November 29, 2021, 10:28 am
More

  உகாதி பச்சடி – தெலுங்குப் புத்தாண்டு ஏப்ரல் 6 சனிக்கிழமை

  ugadi1 - 1“காலங்களில் நான் வசந்த காலம்!” என்கிறான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. வசந்த காலத்தில் மரங்கள் இளந்தளிரோடு புத்தழகு பூசிக் கொண்டு இயற்கை அன்னைக்கு பச்சை நிற ஆடை அணிவிகின்றன. குயில்கள் மாந்தளிரைத் தின்று குக்கூ என்று கூவுகின்றன. இப்படிப்பட்ட வசந்த காலம் தொடங்குவது சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமையன்று. அதுவே தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகை.

  யுக ஆரம்ப நாள் யுகாதி. அதுவே உகாதி என்றானது. காலச் சக்கிரம் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் தொடங்கும் நாள் உகாதி. எனவே இது காலத்தோடு தொடர்புடைய மிக முக்கியமான பண்டிகை. அன்றைய தினம் சூட்சும பிரபஞ்சத்திலுள்ள தெய்வீக சக்திகளின் அருளைப் பெறுவதற்கு அனுகூலமான காலம்.

  காலம் தெய்வ சொரூபம். நம் மகரிஷிகள் காலத்தை ஒரு சக்கிரமாகக் கண்டார்கள். சூரியனை ஆதாரமாக கொண்டு சௌரமானம், சந்திரனை ஆதாரமாகக் கொண்டு சாந்திரமானம், பிருஹஸ்பதியை ஆதாரமாகக் கொண்டு பார்ஹஸ்பத்யமானம் என்று வகைப்படுத்தி சித்திரை முதல் பங்குனி வரை பன்னிரண்டு மாதங்களாக அமைத்துத் தந்தார்கள்.

  மகாயுகமாக காலத்தைக் கணித்து அதனை கிருத யுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம், கலி யுகம் என்று பகுத்தார்கள். தேவலோகத்து தேவதைகளுக்கு ஒரு நாள் என்பது பூலோக மனிதனின் ஒரு வருட காலம் என்று வகுத்தார்கள். நவகிரகங்களில் ராகு கேதுவை விடுத்து ஞாயிறு முதல் சனி வரை உள்ள ஏழு கிரகங்களின் பெயரால் ஏழு நாட்களைக் கொண்ட வாரத்தை உருவாக்கினார்கள்.

  பிரபவ, விபவ என்னும் அறுபது ஆண்டுகளில் தற்போது வரப் போவது ஸ்ரீவிகாரி நாம சம்வத்ஸரம். இது 33 வது வருடம்.
  தெலுங்கு, கன்னடம், மகாராஷ்டிர மொழி பேசும் மக்கள் சாந்திரமானத்தைக் கடைபிடித்து புத்தாண்டினைக் கொண்டாடுகிறார்கள். தமிழ்நாடு, கேரளம், வங்காளம், பஞ்சாப், சிந்து, அஸ்ஸாம் மக்கள் சௌரமானத்தைக் கடைப்பிடித்து புத்தாண்டினைக் கொண்டாடுகிறார்கள். பார்ஹஸ்பத்யமானத்தை அனுசரித்து குஜராத் மாநிலத்தவர் புத்தாண்டு கொண்டாடுகின்றனர்.

  ugadhi festival cook - 2

  உகாதி பண்டிகை:-
  இந்த ஆண்டு 2019 ஏப்ரல் 6ம் தேதி சனிக்கிழமை சைத்ர சுத்த பாட்யமி அன்று உகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்று முதல் ஒன்பது நாட்களும் இறை வழிபாட்டில் செலவிட வேண்டுமென்பது முன்னோர் சாசனம். நவமி திதியன்று நாம் வழிபட்டுக் கொண்டாடும் ஸ்ரீராம நவமியும் இதில் அடங்கும். இதனை வசந்த நவராத்திரி என்றழைப்பர். ஆண்டின் தொடக்கத்தில் இறைவனைத் தொழுது தொடங்கினால் ஆண்டு முழுவதும் அதே நற்பழக்கம் தொடரும். நல்லருளோடு வாழலாம்.

  உகாதிப் பண்டிகையன்று விடியற்காலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து தலை ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி நகைகள் அணிந்து அலங்கரித்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பர். வீட்டு வாயிலுக்கு மாவிலையாலும் வேப்பையிலையாலும் தோரணம் கட்டி வீட்டை அலங்கரித்து இறைவனை வழிபடுவர். உகாதி வேப்பம்பூ பச்சடியை இறைவனுக்கு படைத்து பின் அனைவரும் அருந்தி களிப்புறும் பண்டிகை உகாதி. வாழ்வில் கஷ்டமும் சுகமும் கலந்தே இருக்கும் என்ற உண்மையை உகாதி பச்சடி எடுத்துரைக்கிறது. மாலையில் பஞ்சாங்க ஸ்ரவணம் செய்வது கட்டாயம் நடைபெறும். இவ்விதம் புத்தாண்டின் ஆரம்பத்தைக் கொண்டாடுவதன் மூலம் ஆண்டு முழுவதும் சுகமும் சந்தோஷமும் நிலைக்கும் என்பது நம்பிக்கை.

  மும்மூர்த்திகளில் பிரம்மதேவருக்கு கோவிலோ வழிபாடுகளோ இருப்பது அரிது. அப்படிப்பட்ட அரிதான அபூர்வமான வழிபாட்டை உகாதியன்று செய்வார்கள். காலத்தோடு தொடர்புடைய பண்டிகையாதலால் பிரம்மதேவரை இன்று பூஜிப்பதில் சிறப்பு உள்ளது.

  இனி உகாதிப் பண்டிகையன்று செய்யும் செயல்களை விரிவாகப் பார்க்கலாம்.

  ugadi festiival - 3

  உகாதி பச்சடி;-
  இனிப்பு, புளிப்பு, காரம், உப்பு, உவர்ப்பு, கசப்பு சேர்த்து அறுசுவைக் கலவையாக உகாதிப் பச்சடியைத் தயாரிப்பார்கள்.

  ஆண்டு முழுவதும் எதிர்கொள்ள வேண்டிவரும் நல்லது கெட்டதுகளையும் கஷ்ட சுகங்களையும் பொறுமையோடும் அடக்கத்தோடும் ஏற்க வேண்டும் என்ற அறிவுரையை இந்த உகாதி பச்சடி அளிக்கிறது.

  தேவையான பொருட்கள்:-
  இதனைத் தயாரிப்பதற்கு வேப்பம்பூக்கள், மாங்காய்த் துண்டுகள், புது வெல்லம், பச்சை மிளகாய் அல்லது சிறிது மிளகாய்ப் பொடி, புதுப் புளி, உப்பு, நீர் போன்றவற்றை உபயோகிக்கிறார்கள். நெய், கரும்பு ரசம், கரும்புத் துண்டுகள், வாழைப்பழம், கொய்யாப் பழம், தேங்காய்த் துண்டுகள் போன்றவற்றையும் சேர்ப்பதுண்டு.

  செய்முறை;-
  முதலில் புது வேப்பம்ப்பூவை அதன் காம்பிலிருந்து பிரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். புதுப் புளியை நீர்விட்டு ஊற வைத்து ரசத்தைப் பிழித்து கொள்ள வேண்டும். வெல்லத்தை நசுக்கி புளிக் கரைசலில் சேர்க்க வேண்டும். சிறிது மிளகாய்ப் பொடியும், உப்பும், மாங்காய்த் துண்டுகளும் சேர்த்துக் கலக்க வேண்டும். இவற்றோடு சிறிது புத்துருக்கு நெய்யும் சேர்ப்பது வழக்கம்.

  சிறியதாக வெட்டிய வாழைப்பழம், கொய்யாப்பழம், புதுத் தேங்காய்த் துண்டுகள், கரும்புத் துண்டுகள், கரும்பு ரசம் இவற்றையும் விருப்பமுள்ளவர் சேர்ப்பர். சோகம் தம்மை நெருங்காமலிருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடு சிலர் அசோக விருட்சத்தின் இளந்தளிரிலைகளைக் கூட பச்சடியில் சேர்ப்பதுண்டு.

  உகாதிப் பச்சடியை இயற்கை நமக்களித்த சுத்தமான பொருட்களால் தயாரிக்க வேண்டும். எதையும் அடுப்பில் வைத்துக் காய்ச்சாமல் பச்சையாகவே தயார் செய்ய வேண்டும்.

  உகாதிப் பச்சடியில் சேர்க்கும் வேப்பம்பூவிற்கு புதன், வெல்லத்திற்கு குரு, மாங்காய்த் துண்டுகளுக்கு சுக்ரன், நெய்யிற்கு சந்திரன் சாந்தமடைந்து பச்சடியை அருந்துவோருக்கு நன்மை செய்வர் என்பது நம்பிக்கை.

  வாதம், பித்தம், கபம் முதலான தோஷங்களை நீக்கும் அறுசுவைக் கலவையால் தயாரித்த உகாதிப் பச்சடியை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.

  ஷட்ருசிகளின் சாரமாக அருந்தும் இந்த பச்சடியில் வெல்லம் என்னும் தித்திப்புச் சுவை சுகம், லாபம், அன்பு, வெற்றி இவற்றைக் குறிக்கிறது. வேப்பம்பூ என்னும் கசப்புச் சுவை துயரம், நஷ்டம், துவேஷம், தோல்வி போன்றவற்றைக் குறிக்கிறது. இவ்விரண்டையும் கலந்து உண்பதால் சுக துக்கங்கள், அன்பு துவேஷம், வெற்றி தோல்விகள் எல்லாம் வாழ்வில் சகஜம் என்றும் அவற்றை எதிர்கொள்ளும் மனதிடம் தேவை என்றும் குறிப்பால் உணர்ந்து வாழ்வில் சமநிலை வகிக்க வேண்டும் என்று தெரிகிறது.

  panchanga sravanam - 4

  பஞ்சாங்க ஸ்ரவணம்:-
  உகாதியன்று கட்டாயம் ஆற்ற வேண்டிய செயல் பஞ்சாங்க ஸ்ரவணம். வானவியலையும் ஜோதிட விஞ்ஞானத்தையும் தெரிவிக்கும் பஞ்சாங்கத்தை சான்றோர் படிக்கக் கேட்பதால் கிரக தோஷங்கள் விலகுகின்றன.

  நம் மகரிஷிகளின் வானவியல் விஞ்ஞானம் தற்போதுள்ள பஞ்சாங்கத்திற்கு அடித்தளம். நாமறிந்த சாஸ்திரத்தை ஆதாரமாகக்கொண்டு எந்த கிரகம் எந்த ராசியில் சஞ்சரிக்கிறது என்று கணக்கிட்டு அவற்றின்படி பலன்களை கணக்கிடுவதே பஞ்சாங்கம். பஞ்சாங்கத்தில் திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்று ஐந்து பாகங்கள் இருக்கும். அதனால்தான் இதற்கு பஞ்சாங்கம் என்று பெயர்.

  திதியின் விஷயத்தில் கவனமாக இருந்தால் செல்வம், வாரத்தின் மூலம் தீர்ககாயுள், நட்சத்திரத்தின் மூலம் பாப பரிகாரம், யோகத்தினால் ஆரோக்கியம், கரணம் மூலம் காரியசித்தியும் வெற்றியும் கிடைக்கின்றன.

  உகாதியன்று மாலை வீடுகளிலோ கோவில்களிலோ கிராம கூடலிகளிலோ அமர்ந்து ஜோதிடர்கள், அறிஞர்கள், சித்தாந்திகள் போன்றோர் தெலுங்கு புத்தாண்டு பஞ்சாங்கத்தைப் படித்து விளக்குவார்கள்.

  உகாதி தினத்தன்று பஞ்சாங்கம் படிக்கக் கேட்டு திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் இந்த ஐந்தின் பலன்களைத் தெரிந்து கொள்வதென்பது கங்கையில் ஸ்நானம் செய்த புண்ணிய பலனை அளிக்கக் கூடியதென்பது முன்னோர் கூற்று. இதன் மூலம் புத்தாண்டில் விவசாயம், மழை பொழிவு, பயிர் விளைவு, விதை விதைப்பதற்கு நல்ல நாள் எது? நாற்று நடுவதற்கு ஏற்ற காலம் எது? போன்றவற்றை பொது மக்கள் அறிய வழி கிடைக்கும். ராசி பலன்கள், கிரக நிலைகள் எவ்வாறு உள்ளனவென்று அறிந்து கொண்டு கிரக சாந்தி ஏதாவது தேவையென்றால் செய்து கொண்டு சுகமாக வாழ்வதற்கும் பொதுமக்கள் பஞ்சாங்கம் படிப்பதை ஸ்ரவணம் செய்வார்கள்.

  பஞ்சாங்கத்தின்படி விவசாயம், மழை, அரசாங்கம் இவ்வாறு ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு அதிபதி இருப்பார்கள். இந்த ஒன்பது அதிபதிகளை நவ நாயகர்கள் என்றழைப்பர். இவர்களின் சஞ்சாரத்தினால் வரப் போகும் நாட்களில் நாட்டு நிலைமை எவ்வாறு இருக்கும் போன்றவற்றைக் கணித்துக் கூறுவார்.

  தனி மனிதனின் நட்சத்திரத்தைப் பொருத்து அவனுடைய வரவு, செலவு, அவமானம். பாராட்டு போன்றவற்றைக் கணக்கிடுவர். இதன் மூலம் அளவுக்கு மீறி செலவு செய்யக் கூடாதென்றும், சூழ்நிலை சரியில்லாத இடத்தில் தற்பெருமை பேசி அவமானப்படக் கூடாதென்றும் கவனமாக இருக்க வேண்டுமென்றும் மக்கள் உணருவர்.

  தற்காலத்தில் எல்லோர் வீடுகளிலும் பஞ்சாங்கம் காணப்படுகிறது. சாமானிய மனிதனுக்குப் புரியாத பல பரிபாஷைகள் அதில் காணப்படும். அதோடு தர்ம சந்தேகங்களும் இருக்கும். இவையனைத்தையும் தீர்த்துக் கொள்வதற்கு நிபுணர்களைக் கொண்டு செய்விக்கும் பஞ்சாங்கப் படனம் பலனளிக்கும்.

  உகாதியன்று பஞ்சாங்க ஸ்ரவணம் செய்பவர்களுக்கு சூரியன் தைரியத்தையும், சந்திரன் இந்திரனுக்குச் சமமான வைபவத்தையும், செய்வாய் சுபத்தையும், சனி ஐஸ்வர்யத்தையும், ராகு தோள்வலிமையையும், கேது குல ஆதிக்கத்தையும் அருளுவார்கள்.

  பஞ்சாங்க சிரவணம் செய்வித்தவருக்கும் செய்தவருக்கும் நவகிரகங்களின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பதை பல ஸ்ருதியாகக் கூறுவார்கள்.

  பஞ்சாங்கம் படிக்கும் பண்டித பிராமணர்களுக்கு தட்சிணை தாம்பூலம் அளித்து சன்மானம் செய்து மக்கள் தாமும் திருப்தி அடைவர்.

  கடந்த ஆண்டு முழுவதும் நம்மோடு சேர்ந்திருந்து நல்லவற்றையும் தீயவற்றையும் அனுபவிக்கச் செய்து, “இனி சென்று வருகிறேன்!” என்று திரும்பிச் செல்லும் ஸ்ரீவிளம்பிக்கு விடை கொடுத்து புத்தாண்டான ஸ்ரீவிகாரி வருடத்திற்கு நல்வரவு கூறுவோம். இறையருளால் எல்லாம் நம்மையே விளையுமென்று நம்புவோம்.

  -ராஜி ரகுநாதன்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,106FansLike
  369FollowersFollow
  45FollowersFollow
  74FollowersFollow
  1,752FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-