
ஐ.பி.எல் 2025 – பெங்களூரு vs பஞ்சாப் சின்னசாமி மைதானம், பெங்களூரு – 18.04.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை (14 ஓவர்களில் 95/9, டிம் டேவிட் 50, ரஜத் படிதர் 23, அர்ஷதீப் சிங் 2/23, மார்கோ ஜேன்சன் 2/10, சாஹல் 2/11, ஹர்பிரீத் ப்ரார் 2/25, சேவியர் பார்லெட் 1/26) பஞ்சாப் கிங்க்ஸ் அணி (12.1 ஓவர்களில் 98/5, நெஹல் வதேரா ஆட்டமிழக்காமல் 33, பிரியன்ஸ் ஆர்யா 16, ஜோஷ் இங்கிகிஷ் 14, பிரப்சிம்ரன் சிங் 13, ஜோஷ் ஹேசல்வுட் 3/14, புவனேஷ்குமார் 2/26) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பெங்களூருவில் மழை காரணமாக ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. இழந்த நேரம் காரணமாக ஆட்டம் 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது, பூவாதலையா வென்ற பஞ்சாப் கிங்க்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் முதலில் ஆடவந்த பெங்களூரு அணியில் ரஜத் படிதர் (18 பந்துகளில் 23 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் டிம் டேவிட் (26 பந்துகளில் 50 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) ஆகியோரைத் தவிர மற்ற மட்டையாளர்கள் சரியாக ஆடவில்லை. எனவே 14 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கட் இழப்பிற்கு 95 ரன் எடுத்தது.
14 ஓவரில் 96 ரன் என்ற வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த பஞ்சாப் அணியும் அடிக்கடி தனது விக்கட்டுகளை இழந்து வந்தது. பிரியன்ஷ் ஆர்யா (11 பந்துகளில் 16 ரன்), பிரப்சிம்ரன் சிங் (9 பந்துகளில் 13 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (10 பந்துகளில் 7 ரன்), ஜோஷ் இங்க்லிஷ் (17 பந்துகளில் 14 ரன்) ஆகியோர் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை.
ஆனால் நெஹல் வதேரா (19 பந்துகளில் 33 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்) அதிரடியாகவும் இறுதிவரையும் ஆடி 12.1 ஓவர்களில் பஞ்சாப் அணிக்கு 5 விக்கட் இழப்பிற்கு 98 ரன் சேர்த்து வெற்றியைத் தேடித்தந்தார்.
பெங்களூரு அணிக்காக 50 ரன் அடித்த அந்த அணியின் மட்டையாளர் டிம் டேவிட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.