
மைசூர் – தூத்துக்குடி தினசரி விரைவு ரயில் மதுரை வரும் நேரம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வரும் 24.4.25 வியாழன் அன்று, மதுரையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர், மதுரை கோட்டத்தின் கீழ் வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்தவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில், விருதுநகர் – தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை பொது மேலாளரிடம் வைக்க வேண்டும் என்று விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்ட ரயில் பயணிகளின் சார்பில், செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார்.
அதில், “தினசரி இயங்கும் மைசூர் – தூத்துக்குடி விரைவு ரயில், மதுரை ரயில் நிலையத்துக்கு காலை 07.35 க்கு வந்து 07.40க்கு புறப்பட்டுச் செல்கிறது.
ஆனால் தினசரி இயங்கும் மதுரை – செங்கோட்டை முன்பதிவில்லா ரயில் இந்த மைசூர் – தூத்துக்குடி விரைவு ரயில் மதுரைக்கு வரும் முன்பாகவே காலை 07.20 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்று விடுகிறது.
இதனால் மைசூர் – தூத்துக்குடி ரயிலில் மதுரை வந்து இணைப்பு ரயிலைப் பிடிக்க வரும் திருத்தங்கல் முதல் செங்கோட்டை வரை ( வழி சிவகாசி – ராஜபாளையம் – தென்காசி) செல்ல உள்ள பயணிகள் இணைப்பு ரயில் வசதி உடனே கிடைக்காமல் மதுரை ரயில் நிலையத்தில் 4 மணி நேரம் காத்துக் கிடக்கும் சூழ்நிலை தற்போது உள்ளது. ஏனெனில் இவர்களுக்கு தமது ஊர்களுக்கு செல்ல மதுரையிலிருந்து இயக்கப்படும் அடுத்த ரயில் காலை 11.35 க்கு புறப்படும் மதுரை – குருவாயூர் ரயில்தான்.
எனவே தெற்கு ரயில்வே அதிகாரிகள் தென் மேற்கு ரயில்வே அதிகாரிகளுடன் கலந்து பேசி ஆவன செய்து மைசூர் – தூத்துக்குடி விரைவு ரயில் காலை 07.00 மணிக்கு மதுரை வந்தடையத் தேவையான உடனடி நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம். – என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும், செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் எல்.எம். முரளி, செயலர் கே.ஹெச். கிருஷ்ணன், துணைத் தலைவர் ராஜேந்திர ராவ், இணை செயலர் எம்.செந்தில் ஆறுமுகம், பொருளாளர் எஸ். சுந்தரம், பிஆர்ஓ ராமன், எஸ். லிவிங்ஸ்டன் சாமுவேல், வி.மகேந்திரன் ஆகியோர் கையெழுத்திட்டு, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஶ்ரீகுமாருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது…
தெற்கு ரயில்வே பொது மேலாளர் 24.04.25 அன்று மதுரையில் மதுரை கோட்டத்தின் கீழ் வரும் நாடளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்த இருக்கிற கலந்தாய்வு கூட்டத்தில் தாங்கள் எங்கள் சங்கத்தின் கீழ்காணும் கோரிக்கைகளை பொது மேலாளரிடம் எடுத்துரைத்து ஆவன செய்ய பரிந்துரைக்க வேண்டுகிறோம்.
(I) கீழ்க்காணும் புதிய ரயில்களை இயக்குதல் மற்றும் தேவைப்படும் இதர ரயில் சேவைகள்
(1) தினசரி காலையிலும் மாலையிலும் முன்பதிவில்லா திருநெல்வேலி – திருவனந்தபுரம் & திருவனந்தபுரம் – திருநெல்வேலி ரயில்கள் வழி அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி பாவூர்சத்திரம் தென்காசி செங்கோட்டை புனலூர் கொல்லம்.
(2)இதே போல தினசரி முன்பதிவில்லா ரயில்கள் மதுரை – திருவனந்தபுரம் & திருவனந்தபுரம் – மதுரை வழி விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் தென்காசி செங்கோட்டை புனலூர் கொல்லம்.
செங்கோட்டை கோயம்புத்தூர்& கோயம்புத்தூர் செங்கோட்டை வழி பழனி திண்டுக்கல் மதுரை விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் தென்காசி
(3)தற்போது வாரம் மூன்று நாட்கள் ஓடிக்கோண்டிருக்கும் செங்கோட்டை தாம்பரம் சிலம்பு எக்ஸ்பிரஸ் மற்றும் செங்கோட்டை தாம்பரம் எக்ஸ்பிரஸ் வழி திருநெல்வேலி ஆகியவற்றை தினசரி ரயில்களாக்க வேண்டும்.
(4) திருவனந்தபுரம் / கொல்லம் இவற்றிலிருந்து செங்கோட்டை வழியாகவோ அல்லது திருநெல்வேலியில் இருந்து அம்பை பாவூர்சத்திரம் தென்காசி வழியாகவோ கீழ்கண்ட ஊர்களுக்கு விரைவு ரயில்கள் உடனடியாக தேவை.
a)மும்பாய்
b)டெல்லி
c)மைசூர் / பெங்களூர்
d)மங்களூர்
e)வாரணாசி
f)ஹைதராபாத் வழி திருப்பதி 5)செங்கோட்டையில் இருந்து தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் மதுரை திருச்சி விருத்தாசலம் விழுப்புரம் வழியாக
சென்னைக்கு அம்ருத பாரத் ரயில்கள் விடவேண்டும்
6)தென்காசி -விருதுநகர் வழித்தடத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கலாம் என ரயில் சோதனை ஓட்ட ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளதால் தென்காசியிலிருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.
7)2018ல் சில நாட்களே ஓடி பிறகு நிறுத்தப்பட்ட செங்கோட்டை – தாம்பரம் பகல் நேர முன்பதிவில்லா அந்தியோதயா ரயில்களை மீண்டும் இயக்க ஆவன செய்ய வேண்டும்.
8)தற்போது வாரம் ஒருமுறை ஓடும் தாம்பரம் திருவனந்தபுரம் வடக்கு விரைவு ஏசி ரயில்களில் சாதாரண பயணிகளின் வசதிக்காக மூன்று முன்பதிவில்லா பெட்டிகளும் மூன்று சாதாரண இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளும் உடனடியாக இணைக்கப்பட வேண்டும். மேலும் இந்த ரயிலை வாரம் இரு முறை இயக்க வேண்டும்.
9)தற்போது இயங்காமல் உள்ள திருநெல்வேலி தாம்பரம் வாராந்திர ரயில் வழி தென்காசி ராஜபாளையம் சிவகாசி மீண்டும் இயக்கிட விரைந்து ஆவன செய்ய வேண்டும்.
10)தற்போது புனலூரோடு நிற்கும் ரயில்களை தென்காசி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.குறிப்பாக கன்னியாகுமரி – புனலூர் ரயிலை தென்காசி வரை உடனடியாக நீட்டிக்க வேண்டும்.
11) கீழ்கண்ட முன்பதிவில்லா ரயில்கள் ஒவ்வொன்றிலும் நான்கு பொது பெட்டிகளும் மகளிருக்கான ஒரு பொது பெட்டியும் இணைக்க ஆணையிட வேண்டும்.
அ) செங்கோட்டை ஈரோடு செங்கோட்டை ரயில்கள்.
ஆ) செங்கோட்டை மயிலாடுதுறை செங்கோட்டை ரயில்கள்.
இ) செங்கோட்டை திருநெல்வேலி செங்கோட்டை ரயில்கள்.
ஈ) செங்கோட்டை மதுரை செங்கோட்டை ரயில்கள்.
12) பாலக்காடு தூத்துக்குடி பாலக்காடு பாலருவி விரைவு ரயில்களில் இரண்டு மூன்றடுக்கு ஏசி பெட்டிகளும் ஒரு ஈரடுக்கு ஏசி பெட்டியும் இணைக்க வேண்டும்.
(II)நிறுத்தங்கள் தேவை கோரிக்கை
1) சென்னை – செங்கோட்டை 12661 செங்கோட்டை —சென்னை 12662 பொதிகை அதிவேக ரயில்கள் தென் மாவட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்களின் வசதிக்காக நிரந்தரமாக மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஆவன செய்ய வேண்டும்.
(2) சென்னை – கொல்லம் 16101 கொல்லம் – சென்னை 16102 விரைவு ரயில்கள் பாம்பகோவில்சந்தை , திருத்தங்கல் ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும.
III ) புதிய ரயில் நிலையங்கள் அமைத்தல்
செங்கோட்டை – ராஜபாளயம் ரயில் பாதையில் முன்பு மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கி பிறகு மூடப்பட்ட சோழபுரம், கரிவலம்வந்தநல்லூர், நயினாரகரம் ரயில் நிலையங்களை மீண்டும் அமைக்க வேண்டும்.இது நடந்தால் இப்பாதையில் ரயில்களின் கால தாமதம் தவிர்க்கப்படும.
(IV)இதர கோரிக்கைகள்
1) செங்கோட்டையில் தற்போது 3 நடைமேடைகளே உள்ளன. மேலும் இரண்டு நடைமேடைகள் அமைக்க வேண்டும்.
2) செங்கோட்டை – தென்காசி மற்றும் தென்காசி – விருதுநகர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும்
3) செங்கோட்டையில் பிட்லைன் அமைக்க வேண்டும். இதை அமைத்தால் மட்டுமே தமிழ்நாட்டின் தென்மாவட்ட மக்களின் வசதிக்காக மதுரையோடு நின்று விடும் தொலைதூர ரயில்களை செங்கோட்டை வரை நீட்டிக்க இயலும்.
4) பகவதிபுரம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டிகளுக்கான தண்ணீர் மற்றும் இதரவசதிகள் நடைமேடைகள் அமைக்கப்பட்டு பொதிகை,சிலம்பு, தாம்பரம் ரயில்கள் இவை செங்கோட்டை வந்து சேர்ந்த பிறகு பகவதிபுரம் செல்ல வேண்டும். மீண்டும் மாலையில் செங்கோட்டைக்கு வர வேண்டும்.
5) செங்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளின் நலனுக்காக எக்ஸ்பிரஸ் ரயில்களின் பெட்டிகள் நிற்கும் இடத்தை , ரயில்களின் பெயர் மற்றும் நம்பர் இவற்றுடன் காட்டுகிற எலக்ட்ரானிக் போர்டுகளை அனைத்து நடைமேடைகளிலும் உடனடியாக அமைத்து தர வேண்டும்.
6)தென்காசி – திருநெல்வேலி பாதையிலும் செங்கோட்டை கொல்லம் பாதையிலும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடைகளின் உயரம் கூட்டப்பட்டு 24 ரயில் பெட்டிகள் நின்றிடும் வண்ணம் நடைமேடைகளின் நீளத்தையும் அதிகரிக்க விரைந்து ஆவன செய்ய வேண்டும்.
இது ஒரு முக்கியமான கோரிக்கை! எளிதாக நிறைவேற்றக் கூடியது தான்.
காலையில் பொதிகை அதிவேக விரைவு ரயில் வண்டி எண் 12661 சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு வரும்போது தென்காசிக்கு காலை 06.50 மணிக்கு வந்து விடுகிறது . ஆனால் எல்லா நாட்களும் அதை தென்காசியில் செங்கோட்டை மயிலாடுதுறை ரயில் வரும் வரை 20 நிமிடம் வரை நிறுத்தி வைக்கிறார்கள்.. இதனால் பொதிகை ரயிலில் செங்கோட்டைக்கு வருகின்ற பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் .
அதனால் பொதிகை எக்ஸ்பிரஸ் செங்கோட்டை வந்த பின்பு செங்கோட்டை மயிலாடுதுறை வண்டி புறப்பட்டால் சரியாக இருக்கும்.. பொதிகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகும் அதை 20 நிமிடம் தென்காசியில் நிறுத்தி வைப்பது சரியாகாது… ஆதலால் பொதிகை ரயில் செங்கோட்டைக்கு வந்தவுடன் செங்கோட்டை – மயிலாடுதுறை வண்டி புறப்பட வேண்டும்.