
கட்டுரை: முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
28 மே 2021 அன்று நடக்கவிருக்கும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்
நாளை 28 மே 2021 அன்று ஜி.எஸ்.டி கவுன்கில் கூட்டம் கூடவிருக்கிறது. பா.ஜ.க அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த நிதியமைச்சர்கள் இக்கூட்டத்தில் பல முக்கியமான பிரச்சனைகளை எழுப்பப்போவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியப் பொருளாதாரம் பற்றி மாதச் சம்பளம் வாங்கும் சாமானிய இந்தியர்களையும், வயிற்றுப் பசி இருந்தும் வரி பற்றிப் பேசும் இந்தியர்களையும் உருவாக்கி இருக்கும் விவாதப் பொருளாக உருவெடுத்திருக்கிறது ஜி.எஸ்.டி (GST) என்றழைக்கப்படும் பொருள்கள் மற்றும் சேவைகள் வரி.
இந்த ஜி.எஸ்.டியில் அப்படி என்னதான் பிரச்னைகள் உள்ளன எனப் பார்ப்போம். இந்திய அரசுக்குப் பல வழிகளில் வருமானம் வருகிறது. அதில் மிக முக்கியமான வழி, வரி வருவாய்கள்தான்.
இந்தியாவிற்குக் கிடைக்கும் வரி வருவாய்களை இரண்டு பெரிய பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1. நேரடி வரி வருவாய்.
2.மறைமுக வரி வருவாய்.
1.நேரடி வரி வருவாய் நாட்டு மக்கள் சம்பாதிக்கும் பணம் மற்றும் நாட்டு மக்கள் வைத்திருக்கும் சொத்துக்களின் மீது விதிக்கப்படும் வரிகள்தான் நேரடி வரி வருவாய். இந்த வரியை மக்கள் தங்கள் வருமான வரிக் கணக்குகள் வழியாகப் பட்டயக் கணக்காளர்கள் உதவியுடன் மக்களே நேரடியாக அரசாங்கத்துக்குச் செலுத்துவார்கள்.
வருமான வரி, சொத்து வரி போன்றவை நேரடி வரிகளுக்கான உதாரணங்கள். ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தப்படுவதால், இந்த நேரடி வரிகளில் சட்டரீதியாக எந்த மாற்றமும் இருக்காது. இது தனி நபர்கள், வியாபாரிகள், பெரிய நிறுவனங்கள் என்று அனைவருக்கும் பொருந்தும். அவரவர்கள் செலுத்த வேண்டிய வருமான வரித் தொகையினை வழக்கம்போல் செலுத்த வேண்டும்.
2.மறைமுக வரி வருவாய் நாம் பயன்படுத்தும் பொருள்களுக்கு, சேவைகளுக்கு விதிக்கப்படும் வரிகள்தான் இந்த மறைமுக வரிகள். இந்த வகையான வரிகளைச் செலுத்துவதும் மக்கள்தான், ஆனால் நாமே நேரடியாகச் செலுத்துவதில்லை.
நம்மிடம் இருந்து வரிகளை வசூலித்து, நமக்குப் பதிலாக “வியாபாரிகள்” (நமக்குப் பொருள் அல்லது சேவைகளை வழங்குபவர்கள்) அரசுக்குச் செலுத்துகிறார்கள். ஜி.எஸ்.டி (GST) அமல்படுத்தினால் பெரிய அளவில் மாற்றத்துக்கு உள்ளாகப் போகும் வரிகள் இந்த மறைமுக வரிகள்தான்.
ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தப்பட்தால் காணாமல் போன மத்திய அரசின் மறைமுக வரிகள்
எக்ஸைஸ் டியூட்டி என்றழைக்கப்படும் கலால் வரிகள் (சிவிடி, எஸ்.ஏ.டி, கூடுதல் கலால் வரிகள்,
மத்திய விற்பனை வரி,
கலால் வரிகளுக்கான செஸ்கள்),
சேவை வரி,
ஸ்வச் பாரத் செஸ்,
க்ருஷி கல்யாண் செஸ்,
இன்ஃப்ராஸ்ட்ரக்சர் செஸ்,
செகண்டரி அண்ட் ஹயர் எஜுகேஷன் செஸ்,
சர்சார்ஜ்
போன்றவை. மத்திய அரசின் மறைமுக வரிப் பட்டியலில் உள்ள கஸ்டம்ஸ் என்றழைக்கப்படும் சுங்க வரி ஜி.எஸ்.டியில் இணைக்கப்படவில்லை. வழக்கம் போல் சுங்க வரிகள் வசூலிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தப்பட்தால் காணாமல் போன மாநில அரசின் மறைமுக வரிகள்
கொள்முதல் வரி,
மாநில வாட் வரி,
பொழுதுபோக்கு வரி,
சொகுசு வரி,
நுழைவு வரி (Entry Tax),
விளம்பரங்களின் மேலான வரி,
லாட்டரிகள் – சூதாட்டங்கள் மேலான வரிகள்
மாநில செஸ்கள், மாநில சர்சார்ஜ்கள் போன்றவை.

ஜி.எஸ்.டி என்றால் என்ன?
முன்பு பலப் பெயர்களில் வசூலிக்கப்பட்டு வந்த வரிகளுக்குப் பதிலாக இப்போது ஜி.எஸ்.டி என்கிற ஒற்றை வரி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இந்த ஜி.எஸ்.டி வரியில் ஒரே ஒரு சிறப்பு என்னவென்றால், முதலில் பொருளை வாங்குபவர், ஒரு குறிப்பிட்டத் தொகையை வரியாகச் செலுத்துவார்.
அதற்கடுத்ததாக அந்தப்பொருளை வாங்குபவர், தான் செலுத்த வேண்டிய வரித் தொகையில், முதலாமவர் செலுத்திய வரித்தொகையை வரவாக வைத்துக் கொள்ளலாம்.
உதாரணமாக ராமன் ஒரு பொருளுக்கு வரியாக 10 ரூபாய் செலுத்துகிறார் . பின் தன் லாபத்தை வைத்து பாலாஜியிடம் விற்கும் போது, பாலாஜி வரியாக 12 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும். அப்போது ராமன் செலுத்திய 10 ரூபாயை பாலாஜி தன் வரிக் கணக்கில் வரவு வைத்துக் கொண்டு 12 ரூபாய் வரியில் வெறும் 2 ரூபாயை மட்டும் வரியாக அரசுக்குச் செலுத்தினால்போதும்.
இப்படி வரியை வரவு வைத்துக் கொள்வதற்குதான் இன்புட் டாக்ஸ் க்ரெடிட் (Input Tax Credit) என்று சொல்லப்படுகிறது.
ஜி.எஸ்.டி ஏன் வந்தது?
ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே விலையினைக் கொண்டு வர வரி மேல் வரி விதிக்கப்படுவதைத் தவிர்க்க.
இந்தியாவில் மத்திய அரசு வரி விதிகள் மற்றும் ஒவ்வொரு மாநில அரசுக்கும் ஒரு தனி வரி விதிகள் எனப் பல சட்டங்கள் இருக்கின்றன. அவற்றை ஒருங்கிணைத்து ஒரே சட்டமாகக் கொண்டு வர.
இதுவரை சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி அரசு பதிவு செய்யப்படாமல், மிகக் குறைந்த வருமானமே வருவதாகப் பொய்க் கணக்குக் காட்டி வரி செலுத்தாமல் இருப்பவர்களை வரி செலுத்த வைக்க.
ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டதில் இருந்து, எங்கெல்லாம் சப்ளையாகி, யார் இறுதியாக வாடிக்கையாளரிடம் விற்றார் என்பது வரையான முழு வணிகப் பயணத்தையும் (Audit Trial) கணினி மயமாக்க.
ஜிஎஸ்டி வந்த வரலாறு.. ஜிஎஸ்டி வரிவிவரங்கள்.. ஜிஎஸ்டி கவுன்சில் குறித்த தகவல்கள் அடுத்தடுத்த பகுதிகளில்…