Home அடடே... அப்படியா? பள்ளி நிர்வாகம் தைரியமாக முடிவெடுக்க வேண்டிய நேரம் இது!

பள்ளி நிர்வாகம் தைரியமாக முடிவெடுக்க வேண்டிய நேரம் இது!

dpi office chennai
dpi office chennai

வேதா டி.ஸ்ரீதரன்

தமிழக அரசின் ‘தேர்வுகள் ரத்து, ஆல் பாஸ்’ என்ற முடிவை நான் வாய்திறந்து வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தற்போதைய சூழலில் இந்த முடிவு பள்ளி மாணவர்கள் பெரும்பாலோரின் ஒழுக்கத்தையும் எதிர்காலத்தையும் அடியோடு நாசமாக்கி விடும் என்பது புரிந்திருப்பதால் இந்த முடிவை நான் எதிர்க்கிறேன். நான் குறிப்பிடும் விஷயங்களைப் புரிந்து கொள்ள முடிகிற ஒவ்வொருவரும் அரசின் முடிவை எதிர்க்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறேன்.

தேர்வு என்பது உளவியல் ரீதியாக மாணவனைப் பாதிக்கிறது என்பது கல்வி சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்கு தெரிந்த விஷயம்தான். அதிலும் பொதுத்தேர்வுகள் மாணவர்களைப் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன என்பதை அனைவருமே அறிவோம்.

ஆனால் அதற்கான தீர்வு என்ன என்பதைக் கல்வியாளர்கள் அளவில் அனைத்து மட்டங்களிலும் யோசித்து நீண்ட கால அடிப்படையில் திட்டங்களை ஏற்படுத்த வேண்டும். அதற்கும் தற்போதைய முடிவுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. தற்போதைய அறிவிப்பு முட்டாள்தனமானது, தான்தோன்றித் தனமானது. இது கல்விச் சூழலை அடியோடு நாசமாக்கி விடும்.

எடுத்தேன் கவிழ்த்தேன் செயல்பாடு

பள்ளிகள் வழக்கம் போல இயங்க வேண்டும் என்பதே 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்களின் விருப்பம் என்று போன வாரம் கல்வி அமைச்சர் தெரிவிக்கிறார்.

பொதுத்தேர்வுகளுக்கான கட்டணங்கள் செலுத்துவதற்கான காலக்கெடு குறித்த நினைவூட்டல் சுற்றறிக்கை நேற்று வந்து சேர்கிறது.

பொதுத்தேர்வுகள் ரத்து என்ற அறிவிப்பு இன்று வெளியாகிறது.

– இது என்ன ஆட்சியா அல்லது துக்ளக் தர்பாரா?

யதார்த்தச் சூழல் என்ன என்பது குறித்து யார் யார் – எந்த மட்டத்தில் – ஆலோசனை செய்து இத்தகைய முடிவு எடுக்கப்பட்டது?

இவ்வளவு பெரிய ஒரு முடிவை இவ்வளவு ரகசியமாக எடுக்க வேண்டிய காரணம் என்ன? அதைத் திடுதிடுப்பென்று அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் என்ன? தேர்வுகள் தேவையா இல்லையா என்பதை எந்த அடிப்படையில் யார் முடிவு செய்வது?

தேர்வுகள் இல்லாமல் கல்விச் சூழல் அமைய முடியாது

கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா காரணமாக நாடு முழுவதும் அச்சம் நிலவியது. மத்திய அரசாங்கம் தொடர் ஊரடங்கை அமல்படுத்தியது. இவை நியாயமானவை. காரணம், அப்போது கொரோனா குறித்து நமக்கு எதுவுமே தெரியாது. உலகம் முழுவதும் கொத்துக் கொத்தாக மனிதர்கள் இறந்து கொண்டிருந்தார்கள். இந்தியாவிலும் மரண பீதி நிலவியது. இத்தகைய போர்க்காலச் சூழலில் பள்ளிக் கல்வி குறித்தும், தேர்வுகள் குறித்தும் யோசிக்கும் நிலையில் நம் தேசம் இல்லை.

ஆனால், இந்த ஆண்டு நிலைமை எவ்வாறு உள்ளது? இப்போதைய சூழலில் ஆற அமர யோசித்து முடிவெடுப்பது சாத்தியமில்லாத விஷயமா?

தேர்வுகள் மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவது உண்மை, அதேநேரத்தில், தேர்வுகளால் ஏராளமான நன்மைகள் உண்டு என்பதும் உண்மையே. இவற்றில் முதன்மையானது, தேர்வு குறித்த அச்சத்தின் காரணமாகவே பெரும்பாலான மாணவர்கள் பாடங்களை ஒழுங்காகப் படிக்கிறார்கள். மாணவர்களுக்கு விளையாட்டுப் புத்தி அதிகம். (அவசியமும் கூட) இதனால் அவர்களுக்கு சீரியஸ்னெஸ் குறைவு. இதனாலும், வயது காரணமாக ஏற்படும் தடுமாற்றங்களாலும் அவர்கள் வழி தவறிச் செல்லும் வாய்ப்புகள் அதிகம்.

அம்மா அப்பா இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களில் மாணவர்களைக் கண்காணிக்கும் குடும்பச் சூழல் மிகவும் குறைவு. பெரும்பாலான குடும்பங்களில் ஒரே ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே என்ற அளவில் குடும்பங்கள் சுருங்கி விட்டன. இதனால் பெற்றோர் காட்டும் கண்டிப்பு குறைந்து விட்டது. செல்லம் அதிகரித்து விட்டது. இதன் காரணமாக, இன்றைய இளைய தலைமுறையினர், சிறு சிறு ஏமாற்றங்களைக் கூடத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் இல்லாதவர்களாகவே வளர்கிறார்கள்.

பொதுத்தேர்வு முடிவுகள்தான் தங்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்ற அச்சம் இருப்பதாலேயே அவர்கள் படிப்பில் நல்ல கவனம் செலுத்துகிறார்கள். இந்த கவனம் சிறு வயது முதல் தொடர்ச்சியாக இருப்பதற்குப் பள்ளிக் கல்விச் சூழல் துணைபுரிகிறது. இதனால் மாணவர்களின் மனதில் சீரியஸ்னெஸ் அதிகரிக்கிறது. இதன் காரணமாக அவர்கள் மனதில் ஒழுக்கம் வளர்கிறது. நான் மேலே குறிப்பிட்ட நெகடிவ்களை இது பெருமளவு காம்பன்ஸேட் பண்ணுகிறது.

கல்வி அறிவை வளர்ப்பதிலும் தேர்வுகளின் பங்களிப்பு அதிகம். பாடங்களை மாணவர்கள் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இதை உறுதி செய்வதற்காகவே தேர்வுகள். முதல் பாடத்தை முழுமையாகப் புரிந்து கொண்டால்தானே அடுத்த பாடத்துக்குப் போக முடியும்? அப்போதுதானே கல்வி வளர்ச்சி ஏற்பட முடியும்?

சுமார் 20 சதவிகிதம் மாணவர்கள்தான் இயல்பாகவே கல்வி கற்கும் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பது கல்வியாளர்களின் கருத்து. இவர்கள்தான் பாடங்களை முழுமையாகப் புரிந்து கொள்வதிலும் நினைவு வைத்திருப்பதிலும் அக்கறையுடன் இருக்கிறார்கள். மீதி 80 சதவிகிதம் பேருக்கும் ஆசிரியர்கள் ரொம்ப மெனக்கெட வேண்டும். இவர்களது முன்னேற்றத்தைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து, குறைதீர் நடவடிக்கைகள் எடுத்து அவர்களது கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் தேர்வுகளின் பங்களிப்பு கட்டாயத் தேவை.

மேலும், தேர்வுகள் மாணவர்களின் திறன்களை அதிகரிப்பதிலும் துணை நிற்கின்றன. பாடத்தைப் புரிந்து கொள்வது, நினைவில் வைப்பது, மீண்டும் மீண்டும் அதைக் கவனமுடன் நினைவுபடுத்திக் கொள்வது, குறிப்பிட்ட கால அளவுக்குள் விடைகளை எழுதுவது – முதலிய திறன்களை வளர்ப்பது தேர்வுகளே. இளவயதில் ஒருசில திறன்களை மேம்படுத்திக் கொள்வதில் கிடைக்கும் அனுபவம் பிற்காலத்தில் அவர்களுக்குப் பல்வேறு விதங்களில் உதவியாக இருக்கும் என்பது கல்வியாளர்களின் கூற்று.

எனவே தேர்வுகள் இல்லாமல் கல்விச் சூழல் அமைய முடியாது.

தற்போதைய முடிவினால் எத்தகைய பின்விளைவுகள் ஏற்படும்?

1. மாணவர்களின் மனநிலையில் சீரியஸ்னெஸ் குறையும்.

இதனால் பள்ளிக்கு வரும் ஆர்வம் குறையும். கல்வியின் மீது மரியாதை குறையும் வயதுக் கோளாறுகள் அதிகரிக்கும். மொபைல் பயன்பாடு அதிகரிக்கும்.

2. கல்வித் தொடர்ச்சி அறுபடும்.

கல்வியில் தொடர்ச்சி முக்கியமானது. இது இழையறுந்து போனால் மாணவரின் அறிவுத் தரம் பாதிப்படையும். அதிலும், தேர்வு எழுதுவதில் தொடர்ச்சி அறுந்து போனால், அவர்களது எதிர்கால கல்லூரிப் படிப்பும் பாதிப்படையும்.

3. கண்காணிப்பு இல்லாத சூழல் உருவாகும்.

சிறுவர்கள் எப்போதும் பெரியவர்களின் பார்வையில் இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக வளர்இளம் பருவத்தினரை மூத்தவர்கள் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் தடம் புரள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இது மாணவர்களின் ஒழுக்கத்தையும் எதிர்காலத்தையும் முழுமையாகப் பாதிக்கும்.

பெற்றோரும் கண்காணிப்பதில்லை, ஆசிரியர்களும் கண்காணிக்கவில்லை என்றால் அந்தப் பிள்ளைகள் என்ன ஆவார்கள் என்பதைக் கற்பனை செய்யவே கஷ்டமாக இருக்கிறது.

படிக்க வேண்டியதும் நல்ல குடிமகனாக உருவாக வேண்டியதும் மாணவனின் கடமை என்பதை வலியுறுத்தும் சமுதாயச் சூழல் குறைவாகவே இருக்கிறது. ஆனால், குழந்தைகள் உரிமை, பெண்பிள்ளைகள் உரிமை முதலிய விஷயங்கள் பற்றிய ஏட்டுச் சுரைக்காய் சட்டங்கள் மாணவர்களின் மனங்களில் நன்கு பதிய வைக்கப்பட்டுள்ளன. இதனால் பள்ளி நிர்வாகிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களைக் கண்டிப்பதில் பெரும் அச்சம் நிலவுவதையும் கண்கூடாகவே பார்க்கிறேன்.

4. மொபைல் பயன்பாடு அதிகரிக்கும்.

ஏற்கெனவே மொபைல் பயன்பாடு பெரிதும் அதிகரித்திருக்கிறது. கொரோனா சூழலில் கிடைத்த விடுமுறையும், ஆன்லைன் வகுப்புகளும் இதை மேலும் அதிகரிக்கச் செய்து விட்டன.

எல்லாக் காலத்திலும் மதுவின் பயன்பாடு இருந்து வந்த்து. எனினும், டாஸ்மாக் தான் மதுவுக்கு வெகுஜன அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தந்தது. இதன் விளைவுகளை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இதேபோல, ஏராளமான மனோ வக்கிரங்களுக்கும் குடும்ப விரிசல்களுக்கும் அஸ்திவாரமாக அமைவது மொபைல் பயன்பாடு. குறிப்பாக, ஆபாச வக்கிரங்களுக்கு வெகுவிரைவில் சமுதாய அங்கீகாரம் கிடைக்கும் என்பதை என்னால் நிதரிசனமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த அச்ச உணர்வு சமுதாயத் தலைவர்களுக்கு இன்னும் ஏற்படவில்லை என்றே நான் நினைக்கிறேன். ஆனால், நான் சந்திக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் இது புரிந்துதான் இருக்கிறது.

இது நம் கழுத்தின் மீது தொங்கிக் கொண்டிருக்கும் கத்தியைப் போன்றது. தமிழக அரசின் முடிவு இந்த ஆபத்தின் வேகத்தை அதிகரிக்கவே துணைபோகும்.

5. கல்விச் சூழல் குழப்பமடையும்.

கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின் – பள்ளிகளின் செயல்பாடுகளில் என்ன வேறுபாடு? என்று நிறைய ஆசிரியர்களிடம் கேட்டேன். மாணவர்களை வகுப்பறையில் உட்கார்த்தி வைத்துப் பாடம் நடத்தும் சூழலை ஏற்படுத்துவதே கடினமாகி விட்டது என்று அவர்கள் அனைவரும் குறிப்பிட்டார்கள். தற்போது நிலைமை இன்னும் மோசமாகும். ஒரு மாதம் கஜகர்ணம் அடித்து மாணவர்களை வகுப்பறைகளில் பொறுமையாக உட்கார்த்தி வைத்தால், அவர்களை மீண்டும் கட்டவிழ்த்து விடுவது போல இருக்கிறது அரசின் செயல்பாடு.

அதுமட்டுமல்ல, ஆசிரியர்களிடமும் இதனால் உளவியல் பாதிப்புகள் இருக்கும். அதிலும், தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் தொடர்ச்சியாகப் பாதிப்படைவதும், குடும்பச் சூழலில் ஏற்படும் பொருளாதாரக் கஷ்டங்களும் – இவற்றால் அவர்களிடம் ஏற்படும் உளவியல் பாதிப்புகளும்  எத்தகைய விதங்களில் மாணவர்களைப் பாதிக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. இதுவும் பெரிய ஆபத்து.

நான் குறிப்பிட்டிருக்கும் முதல் நான்கு விஷயங்களின் தாக்கம் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் மிக அதிகமாக இருக்கும்.

ஏற்கெனவே, ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்கள் தினக்கூலிக்குப் போவதாக அறிகிறேன். இத்தகைய சூழலில் – அதுவும் பெற்றோர் கண்காணிப்பு மிகவும் குறைவாக இருக்கும் குடும்பங்களில் வளரும் – இந்த மாணவர்கள்களிடம் பணப்புழக்கம் இருப்பது பெரிய சீர்கேட்டுக்கு வழிவகுக்கும்.

நான் குறிப்பிட்டுள்ள காரணங்களை ஒவ்வோர் ஆசிரியராலும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். பார்க்கப் போனால், நான் சொல்லாமல் விட்ட ஏராளமான விஷயங்களை அவர்கள் உரிய உதாரணங்களுடன் விளக்குவார்கள்.

எனவே, அரசின் இந்த முடிவு அடியோடு நிராகரிக்கத் தக்கது.

தற்போதைய சூழலில் பள்ளிகளின் பொறுப்பு என்ன?

1. அரசின் முடிவைத் திரும்பப் பெற வைக்க எந்தெந்த வழிகளில் முயற்சி செய்ய முடியுமோ, அத்தனை வழிகளிலும் முயற்சி செய்ய வேண்டும்.

2. இல்லாவிட்டால், பள்ளி அளவில், பெற்றோர்கள் ஆதரவுடன் பள்ளி இறுதித் தேர்வை நடத்தி, அதன் தேர்ச்சி அடிப்படையில்தான் அடுத்த ஆண்டு அட்மிஷன் தருவோம் என்று அறிவிக்கலாம். அல்லது, இதுபோன்று நமது பள்ளி அளவில் அல்லது நாலைந்து பள்ளிகள் இணைந்து தீர்மானமாக முடிவெடுத்துச் செயல்படுவது பள்ளிகளின் கடமை.

ஏனென்றால் மாணவர்கள் நம் பிள்ளைகள். அவர்களின் எதிர்காலத்துக்கான பொறுப்பும் அக்கறையும் அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் இருக்கலாம். நமக்கு இல்லாமல் போகலாமா?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version