
தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்
அமெரிக்காவைச் சேர்ந்த, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் மற்றும் தொழில்நுட்ப நிபுணரான லெக்ஸ் பிரிட்மேன் என்பவர், பாட்காஸ்ட் மூலம் பிரபலங்களைப் பேட்டி எடுத்து வெளியிடுவதைப் பழக்கமாகக் கொண்டவர். ‘பாட்காஸ்ட்’ என்பது, இணையதளம் மற்றும் மொபைல் போன்களில் வெளியிடப்படும் ஆடியோ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில், உலகத் தலைவர்கள் பலரைப் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில், இவர் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் பேட்டி கண்டு தன் தளத்திலும் யூடியூப்பிலும் வெளியிட்டுள்ளார். அதில், ஹிந்தி, ஆங்கிலம், ருஷ்யன் என மூன்று மொழிகளில் முதலில் வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பின்னர் மற்ற மொழிகளில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு நுட்பம் மூலம், தேர்ந்த ஆங்கிலத்தில் பிரதமர் மோடியின் ஹிந்தி உரை மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பாகியுள்ளது. இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெளியானது.
அதன் ஆறாவது பகுதி…
வினா – கால்பந்தாட்டம் என்ற விளையாட்டு இந்தியாவை மட்டுமல்ல உலகையே கூட ஒருங்கிணைக்கிறது. இது தான் விளையாட்டு அளிக்கக்கூடிய ஆற்றல். நீங்கள் அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தீர்கள், அங்கே டானல்ட் ட்ரம்ப் அவர்களுடன் உங்கள் நட்பை மேலும் வலுவடையச் செய்தீர்கள். டானல்ட் ட்ரம்ப் அவர்களை ஒரு நண்பராக, ஒரு தலைவராக, உங்கள் கருத்து?
மோதிஜி – நான், சம்பவங்களை விவரிக்க விரும்புகிறேன். அதைக் கொண்டு நான் எதைப் பற்றிப் பேச விரும்புகிறேன் என்று, நீங்களே முடிவு செய்து கொள்ள முடியும். இப்போது ஹூஸ்டனில் எங்களுடைய ஒரு நிகழ்ச்சி இருந்தது. ஹவ்டி மோதி. நானும் குடியரசுத்தலைவர் ட்ரம்பும் இருந்தோம்…. அரங்கு முழுவதுமாக நிரம்பி வழிந்தது. இத்தனை மனிதர்கள் இருப்பது என்பது அமெரிக்க வாழ்விலே மிகப்பெரிய நிகழ்ச்சி விளையாட்டுக்களில் என்னவோ இருக்கும் ஆனால் அரசியல் கூட்ட த்தில் இத்தனை பேர் இருப்பது பெரிய விஷயம்.
இந்திய வம்சாவழியினர் வந்திருந்தார்கள். நாங்கள் இருவரும் உரையாற்றினோம். அவர் கீழே அமர்ந்து கொண்டு, என் உரையைக் கேட்டார். அவருடைய தாராள குணம் அது. அமெரிக்க குடியரசுத் தலைவர் மேடைக்குக் கீழே அமர்ந்து கொண்டு என் உரையைக் கேட்டுக் கொண்டிருக்கிறார், இது அவருடைய பெரிய மனது. நான் உரையாற்றி விட்டு கீழே சென்றேன். நமக்கு நன்கு தெரியும், அமெரிக்காவின் பாதுகாப்பு எத்தனை பெரிய, அளவில் இருக்குமென்று. எத்தனை… வகையான சோதனைகள் இருக்குமென்று.
நான் கீழே சென்று, அவருக்கு நன்றி தெரிவித்து யதார்த்தமாக அவரிடம் சொன்னேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்று சொன்னால், வாருங்கள் நாம், அரங்கத்தை ஒருமுறை சுற்றிவரலாமே இத்தனை பேர் இருக்கிறார்கள் என்றால் கையசைத்து வணக்கம் சொல்லி வரலாமே என்றேன். அமெரிக்காவிலே இது சாத்தியமே இல்லை. ஆயிரக்கணக்கானோர் மத்தியிலே அமெரிக்க குடியரசுத் தலைவர் செல்வதென்பது. ஒரு கணம்கூட தாமதிக்காமல், என்னோடு வரத் தொடங்கினார், கூட்டத்திலே. அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பு மொத்தமாக….. திகைத்துத் திக்குமுக்காடிப் போனது. இந்த நபரிடம் தைரியம் இருக்கிறது என்பது என்னைத் தொட்டது. இவர் முடிவுகளைத் தாமே எடுக்கிறார். மேலும் அடுத்து, மோதி மீது அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. மோதி கூட்டிக் கொண்டு சென்றார் என்றால், செல்வோம் என்று.
இந்த பரஸ்பர நம்பிக்கை உணர்வு, இந்த இத்தனை பலமான உணர்வை அன்று தான் கவனித்தேன். நான் குடியரசுத் தலைவர் ட்ரம்பினை அன்று தான்…. உணர்ந்து கொண்டேன். பாதுகாப்புக் குழுவினரைக் கலந்து பேசாமல் கூட்டத்திலே செல்வது, அந்த வீடியோவை நீங்கள் பார்த்தால் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும். அவர் மீது தேர்தல் பிரச்சாரத்தின் போது சுடப்பட்ட போது, அப்போது எனக்கு…. குடியரசுத் தலைவர் ட்ரம்ப், ஒன்றாகவே தென்பட்டார். அந்த அரங்கிலே என் கையைப் பிடித்துக் கொண்டு பயணித்த ட்ரம்ப், குண்டடிபட்ட பிறகு கூட, அமெரிக்காவுக்காக வாழ்தல், அமெரிக்காவுக்காகவே வாழ்க்கை, இந்த அவருடைய மனவுறுதி, தேசத்திற்கே முதன்மையளிப்பவன் நான். அவரோ அமெரிக்காவுக்கு முதன்மை என்பவர். நான் பாரதத்திற்கு முதன்மை என்பவன். எங்கள் இணை அமோகமாக இணைகிறது.
இந்த விஷயங்கள் தான், மனதைத் தொடுவன என் கருத்து என்னவென்றால், பெரும்பாலும் உலகத்திலே, அரசியல் தலைவர்களைப் பற்றி ஊடகங்களில் வெளியாகும் தகவல்களால், அனைவரும் பரஸ்பரம் இவற்றின் அடிப்படையிலேயே அளவீடு செய்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர் கலந்து பேசி உரையாடி ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்வதில்லை. மூன்றாமவர்களின் இடையீடுகளும் அழுத்தத்துக்கான மேலும் ஒரு காரணம்.
நான் முதன்முறையாக, வெள்ளை மாளிகைக்குச் சென்ற போது, அப்போது, குடியரசுத்தலைவர் ட்ரம்ப்…. குறித்து ஊடகங்களில் வெளியான பல விஷயங்கள் முதன்முறையாக வந்திருந்தார் உலகம் சற்று, வித்தியாசமாகவே அவரை கவனித்தது. எனக்கும் பலவகையாக தெரிவிக்கப்பட்டது. நான் வெள்ளை மாளிகைக்குச் சென்ற போது, முதல் நிமிட த்திலேயே, அவர் ப்ரோட்டோகாலின் அனைத்துச் சுவர்களையும் தகர்த்து விட்டார்.
மொத்த வெள்ளை மாளிகையையும் சுற்றிக் காட்ட அவரே வந்தார். எனக்குக் காட்டிக் கொண்டிருந்த போது அவர் கைகளில் எந்தக் காகிதமும் இல்லை என்பதை கவனித்தேன். துண்டுச் சீட்டு ஏதும் இல்லை சொல்பவர்கள் யாரும் இல்லை. எனக்கு விளக்கினார். ஆப்பிரகாம் லிங்கன் இங்கே வசித்தார், இந்த தாழ்வாரம் ஏன் இத்தனை நீளமாக இருக்கிறது இந்த மேஜையில் எந்த, குடியரசுத் தலைவர் கையெழுத்து இட்டார். தேதிவாரியாகச் சொன்னார் அவர். எனக்குள் அது பெரிய பதிவை ஏற்படுத்தியது. இந்த அமைப்பை எந்த அளவுக்கு கௌரவிக்கிறார் என்று. எந்த அளவுக்கு…. அமெரிக்க வரலாற்றோடு அவருக்கு ஈடுபாடு இருந்தது. எத்தனை மரியாதை இருந்தது. அதை உணர்ந்தேன் திறந்த மனத்தோடு நிறைய விஷயங்களைப் பேசினார்.
என்னுடைய முதல் சந்திப்பின் அனுபவம் அது. நான் மேலும் கவனித்தேன், அவர் அப்போது, முதல் முறைக்குப் பிறகு அந்த, தேர்தலில், பைடன் வெற்றி பெற்றார். இது நான்கு ஆண்டுக்காலம். எங்கள் இருவரையும் தெரிந்தவர்கள் யாராவது அவரை சந்தித்தால், இந்த நான்கு ஆண்டுகளில் குறைந்தது 50 முறையாவது, அவர் கூறியிருப்பார், மோதி என் நண்பர் என்று. நான் விசாரித்ததாகச் சொல்லுங்கள். பொதுவாக இது மிகக் குறைவாக இருக்கும். நாங்கள் ஒருவகையில் நேரடியாகச் சந்தித்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாம், ஆனால் எங்களுக்கு இடையிலான நேரடி மறைமுக உரையாடல், அல்லது நெருக்கம், அல்லது நம்பிக்கை, இது சிதையாமல் இருந்தது.
வினா – தன்னை விட கடுமையாக தீவிரமாக ஒப்பந்தப்பேச்சு நடத்தக்கூடியவர் நீங்கள் என்று அண்மையில் நீங்கள் சென்றிருந்த சமயத்தில் அவர் கூறியிருக்கிறார். அவர் எப்படிப்பட்ட ஒப்பந்தப் பேச்சு நட த்தக்கூடியவர், உங்களை கடுமையான ஒப்பந்தப்பேச்சு நடத்துபவர் என்று அவர் கூறுயது பற்றி உங்கள் கருத்து?
மோதிஜி – இதைப் பற்றி நான் ஏதும் சொல்ல இயலாது ஏனென்றால் இது அவருடைய தாராள குணம். என்னைப் போன்ற ஒருவரைப் பற்றி….. வயதிலும் அவரை விட இளையவன். என்னைப் பொதுவாகப் பாராட்டுகிறார். பல்வேறு விஷயங்கள் குறித்துப் பாராட்டுகிறார். ஆனால் ஒரு விஷயம் சரியே, என்னுடைய, தேசத்தின் நலன்களையே…. முதன்மையாக கருதுகிறேன்.
அந்த வகையிலே பாரதத்தின் நலன்களை முன்வைப்பதை அனைத்து மேடைகளிலும் செய்கிறேன். யாருக்கும் கெடுதல் செய்ய நான் முன்வைப்பதில்லை. ஆக்கப்பூர்வமாக முன்வைக்கிறேன். யாருக்கும் தவறாக கூட படுவதில்லை. ஆனால் என்னுடைய விண்ணப்பத்தை….. அனைவரும் அறிவார்கள் மோதி இருந்தால், இதை விண்ணப்பம் செய்வார் என்று. இந்த வேலையைத் தானே என் நாட்டவர்கள் எனக்கு அளித்திருக்கிறார்கள்!! என் தேசம் தான் எனக்கு எஜமானன். நான் அவர்களின் விருப்பங்களைத் தானே நிறைவேற்றுவேன்.
வினா – உங்கள் அமெரிக்க வருகையின் போது பல தலைவர்களுடன் நீங்கள் வெற்றிகரமான பல பேச்சுவார்த்தைகளை நட த்தினீர்கள். ஈலான் மஸ்க் ஜே டி வான்ஸ் துல்ஸி கப்பார்ட் விவேக் ராமஸ்வாமி. அந்த சந்திப்புகளில் குறிப்பிட்டுச் சொல்லும் விஷயம் ஏதும்? முக்கியமான தீர்மானங்கள், முக்கிய நினைவுகள்?
மோதிஜி – அதாவது குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன். இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன். இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். என்ன செய்ய வேண்டும், என்பது பற்றி அவருடைய மனதிலே, படிகள் செயல்திட்டம் தெளிவாக இருக்கிறது. இந்த பின்புலத்தில் அவருடைய குழு உறுப்பினர்களை சந்தித்த போது, மிகச் சிறப்பான குழுவை அவர் தெரிவு செய்திருப்பதாக கருதுகிறேன்.
இத்தனை சிறப்பான குழு எனும் போது குடியரசுத் தலைவர் ட்ரம்புடைய, திட்டங்கள் என்னவோ அவற்றை….. அமல் செய்யும் வல்லமை படைத்த குழுவாக, என் உரையாடல்களிலிருந்து புரிந்து கொண்டேன். யாரை சந்திக்க வேண்டியிருந்த தோ, அது துல்ஸிஜியாகட்டும், அல்லது விவேக்ஜியாகட்டும் அல்லது எலான் மஸ்காகட்டும். அது ஒருவகை குடும்பச் சூழலாக இருந்தது. அனைவரும் தங்கள் குடும்பத்தாரோடு சந்திக்க வந்திருந்தார்கள். எனக்கு எலான் மஸ்குடன் அறிமுகம் உண்டு நான்…… முதல்வராக இருந்த போதிலிருந்தே அவரைத் தெரியும்.
தன் குடும்பத்தாரோடு குழந்தைகளோடு வந்திருந்தார் இந்த….. சூழல் தான் இருந்தது. பல விஷயங்கள் பேசினோம் விவாதங்கள் என்னவோ நடந்தன. இப்போது டோட்ஜ் என்று நடக்கிறதில்லையா அது சரியானதும் கூட. எந்த வகையில் அவர் செய்கிறார்? எனக்கும் சந்தோஷமான விஷயம் 2014இலே அவர் வந்தார். என்னுடைய தேசத்தை நோய்களிலிருந்தும் தவறான பழக்கங்களிலிருந்தும், எத்தனை விரைவாக விடுவிக்க முடிவது ஒருபக்கம். எடுத்துக்காட்டாக, எங்கள் நாட்டிலே நானே கவனித்திருக்கிறேன் 2014ற்குப் பிறகு, எங்களைப் பர்றி, இந்த உலகம் தழுவிய அளவுக்கு விவாதம் ஏதும் இல்லை, குடியரசுத் தலைவரின் டோட்ஜ் செயல்பாட்டோடு ஒப்பீடு செய்யும் அளவுக்கு. ஆனால் நான் உதாரணம் கூறினால் எப்படி பணிகள் நடக்கிறன என்பதன் புரிதல் உங்களுக்கு ஏற்படலாம்.
நான் கவனித்த வரையில், அரசாங்கத் திட்டங்களின் ஆதாயங்கள் இருக்கிறதே, குறிப்பாக மக்கள்நலன் தொடர்பான பணிகள். இதனால் ஆதாயம் பெற்ற சில பேர், பிறப்பே எடுத்தது கிடையாது. ஆனால், போலிப் பெயர், கலியாணம் ஆகிறது, விதவைகள் ஆகிறார்கள். ஓய்வூதியம் அளித்தல் தொடங்கி விடுகிறது. ஊனம் ஏற்பட்டு ஓய்வூதியம் கிடைக்கிறது. நான் இதை ஆராயத் தொடங்கிய போது நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். 100 மில்லியன்…. அதாவது பத்துக் கோடிப் பேர்கள், இப்படிப்பட்ட பத்துக் கோடி போலிப் பெயர்கள், அவர்களை அமைப்பிலிருந்து வெளியேற்றினேன். மேலும் இதன் காரணமாக, பணம் மிச்சமானது நானும் நேரடியாகப் பணத்தை வங்கியில் போடுவதைத் தொடங்கினேன்.
தில்லியிலிருந்து அளிக்கப்படும் பணம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கைச் சென்று சேர வேண்டும். இவை காரணமாக என் தேசத்தின் சுமார் 3 இலட்சம் கோடி ரூபாய்கள் மிச்சப்படுத்தப்பட்டு….. தவறான கைகளுக்குச் சென்ற பணம் மிச்சமாகி இருக்கிறது. நேரடி ஆதாயப் பரிமாற்றம் காரணமாக, தொழில்நுட்பத்தை முழுமையாக நான் பயன்படுத்துகிறேன். இடைத்தரகர்கள் நீக்கப்பட்டார்கள். அரசாங்கத்திலே நாங்கள், பொருட்களை வாங்க ஜெம் தளத்தை தொழில்நுட்பத்தின் துணையோடு உருவாக்கினோம். ஆக அரசாங்கத்துக்கும் வாங்குவதில் செலவும் நேரமும் மிச்சப்படுகிறது. போட்டித்தன்மை இருக்கிறது.
நல்ல பொருட்கள் கிடைக்கின்றன. அரசாங்கத்தில் தகவிணக்கங்கள் அதிகம் இருக்கின்றன. நாங்கள் 40000 தகவிணக்கங்களுக்கு முடிவு கட்டினோம். ஏராளமான பழைய சட்டங்கள் இருந்தன. அவசியமே இருக்கவில்லை. சுமார் 1500 சட்டங்களுக்கு முடிவு கட்டினோம். ஆக நானும் ஒரு வகையிலே, அரசாங்கத்திலே இந்த மாதிரியான, விஷயங்கள், ஆளுமை செலுத்தி வந்தன. இவற்றிலிருந்து விடுதலை அளித்தோம். இந்த விஷயங்கள் எல்லாம், அன்றாடப் பணிகளில், இவை பற்றி விவாதம் செய்வது இயல்பான ஒன்றாக இருக்கிறது.