
ஈஷா யோகா மையத்தின் மஹா சிவராத்ரி விழா மற்றும் மாவட்ட பாஜக., அலுவலகங்களை திறந்து வைப்பதற்காக கோவைக்கு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சால்வை அணிவித்து பாஜக.,வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். குறிப்பாக, ‘தமிழ் வாழ்க’ என்று எழுதப்பட்ட பெரிய மலர்மாலையை அமித் ஷாவுக்கு அணிவித்து வரவேற்றார் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை. அதுபோல் தமிழ் எழுத்துகளுடன் கூடிய சால்வையை அணிவித்து வரவேற்றார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.
ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா நாளை கோலாகலமாக நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். இதற்கென அவர், இன்று இரவு கோவை விமான நிலையத்தில் வந்திறங்கினார்.
நாளை காலை கோவை பீளமேட்டில் பாஜக., மாவட்ட கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, மாநில கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். இரவு ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்கிறார்.
அமித் ஷா வருகையை முன்னிட்டு, கோவையில் அவர் தங்கியிருக்கும் ஹோட்டல், பாஜக., மாவட்ட அலுவலகம், ஈஷா யோகா மையம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமித் ஷா தனது வருகை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கருத்து…
“கோயம்புத்தூருக்கு (தமிழ்நாடு) வந்தடைந்தேன். நாளை, மகா சிவராத்திரியின் புனித நிகழ்வில் ஈஷா அறக்கட்டளையில் நடைபெறும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள இருக்கிறேன். பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.