
இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது காகிதக் கப்பல் விட்ட அமைச்சர் சேகர்பாபு வெறும் கண்துடைப்பு வசனங்களை பேசவேண்டாம் என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது…
17.4.25 அன்று தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் துறையின் அமைச்சர் சேகர்பாபு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவை ஒவ்வொன்றும் காகித கப்பல் தான் என்றால் மிகையில்லை.
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடல் அரிப்பைத் தடுக்க 19.80 கோடி ரூபாயில் கடல் அரிப்பு தடுப்பு பணி நடைபெறுவதாகவும் அதை தமிழக முதல்வர் 17/02/2024 அன்று தொடங்கி வைத்ததாகவும் கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது .
ஆனால் நேற்றைய அறிவிப்பில் அமைச்சர் சேகர்பாபு ரூ.30 கோடி செலவில் திருச்செந்தூர் கடற்கரை கடல் அரிப்பு தடுப்புப் பணி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்,
அந்த வகையில் கடந்தாண்டு வெற்று அறிவிப்பாக 19.80 கோடி கடலில் கொட்டப்பட்டது. இந்த ஆண்டு மேலும் 30 கோடி வெற்று அறிவிப்பாக கொட்டப்படவிருக்கிறது என்றுதான் வேதனைப்பட வேண்டியுள்ளது.
தற்போது சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில் கோயில் பணத்தில் ஆயிரம் ஜோடிக்கு திருமணம் மற்றும் 4 கிராம் தாலிக்கு தங்கம் வழங்குவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
அரசு நிதியில் ஏழை எளியோருக்கு சமூக நலத்திட்டங்கள் செயல்படுத்த வேண்டிய மாநில அரசு அதை மடைமாற்றி கோயில் நிதியை எடுத்து திருமணம், தங்கத்தாலி திட்டம் செயல்படுத்துவது திமுக ஓட்டு வேட்டையாட கோயில் பணத்தை சுரண்டுவதேன்றி வேறில்லை.
நேற்றைய அறிவிப்பில் மயிலாப்பூர், பழனி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 10 கோயில்களில் திருவிழாக்காலங்களில் மட்டும் தரிசனக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் அறிவித்துள்ளதை இந்து முன்னணி வரவேற்கிறது.
அதே சமயத்தில் அனைத்து கோயில்களிலும் எல்லா நாட்களிலும் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யவேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது.
கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வருஷத்திற்கு 500 பேருக்கு 1 லட்சம் மானியம் வழங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தொகை அறநிலையத்துறை நிதியில் இருந்து வழங்கப்படுவது ஏற்புடையதல்ல.
மெக்காவுக்கும், ஜெருசலேமுக்கும் செல்ல அரசு நிதியில் மானியம் கொடுப்பதும், இந்துகளுக்கு மட்டும் கோயில் நிதியை எடுத்து மானியம் வழங்குவதும் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாடுக்கு உடைத்த கதைக்கு ஒப்பானதாகும்.
திமுக ஆட்சியில் மூவாயிரம் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக் கூறும் அமைச்சர் அந்த கோயில் திருப்பணிகளுக்கு அனுமதி அளித்தத்தைத் தவிர அரசின் நிதி பங்களிப்பு என்ன என்பதை பற்றி கூறவில்லை.
பக்தர்களின் நன்கொடையில் திருப்பணி முதல் கும்பாபிஷேகம் வரை நடத்தபடும் நிலையில் திமுக அரசு அறிவித்த 1000 கோடி நிதியும் இதுவரை ஒதுக்கப்படாத நிலையில் அமைச்சர் பெருமை பட்டுக்கொள்ள என்ன இருக்கிறது என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.
பாடசாலை மற்றும் கல்லூரி நடத்துவது அரசின் கடமை என்றும் அதை கோயில் நிலத்தில், கோயில் பணத்தில் நடத்தக்கூடாது என்றும் கோயில் சொத்துகளும் நிதியும் கோயிலுக்கும் பக்தர்களுக்குமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் பல வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
ஆனாலும் தற்போது செவிலியர் கல்லூரி முதல் தொழில்பயிற்சி நிறுவனங்கள் வரை கோயில் நிலங்களில், கோயில் நிதியில் நடத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்திருப்பது திமுக அரசின் தோல்வியையும் கோயில் சொத்தை, நிதியை மடைமாற்றும் செயலன்றி வேறில்லை.
அமைச்சர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பேசி அனைத்து மொழி மக்களும் தமிழக கோயில்களுக்கு வந்து, தமிழகம் உலகத்திலேயே தலைசிறந்த ஆன்மீக பூமி என்று பேசுவதாக பெருமைபட்டுள்ளர். அந்த வகையில் தமிழகம் தொன்று தொட்டு இன்றுவரை ஆன்மீக பூமிதான் ஒருபோதும் திராவிட பூமி அல்ல என்பதை அமைச்சர் ஏற்றுகொண்டார் என்பது மகிழ்ச்சியே.
தவிர அமைச்சரின் அனைத்து அறிவிப்புகளும் காகித கப்பல்களாகவும், கானல்நீராகவும் அமைந்துள்ளது என்பது சிறிதும் சகித்துகொள்ள முடியாத ஒன்று. எனவே அறநிலையத்துறை நிதி முறையாக பயன்படுத்துவதை உறுதி செய்ய மத்திய தணிக்கைத்துறை ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும்.
கோயில் நிலங்கள் மற்றும் நிதியை முறைகேடாக கல்வி நிறுவனங்கள் நடத்த பயன்படுத்தக் கூடாது.அரசின் அறிவிப்புக்கள் வெற்று அறிவிப்புகளாக இல்லாமல் உருப்படியான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.