
காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் காட்டுமிராண்டித் தனமாக சுட்டதில் சுற்றுலா பயணியர் 26 பேர் உயிரிழப்பு!
பஹல்காம் (காஷ்மீர்) பகுதியில் 27 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 12 பேர் தீவிரமாக காயமடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வரிசையாக நிறுத்தப்பட்டு, அடையாள அட்டை காட்டுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர், அவர்கள் கால்சட்டை அகற்றுமாறு கூறி, முஸ்லிம்கள் அல்ல என்று உறுதி செய்யச் சொல்லப்பட்டது. அதற்குப் பிறகே அவர்கள் உயிர் பறிக்கப்பட்டது.
காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமின் பைசாராம் பகுதியில் சுற்றுலா பயணிகள் குழுமியிருந்த போது, இன்று மதியம் 2:30 மணி அளவில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இராணுவ உடையில் வந்த பயங்கரவாதிகள் இருவர் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கும் லஷ்கர் இ தொய்பாவின் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் வெளிநாட்டினர் இருவர் உட்பட 26க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பயத்தில் அலறியடித்து ஓடினர். காயமடைந்தவர்களைக் கண்டு, உறவினர்கள் கதறி அழுதனர். காயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் உடனடி சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்து ராணுவத்தினரும் பாதுகாப்பு படையினரும் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்திய இஸ்லாமிய பயங்கரவாதிகளை ராணுவத்தினர் தேடி வருகின்றனர்.
இத்தாக்குதல் சம்பவம் குறித்து அறிந்ததும், சௌதி அரேபியாவில் இருக்கும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவலையும் நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக எடுக்குமாறும், அமித் ஷாவை சம்பவ இடத்தைப் பார்வையிடுமாறும் கேட்டுக் கொண்டார்.
பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அமித் ஷா உயர்மட்டக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் உள்துறைச் செயலாளர், புலனாய்வுப் பிரிவு மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். டி.ஜி.பி., உட்பட ஜம்மு-காஷ்மீர் அதிகாரிகள், காணொளி வழியில் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பிரதமருடன் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக ஸ்ரீநகர் கிளம்பி சென்றார். அங்கு அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்நிலையில், இந்த இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட அறிக்கையில், காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இது ஒரு கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயலாகும். இது கண்டனத்துக்குரியது. சுற்றுலா பயணிகளை தாக்குவது என்பது கொடூரமானது. மன்னிக்க முடியாதது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.
பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இந்தக் கொடூர செயல்களுக்கு பின்னால் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் தப்பிக்க முடியாது. இந்த மோசமான திட்டம் வெற்றி பெறாது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற தீர்மானம் அசைக்க முடியாதது. அது இன்னும் வலிமையாகி உள்ளது.. என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது சௌதி சுற்று பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு நாடு திரும்புவதாகவும், இன்றிரவு இரண்டு மணிக்கு தில்லி திரும்புவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.