
20 வருடம் முன்னர் கலந்து கொண்ட நிகழ்ச்சி இது. ஆனால் மறக்க முடியாத நிகழ்ச்சி..!
காந்தி ஸ்டடீ செண்டர் நடத்தி வந்த நண்பர் அண்ணாமலையின் அழைப்பின் பேரில் அங்கே ஒரு நிகழ்ச்சியில் பேசுவதற்காகச் சென்றிருந்தேன். (சென்னை, தி.நகர், வெங்கடநாராயணா சாலை, தக்கர் பாபா வித்யாலயாவில்)
எனது பேச்சில் ஒரு விஷயத்தை கொஞ்சம் சுவாரஸ்யமாகச் சொன்னேன். அடியேன் வைணவன். எங்களுக்கு திருமால் உறையும் 108 திருத்தலங்கள் மிக முக்கியம். அவற்றை திவ்ய தேசங்கள் என்று சொல்லி நாங்கள் வழிபடுவதுண்டு. ஒரு முறையேனும் அந்தத் தலங்களுக்குச் சென்று அந்தத் தலத்தின் பெருமானை வணங்கி வழிபடுவது வாழ்நாள் பயனெனக் கொள்வோம்.
இப்போது இங்கே இருக்கும் நாம் அனைவரும் தேசபக்தர்கள். தேசபக்தர்களாயிருக்கையினாலே தான் இந்த நிகழ்ச்சிக்குக் கூடியிருக்கிறோம். நமக்கும் திவ்யதேசங்கள் உண்டு. எங்கள் ஊர் செங்கோட்டை தேசபக்தர்களாகிய நமக்கு ஒரு திவ்யதேசம். அங்கேதான் நூறாண்டுகளுக்கு முன் பாரதமாதா சங்கம் அமைத்து தேசபக்த இளைய திலகங்கள் தங்கள் ரத்தத் திலகங்களால் உறுதி எடுத்தார்கள். அவர்கள் காலடி பட்ட மண் நமக்கு திவ்யதேச மண் – என்ற ரீதியில் நெல்லை மண்ணின் சுதந்திர எழுச்சியை தொட்டுக்காட்டி சொல்லிக் கொண்டிருந்தேன்.
முதல் வரிசையில் கீழே அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பெரியவரின் கண்களில் நீர் பெருகி ஓடியது. அதை நான் மேடையில் பேசிக் கொண்டிருந்த படியே கவனித்தேன். தன் கண்களை அடிக்கடி துடைத்து தன் மெய்சிலிர்ப்பை வெளிப்படுத்தினார்!
பேசி முடித்து கீழே இறங்கிய எனக்கு வணக்கமிட்டார்… கை கொடுத்தார்… ஆரத் தழுவிக் கொண்டார். இப்போது தான் நான் தேசபக்தர்களின் திவ்யதேசம் என்ற வார்த்தையைக் காதில் கேட்கிறேன்… என்றார் நாத் தழுதழுக்க!
அந்தப் பெரியவர் – குமரி அனந்தன்.
பலமுறை செங்கோட்டைக்கு வந்திருக்கிறார். வாஞ்சிநாதன் குறித்த நிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருக்கிறார். வாஞ்சி மணியாச்சி என்ற ரயில் நிலையம் பெயர் வருவதற்குக் காரணம் குமரி அனந்தனே! அன்னார் ஏப்.8 செவ்வாய் அன்று காலமாகிவிட்டார். அவருடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு, அவர் செய்த பணிகளைப் போற்றுகிறோம்!