100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Published:

80th independence day speech by modiji - 2026

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 15.08.2026 அன்று, தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்.
தமிழாக்கம் : ஆர். சுதர்ஸன்

முந்தைய செய்திக் கட்டுரையின் தொடர்ச்சி… (5)

எனதருமை இளைஞர்களே, தேசத்தின் முன்பாக தேசத்தின் இளைஞர்களின் முன்பாக, போதைப்பொருள் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்திருக்கிறது.  போதைப்பொருள் இல்லா பாரதம், இது நம்மனைவரின் சமூகப் பொறுப்பாக வேண்டும்.  நமது பிரகாசமான எதிர்காலத்திற்காக, நமது இளைய சமூகம் பலமாக வேண்டும், நமது இளைஞர்களின் வல்லமை, நமது தேசத்திற்கு உதவ வேண்டும்.  ஆகையால் போதையில்லா பாரதம், கடந்த நாட்களிலே, மைபாரத் தன்னார்வலர்கள், நாட்டின் என் ஜி ஓக்கள், தேசத்தின் சமூக கலாச்சார அமைப்புகள், தேசத்தின் ஆன்மீகப் பெரியோர் இணைந்து, போதையில்லா பாரதத்துக்கான 100 வாரக்கால நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.  100 வாரங்களுக்கு இந்த இயக்கம் நடைபெறும்.  நான் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறேன், நீங்களும் கூட, இந்த இயக்கத்தில் பங்கு பெறுங்கள்.  நீங்கள் இதோடு இணையுங்கள்.  மேலும், தேசத்தின், போதையில்லா பாரதம் என்ற கனவை நிறைவேற்ற, நீங்கள் முன்னே வாருங்கள்!! 

எனதருமை நாட்டுமக்களே, 21ஆம் நூற்றாண்டிலே, பல பத்தாண்டுகள் பழமையான சவால்கள், இவற்றுக்கு முடிவுகட்டுவது முக்கியமானது.  நக்சல்வாதம் மாவோவாதம், இலட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை அழித்து விட்டது.   பல தாய்மார்களுடைய, பிரகாசமான இளைஞர்களைக் குலைத்து விட்டது, நாசமாக்கி விட்டது.  தாய்தந்தையரின் கனவுகளைப் பொடிப்பொடியாக்கி விட்டது.  இந்த நக்சல் பயங்கரவாதம். 40 ஆண்டுகளாக, இந்தியாவின் கணிசமான பகுதியிலே கணிசமான மக்களை, மிதித்து வந்தது.  துப்பாக்கி முனையில் அமுக்கி வைத்திருந்தது.  அரசியல் சட்டத்தை கேலிப்பொருளாக்கி இருந்தது.  மேலும் நாட்டின் சாமான்யர்களின் பாதுகாப்பிலே, 3500த்திற்கும் மேற்பட்ட, நமது காவல்துறையினர், பாதுகாப்புப் படைகளின் வீரர்கள், உயிர்த்தியாகம் செய்ய நேர்ந்தது. 

போரிலே இறக்கும் வீரர்களைவிட, அதிகமாகவே, நமது காவல்துறை வீரர்கள், உயிரைப் பணயம் வைக்க நேர்ந்தது.  அப்போது தான் நாட்டின் சாமான்யர்கள் நிம்மதியாக இருக்க முடிந்தது.  இந்த நக்சல் பயங்கரவாதம், பூமியிலே ரத்த வெள்ளத்தைப் பெருக்கியது.  2014இலே, நீங்கள் எங்களுக்கு வாய்ப்பளித்த போது, அன்றே நாங்கள் உறுதி பூண்டோம்.  நாங்கள் தேசத்தை நக்சல் பயங்கரவாதத்த்லிருந்து விடுதலை அளிப்போமென்று.   இன்று எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.  அதாவது இந்த நக்சலி-மாவோவாத வன்முறை, இறுதி மூச்சை விடக்கூட, அதனிடம் சக்தி இல்லை.  முழுமையாக அதற்கு முடிவுகட்ட இருக்கிறோம்.  எங்கே ஒருகாலத்தில், நக்சல்வாதிகளின் தோட்டாக்கள் பறந்தனவோ, எங்கே ஒரு காலத்தில், நிலம் சிவப்பாக இருந்ததோ, இன்று, அதே நக்சல் பகுதியிலே, அதே பகுதிகளிலே, நக்சல்வாதிகள் இல்லாத காரணத்தால், வளர்ச்சி, நம்பிக்கை, மற்றும் முயற்சியின் மூவண்ணம் பட்டொளிவீசிப் பறக்கிறது. 

எனதருமை நாட்டுமக்களே, ஆனால் இந்தச் சவாலை நாம், குறைவாக மதிப்பிட்டு விடக்கூடாது.  இந்தச் சவாலிடம் நாம் மேலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  பல ஆண்டுகளாக, தேசத்தின் அதிகாரத்தில், மாவோவாதி சிந்தனையாளர்கள், அமர்ந்து அட்டகாசம் செய்து கொண்டிருந்தார்கள்.  அரசுக் குழுக்களில் ஆலோசகர்களாகவும் கூட, இந்த மாவோவாதி சிந்தனையாளர்கள், கொள்கைகளை பாதித்தார்கள். 

எனதருமை நாட்டுமக்களே, காடுகளிலே, வனங்களிலே நாம், ஆயுதமேந்திய நக்சலைட்டுகளை ஒழித்துக்கட்டுவதில், அந்த சங்கடத்திலிருந்து தேசத்தை விடுவிப்பத்ல் வெற்றி கிடைத்தது.  ஆனால், ஆயுதமேந்திய நக்சல்கள் என்னவோ சென்றாலும், நக்சல் சிந்தனையாளர்கள், இந்த நக்சல் சிந்தனையாளர்கள், வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.  வன்முறை அராஜம் என்ற பாதையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.  சமுதாயத்தை, தவறான பாதையிலே, பிடித்துத் தள்ள வகைவகையான சூழ்ச்சிகளைப் புனைகிறார்கள்.  இந்த நக்சல் சிந்தனையாளர்களை அடையாளம் காண வேண்டும்.  இந்த நக்அல் சிந்தனையாளர்களை தனிமைப்படுத்த வேண்டும்.  மேலும் தேசத்தை, வளர்ந்த பாரதமாக ஆக்கும் திசையிலே, நாட்டின் இளைஞர்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

என்கனிவுநிறை நாட்டுமக்களே, பாதுகாப்பான பாரதத்தை ஏற்படுத்துவது, நம்மனைவரின் பொறுப்பாகும்.  சவால் எல்லைக்கு உள்ளே இருந்தாலும், அல்லது எல்லைக்கு அப்பால், பாரதம் அனைத்துச் சூழ்நிலைகளுக்கும், தயாராக இருக்கிறது.  இன்று போரின் போக்கே மாறி வருகிறது.  போர் எல்லைப்பகுதியில் நடக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.  இன்று போர், நாட்டுக்கு உள்ளே, எண்ணை சுத்தகரிப்பு இலக்காகலாம், வங்கித்துறை இலக்காகலாம், தரவு மையங்கள் இலக்காகலாம், ஒருவகையிலே புதியவகையான போரில், கட்டமைப்பு தகர்க்கப்படும் ஆலைகள் தகர்க்கப்படும்.  நாங்கள் மிஷன் சுதர்ஷன் சக்கரம் குறித்து கடந்த ஆண்டு அறிவித்தோம்.  விரைவுகதியில் இது தொடர்பாக பணிகள் நடக்கின்றன.  இன்று பாதுகாப்புத் துறையில் ஏற்றுமதி 50 சதவீதம் அதிகரித்திருக்கிறது.  சுமார் 100 நாடுகளில் நமது ஆயுதங்கள் சென்றடைகின்றன.  உலக அரங்கிலே பாரதத்தின் புகழ் மெல்லமெல்ல, அதிகரித்து வருகிறது. 

மாறிவரும் காலத்திலே, நாம் ஆயுதங்கள் மீதும் செயலாற்ற வேண்டும்.  பாதுகாப்புப் படைகளின் வல்லமயை அதிகரிக்க வேண்டும்.  ஆனால் இதோடு கூடவே, குடிமக்களையும் தயார்ப்படுத்த வேண்டும்.  கடந்த நூற்றாண்டின் போர்களை ஒட்டி, சிவில் பாதுகாப்பு முறைகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன.  அவை காலாவதியாகி விட்டன.  ஆகையால் இன்று செங்கோட்டையிலிருந்து அறிவிக்கிறேன்.  அதாவது நாங்கள், வரவிருக்கின்ற நாட்களிலே, சிவில் பாதுகாப்பு தொடர்பான உயிர்ப்புடைய வலைப்பின்னலை அமைப்போம்.  நவீனமான, அமைப்புகளை அவர்களுக்கு அறிமுகம் செய்வோம்.  நவீன சங்கடங்கள் தொடர்பாக குடிமக்களை, பாதுகாக்கும் வழிமுறைகள் தொடர்பான, மிகப்பெரிய தன்னார்வலர் படை, சிவில் பாதுகாப்பிற்கு, நவீனமான, சவால்களை எதிர்கொள்ளும் வகையிலே படைக்க இருக்கிறோம். 

எனதருமை நாட்டுமக்களே, தேச நிர்மாணத்திலே இன்று, நமது சகோதரிகள் பெண்களுடைய பங்கு, நம்மனைவருக்கும் மிகப்பெரிய, கருத்துக்கமாக அமைந்திருக்கிறது.  போர்விமானமாகட்டும், பயணிகள் விமானமாகட்டும், நமது பெண்கள், முன்னனி வகிக்கிறார்கள்.  விளையாட்டு மைதானமாகட்டும், நமது பெண்கள் முன்னணியில் மின்னுகிறார்கள்.  ஸ்டெம் கல்வியிலே இடம்பெறும் செயல்முறையாகட்டும், அதிக அளவில் நமது பெண்கள் இடம் பிடிக்கிறார்கள்.  இன்று, படையிலும் கூட, எண்டியேவிலிருந்து, வெளிப்படும் பெண்கள், மிகுந்த பெருமிதத்தோடு, நாட்டின் படைக்குத் தலைமையேற்கும் வல்லமையை வெளிப்படுத்துகிறார்கள். 

பெண்களின் வல்லமை என்ன தெரியுமா?  கடந்த நாட்களில் சாணந்திலே, ஒரு குறைகடத்தி ஆலைக்குச் சென்றேன்.  அங்கே நாட்டின் பல்வேறு இடங்க்ளிலிருந்து வந்த பழங்குடிப் பெண்கள் வேலை பார்த்து வந்தார்கள்.  பாஸ்போர்ட் என்றால் என்ன என்று கூடத் தெரியாத இடங்களிலிருந்து வந்திருந்தார்கள்.  அந்தப் பெண்கள் அயல்நாடுகளுக்குச் சென்று பயின்று வந்தார்கள்.  இன்றோ சிப் உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  நான் அவர்களுடய தன்னம்பிக்கையைப் பார்த்தேன்.  உண்மையிலேயே, நான் கவரப்பட்டேன்.  இன்று மூன்று கோடி, மூன்று…. மூன்றுகோடி, மூன்று… மூன்று கோடி பெண்களுக்கு, இலட்சாதிபதி தீதி ஆகும் இலக்கை நிர்ணயித்தோம்.  அதைக் கடந்து விட்டார்கள்.  இப்போது, நாம் 6 கோடி, இலட்சாதிபதி தீதி என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருகிறோம்.  3 கோடி புதிய இலட்சாதிபதி தீதிக்கள் என்றால், ஊரகப் பொருளாதாரத்தில் பெரிய மாற்றம், தாய்மை சக்தியால் வரவிருக்கின்றது. 

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

என் இதயம்நிறை நாட்டுமக்களே, இன்று பஞ்சாயத்தாகட்டும் நகராட்சியாகட்டும் மாநகராட்சியாகட்டும், அதிக அளவிலே, நமது பெண்கள் மக்கள் பிரதிநிதிகளாக, தேசத்திற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைக் கண்டு வருகிறர்கள்.  திறமையான தலைமையை வழங்கி வருகிறார்கள்.  இதை கவனத்திலே கொண்டு, நாங்கள் நாடாளுமன்றத்திலே பெண்சக்திக்கு கௌரவம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்றினோம்.  ஆனால், ஏதோ காரணத்தினாலே, அரசியல் போர்க்களத்திலே, கடந்த 40 ஆண்டுகளாகவே, இந்தக் கனவு, எப்போதுமே, அரசியல் போரில் களபலியாகி வந்தது.  நான் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளிடமும், இன்று செங்கோட்டையிலிருந்து தேசியக் கொடியின் நிழலிலே நின்று கொண்டு உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.  வேண்டிக் கொள்கிறேன். 

வாருங்கள்.  பெண்களின் வல்லமையைப் போற்றுவோராக ஆகுங்கள்.  பெண்களின் கௌரவத்தைக் காப்போராக வாருங்கள்.  மிகவும் விரைவாக, நமது தாய்மார்கள் சகோதரிகளுக்கு, 33 சதவீதம், சட்டப் பேரவைகள் மக்களவையிலே, பிரதிநிதித்துவம் கிடைக்கவும், பாரதத்தின் கொள்கை வடிவமைப்பில் பங்களிக்க அளிக்கவும், காலத்தின் தேவையாகிறது.  அனைத்து அரசியல் கட்சிகளிடத்திலும், மீண்டும் வேண்ட்க் கொள்கிறேன்.  வாருங்கள், பெண்கள் இட ஒதுக்கீடு பெண்கள் கௌரவத்திலே, நீங்களும் இணையுங்கள், உங்களுக்கும் பெருமையுண்டு, ஆனால் எனது தாய்மார்கள் பெண்களுக்கு அவர்களின் உரிமையைத் தாருங்கள். 

எனதருமை நாட்டுமக்களே, வளர்ச்சியடைந்த பாரதக் கனவு எப்போது நிறைவாகும் என்றால், வளர்ச்சி கடைசி மனிதன் வரை செல்லும் போது தான்.  2014க்கு முன்பாக, வெறும் 25 கோடி நபர்களிடம் மட்டுமே, சமூக பாதுகாப்புக்கான கவசம் இருந்தது.  வெறும் 25 கோடி மட்டுமே.  நண்பர்களே கடந்த 5-7 தசாப்தங்களிலே, வெறும் 25 கோடி.  நாங்கள் ஒரே பத்தாண்டுக்குள்ளாக, 100 கோடி நாட்டுமக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசத்தை அளித்திருக்கிறோம்.  ஆயுஷ்மான் பாரதம் திட்டப்படி, 70 வயதான, 70 வயது முதியவருக்கு, இன்று, 5 இலட்சம் வரையிலான இலவச மருந்துக்கான அமைப்பு இருக்கிறது.  கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு இதனால் பலன் கிடைத்திருக்கிறது.  மேலும் இந்த ஆயுஷ்மான் அட்டை காரணத்தால், 2 இலட்சம் கோடி ரூபாய், மருந்துகள் அறுவை சிகிச்சைக்கு இடையே ஆகும் செலவினம், என் குடும்பங்களுக்கு சேமிக்கப்பட்டிருக்கிறது.  அவர்கள் ஏழைகள் மத்தியத்தட்டுக் குடும்பங்கள்.  அவர்களுக்கு பெரிய ஆசுவாசம்.

என் மனம்நிறை நாட்டுமக்களே, இன்று ஒரு விஷயத்தில் எனக்கு உங்கள் உதவி தேவை.  நான் உங்களனைவரிடமும், ஒரு உதவியைக் கோருகிறேன்.  அனைத்து இளைஞர்களிடமும் நான் வேண்டுகிறேன், நீங்கள், இதற்குத் தலைமையேற்க வேண்டும்.  உங்களுடைய, ஒன்று அல்லது இரண்டு மணிநேரம், தேசத்திற்கு பெரிய சக்தியை அளிக்க இருக்கிறது.  ஒன்றிரண்டு மணிநேரத்தில் நான் தேசத்திற்கு என்ன செய்து விட முடியும் என்று தோன்றலாம்…… நான் கூறுகிறேன்.  நீங்கள் மிகப்பெரிய சக்தியாக இருக்கிறீர்கள்.  ஆகையால் ஒவ்வொரு வீட்டிலும் சூழல் அமைய வேண்டும். 

இப்போது, தேசத்திலே மக்கட்தொகை கணக்கெடுப்பு, பணி நடக்கிறது.  சென்ஸஸ் நடக்கிறது.  எண்ணிக்கை நடந்து வருகிறது.  மேலும் எண்ணிக்கை வெறும், புள்ளிவிவரங்களால் ஆவது இல்லை.  இதை நுணுகி ஆய்ந்து, கொள்கைகள் வடிவமைக்கப்படும்.  திட்டங்கள் உருவாகும்.  தேசம் முன்னேற, வரையறைகளை ஏற்படுத்துகிறது.  அந்த வகையிலே, துல்லியமான தகவல் தெரிதல் முக்கியமானது.  சில வேளைகளில், அரசு, தரப்பிலிருந்து பிரதிநிதிகள் வருவார்கள்.  அவசரத்தில் இருப்பார்கள், பெயர்கள் எழுதுவதில் தவறு செய்யலாம்.  இதன் காரணமாக முடிவிலே விளைவுகள், சரியாக கிடைப்பதில் சங்கடம் ஏற்படுகிறது. 

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

இப்போது தொழில்நுட்பம் இருக்கிறது.  இந்த முறை தீர்மானம் செய்திருக்கிறோம், நீங்க்ளே கூட, கணக்கெடுப்பிலே, உங்கள் தகவல்களை மொபைல் பேசியில் நிரப்பி அளிக்கலாம்.  பிறகு அரசு அலுவலர் வருவார், பிரதிநிதி வருவார் கலந்து பேசுவார்.  ஆனால் நீங்கள், குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்திருந்து, டிஜிட்டல் முறையில், உங்கள் தகவல்களை நிரப்பினீர்கள் என்றால், நுணுக்கமான வகைய்லே பெயரிலே தவறுகள் செய்யாமல், தகவல்களிலே தவறேதும் செய்யாமல், எத்தனை செம்மையாகத் தகவல்களை அளிக்கிறீர்களோ, தேசத்தை முன்னேற்றிச் செல்ல பேருதவியாக இருக்கும். 

அந்த வகையிலே, நான் நாட்டின் இளைஞர்களிடம் கேட்டுக் கொள்கிறேன், நீங்கள், உங்களுடைய குடும்பத்தவர்களை அமரச் செய்து, படிவத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.  முதலில் காகிதத்தில் படிவத்தை நிரப்புங்கள், தவறு இருந்தால் திருத்துங்கள்.  அதன் பிறகு, தொழில்நுட்பரீதியாக, டிஜிட்டல்ரீதியாக, அதை தரவேற்றம் செய்யுங்கள்.  தேசத்தின் மிகப்பெரிய பணி நிறைவேறும், தேசத்தின் நேரமும் சக்தியும், சரியான பணிக்கு உதவிகரமாக இருக்கும்.  ஆகையால் நாட்டின் இளைஞர்களிடம், இந்தக் கணக்கெடுப்புப் பணியிலே, ஆக்கப்பூர்வமாக இணைந்து கொள்ள, நான் வேண்டிக் கொள்கிறேன். 

எனதருமை நாட்டுமக்களே, நான் செங்கோட்டையிலிருந்து ஐந்து உறுதிப்பாடுகள் குறித்துப் பேசியிருந்தேன்.  இந்த 5 உறுதிப்பாடுகள், தேசத்தை, தன்னுடைய சுயகௌரவத்தை நோக்கி முன்னேற்றிச் செல்ல, இலட்சியங்களை எட்டும் வல்லமையோடு முன்னேற்றக்கூடிய, ஒரு பெரிய ஆசுவாசம் அளித்திருக்கிறது.  அடிமைத்தன மனோபாவத்தை நாம் தொடர்ந்து அழித்து வரவேண்டும்.  எந்த பாரதத்தின் கனவு, நேதாஜி சுபாஷ் போஸ் கண்டாரோ, பாபாசாகேப் அம்பேட்கர் கண்டாரோ, பண்டித நேரு கண்டாரோ, சர்தார் படேல் பகத்சிங், சுக்தேவ் ராஜ்குரு பார்த்தார்களோ, டாக்டர் ஷாமாபிரசாத் முகர்ஜி கண்டாரோ, பகவான் பிர்சா முண்டா கண்டாரோ, ஜோதிபா புலே கண்டாரோ, அவர்கள் அனைவைரிடமும் உத்வேகம் பெற்று, நாம் முன்னேறிச் செல்வோம்.  வாருங்கள்!!  இந்த உறுதிப்பாட்டை மீளுரைப்போம்.  தன்னலத்தை விட, தேசநலனே பெரியது.  தன்னலத்தை விட தேசநலனே பெரியது.  மேலும் கடமை மட்டுமே, நமது அடையாளமாகட்டும்.  நான் நாட்டுமக்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன். 

காலம் நம்முடையது.  நான் நாட்டுமக்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.  காலம் நம்முடையது.  சந்தர்ப்பம் நம்முடையது.  உறுதிப்பாடு நம்முடையது.  வாருங்கள்.  கனவுகளை உறுதிப்பாடுகளாக்குவோம்.  உறுதிப்பாடுகளை வல்லமைகளாக்குவோம்.  மேலும் வல்லமைகளை, வெற்றிகளாக மாற்றிக் காட்டுவோம்.  வாருங்கள்.  ஒவ்வொரு படியையும் வளர்ச்சிப் படியாக்குவோம்.  ஒன்றிணைந்து நாம் பயணிப்போம்.  மனம் ஒன்றுபட்டுப் பாடுபடுவோம்.  இலட்சியப் பாதையில் சேருவோம்.  ஒரு தீபத்தால், ஆயிரம் தீபங்களை ஏற்றுவோம்!!  வாருங்கள், இணைந்து நாம் வளர்ந்த பாரதம் படைப்போம்!!  இந்த ஒரு, விருப்பதோடு, இந்த மங்களமான வேளையிலே, உங்களனைவருக்கும், பலப்பல நல்வாழ்த்துக்கள்.  என்னுடன் இணைந்து கூறுங்கள்.

Related articles

Recent articles

spot_img