தமிழகத்தில் ஆலைகள் மூடப்படுவது அதிகரிக்கிறது: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் ஆலைகள் மூடப்படுவது அதிகரிக்கிறது, ஆனால் அரசு மவுனம் சாதித்து வருகிறது, மேலும் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் பெருகிவிட்டது என்று புகார் கூறினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. சௌந்தரராஜன். தமிழக சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ரோசய்யா உரை நிகழ்த்தினார். ஆளுநர் உரையைப் புறக்கணித்து திமுக, புதிய தமிழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளரிடம் பேசிய மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., சௌந்தர்ராஜன், ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினரின் அராஜகம் தலைவிரித்தாடியது. ஆளும் கட்சியினர் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர். பணபலத்தால் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதைத் தட்டிக் கேட்க வேண்டிய தேர்தல் ஆணையமும், ஆளுநரும் இதனை கண்டு கொள்ளவில்லை. தினம் தினம் கொலைகளும், கொள்ளைகளும் அரங்கேறி வருகின்றன. ஆனால் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதாக பாராட்டுப் பத்திரம் வாசிப்பது சரியா? தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சலுக்கு ஏராளமானோர் செத்து மடிகின்றனர். நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழகத்தில் ஆலைகள் மூடப்படுவது தொடந்து அதிகரித்து வருகிறது, ஆனால் அரசு கண்டுகொள்ளாமல் மவுனம் சாதித்து வருகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.