hindu

எதிரிகள் சிரிக்கிறார்கள்

கட்டுரைகள் தலையங்கம்
hindu
ohm

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

சனாதன தர்மத்திற்குள் பிளவும் பரஸ்பர விரோதமும் நிலவுகிறது என்ற குற்றச்சாட்டு உண்மைக்கு வெகு தொலைவில் இல்லை. பல்வேறு வாழ்க்கை முறைகளின் பன்முகத்தன்மையை, அடிப்படை முரண்பாடுகளாகச் சித்திரிக்கும் போக்கை நீண்ட காலமாகவே பார்த்து வருகிறோம்.

இந்த விரோத உணர்வு  இந்து தர்மத்தின் அடித்தளத்தையே தகர்க்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. சமீபத்தில்  ஒரு இந்து மரபைச் சேர்ந்த துறவி ஒரு கூட்டத்தில்   பிற மதம் ஒன்றைப் பற்றிப் பேசுகையில், “எங்கள் ஆச்சாரியர் போதித்ததையே அந்த மதமும் போதிக்கிறது. எனவே இவ்விரண்டிற்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை” என்று அறிவித்தார். தங்கள் மரபை அந்த மதத்துடன் ஒப்பிடுவதன் மூலம் அவர் தம் சொந்தத் தகுதியைக் குறைத்துக்கொண்டாரா அல்லது அந்தப் பிற மதத்தின் நிலையை உயர்த்தினாரா என்பது அவர் வணங்கும் அந்த இறைவனுக்கே வெளிச்சம்.

உலக மதங்களைப் பற்றி விவாதிக்கும்போது  ​​மற்றொரு துறவி, இஸ்லாம், கிறிஸ்தவம் தங்கள் சொந்த சம்பிரதாயம், அதைச் சாராதவர் என்று நான்கு பிரிவுகளே உலகில் நிலவுவதாகக் கூறினார். மேலும், அவருடைய சம்பிரதாயத்தைச் சேராத பிரிவுகள் இந்து மதத்தைச் சேர்ந்தவை என்பதை அவர் மனதிற்குள்ளும் சம்மதிப்பதில்லை. அவர்கள் பிற மதங்கள் மீது காட்டும் அதே அன்பை, மற்ற இந்து சம்பிரதாயங்கள் மேல் காட்டாதது மட்டுமல்லாமல் பெரும்பாலும் அம்மரபுகள் மீது வெறுப்பைக் காட்டுகின்றனர்.   அவற்றை ஒழிக்கவும் முயற்சிக்கின்றனர்.

கடந்த காலத்தில்  சத்ரபதி சிவாஜி ஔரங்கசீப்பின் கையில் சிக்கித் தோல்வியடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு இந்து மன்னர் சடங்குகளைச் செய்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல  சுயநலத்தால் உந்தப்பட்ட பிற இந்து அதிகாரிகளும் ஆட்சியாளர்களும்  மாற்று மத ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்து  நாட்டையும் சனாதன தர்மத்தையும் அழிக்கத் துணிந்தனர்.

இத்தகைய மனநிலை இன்றும் தொடர்வதாகவே தோன்றுகிறது. அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், அவர்களின் வாழ்க்கைத் துணைகள் போன்றோர் மேல் தங்கள் சித்தாந்தங்களைச் திணித்து அவர்களுக்கு ஆன்மீக வழிகாட்டிகளாகச் செயல்பட்டு  அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி சனாதன தர்மத்தைப் பிளவுபடுத்தும் நோக்கத்தை வலுப்படுத்தி வரும் அரசியல் நோக்கம் கொண்ட சுவாமிஜிகளுக்குப்  ப்ஞ்சமில்லை. இப்போக்கு குறிப்பாகத் தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது.

அவர்களில் சிலர் இந்து மதத்தின் சில தெய்வங்களையும் கோவில் வழிபாட்டையும் இகழ்ந்து பேசி வருகிறார்கள். அதே சமயம்  மாற்று மத வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று அனுதாப வார்த்தைகளும்  ஒற்றுமைச் செய்திகளும் பண்டிகை வாழ்த்துகளும் தெரிவிதத்து வரத் தயங்குவதில்லை.

மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்தச் சூழலைக் கண்டு மகிழ்கிறார்கள்.  தங்கள் ஏளனச் சிரிப்பை அவர்கள் மறைப்பதில்லை. “உங்கள் மதமும் எங்கள் மரபும் ஒன்றே” என்று இந்தச் சுவாமிஜிகள் வெட்கமின்றிச் சிரித்துக்கொண்டு கூறும்போது  ​​மற்றவர்கள் வெளியிலும் மனதிற்குள்ளும் சிரிக்கிறார்கள். ஆயினும்  தங்கள் சொந்த மதத்தை மற்றொன்றுடன் ஒப்பிடும் அந்தச் செயலை அவர்கள் தம் உயிரே போனாலும் செய்ய மாட்டார்கள். மாறாக, அந்த முட்டாள்களின் வார்த்தைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, மக்களைத் தங்கள் மதத்திற்கு மாற்றிக் கொள்கிறார்கள்.

இத்தகைய சூழலில்  பிற மதங்களின் ஆக்கிரமிப்பிலிருந்தும், மதமாற்றம் செய்பவர்களின் தாக்குதல்களில் இருந்தும் இந்து தர்மத்தைக் காக்க, அடிமட்ட அளவில் உழைக்கும் உண்மையான பக்தர்கள் குழப்பத்திற்கும் விரக்திக்கும் ஆளாகிறார்கள்.

தங்கள் குறிப்பிட்ட சம்பிரதாயங்களின் மேல் தீவிரப் பற்றும் வெறியும் கொண்ட இந்த சுவாமிஜிகள், பிற இந்துப் பிரிவுகள் மீது அவமதிப்பு உணர்வைக் கொண்டுள்ளதோடு,  ‘எல்லா இந்து மரபுகளும் ஒன்றே’ என்றும் ‘ஏகம் சத்’ என்றும் கூறி ஒற்றுமையை நிலைநாட்ட முயற்சிப்பவர்கள் மேல் கடும் வெறுப்பையும் கொண்டுள்ளனர். ஒற்றுமையை வலியுறுத்தும் இவர்களுக்கு எதிராகத் தங்கள் ஆதரவாளர்களைத் தூண்டிவிடுவதோடு,  தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துதல் போன்ற தாக்குதல்களையும் ஊக்குவிக்கிறார்கள்.

இந்து மதத்திற்குள் உண்மையான விழிப்புணர்வு இல்லாததற்கு முக்கியக் காரணம்  அதைப் பின்பற்றுவோரில் கணிசமானோருக்கு தம்முடைய மதத்தின் மீதான அர்ப்பணிப்போ, மரியாதையோ, புரிதலோ இல்லாமல் இருப்பதே. சுவாமி விவேகானந்தர் போன்ற மகான்கள் பாடுபட்டு முன்னெடுத்து ஒருங்கிணைந்த இந்து விழிப்புணர்வு என்னும் தொலைநோக்குப் பார்வையை இவர்கள் உணர்வதில்லை. ஆச்சாரியர் என்ற பட்டத்தைச் சூட்டிக்கொண்ட சிலர்,  தங்கள் சொந்த மதக் கோட்பாட்டு குருக்களைப் போற்றும் அதே வேளையில்  பிற ஆச்சாரியர்களுக்கு எதிராகக் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பேசுவதையும் காண்கிறோம்.

ஆழமான அறிவோடு சாஸ்திரங்களின் அடிப்படையில் ஒரு கருத்தை மறுப்பதையோ,   தங்கள் சொந்தக் கோட்பாடுகளின் செல்லுபடியாகும் தன்மையை நிலைநாட்டுவதையோ அவர்கள் முற்றிலுமாக விட்டுவிட்டார்கள். அதற்குப் பதிலாக  ஆச்சாரியர் வேடமணிந்து   தனிப்பட்ட தாக்குதல்கள்,  அவதூறுகள்,  கேலி, கிண்டல், நாகரிகமற்ற,  அர்த்தமற்ற கூச்சல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். இத்தகைய நடத்தையைப் பரப்பும் கும்பல்களையும் ஆதரிக்கிறார்கள்.

விரிவடைந்து வரும் சமூக ஊடக உலகில்  உண்மையை மறைக்கும் வகையில் திரித்துக் கூறி, கூச்சலிடும் குரல்களின் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது. தங்கள் மதம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்நாட்டை ஆள வேண்டும் என்றும்,  இந்து மதத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றும் திட்டமிட்டு உறுதியுடன் செயல்படும் பிற மத அமைப்புகள் இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றன. இத்தகைய மோசமான உள்நாட்டுப் பிளவுகளால் தத்தளிக்கும் இந்துக்களையும்  அவர்களின் வழிபாட்டுத் தலங்களளையும் அழித்தொழிக்க அதிக காலம் காத்திருக்க வேண்டியதில்லை என்று அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். அதைச் சாதிக்கத் தங்களுக்குப் பெரிய அளவில் சிரமப்பட வேண்டியிருக்காது என்றும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இத்தகைய குழுக்கள் ஏமாற்றத்தைச் சந்திப்பதை உறுதிசெய்ய,  இந்து மதத்தின் அனைத்து வேதகாலத் தெய்வங்களையும் பிரார்த்திப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

(Source: தலையங்கம், ருஷிபீடம் தெலுங்கு மாத இதழ், ஆகஸ்ட், 2026)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.