
ஐ.பி.எல் 2025 – ஹைதராபாத் vs மும்பை வான்கடே, மும்பை – 17.04.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை (162/5, அபிஷேக் ஷர்மா 40, ஹென்றி கிளாசன் 37, ட்ராவிஸ் ஹெட் 28, நிதீஷ் குமார் ரெட்டி 19, அனிகேத் வர்மா 18, வில் ஜேஜ்ஸ் 2/14, ட்ரண்ட் போல்ட், பும்ரா, பாண்ட்யா தலா ஒரு விக்கட்) மும்பை இந்தியன்ஸ் அணி (18.1 ஓவர்களில் 166/6, வில் ஜேக்ஸ் 36, ரியன் ரிக்கிள்டன் 31, ரோஹித் ஷர்மா 26, சூர்யகுமார் யாதவ் 26, திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 21, ஹார்திக் பாண்ட்யா 21, பாட் கம்மின்ஸ் 3/26, ஈஷா மலிங்கா 2/36, ஹர்ஷல் படேல் 1/31) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி முதலில் மட்டையாடவந்த ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா (28 பந்துகளில் 40 ரன், 7 ஃபோர்) மற்றும் ட்ராவிஸ் ஹெட் (29 பந்துகளில் 28 ரன், 3 ஃபோர்). இருவரும் நல்ல தொடக்கம் தந்தனர்.
மூன்றாவதாகக் களமிறங்கிய இஷான் கிஷன் இன்று சோபிக்கவில்லை. அதன் பின்னர் வந்தவர்கள் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் வில் ஜேக்ஸ் பந்துவீச்சில் விரைவாக ரன் சேர்க்க முடியாமல் திணறினர்.
நிதீஷ் குமார் ரெட்டி (21 பந்துகளில் 19 ரன்) ஹென்றி கிளாசன் (28 பந்துகளில் 37 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்), அனிகேத் வர்மா (8 பந்துகளில் 18 ரன்), பாட் கம்மின்ஸ் (4 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 8 ரன்) ஆகியோர் அதிரடியாக ரன் குவிக்க முடியவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 5 விக்கட் இழப்பிற்கு 162 ரன் எடுத்தது.
163 ரன் என்ற எளிய இலக்கை அடைய இரண்டாவதாக விளையாட வந்த மும்பை அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா (16 பந்துகளில் 26 ரன், 3 சிக்சர்) மற்றும் ரியன் ரிக்கிள்டன் (23 பந்துகளில் 31 ரன், 5 ஃபோர்) இன்று சிறப்பான தொடக்கம் தந்தனர்.
மூன்றாவதாகக் களமிறங்கிய வில் ஜேக்ஸ் (26 பந்துகளில் 36 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) சிறப்பாக ஆடினார். அவருக்குப்பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் (15 பந்துகளில் 26 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), திலக் வர்மா (17 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 21 ரன், 2 ஃபோர்), ஹார்திக் பாண்ட்யா (9 பந்துகளில் 21 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) ஆகிய அனைவரும் வெற்றியை உறுதி செய்யும் வகையில் விளையாடினர்.
இருப்பினும் இறுதியில் 17.2 ஆவது ஓவரில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்படுகையில் பாண்ட்யா கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, 17.5ஆவது ஓவரில் நமன் தீர் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். இருந்தாலும் 18.1 ஓவர்களிலேயே 6 விக்கட் இழப்பிற்கு 166 ரன் எடுத்து மும்பை அணி வெற்றி பெற்றது.
ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.