madurai meenakshi amman temple kumbabishekam - 2026

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்! 

ஆன்மிகச் செய்திகள் Featured சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
madurai meenakshi amman temple kumbabishekam - 2026

மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. வேதங்கள் முழங்க மீனாட்சி அம்மன் சன்னதிக்கு மேல் உள்ள கோபுரங்களின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த குடமுழுக்கு நிகழ்ச்சியை கண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழா மகா கும்பாபிஷேக வைபவம், சிறப்புப் பூஜைகளை முடித்து, புனித நீர் கலசங்களுக்கு ஊற்றப்பட்டது. 7 புண்ணிய நதிகள் மற்றும் கங்கையில் இருந்து எடுத்துவரப்பட்டு யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீா் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் செப்.17 வியாழக் கிழமை இன்று காலை  மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவைக் காண மதுரையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இந்தக் கும்பாபிஷேக நிகழ்வைக் காண வரும் பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு ரயில்களும் பல்வேறு ஊர்களில் இருந்து இயக்கப்பட்டன.  

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பின் இன்று நடைபெற்றது. காலை 7:40க்கு அம்மன், சுவாமி தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கும், காலை 7:55க்கு அம்மன் சன்னிதிக்கும், காலை, 8:10க்கு சுவாமி சன்னிதிக்கும் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

காசியில் இருந்து 1,008 லிட்டர் கங்கை புனித நீரும், 7 புண்ணிய நதிகளில் இருந்து 1,008 லிட்டர் புனித நீரும் கொண்டு வரப்பட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. 12 கோபுரங்களிலுள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. 

லட்சக்கணக்கான மக்கள் இந்தக் கும்பாபிஷேக நிகழ்வுகளை தரிசிக்க மதுரையில் குவிந்தனர். கும்பாபிஷேகத்தைக் காண கோவில் மேல் தளத்தில் 9 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  காலை, 10 மணிக்கு மேல் பொது தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். 

கும்பாபிஷேகத்தை ஒட்டி போக்குவரத்து நெருக்கடியைக் க்ணக்கில் கொண்டு, இன்று இரவு, 10 மணி வரை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் 6,500 போலீசார் கும்பாபிஷேக விழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.  

லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளதால், போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸார் முழு வீட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு வரை கோவிலைச் சுற்றியுள்ள சித்திரை, ஆவணி, மாசி வீதிகளில் வாகனங்கள் செல்வதற்கும், நிறுத்துவதற்கும் அனுமதி இல்லை. மதுரை நகருக்குள் சரக்கு, கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

முன்னதாக, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பூ கட்டும் பணிகளை மேற்கொண்டனர். திருவண்ணாமலையிலிருந்து வந்த கோவில் பணியாளர்கள் சதீஷ் சந்திரசேகர் ,ரமேஷ் ஆகிய ஊழியர்களின் மேற்பார்வையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 5 அரை டன் பூக்களை கட்டும் பணியில் ஈடுபட்டனர். மேலும், கட்டப்பட்ட மாலைகள் 5 கோபுரங்களிலும் மாலைகளாக தொங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

வெள்ளை நிற சாமாந்தி பூக்கள் மாலைகளாக கட்டப்பட்டது. மேலும் மஞ்சள் நிற சாமந்தி பூக்கள் தேன் சாமந்தி பூக்கள் , சிவப்பு நிற விருட்சி பூக்கள், ஐஸ்வர்ய பூக்கள் என 7 வகை பூக்கள் 5.5 டன் அளவில் மாலைகளாகக் கட்டப்பட்டன. சாமந்தி பூக்கள் உள்ளிட்ட அனைத்து வகை பூக்களும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே ஓசூர் வேளாண்மைக் கல்லூரி பெங்களுரு பகுதிகளில் பயிரிடப்பட்டு பின்னர் திருப்பணிகளுக்காகக் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை , சென்னை , திண்டுக்கல் , திருச்சி உள்ளிட்ட பகுதியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வந்து கடந்த மூன்று தினங்களாக மலர்கள் அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.