
கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு அந்த சான்றிதழை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து மகிழும் மனநிலையில் உள்ளீர்களா. அப்போ இந்த தகவல் உங்களுக்குத்தான்.
நீங்கள் சமீப காலமாகவே இதுபோன்ற நிறைய போஸ்ட்களை பார்த்திருப்பீர்கள். “நான் தடுப்பூசி போட்டுவிட்டேன்.. அப்போ நீங்க..” என்பதை போல தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தங்கள் சர்டிபிகேட்டை பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும், வாட்ஸ்அப் ஸ்டேடசிலும் வைத்திருப்பார்கள்.
பிறருக்கு இது ஊக்கம் தரும் என அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், வெறுமனே ஊசி போட்டதை சொன்னால் ஓகேதான். சான்றிதழை பதிவேற்றம் செய்வதுதான் சிக்கல்.

சமூக வலைத்தளங்கள், ஆன்லைன் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டுள்ள டுவிட்டர் அக்கவுண்ட் Cyberdost. இதில் தான் இந்த விழிப்புணர்வு தகவல் படத்தோடு வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டதுமே சான்றிதழ் வழங்கப்படும். அதில், உங்கள் பெயர், உங்கள் அடையாள அட்டையின் கடைசி நான்கு எண்கள், வேக்சின் பெயர் உள்ளிட்ட பல தனிப்பட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்கும். அதை பார்த்து, ஆன்லைன் மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே இப்படிச் செய்யாதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளது இந்த டுவிட்டர் பக்கம்.
எனவே, நீங்களும் இனிமேல், சர்ட்டிபிகேட்டை ஷேர் செய்யாதீர்கள். அதேநேரம், தடுப்பூசி செலுத்திய தகவலை கம்பீரமாக சொல்லவும் மறக்காதீர்கள்.
சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகள், எதிர்காலத்தில் தடுப்பூசி சான்றிதழ் இருந்தால்தான் தங்கள் நாட்டுக்குள் அந்த பயணிகளை அனுமதிக்கப்போகின்றன. எனவே, இந்த சான்றிதழ்களிலுள்ள தகவல்கள் பிறரால் காப்பியடிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதுதான் இந்த எச்சரிக்கைக்கு காரணமாம்.
Beware of sharing #vaccination certificate on social media: pic.twitter.com/Tt9vJZj2YK
— Cyber Dost (@Cyberdost) May 25, 2021