
மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு இந்து முன்னணி இரங்கல் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில்,
தேசியவாதி திரு. குமரி அனந்தன் அவர்களின் மறைவிற்கு இந்து முன்னணி சார்பில் இரங்கல் தெரிவிக்கிறோம். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு. குமரி அனந்தன் அவர்கள் இளைஞராக இருந்தபோது கர்மவீரர் காமராஜர் அவர்களின் தொண்டராக தேசியத்தை வளர்க்க பெரும் தொண்டாற்றியவர். இந்து முன்னணி நிறுவனர் வீரத் துறவி ராமகோபாலன் அவர்களோடு நெருங்கிய நட்புடன் இருந்தவர்.
தியாகி சுப்பிரமணிய சிவாவின் பாரதமாதா கோவில் அமைக்கப்பட வேண்டும் என்று பாதயாத்திரை நடத்தியவர். அதற்காக இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி இராம. கோபாலன் அவர்களோடு இணைந்து பெரு முயற்சி எடுத்தவர்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு இளைஞர்களிடம் தேசிய சிந்தனை ஏற்படுத்த செயல்பட்டவர். திரு. குமரி அனந்தன் அவர்களின் மறைவிற்கு இந்து முன்னணி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது பிரிவால் வாடும் அவரது மகளும் பாஜக மூத்த தலைவருமான டாக்டர் திருமதி தமிழிசை சௌந்தராஜன் உட்பட அன்னாரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம். திரு. குமரி அனந்தன் அவர்களின் ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறோம். – என்று குறிப்பிட்டுள்ளார்.
எல்.முருகன் இரங்கல்
தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதியாகவும், காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவராகவும் பொறுப்புகள் வகித்த அய்யா குமரி அனந்தன் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த மன வருத்தமளிக்கிறது.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநருமான திருமதி. தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களது தந்தையான ஐயா திரு.குமரி அனந்தன் அவர்கள், பெருந்தலைவர் காமராசர் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர். மேலும், தமிழ் மொழியின் மீது மட்டற்ற பற்று கொண்டிருந்தமையால், தமிழக அரசின் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இன்று அவர் மறைந்த இந்த துயரமான சமயத்தில், முன்னாள் ஆளுநர் திருமதி.தமிழிசை செளந்தரராஜன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.. – என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் வசந்த் இரங்கல்
அரசியலிலும், இலக்கியத்திலும் செல்வராக திகழ்ந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும், தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் சேவைகள் பல செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் எனது பெரியப்பாவுமான திரு. குமரி அனந்தன் அவர்கள் மறைவு குறித்த செய்தி அறிந்து வேதனையால் வருந்துகிறேன். பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் உண்மை தொண்டனாக உழைத்து, எனக்கும் எனது தந்தைக்கும் அரசியல் வழிகாட்டியாக திகழ்ந்து, காங்கிரஸ் பேரியக்கத்தின் பல தலைவர்களை உருவாக்கிய பெருமை அவரை சேரும். இறுதி மூச்சு வரை தமிழ், காங்கிரஸ் என்று வாழ்ந்து மறைந்த அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்… – என்று, குமரி அனந்தனின் சகோதரர் அமரர் வசந்தின் மகனும் எம்.பி.யுமான விஜய் வசந்த் குறிப்பிட்டுள்ளார்.





