
சுஷ்ருதர் சிலை திறப்பு சொல்லும் செய்தி என்ன?
– சாந்திஸ்ரீ துளிபுடி பண்டிட் –
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்
எடின்பரோவில் (ஸ்காட்லாந்து) உள்ள ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் உலகில் உள்ள மிகப் பழமையான மருத்துவக் கல்லூரி. 16 ம் நூற்றாண்டில் துவங்கப்பட்டதாக அறியப்படுகிறது. அது மகரிஷி சுஷ்ருதரை கௌரவிக்க முடிவெடுத்து கடந்த மாதம் (ஜூன் 2026) அவரது உருவச் சிலையை நிறுவியது. 90 கிலோ எடை கொண்ட அந்த வெண்கல சிலை தமிழ்நாட்டில் உள்ள சுவாமி மலையில் வடித்தெடுக்கப்பட்டது.
அறுவை சிகிச்சை மருத்துவத்திற்கு அடித்தளமிட்ட சுஷ்ருதருக்கு சிலை நிறுவியது முக்கியமான நிகழ்வு. மருத்துவ வரலாறு ஐரோப்பாவை மையம் கொண்டதாக அறியப்படும் வேளையில் அவ்வாறு அல்ல என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. ஆனால் இந்தியாவில் அந்த நிகழ்வுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. மருத்துவத் துறையில் சுஷ்ருதரின் பங்களிப்பு பற்றி மேலை நாடுகளில் கிடைக்கும் உறுதியான அங்கீகாரம் இந்தியாவில் கிடைப்பது இல்லையே , அது ஏன் ? என்ற சங்கடமான கேள்வி எழுகிறது.
கணிதவியலில் ஆரியபட்டரை போல சேர்மவியலில் பிங்கலரை போல சுஷ்ருதருக்கும் இந்திய அறிவு பாரம்பரியத்தில் முக்கியமான இடம் இருக்கிறது. அவர் வாழ்ந்த காலம் பற்றி உறுதியாக தெரியாவிட்டாலும் பொது யுகத்திற்கு முன்பு ஆறாம் நூற்றாண்டில் காசி மாநகரில், இன்றைய வாரணாசியில், வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. மனித உடலை கூர்ந்து கவனித்து, வகைப்படுத்தி, அனுபவத்தினால் புரிந்து கொள்ளும் மரபில் வந்தவராக சுஷ்ருதர் அறியப்படுகிறார்.
இந்தியாவின் கடந்த காலத்தைப் பற்றி பேசும்போது அரசர்கள், போர்கள் , நினைவு தூண்கள் மீதே அதிகமாக கவனம் செலுத்தப்படுகிறது. இந்திய அறிவியல்யாளர்களைப் பற்றி போகிற போக்கில் சில தகவல்கள் பதிவாகியுள்ளன. சுஷ்ருதர் தேர்ந்த , சிறப்பான மருத்துவர் மட்டுமல்ல . சீரிய மதிப்பீடுகளின் அடிப்படையில் ஆய்வின் மேற்கொள்ளும் மருத்துவ கலாச்சாரத்தின் பிரதிநிதி. முறையாக அறிவை தொகுத்துக் கொள்ளும் பண்பாட்டின் பிரதிநிதி.
அவருடைய சிந்தனைகளின் தொகுப்பான சுஷ்ருதர் சம்ஹிதை என்ற மருத்துவ நூல் ஆயுர்வேத மருத்துவத்தின் அடித்தளமாக உள்ளது. இது மிகத் தொன்மையான, முழுமையாக தொகுக்கப்பட்ட மருத்துவ நூலாக இருக்கிறது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோய்களும் 300 வகையான அறுவை சிகிச்சை முறைகளும் 125க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை கருவிகளும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அந்த கருவிகள் பலவும் கூர்ந்த கவனத்துடன் வடிவமைக்கப்பட்டதாகவும் வெவ்வேறு தேவைகளை கருத்தில் கொண்டு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.
அறுவை சிகிச்சை மட்டுமின்றி உடற்கூறு, எலும்பு முறிவு, தீப்புண்கள் , விஷம் , மகப்பேறு, மருந்துகள், அறுவை சிகிச்சைக்கு பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய கவனிப்பு என்று அனைத்தும் அதில் உள்ளன. தனித்தனி பிரச்சனைகளும் தீர்வுகளும் என்றில்லாமல் ஒட்டுமொத்தமான மருத்துவ அறிவின் தொகுப்பாக அந்த நூல் இருக்கிறது.
முக அழகு அறுவை சிகிச்சையின் முன்னோடியாக சுஷ்ருதர் அறியப்படுகிறார். அந்த காலத்தில் போர் காயம் அல்லது தண்டனை காரணமாக சிதைந்த மூக்கை முன் நெற்றியில் உள்ள தோலை பயன்படுத்தி சீர்படுத்தி உள்ளார். அவர் பயன்படுத்திய முறை இன்று பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் பொலிவான தோற்றத்திற்கான புனரமைப்பு அறுவை சிகிச்சை முறைக்கு முன்னோடியாக கருதப்படுகிறது.
கண் புரை அறுவை சிகிச்சைக்கான தொழில்நுட்பத்தை முறையாக அவர் விவரித்துள்ளார். உடலை கீறி பிளப்பது, உடலில் இருந்து பிரித்து எடுப்பது, துளையிடுவது, உரசி தேய்தல்/ சீவுதல், கருவிகொண்டு கிளறி ஆய்வது என்று அறுவை சிகிச்சையை பல்வேறு வகைபாடுகளில் விவரமாக எழுதியுள்ளார். ரத்த நாளங்கள், எலும்புகளை பிணைக்கும் தசைநார்கள், எலும்புகள், மூட்டுக்கள் பற்றியும் அவற்றின் இணைப்பு பகுதிகளை பற்றியும் அவருக்கு ஆழ்ந்த புரிதல் இருந்துள்ளது. இந்த இணைப்பு பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்வதை கூடுமானவரையில் தவிர்க்க வேண்டுமென அவர் ஆலோசனை கூறியுள்ளார். ஏனெனில் அந்த பகுதியில் சிகிச்சையின் போது சிறு காயம் ஏற்பட்டாலும் அது கடுமையான ஊனத்தை ஏற்படுத்தும். சில வேலைகளில் மரணம் கூட சம்பவிக்கலாம் என்கிறார்.
மருத்துவ துறைக்கு அவர் ஏற்படுத்தி தத்துவ அடித்தளம் அவரது ஆகச்சிறந்த பங்களிப்பு. அறுவை சிகிச்சை முறைகளை மனப்பாடமாக அறிந்திருப்பதாலோ அல்லது அக தூண்டுதலாலோ நிபுணத்துவம் பெற முடியாது என்று சுஷ்ருதர் வாதிடுகிறார். மாணவர்கள் மீண்டும் மீண்டும் அறுவை சிகிச்சைகளை செய்வதன் மூலமாக நடைமுறையில் தேர்ந்து நிபுணத்துவம் பெற முடியும். சுரைக்காய் அல்லது பூசணையில் கச்சிதமாக வெட்டுவதையும் விலங்குகளின் தோலை கீறி உரிப்பது, தாமரைத் தண்டுகள் , விலங்குகளின் ரத்த நாளங்களில் துளையிடுவதையும் தோல் பைகளில் தைப்பதையும் அவரது மாணவர்கள் நடைமுறை பயிற்சிகளாக மேற்கொண்டனர்.
சடலங்களைக் கொண்டு உடற் கூறாய்வு செய்வதன் மூலம் மாணவர்கள் மனித உடலை நேரடியாக கவனித்து தெரிந்து கொள்வது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். கூர்ந்து கவனிப்பது , பயிற்சி இரண்டும் மருத்துவத்தில் தேர்ச்சி பெற தேவையானவை என்பது அவரது கருத்து.
அறுவை சிகிச்சை முறைகளையும் கடந்து சுஷ்ருதர் மருத்துவ நன்நெறிகளை தீவிரமாக வலியுறுத்தினார். மருத்துவ தொழில் நுட்ப திறமை , பரிவு , ஒழுக்க கட்டுப்பாடுகள், நேர்மை ஆகியவை ஒரே நிரையாக மருத்துவருக்கு கட்டாயம் தேவை என்று அவர் கூறியுள்ளார். சிகிச்சை என்பது மூன்று கட்டங்களை கொண்டதாக — பூர்வ கர்மா (சிகிச்சைக்கு முன்பான தயாரிப்பு ), பிரதான கர்மா (அறுவை சிகிச்சை) , பஸ்சத் கர்மா (அறுவை சிகிச்சைக்கு பிறகான கவனிப்பும் நலமடைதலும்) — அவர் வகைப்படுத்தி உள்ளார்.
முன் தயாரிப்பு, செயல்பாடு, தொடர் கவனிப்பு என்று அவர் வலியுறுத்திய விஷயங்கள் இன்றைய அறுவை மருத்துவத்தின் அடித்தளமாக உள்ளன. எனவே அவரது வெற்றி புதுமையான கண்டுபிடிப்புகளிலும் தொழில்நுட்பத்திலும் மட்டுமல்லாமல் , சரியாக திட்டமிடல் மற்றும் நோயாளிகளின் நலனுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதிலும் அடங்கி இருந்தது.
இந்த சாதனைகளுக்காக சுஷ்ருதர் “பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தை ” என்று பரவலாக அறியப்படுகிறார் . ஆனால் இது அவரது பங்களிப்பின் ஒரு பகுதியை தான் படம் பிடிக்கிறது. தனிமனித திறமை என்றிருந்த அறுவை சிகிச்சையை அவதானிப்பு , சிகிச்சைக்கான படிப்படியான வழிமுறைகள், எத்தனை முறை செய்தாலும் அதே விளைவுகளை தரும் சீரிய முறைகளைக் கொண்ட பொதுவான முறைமையை உருவாக்குவதற்கான முன்னோடி முயற்சிகளை அவர் மேற்கொண்டார். இதை அவரது பணிகள் சுட்டிக் காட்டுகின்றன.
சுஷ்ருதர் சம்ஹிதை நூல் பிரத்யக்க்ஷம் (நேரடியாக பார்ப்பது) , அனுமானம் (ஊகிப்பது) , சான்று ஆகியவற்றை மருத்துவத்தின் மையமாக வைக்கிறது. இந்த கொள்கைகள் தனிமனித அறுவை சிகிச்சையில் புதுமைகளை கொண்டு வந்ததைப் போலவே அறிவியல் வரலாற்றிலும் மாற்றத்தை கொண்டு வந்தது.
இந்திய அறிவு முறைமைகளை பற்றி விவாதிக்கும்போது இதுபோன்ற அறிவியல் பங்களிப்புகளும் கவனம் பெற வேண்டும். இந்திய ஞான மரபு என்றால் தத்துவம், இலக்கியம், சமயம், பண்பாட்டு அடையாளம் ஆகியவை பற்றியே பொதுவாக கவனத்தில் கொள்ளப்படுகின்றன. அவை குறித்து விவாதம் செய்யப்படுகின்றன. அவை இந்திய அறிவு மரபில் முக்கியமானவை என்றாலும் அதொரு பகுதி தான்.
மருத்துவம், வானவியல், கணிதம் , உலோகவியல், மொழியியல், விவசாயம் போன்ற துறைகளிலும் இந்திய பாரம்பரியமும் பங்களிப்பும் அதே அளவுக்கு கவனம் பெற வேண்டும். கலாச்சார நினைவுகள் அல்லது பண்பாட்டு பெருமிதம் மட்டுமே இந்திய அறிவு மரபாக புரிந்து கொண்டால் நீண்ட அறிவியல் ஆய்வு மரபுகள் பார்வையில் படாமல் போய்விடும்.
துரதிஷ்டவசமாக , இரண்டு முரண்பட்ட அதே வேளையில் பயனற்ற அணுகு முறைகளிடையே சுதந்திரத்திற்கு முன்பான இந்திய அறிவியல் சிக்கிக் கொண்டது. ஒன்று, வரலாற்று பூர்வமான இந்திய சாதனைகளை புராணம் அல்லது மிகைப்படுத்துதல் என்று புறம் தள்ளியது . மற்றது, எந்தவிதமான வரலாறு, ஆவண சான்றுகளும் இல்லாமல் சாதித்தோம் என்று கோஷமிட்டது. இரண்டு அணுகு முறைகளும் அறிவார்ந்தது அல்ல. சுஷ்ருதரின் நூல் கூர்ந்து கவனித்தல் , அறிவை தொகுத்துக் கொள்ளுதல், புதுமையான நடைமுறைகள் ஆகியவற்றை வலியுறுத்துவதன் மூலம் கடந்த காலத்தை ஒளிர செய்கிறது. வருங்கால அறிவியல் மரபுக்கு அடித்தளமிட்டுள்ளது.
சுஷ்ருதரின் செல்வாக்கு இந்திய துணைக்கண்டத்தையும் கடந்து பரவியுள்ளது. அப்பாசிய காலத்தில் (முகமது நபிக்கு பின் வந்த மூன்றாவது கலிபா காலத்தில்) சுஷ்ருதர் சம்ஹிதை அரபு மொழியில் கித்தப் ஐ சுஷ்ருத் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது. இதன் மூலம் இந்திய மருத்துவ அறிவு அறுவை சிகிச்சை என்பதையும் கடந்து தெற்காசிய நாடுகளின் அறிவுலகு என்னும் பரந்த வெளியில் நுழைந்தது.
எடின்பரோவில் உள்ள ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் சுஷ்ருதரை கௌரவிப்பது என்ற முடிவின் மூலம் மருத்துவ வரலாறு ஏதோ ஒரு பண்பாட்டின் மரபு என்றில்லாமல் பல்வேறு நாகரீகங்களின் பங்களிப்பின் சங்கமம் என்ற உண்மையை சர்வதேச சமுதாயம் ஏற்றுக் கொள்வதன் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. ஆரோக்கியம் , உயிரி தொழில்நுட்பம், மருந்தியல், மருத்துவ ஆய்வுகள் போன்ற துறைகளில் இந்தியா தன்னுடைய நிலையை வலுப்படுத்த முனைந்து வருகின்ற வேளையில் சுஷ்ருதரின் பாரம்பரியம் புதிய கவனம் பெறுகிறது.
உள்கட்டமைப்பு மேம்பாடும் புதிய முதலீடுகளும் முக்கியமானவை. ஆனால் அறிவியல் துறையில் தலைமை என்பது ஆய்வு மனப்பான்மை, தீவிர பயிற்சி, சான்றுகளுக்கு மதிப்பளித்தல் ஆகியவற்றைச் சார்ந்தே இருக்கிறது. இவைதான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுஷ்ருதரை வழிநடத்திய பண்புகள். அரசியல் அதிகாரம் அல்லது பொருளாதார வல்லமையால் மட்டுமே நாகரீகங்கள் நீடிக்கவில்லை. மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.
நன்றி: கார்டியன்
கட்டுரையாளர் தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கிறார்.



