
ஐ.பி.எல் 2025 – – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் – விசாகப்பட்டினம் – 24.03.2025
டெல்லி திரில் வெற்றி
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை (209/8, மிட்சல் மார்ஷ் 72, நிக்கோலஸ் பூரன் 75, டேவிட் மில்லர் 27, மிட்சல் ஸ்டார்க் 3/42, குல்தீப் யாதவ் 2/20, விப்ராஜ் நிகம் மற்றும் முகெஷ் குமார் தலா ஒரு விக்கட்) டெல்லி கேபிடல்ஸ் அணி (19.3 ஓவர்களில் ஒன்பது விக்கட் இழப்பிற்கு 211 ரன், அஷுத்தோஷ் ஷர்மா ஆட்டமிழக்கமல் 66, விப்ராஜ் நிகம் 39, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 34, அக்சர் படேல் 22, ஷர்துல் தாகூர், மணிமஆறன் சித்தார்த், திவேஷ் ரதி, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கட்டுகள்) ஒரு விக்கட்டு வித்தியாசத்தில் வென்றது.
இன்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. பூவா தலையா வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. லக்னோ அணியின் அணித்தலைவர், ரிஷப் பந்த், தான் ஒருவேளை டாஸ் ஜெயித்திருந்தால் மட்டையாடியிருப்பேன் என்று சொன்னர்.
எனவே டெல்லி அணி, லக்னோ அணியை மட்டையாடச் சொன்னது பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று.
அந்த அணியின் முதல் மூன்று வீரர்கள் எய்டன் மர்க்ரம் (13 பந்துகளில் 15 ரன்), மிட்சல் மார்ஷ் (36 பந்துகளில் 72 ரன், 6 ஃபோர், 6 சிக்சர்), நிக்கோலஸ் பூரன் (30 பந்துகளில் 75 ரன், 6 ஃபோர், 7 சிக்சர்) என அதிரடியாக விளையாடி, 15ஆவது ஓவரில் பூரன் ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 169ஆக் இருந்தது.
13ஆவது ஓவரை ஸ்டப்ஸ் வீச வந்தபோது நிக்கோலஸ் பூரன் (0,6,6,6,6,4) நாலு சிக்சர், ஒரு போர் அடித்து தூல் கிளப்பினார்.
அதன் பிறகு வந்த வீரர்களால் இவர்களைப்போல ஆட முடியவில்லை. டேவிட் மில்லர் (19 பந்துகளில் 27 ரன்) மட்டும் ஏதோ சொல்லும்படி ஆடினார். மற்றவர்கள் சொற்ப ரன் களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் லக்னோ அணி 20 ஓவர்களில் எட்டு விக்கட்டுகள் இழப்பிற்கு 209 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
210 ரன் என்ற வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த டெல்லி அணி இரண்டு ஓவர்கள் முடிவதற்குள் மூன்று விக்கட்டுகளை இழந்தது. ஜேக் ஃப்ரேசர் மெகர்க் (1 ரன்), அபிஷேக் போரல் (பூஜ்யம் ரன்) சமீர் ரிஸ்வி (4 ரன்) என மூவரும் விரைவில் ஆட்டமிழந்தனர்.
ட்யூபிளேசிஸ் (18 பந்துகளில் 29 ரன்) மற்றும் அக்சர் படேல் (11 பந்துகளில் 22 ரன்) இருவரும் டெல்லி அணிக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் ஆடினர். 12ஆவது ஓவரில் 102 ரன் மட்டுமே எடுத்திருந்த டெல்லி அணி, அதன் பின்னர் கியரை மாற்றி வேகமாக ரன் எடுக்கத் தொடங்கியது.
ஓவர் 13இல் 15 ரன், 14இல் 17 ரன், 15இல் 15 ரன், 16இல் 20 ரன், (17இல் 3 ரன்), 18இல் 17 ரன், 19இல் 16 ரன், 20இல் 7 ரன் என மொத்தம் 109 ரன் களை கடைசி 7 ஓவர்களில் டெல்லி அணி எடுத்தது.
ஸ்டப்ஸ் (22 ரன்), அஷுத்தோஷ் ஷர்மா (31 பந்துகளில் 66 ரன், 5 ஃபோர், 5 சிக்சர்) விப்ராஜ் நிகம் (15 பந்துகளில் 39 ரன்) எடுத்தனர். இதனால் 19.3 ஓவர்களில் டெல்லி அணி 9 விக்கட் இழப்பிற்கு 211 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது
டெல்லி அணியின் மட்டையாளர், அஷுத்தோஷ் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.