
திருச்சி மக்கள் உடல்நிலை பாதிப்பிலும் திமுகவின் இந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்துவதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது…
திருச்சியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மக்களில் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். குடிநீரில் கழிவுநீர் கலந்து இருந்ததால் இந்த பாதிப்பு என்று பத்திரிகை செய்திகள் தெரிவித்தன. பல நகரங்களில் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்சினை எப்போதும் எழுந்து வருபவைதான்.
சமீபகாலமாக பெரும்பாலன மக்கள் நகராட்சி குடிநீரை சமைக்க பயன்படுத்துவதற்கு பதிலாக கேன் தண்ணீரை விலைக்கு வாங்கிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதே உண்மை.
இந்தப் பிரச்சினை குறித்து 21.4.25 ல் சட்டசபையில் பதிலளித்த அமைச்சர் திரு. கே.என். நேரு குடிநீரில் பிரச்சினை இல்லை என்றும் திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மன் கோவிலில் அளித்த அன்னதான உணவு, இலவசமாக தரப்பட்ட குளிர்பானங்கள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என பதில் அளித்துள்ளார். இத்தகைய கருத்தை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
இத்தகைய பதில் திமுகவின் இந்து விரோத போக்கையே காட்டுகிறது. எந்த முகாந்திரமும் இல்லாமல் இந்துக்கள் புண்ணியமாகக் கருதி, தூய்மையாக செய்து, இலவசமாக அளிக்கும் அன்னதானம் பற்றி அவதூறு பரப்புவது திமுகவின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
சில மாதங்களுக்கு முன்பாக அன்னதானம் செய்ய உணவு கட்டுப்பாட்டு துறையின் தரச் சான்று பெற வேண்டும் என்று கூறியது திமுக அரசு. மேலும் திருவண்ணாமலை உட்பட பல இடங்களில் அன்னதானம் செய்வதை தடுக்கும் நடவடிக்கையிலும் அதிகாரிகள் ஈடுபட்டனர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
மேலும் ஒவ்வொரு கோவில்களிலும் பிரசாதக்கடை, ஸ்வீட் ஸ்டால் நடத்தப்படுகிறது. அதற்கு உணவு கட்டுப்பாட்டுத் துறை லைசென்ஸ் மற்றும் பரிசோதனை நடத்தப்படுகிறதா?
அதுவே கோவில் விழாக்களில் வேற்று மதத்தினர் குளிர்பானங்கள் வழங்குகின்றனர். ஆனால் அதனை மத நல்லிணக்கம் என விளம்பரப் படுத்தி பாராட்டுகிறது இதே அரசு.
சமீபத்தில் பிரபல ஓட்டல் ஒன்றில் பிரியாணி சாப்பிட்ட பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து விசாரிக்கச்சென்ற உணவு கட்டுப்பாட்டு அதிகாரி பாதியிலேயே ஏதோ காரணத்தால் திரும்பினார் என்று செய்தி வெளிவந்து பரபரப்பானது. இதனை குறித்து சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பிய இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் திரு.ஜெகன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தது காவல்துறை.
ஆனால் எந்த முகாந்திரமும் இல்லாமல் அமைச்சர் திரு.கே.என். நேரு, கோவில் அன்னதானத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறை இவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்பது மக்கள் கேள்வியாக இருக்கிறது.
கோவிலுக்கு வந்தவர்களுக்கு அங்கு தரப்பட்ட உணவை சாப்பிட்டவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டனர் என்பதை எதன் அடிப்படையில் அமைச்சர் தெரிவித்தார்?
அதே சமயம் நகராட்சி குடிநீர் நிறுத்தப்பட்டு லாரிகளில் குடிநீர் வழங்குவதாக கூறுகிறார் அமைச்சர். அப்படி குடிநீரில் கழிவுநீர் கலப்பு இல்லை என்றால் அதனை ஏன் நிறுத்த வேண்டும்? அரசின் அலட்சியத்தை மறைக்க இந்த நடவடிக்கையா?
அமைச்சர் திரு.கே.என். நேரு தெய்வ நம்பிக்கை உடையவர். அவர் இவ்வாறு தரம் தாழ்ந்து பேசியதை கண்டிக்கிறோம். மக்கள் பாதிக்கப்பட்டதற்குக் காரணம் அவர் வெக்காளியம்மன் கோவிலில் அளித்த அன்னதான உணவாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டதை வாபஸ் வாங்கி, சட்டசபை குறிப்பில் இருந்து நீக்குவதற்கு சபாநாயகரிடம் முறையிட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.