அதிகமாகவே முக்கியத்துவமும் கிடைக்குது. இந்தச் சுழல்ல சிக்கி, இன்னும் நம்ம பல சாம்ராஜ்ஜியங்கள், எடுத்துக்காட்டா சோழர்கள், பல்லவர்கள், கஷ்மீரத்தில இருந்த கர்கோடக வம்சம் அல்லது அசாமில இருந்த அஹோம்கள் – இவங்க குறைஞ்சது 600 ஆண்டுகள்வரை அஸாமில தங்களோட கலாச்சாரம், தங்களோட விழுமிய முறைகளை பராமரிச்சு வச்சிருந்தாங்க, இவங்களை பத்தி நமக்குத் தெரியாது. ஆகையால இப்படிப்பட்ட மாபெரும் சாம்ராஜ்ஜியங்களைப் பத்தியும் மக்களுக்கு அறிமுகம் செய்யற வகையில ஒரு தளத்தை ஏற்படுத்தணும்னு நான் தீர்மானிச்சேன்.
பிரதமர் – கிருஷ்ணா ஜி, நீங்க இத்தனை கடுமையா உழைக்கறீங்க, அனுமானமா கேள்வி ஒண்ணை நான் கேட்கறேன். இந்திய வரலாற்றுல மூணே மூணு பேர் கூட பேச உங்களுக்கு சந்தர்ப்பம் குடுத்தா, நீங்க யார் கூட பேச விரும்புவீங்க, ஏன்?
கிருஷ்ணா சேஷாத்ரி – ஆமாம் சார். நான் முதலாவதா ராஜராஜ சோழன் பத்தி அல்லது ராஜேந்திர சோழன் கூட பேசுவேன், ஏன்னா சோழ சாம்ராஜ்ஜியத்தோட மிக சக்திவாய்ந்த அரசர்களாவும், மிக முக்கியனவங்கள்ல ஒருத்தங்களாவும் அவங்க இருந்தாங்க. தஞ்சை பெரிய கோயிலான பிருகதீஸ்வரர் கோயில் இல்லை கங்கைகொண்ட சோழபுரம் மாதிரியான பிரும்மாண்டமான சிவன் கோயில்களைக் கட்டறதுக்குத் தேவையான தொலைநோக்குப் பார்வை, திட்டமிடல், அந்த எண்ணம், அடுத்த 1000-2000 ஆண்டுகள் வரை கூட வரக்கூடிய தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய இந்தத் தொலைநோக்கு, இந்த எண்ணம் அவங்களுக்கு எப்படி வந்திச்சுன்னு கேட்டுத் தெரிஞ்சுக்க விரும்புவேன். ரெண்டாவது ஆளுமைன்னு பார்த்தா, என் கண்ணோட்டத்தில இந்திய வரலாற்றோட மிகவும் குறைத்து மதிப்பிடப்படுற ஆளுமை அவர். அவர் பெயர் ஹேமு, அவரைப் பத்தி இந்திய வரலாற்றுல பார்த்தோம்னா அதிகபட்சம் ரெண்டு மூணு வரிகள்ல படிச்சு முடிச்சுடறோம். அந்த ஹேமு ஒரு சாதாரண குடிமகன், ஒரு வியாபாரி, அவர்தான் ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பறாரு. அவரு ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினவர் மட்டுமல்லாம, இராணுவ மேதாவிலாஸம் படைச்ச ஒரு மதியூகியும் கூட. தன்னோட வாழ்க்கையில 23 போர்கள்ல களம் கண்டு, 22 போர்கள்ல ஜெயிக்கவும் செஞ்சிருக்காரு. அவரோட சிந்தனா ஓட்டம் எப்படி இருந்திச்சு, எப்படி ஒரு சாதாரண குடிமகனா இருந்து ஒரு பெரிய அரசனா உருவாகறாரு, அவரோட பயணம் பத்தி தெரிஞ்சுக்கவும் ரொம்ப ஆர்வமா இருக்கேன் சார். அடுத்து மூணாவது ஆளுமைன்னு சொன்னா, அவங்க ஒரு சுவாரசியமான ஆளுமைன்னு தான் சொல்லணும். இவங்க ஒரு பெண் சார், இவங்க திரிபுவன் மஹாதேவி. ஒடிஷாவோட பௌமாகாரா வம்சத்தை சேர்ந்த இவங்களோட கதையும் ரொம்பவே சுவாரசியமானது. 850ஆம் ஆண்டுவாக்கில அவங்க அண்டை நாடான பாலா வம்சத்து அரசர் இவங்க ராஜ்ஜியம் மேல போர் தொடுத்தாங்க, அதில இவங்க கணவர் மாண்டு போறாரு. இதன் காரணமா இவங்க ராஜ்ஜியம் சிறுத்துப் போயி, அதில இருந்த படைத்தலைவர்கள் எல்லாம் ராஜ்ஜியத்தை விடுத்துப் போக ஆரம்பிச்சாங்க. அப்ப திரிபுவன் மஹாதேவியானவங்க ராஜ்ஜியத்தைத் தன் கட்டுப்பாட்டுல எடுத்தாங்க, அவங்க இந்திய வரலாற்றிலேயே முதல் சுதந்திரமான அரசியா ஆனாங்க. அவங்க ராஜ்ஜியத்தை ஸ்திரப்படுத்தினதோட மட்டுமில்லாம, அதை சக்திவாய்ந்ததாகவும் ஆக்கினாங்க. எந்த அளவுக்கு சக்தியுடையவங்களா ஆனாங்கன்னா, அடுத்த 100 ஆண்டுகள் வரை அவங்க கலிங்கப் பகுதியில ஆட்சி செலுத்தினாங்க. அந்த வகையில இந்த மூணு சுவாரசியமான ஆளுமைகளையும் வரலாற்றுல நான் சந்திக்க விரும்பறேன் சார்.
பிரதமர் – கிருஷ்ணா ஜி நீங்க வரலாற்றில வாழலை, நீங்க முழுமையா அதில மூழ்கிட்டீங்கன்னு புரியுது. நானும் கூட ரொம்ப ஆர்வமா உங்களோட தளத்துக்குப் போனேன், இதில ரொம்ப சுவாரசியமான விஷயம் என்னென்னா, உங்க தளத்தில ஒரு டேப் இருக்கு, அங்க மக்கள் திருத்தங்களையும், ஆலோசனைகளையும் அளிக்க முடியும். இப்படிப்பட்ட ஆக்கப்பூர்வமான பின்னூட்டங்களை ஏத்துக்கற வகையில இருக்கறது ரொம்பவே பெரிய விஷயம். மக்களோட ஆலோசனைகள் உங்களுக்கு வரத் தொடங்கியாச்சா? அது தொடர்பா நீங்க எப்படி பணியாற்றறீங்க?
கிருஷ்ணா சேஷாத்ரி – ஆமாம் சார். நிறைய ஆலோசனைகள் வருது சார். இரண்டு வகையான ஆலோசனைகள் சார். ஒண்ணு எப்படி வருதுன்னா, அதில எனக்கு திருத்தங்களை அறிவுறுத்தறாங்க. – இந்த மாநிலத்தில, இந்த காலத்தில, இந்த தேசத்தில இந்த அரசர் இருந்தாரு அல்லது இந்த காலத்தில இந்த யுத்தம் நடந்திச்சு, இப்படி சில ஆலோசனைகள் வரும். இரண்டாவது ஆலோசனை எப்படி இருக்கும்னா நீங்க இந்த வலைத்தளத்தில இந்த அம்சத்தையும் கூட போடலாமே, அல்லது இதை சேர்த்துக்கலாமேன்னு இப்படி ரெண்டு வகையாகவும் ஆலோசனைகள் வரும். இப்ப இந்த பகுதியில, இந்த காலத்தில இந்த ராஜா ஆட்சி புரிஞ்சாருன்னு யாராவது சொன்னா அதை ஏத்துக்கறோம். நாங்க அடிப்படையில சில ஆதாரங்களை அடிப்படையா வச்சுத் தான் இணைக்கறோம். எடுத்துக்காட்டா, நீங்க இந்தியாவை காமிக்கறீங்க ஆனா மாநில அளவுலயும் காமிக்கலாமேன்னு சொன்னப்ப, இது நல்லா இருந்திச்சு, நாங்களும் அந்த அம்சத்தை அமல் செஞ்சோம். அடுத்ததா இன்னொரு அம்சத்தை அறிமுகம் செஞ்சோம், அதில நாங்க ஒரு துருப்புச் சீட்டு மாதிரி உருவாக்கி, பசங்க வரைக்கும் இதைக் கொண்டு போகணுங்கறதுக்காக எல்லா சாம்ராஜ்ஜியங்கள் பத்தின தரவுகள்-புள்ளிவிவரங்களையும் கொடுத்தோம்; அப்ப ஒருத்தர் ஒரு ஆலோசனை குடுத்தார், அதை நீங்க ஒரு இடத்திலே ஒண்ணு திரட்டி வையுங்க, அப்பத் தான் எல்லாராலயும் தரவிறக்கம் செஞ்சு, எங்களால அதைப் பகிர முடியும்னாரு, இதை நாங்க அமல் செஞ்சிட்டு இருக்கோம் சார். நாங்க ஒண்ணும் அதிமேதாவிகள் இல்லை, நாங்க தப்பு செய்வோம்னு தெரிஞ்சு தான் எங்களை திருத்திக்க ஒரு டேப் (Tab) வச்சிருக்கோம். ஏன்னா இது நம்ம எல்லாரோட தளமா இருக்கணும், இனிவருங்காலத்தில அனைத்து பங்களிப்பு காரணமா, அடுத்த சில ஆண்டுகள்ல வரலாறு ஒரு சுவாரசியமான பாடமா மாறுகிற அளவுக்கு இந்த வலைத்தளத்தை உருவாக்குவோம்.
பிரதமர் – கிருஷ்ணா ஜி, நீங்க உள்ளபடியே மிகப்பெரிய வேலையை செஞ்சிருக்கீங்க. வரலாறு தவிர உங்களுக்கு இன்னும்பல பொழுதுபோக்குகள் இருக்கலாம், வேற எதில உங்களுக்கு ஈடுபாடு இருக்கு?
கிருஷ்ணா சேஷாத்ரி – அப்படியெல்லாம் பெரிசா ஒண்ணும் இல்லை சார். நான் அத்தனை சுவாரசியமான ஆசாமி எல்லாம் இல்லை சார்.
பிரதமர் – (சிரிக்கிறார்)…
கிருஷ்ணா சேஷாத்ரி – எனக்கு தொழில்நுட்பம்னா பிரியம் உண்டு, வரலாறு மேல ஆர்வம் உண்டு, தொழில்நுட்பமும் வரலாறும் ஒண்ணு சேரும் போது, அதிலேயே நாள் முழுக்க மூழ்கிக் கிடப்பேன் சார்.
பிரதமர் – நல்லது கிருஷ்ணா ஜி, உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துகள். நீங்க ரொம்ப நல்லதொரு தொடக்கத்தை ஏற்படுத்தியிருக்கீங்க, மேலும் உங்க வழிமுறையும் எப்படி இருக்குன்னா, மக்கள் அதில இணைவாங்க அப்படீங்கற முழு நம்பிக்கையும் எனக்கு இருக்கு. என் தரப்பிலேர்ந்து உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துகள்.
நண்பர்களே, கிருஷ்ணா அவர்களின் இந்த முயற்சி வரலாற்று மாணவர்களுக்கு மட்டுமல்ல, இது நம்மனைவருக்கும் கூட கடந்த காலத்தை சுவாரசியமான முறைகளில் அறிந்து கொள்ள உதவிகரமாக இருக்கும். உங்களிடம் கூட இப்படிப்பட்ட முயற்சிகள் பற்றிய தகவல் இருந்தால், அதைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளவும்.
போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்!
எனதருமை நாட்டுமக்களே, வளர்ச்சியடைந்த பாரதத்துக்காக போதைப் பழக்கமில்லா இளைஞர்கள், இந்த இயக்கம் நாடு முழுவதும் வேகமான வளர்ந்து வருகிறது. இதன் நோக்கம் தெளிவானது – போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள், Drug Free India. பலர், குறிப்பாக நமது இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் இந்த இயக்கத்தில் பங்கெடுத்து வருகிறார்கள். இது பாரத நாட்டு இளைஞர்களின் உடல்நலம், அவர்களுடைய சந்தோஷம், வளமான எதிர்காலத்துக்காக நமது சமூகரீதியிலான உறுதிப்பாடு.
நண்பர்களே, போதை தனது பிடியில் ஒரு தனிநபரை மட்டும் பீடிப்பதில்லை, இதன் பாதிப்புகளால் ஒட்டுமொத்த குடும்பமும், சமூகமும் அவதிக்கு உள்ளாக நேர்கிறது. போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவோர், போதையால் பீடிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வோர் ஆகியோரை நான் மனதாரப் பாராட்டுகிறேன். போதையில்லா பாரதம் படைக்க வலுவான கோஷம் எதையாவது உங்களால் உருவாக்க முடியுமா? நமது இளம் இசையமைப்பாளர்கள், போதையில்லா வாழ்க்கை தொடர்பான பாடல்களை உருவாக்கலாம். மாணவர்களும், நாடகக் குழுக்களும் மனதைத் தொடக்கூடிய வகையில் குறு நாடகங்களை எழுதி நடிக்கலாம், இதில் போதைப்பொருட்களால் ஏற்படக்கூடிய அபாயங்களோடு கூடவே அவற்றிலிருந்து வெளிவரக்கூடிய பாதையையும் வெளிப்படுத்தலாம். நம்முடைய நாட்டிலே வெகுசிறப்பான உள்ளடக்கத்தை உருவாக்குவோருக்குக் குறைவேதும் இல்லை. பல்வேறு மொழிகளில் இப்படிப்பட்ட உள்ளடக்கத்தை ஏற்படுத்தி, இதனால் சமூகத்துக்கு உதவும் வகையில் அவர்கள் செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களுடைய இந்த முயற்சிகளை ஹேஷ்டேகுடன், சமூக ஊடகத்திலே கண்டிப்பாகப் பகிருங்கள். படைப்பாற்றல் முயற்சியானது பல வேளைகளில், முறையான இயக்கத்தை விட அதிக பலனளிப்பதாக இருக்கின்றது. பாரத நாட்டு இளைஞர்களை போதையிலிருந்து விலக்கவும், போதையிலிருந்து விடுவிக்கவும், இந்த பவித்திரமான செயலில் நாமனைவரும் நம்முடைய பங்களிப்பை அளிப்போம். நீங்கள் உங்களுடைய முயற்சியை # நஷா முக்த் யுவா என்பதோடு கூட, சமூக ஊடகத்திலும் பகிருங்கள்.
8 கோடிக்கும் மேல் மூவர்ணக் கொடி சுயபடங்கள்!
என் மனம்நிறை நாட்டுமக்களே, ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து இடங்களிலும் தேசபக்தியின் பல வண்ணங்களை நாம் காண முடிந்தது. இந்தக் காலத்தில் ஒவ்வொருவரின் மனதிலும் தேசபக்தி உணர்வு மேலும் பலம்பெறுகிறது. தேசிய கைத்தறி நாள் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஆண்டு விழா தொடர்பாக தேசம் துண்டாடப்பட்டதன் நினைவு நாளாக இதைச் சிறப்பாக நினைவுகூர்கிறோம். சுதந்திரத் திருநாள் மற்றும் தேசிய விண்வெளி நாட்கள் என்று வந்தால், நாட்டுமக்கள் அனைவரும் பெருமிதம் கொள்கிறார்கள். வீடுகள்தோறும் மூவண்ணக்கொடி என்ற உணர்வுக்கு மேலும் வலுகூட்டப்படுகிறது. வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகள் ஆன வேளையில் இந்த ஆண்டு மேலும் சிறப்பானதாக ஆகிறது. இந்த முறை 8 கோடிக்கும் மேற்பட்ட மூவண்ணக்கொடி சுயபடங்கள் தரவேற்றம் செய்யப்பட்டன. மேலும் மூவண்ணத்தின் இந்தத் திருவிழா பாரதத்தில் மட்டும் நடக்கவில்லை. இந்த ஆண்டு சூர்யபத் திரங்காவின்படி நமது மூவண்ணக்கொடி உலகெங்கும் ஒரு வித்தியாசமான பயணத்தைத் தொடங்கியது. ஃபிஜியின் சுவாவிலே சூரியனின் முதல் கிரணங்களோடு மூவண்ணக்கொடி பறக்கவிடப்பட்டது. இதன் பிறகு ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் சான் ஃப்ரான்ஸிஸ்கோ வரையிலான இந்தியத் தூதரகங்களிலும், படைத்துறைக்களங்களிலும் மூவண்ணக்கொடி பறந்தது. கற்பனை செய்து பாருங்கள், இந்தக் காட்சி எத்தனை அற்புதமானதாக இருந்திருக்கும்!! உலகம் முழுவதிலும் சூரியன் முன்னேற முன்னேற, பாரதத்தின் மூவண்ணக்கொடியும் அடுத்தடுத்து பறந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட முயற்சிகள் சமூகத்தை ஓரிழையில் இணைக்கின்றன. இவற்றால் தேசத்தோடு கூடவே நமது பிடிமானம் மேலும் ஆழப்பட்டுப் போகிறது. இந்த முயற்சிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் என்னுடைய பலப்பல பாராட்டுக்கள்.
பெண்களுக்கு நம்பிக்கை தரும் நிதித் திட்டம்!
என் கனிவான நாட்டுமக்களே, நமது நகரங்கள்-டவுன்களில் இருக்கும் சாலைகளில் எல்லாம் தினமும் காலை முதல் மாலைவரை இலட்சக்கணக்கான பெண்கள் தங்கள் தங்களுடைய பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். சிலர் காய்கறி விற்கிறார்கள், சிலர் பழம் விற்கிறார்கள், சிலர் தேநீர், சிலர் மலர்கள்-விளக்குகள்-பூஜைப் பொருட்கள் விற்பனை செய்கின்றார்கள். பல வேளைகளில், முதலீடு செய்ய சிறிய அளவிலான பணத்தட்டுப்பாடு அவர்களின் தொழிலை முன்னேற விடாமல் முடக்கி விடுகிறது. ஆனால் இப்போது இப்படிப்பட்ட இலட்சக்கணக்கான தாய்மார்கள் சகோதரிகளுக்கு பிரதம மந்திரி ஸ்வநிதித் திட்டத்தால் பலம் கிடைத்து வருகிறது. பெண்களுக்கான அதிகாரப் பங்களிப்பின் இந்த முன்னெடுப்பின் மீது போதுமான அளவுக்கு விவாதங்கள் நடப்பதில்லை. பிரதம மந்திரி ஸ்வநிதித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 46 சதவீதம் பெண்கள் தாம். அதாவது நாடெங்கிலும் சுமார் 35 இலட்சம் பெண்கள் இந்தத் திட்டத்தோடு தங்களை இணைத்துக் கொண்டு தொழிலை முன்னேற்றி வருகின்றார்கள்.
நண்பர்களே, காஜியாபாதின் பபீதா ஷர்மா அவர்கள் இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. பபீதா அவர்கள், வழிபாட்டுப் பொருட்கள் கொண்ட ஒரு சிறிய கடை நடத்தி வந்தார். பழங்கள், விளக்குகள், அகர்பத்தி, தேங்காய் போன்ற பொருட்களை விற்பனை செய்து, இவர் தனது குடும்பத்துக்கான வாழ்வாதாரத்தில் பங்களிப்பு அளித்து வந்தார். நன்றாக உழைத்தாலும், தொழிலை மேம்படுத்தத் தேவையான மூலதனம் தேவையாக இருந்தது. பிஎம் ஸ்வநிதியால் இவருக்குப் பொருளாதார உதவி கிடைத்தது. இவர் தனது கடையில் பொருட்களை அதிகரித்தார், தொழிலை விரிவாக்கினார். வாடிக்கையாளர்கள் அதிகரித்தார்கள், வருவாய் அதிகரித்தது, வீதியோரத்திலே சின்ன கடையாக இருந்த அவருடைய கடை, மெல்லமெல்ல பெரிய கடையாக மாறியது.
நண்பர்களே, பெங்களூரூவின் டீ.எஸ். நின்கம்மா அவர்களின் எடுத்துக்காட்டும் கூட மிகவும் கருத்தூக்கமளிக்கவல்லது. நின்கம்மா அவர்களும் அவருடைய கணவரும் இணைந்து இட்லி, தோசை, சாம்பார் விற்பனை செய்யும் சிறிய வேலை ஒன்றைத் தொடங்கினார்கள். வேலை என்னமோ நடந்தாலும், அதை மேலும் முன்னேற்றத் தேவையான முதலீடு தேவையாக இருந்தது. நின்கம்மா அவர்களுக்கும் பிஎம் ஸ்வநிதியின் துணை கிடைத்தது. அவர் தனது வண்டியை மேம்படுத்தினார். பொருட்களை மொத்தமாக வாங்கத் தொடங்கினார், மெனுவிலும் புதியபுதிய பொருட்களை சேர்த்தார். வாடிக்கையாளர்கள் அதிகமானார்கள், வருமானம் அதிகமானது, குடும்பத்தின் நிதிநிலைமை மேலும் சிறப்பானது. இன்று இவர் தனது மூன்று குழந்தைகளுக்கும் சிறப்பான கல்வியளிப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
நண்பர்களே, பெண் ஒருவரின் தொழில் பெருகும் போது, அதோடு கூடவே ஒட்டுமொத்த குடும்பத்தின் எதிர்காலமும் முன்னேற்றம் காண்கிறது. குழந்தைகளின் கல்வி சிறப்பாகிறது, வீட்டின் தேவைகள் நிறைவடைகின்றன, பெண்களுக்குள்ளே தன்னம்பிக்கை மேலும் பலமடைகிறது. இது தானே பெண்களின் அதிகாரப் பங்களிப்பின் உயிர்ப்புடைய வடிவம்!! நான் தள்ளுவண்டிப் பணியோடு தொடர்புடைய அனைத்து சகோதரிகளுக்கும், அவர்களுடைய பிரகாசமான எதிர்காலத்துக்கும் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தூய்மை இயக்கம்; வீடு தொடங்கி நாடு வரை!
என் மனம் நிறை நாட்டுமக்களே, தூய்மைக்கென ஒரு தனி அழகு உண்டு. எந்தவொரு இடத்தையும் தூய்மையாக வைத்திருப்பது என்பது அங்கே இருப்போரின் உறுதிப்பாடாக ஆகும் போது, அந்த மாற்றம் தூய்மையோடு நின்று போவதில்லை. இதனால் அந்த இடத்தின் மொத்த அடையாளமும் மாறிப் போகிறது. தேசத்தின் பல பாகங்களில் தூய்மைக்கான இப்படிப்பட்ட முயற்சிகள், நமக்குத் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகின்றன. உத்தர பிரதேசத்தின் ராம்புரில் ஒரு கிராமம், பட்வாயி. அங்கே ஆகாஷ், ரோஹன் என்ற பெயருடைய இரண்டு நண்பர்கள், தங்களுக்கு அருகே இருக்கும் இடங்களில் குப்பை நிரம்பி இருப்பதைக் கண்டு, அதைத் தூய்மையாக்குவதில் இறங்கினார்கள். மெல்லமெல்ல மற்ற இளைஞர்களும் இவர்களோடு இணைந்து கொள்ள, ஒரு குழுவே உருவாகியது. இதன் பெயர் கிளீன் அப் பட்வாயி. இந்த இளைஞர்கள் இதுவரை நான்கு கங்கைப் படித்துறைகளைத் துப்புரவாக்கியிருக்கிறார்கள். ஒரு டன் அளவை விட அதிகமாக நெகிழிக் குப்பைகளை அகற்றியிருக்கிறார்கள். இவர்கள் நிறைய குளங்களையும், பொதுவிடங்களையும் தூய்மைப்படுத்தி இருக்கிறார்கள்.
நண்பர்களே, இந்த முறை ஸ்ரீ அமர்நாத் ஜியின் புனித யாத்திரையிலும் கூட, தூய்மை மற்றும் மக்கள் பங்களிப்பு என்ற உள்ளெழுச்சி அளிக்கவல்ல காட்சிகளைக் காண முடிந்தது. கடினமான பாதைகளிலே, ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் இரவுபகல் பாராது பணியாற்றினார்கள். இந்த ஆண்டு யாத்திரையின் போது, 400 மெட்ரிக் டன்களுக்கும் மேற்பட்ட குப்பைக்கூளங்கள் சேகரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டன. இந்த முயற்சியில் குறிப்பாக இந்த விஷயம் எனக்குப் பிடித்திருந்தது. தூய்மையின் இந்த இயக்கத்திலே பக்தர்களும் கலந்து கொண்டார்கள். 16,000த்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள், தூய்மையைக் கடைப்பிடிப்பதாக உறுதி மேற்கொண்டார்கள். 10,000த்துக்கும் மேற்பட்ட யாத்ரீகர்களுக்கு பொறுப்பான யாத்ரீகர் என்ற சான்றிதழும் அளிக்கப்பட்டது. இங்கே ஒரு மிகவும் வித்தியாசமான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. யாத்திரையில் குதிரைகள் மற்றும் கோவேறு கழுதைகளின் சாணத்தைக் கொண்டு, சாணவாயு உற்பத்தி செய்யப்பட்டு, அந்தத் தூய்மையான எரிசக்தியால், தூய்மையான விளக்கொளி பிரகாசித்தது. அதாவது பாபா பர்ஃபானியின் இந்த பவித்திரமான யாத்திரையிலே, சேவை மற்றும் நம்பிக்கையின் ஒரு வடிவமாக தூய்மையும் ஆகியது.
நண்பர்களே, நமது கிராமமாகட்டும், நகரமாகட்டும், நமது நதிகளாகட்டும், நமது புனிதத் தலங்களாகட்டும். இவற்றின் அடையாளம் நமது நடத்தையாலும் ஏற்படுகிறது. மேலும் தூய்மை என்பது இந்த நடத்தையில் இடம் பெறும் போது, அந்த இடத்தின் அழகு மேலும் மெருகேறுகிறது.
விரிவடைந்த மலர் சாகுபடிச் சந்தை!
எனதருமை நாட்டுமக்களே, சில வேளைகளில் நமது சிறியதொரு ஆசையும் கூட வாழ்க்கையில் ஒரு பெரிய சாத்தியக்கூறுக்கான பாதையைத் திறந்து விடுகிறது. நாகாலாந்தின் ஃபேக் மாவட்டத்தின் வேசாலு புரோ அவர்களின் யாத்திரையும் கூட இப்படிப்பட்டது தான். வேசாலு அவர்கள் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். சிறுவயது தொடங்கியே இவர் தனது பெற்றோர் வயல்வேலைகளில் ஈடுபடுவதைக் கவனித்து வளர்ந்தார், இவருக்கே கூட மலர்களின் மீது கொள்ளை நாட்டம் உண்டு. 2021ஆம் ஆண்டிலே இவர் இந்த ஆர்வத்தோடு சிறிய அளவிலே மலர் சாகுபடி செய்வதைத் தொடக்கினார். மெல்லமெல்ல இவர் இதிலே சாத்தியக்கூறு இருப்பதை அடையாளம் கண்டுகொண்டார். திருமணங்கள், பிற பண்டிகைகள் ஆகியவற்றின் போது மலர்களின் தேவை எப்போதுமே அதிகம் இருப்பதைத் தெரிந்து கொண்டார். வேசாலு அவர்கள் தனது இந்த ஆர்வத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லத் தீர்மானித்தார். இந்தப் பயணத்தில் இவருக்கு உள்ளூர் வேளாண் அறிவியல் மையங்களிடமிருந்து அறிவியல் முறைப்படி மலர் சாகுபடி செய்ய பயிற்சி கிடைத்தது. பிறகு இவர் கால் ஏக்கர் நிலத்தில் க்லாடியோலஸ் மலரின் ஆயிரக்கணக்கான செடிகளை நடவு செய்தார். முதல் முயற்சியிலேயே 5000த்துக்கும் அதிகமான மலர்களை சாகுபடி செய்தார். நண்பர்களே, இந்த வெற்றி வேசாலு அவர்களுக்கு ஒரு புதிய தொடக்கமாக ஆனது. இவர் மலர் சாகுபடியை மேலும் முன்னெடுத்தார். எந்த மலர் உள்ளூர் சந்தைகளில் மட்டுமே இருந்து வந்ததோ, இன்று இது நாகாலாந்திலிருந்து வெளியேறி தில்லி-மும்பை போன்ற நகரங்களையும் சென்றடைகின்றது. வேசாலு புரோ அவர்களின் இந்தப் பயணம் நமக்கு என்ன தெரிவிக்கிறது என்றால், ஆர்வம் என்பது உழைப்பாகி, சரியான வழிகாட்டுதல் இதோடு இணையும் போது, புதிய சாத்தியக்கூறுகளுக்கான பாதை துலக்கப்படுகிறது என்பதைத் தான்.
வனப் பாதுகாப்பில் சூழல் சுற்றுலா!
என் உளம்நிறை நாட்டுமக்களே, நமக்கருகே இப்படிப்பட்ட பலர் இருக்கிறார்கள், இவர்கள் சிறிய முயற்சி ஒன்றைத் தொடங்குகிறார்கள். ஆனால் பார்த்துக் கொண்டே இருக்கையிலே அவர்களின் இந்த ஒரு முயற்சி பலரின் வாழ்க்கையையே மாற்றிவிடக்கூடிய பாதையை அமைத்துக் கொடுக்கிறது. ஒடிஷாவின் தேபரீகட்டின் ஒரு கிராமம், தோட்ரோகுசும். சில ஆண்டுகள் முன்பு வரை இந்த கிராமத்தின் மைதிலி புஏ அவர்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் காட்டுக்குச் செல்வார். சில போது விறகு கொண்டு வர, சில வேளை மஹுவா மற்றும் கேந்து இலை பறிக்க, சில சமயம் மூங்கில் குருத்துக்களையோ வேறு வனப் பொருட்களையோ கொண்டு வர. இவருடைய மற்றும் இங்கிருக்கும் பல குடும்பங்களின் பல தேவைகளை இந்தக் காடு நிறைவேற்றித் தந்தது என்றாலும், மைதிலி அவர்கள் தேபரீகட் சூழல் சுற்றுலாவோடு இணைந்தார். இங்கிருந்து தான் காட்டுடனான இவருடைய உறவு ஒரு புதிய திசைக்குத் திரும்பியது. நண்பர்களே, மைதிலி அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த மாற்றம் மற்ற பெண்களுக்கு உள்ளெழுச்சியை அளித்தது. இன்று 60க்கும் மேற்பட்ட பெண்கள் காடுகளைப் பாதுகாப்பதில் இணைந்திருக்கிறார்கள். அனைத்து வன உயிரினங்களின் பாதுகாப்பின் பொறுப்பையும் இவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். சிலர் புல் மைதானத்தின் மேம்பாட்டுடன் இணைந்திருக்கிறார்கள், சிலர் சூழல் சுற்றுலா நடவடிக்கைகளில் பங்களிப்பு அளிக்கிறார்கள். நண்பர்களே, மைதிலி அவர்களும், தேபரீகட்டின் இந்த சகோதரிகளும் என்ன காட்டியிருக்கிறார்கள் என்றால், இயற்கையையும் பாதுகாக்கலாம், வாழ்க்கையும் வளமாகும் என்பதைத் தான். இந்த சகோதரிகள் அனைவரின் முயற்சிகளும் நம்மனைவருக்கும் மிகவும் உத்வேகம் அளிக்கின்றன.
இளைஞர்களின் கனவுத் திட்டம் ‘மிஷன் சக்திசேட்’
நண்பர்களே, இன்று நமது பெண்களின் கனவுகளுக்கு சிறகுகள் முளைத்து, தரையிலிருந்து வானம் வரை எட்டுகின்றன; இப்படிப்பட்ட கனவுகளைக் காணும் உலகின் ஆயிரக்கணக்கான பெண்களை பாரதம் ஒருங்கிணைத்து வருகிறது என்பது உங்களைப் பெருமைப்பட வைக்கலாம். இந்த முயற்சியின் பெயர் தான் மிஷன் ஷக்திசேட். இதன் வாயிலாக 108 நாடுகளின் 12,000 மாணவர்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைக் கற்கவும், புதுமைகள் படைக்கும் துறையில் முன்னேறவும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியன்று தேசிய விண்வெளி தினத்தன்று இந்த மிஷனுடைய ஒரு அழகான காட்சியை உத்தர பிரதேசத்தின் க்ரேடர் நொய்டாவில் காண முடிந்தது. கௌதம் புத்த பல்கலைக்கழகத்திலே மிஷன் ஷக்திசேட்டின் இரண்டாவது கட்டம் தொடங்கப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்திலே உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த சுமார் 100 மாணவர்கள் ஒன்று திரண்டார்கள். பாரதத்தின் தொலைவான பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களும் இதிலே கலந்து கொண்டார்கள். இந்த மொத்த முயற்சியின் நோக்கமும் மிகவும் சிறப்பானது. முழுமையான வகையிலே மாணவர்களின் பங்கெடுப்போடு தயாரான செயற்கைக்கோளை நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குக் கொண்டு சேர்க்க தயாரிப்புகள் நடந்தன. நண்பர்களே, இவர்களிலே பல மாணவர்கள் வரும் காலத்திலே அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் படைக்கும் துறையில் தங்களுடைய புதிய அடையாளத்தைப் பதிப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
ஆந்திராவில் அவோகேடா பழம்! அசத்தும் மனிதர்!
என் பாசமிகு நாட்டுமக்களே, இப்போதெல்லாம் அவோகேடோ பழம் அனைவர் கருத்திலும் இடம் பிடித்திருக்கிறது. முன்பெல்லாம் இது பற்றித் தெரிந்தவர்கள் அரிதாகவே இருந்திருப்பார்கள். இதன் மதிப்பும், தேவையும் குறைவாகவே இருந்தாலும், இன்று இதை உணவு மேஜையில் காண முடிகிறது. இன்று இது உடல்நலம் மற்றும் உயர் மதிப்புச் சந்தைகளின் விருப்பப்பொருளாக ஆகி விட்டது. நமது விவசாய சகோதர சகோதரிகளுக்கு இது பெரும் உதவிகரமாக இருக்கிறது. ஆந்திர பிரதேசத்தின் கடப்பாவில் வரதராஜன் அவர்களின் எடுத்துக்காட்டு. இவர் பல ஆண்டுகளாக தனது வயலிலே தக்காளியும், வாழையும் சாகுபடி செய்து வந்தார். ஒரு நாள் இவர் தனது நண்பர்களின் வயலிலே அவகேடோ சாகுபடி செய்யப்படுவதை கவனித்தார். இதன் பிறகு இவர் யூ ட்யூபில் இதுபற்றிய தகவல்களை சேகரித்தார். இதுவரை இவர் சுமார் 4 டன் அவகேடோவை சாகுபடி செய்திருக்கிறார். இன்று இவர் நேரடியாக உள்ளூர் கடைகளுக்கு இதை அனுப்பித் தருகிறார். புதிய மகசூல், அறிவியல் ஆலோசனை மற்றும் நேரடி சந்தைப்படுத்தல் காரணமாக சிறிய பண்ணைகளின் வருவாயும் முழுமையாக மாறிவிட்டது. தமிழ்நாட்டின் கோடைக்கானலைச் சேர்ந்த விவசாயியான சந்திரசேகரன் அவர்கள், அரை ஹெக்டேர் நிலப்பரப்பில் அவோகேடோ சாகுபடி செய்யத் தொடங்கினார். இவருக்கு இதற்கான நல்ல விலை கிடைத்து வருகிறது, அதிக வருவாய் ஈட்டி வருகிறார். கர்நாடகாவின் சிக்மகளூரிலே சில விவசாய சகோதர சகோதரிகள், காப்பிப் பயிர்களுக்கு இடையே அவோகேடோவை நடவு செய்திருக்கிறார்கள். இதனால் இவர்களுக்கு காப்பி – கருமிளகோடு சேர்த்து கூடுதல் வருவாயும் கிடைக்கிறது. நண்பர்களே, நாம் நகரங்களிலே ரெஸ்டாரண்டுகளில் பல வேளைகளில் அவகேடோ டோஸ்ட் என்பது பற்றி கேள்விப்படுகிறோம் ஆனால், இந்த அவகேடோ வாயிலாக நமது நூதனம் படைக்கும் விவசாயிகள், வருமானத்திற்கான புதிய செய்முறையையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதாவது நமது நாட்டின் அவகேடோவால் உங்களுடைய டோஸ்டின் சுவையை அதிகப்படுத்துகிறார்கள், விவசாயிகளின் வருவாயும் அதிகரிக்கிறது.
மகாநாயகன் உத்தம் குமார்
என் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே, இன்னும் சில நாட்களில் செப்டம்பர் மாதம் 3ஆம் தேதியன்று நாம் மகாநாயகன் உத்தம் குமார் அவர்களின் பிறந்த நூற்றாண்டைக் கொண்டாட இருக்கிறோம். நண்பர்களே, உத்தம் குமார் அவர்கள் ஒரு இயல்பான நடிகர், தனது நடிப்புத் திறமையால் மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர். திரைப்பட நேசர்களின் கருத்து என்னவென்றால், சத்யஜித் ரே அவர்களின் படமான நாயகன் – the heroவின் மொத்தக் கதையுமே மகாநாயகன் உத்தம் குமார் அவ்ர்களைக் கருத்தில் கொண்டு தான் எழுதப்பட்டதாம். உத்தம் குமார் அவர்களிடத்தில் கண்ணியத்தோடு சேர்த்து அற்புதமான உணர்வுபூர்வமான ஆழம் இருந்ததாக சத்யஜித் ரே அவர்கள் கூறியிருக்கிறார். பாத்திரத்திற்கு உயிரூட்ட அவர் கடுமையாக உழைப்பார். உத்தம் குமார் அவர்கள் தன்னுடைய இயல்பான போக்கோடு கூடவே வள்ளல் குணத்துக்கும் சொந்தக்காரராக இருந்தார். எப்போதும் தோல்வியை ஏற்காமல் தொடர்ந்து போராடி வெல்லும் பாடம் அவருடைய வாழ்க்கையிலிருந்து நமக்குக் கிடைக்கிறது. அவருடைய தொடக்ககாலப் படங்கள் பல சரிவர ஓடவில்லை என்றாலும் அவர் தனது வேலையில் கவனமாக இருந்தார். இதன் விளைவாகவே அவரால் அத்தனை உயரத்தை எட்ட முடிந்தது. நண்பர்களே, நான் கோல்காத்தாவில் ரோட் ஷோ செய்த போது, உத்தம் குமார் அவர்களின் வீட்டுக்கு முன்பாகக் கடந்து செல்ல வேண்டியிருந்தது எனக்கு நன்கு நினைவிருக்கிறது. அங்கே ஒரு நபர் அவருடைய உருவப்படம் ஒன்றை எனக்குப் பரிசாக அளித்தார். நான் மீண்டுமொருமுறை மகாநாயகன் உத்தம் குமார் அவர்களுக்கு என் நினைவாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன். அவர் எப்போதுமே அனைவரின் இதயங்களிலும் கோலோச்சிக் கொண்டிருப்பார்.
மகாநாயக் உத்தம் குமார் சீரோதின் மானுஷேர் ஹ்ருதயே ராஜ் கோர்பேன்.
வரிசை கட்டும் விழாக்கள்! வளப்படுத்தும் வாழ்க்கை!
எனதருமை நாட்டுமக்களே, நமது திருநாட்கள், பண்டிகைகள், நமது பாரம்பரியங்கள் இவற்றோடு கூடவே நாம் ஒருவரோடு ஒருவர் இணையும் சந்தர்ப்பங்களையும் அளிக்கின்றன. வரவிருக்கின்ற நாட்களில் நாம் மேலும் நம்முடைய பல மகத்துவம்வாய்ந்த புனித நாட்களைக் கொண்டாட இருக்கிறோம். செப்டம்பர் மாதம் 4ஆம் தேதியன்று ஜன்மாஷ்டமி புனித நன்னாள். செப்டம்பர் மாதத்திலேயே நாம் விஸ்வகர்மா பூஜையைக் கொண்டாட இருக்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்திலே நாம் நமக்கருகே இருக்கும் கைவினைஞர்கள், சிற்பிகள் மற்றும் விஸ்வகர்மா நண்பர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும். சில மாதங்கள் கழித்து தீபாவளியும் வரவிருக்கிறது, இதற்கான தயாரிப்புகளும் மெல்லமெல்ல தொடங்கிவிட்டன. பண்டிகைகளின் இந்தப் பருவத்தில், மீண்டுமொரு முறை உங்களிடம் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் தொடர்பான வேண்டுகோளை விடுக்கிறேன். இதன் பொருள் என்னவென்றால் மண் அகல் விளக்கு வாங்குவது மட்டும் போதாது, இதன் பின்னால் இருக்கும் கண்ணோட்டம் மிகவும் பெரியது. நாம் நமது வீடுகளுக்கான பொருட்களை வாங்கும் போது, அவை பாரதத்தில் தயாரிக்கப்பட்டவை தானா என்பதை ஒருமுறை பாருங்கள். பாரதம் தற்சார்புடையதாக ஆகும் பாதை, பாரதத்தில் உருவாகும் பொருட்களின் மீது பெருமையடையும் போது தான் துலங்கும். இந்தச் செய்தியை அதிக அளவிலான நபர்கள் வரை கொண்டு சேர்ப்பது நமது கடமையாகும். நமது படைப்பாள நண்பர்களே, தாக்கம் ஏற்படுத்தும் influencerகளே, பிரபலங்களே, உங்களுடைய பங்களிப்பும் மகத்தானது. உங்களனைவரிடமும் நான் விடுக்கும் வேண்டுகோள், நீங்களும் உள்ளூர் பொருட்களையே வாங்குங்கள், மற்றவர்களும் உள்ளூர் பொருட்களை வாங்க உத்வேகப்படுத்துங்கள்.
நண்பர்களே, உங்கள் அருகே, தங்களுடைய சின்னச்சின்ன முயற்சிகளால் சமூகத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திவரும் பலர் இருக்கலாம். நீங்கள் அவர்களைப் பற்றி மனதின் குரலில் கண்டிப்பாக எழுதுங்கள். உங்களுடைய அனுபவங்கள், தேசத்தின் ஏதோவொரு மூலையிலே, யாரோ ஒருவருக்கு, புதிய உத்வேகமாக ஆகலாம், இல்லையா? உங்களுடைய ஆலோசனைகள்-அனுபவங்களுக்காக நான் காத்திருக்கிறேன். பலப்பல நன்றிகள். வணக்கம்.

