Home உரத்த சிந்தனை தோல்வி பயத்தில் திமுக.,வினர் மீது… வருமான வரி சோதனையா?!

தோல்வி பயத்தில் திமுக.,வினர் மீது… வருமான வரி சோதனையா?!

income tax raid
income tax raid

“பாஜக தோல்வி பயத்தில் வருமான வரி ரெய்டுகளை ஏவி விடுகிறது”! – திமுக தலைமை அறிவிப்பு.

சரி ஐயா பாஜக தோல்வி பயத்தில் வருமான வரிச் சோதனையை ஏவி விடுகிறது என்றே ஒரு கணம் வைத்துக் கொள்வோம்!

நீங்கள்தான் ‘தோல்வி பயம்’ சற்றும் இல்லாத ‘வெற்றி வீரர்கள்’ ஆயிற்றே?

தைரியமாக எதிர் கொள்ள வேண்டியதுதானே வருமான வரி சோதனையை?

“வந்து பார்த்துங்கடா – வீட்டை மூலை முடுக்கெல்லாம் சோதனை நடத்துங்கடா – வேண்டுமானால் வீட்டு வாசல் கேட்டையே பூட்ட வேண்டாம் – வெளியில் ‘ஜெயன்ட் சைஸ்’ பெரிய ஸ்க்ரீன் வைங்க – உள்ளே என்ன சோதனை நடக்கிறது என்று ‘லைவ்’வா போட்டுக் காட்டுங்க – பொது மக்கள் பார்க்கட்டும்- எங்களுக்கு மடியில் கனமில்லை!”- என்று தைரியமாக அறிக்கை விட்டால் நீங்கள் அசல் நேர்மையாளர்கள்!

அதை விட்டு விட்டு – “தேர்தலுக்கு நான்கு நாள் இருக்கும் போது ரெய்டு ஏன் நடத்துகிறார்கள்?”- என்ன ஐயா கேள்வி இது?

தேர்தல் நெருங்கி வரும் நாள் என்றால் எந்த ஒரு சட்ட பூர்வமான நடவடிக்கையும் நிறுத்தி வைக்கப் பட வேண்டும் – இத்தனை நாளுக்கு முன்பாக நடத்தக் கூடாது என்று ஏதாவது சட்டம் உள்ளதா என்ன?

சில மாதங்கள் முன்பு உங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகனே பேசினாரே:

“தேர்தல் முடியும் வரை கழக உடன் பிறப்புகள் ஒரு உறுதி மொழியை எடுத்துக் கொள்ள வேண்டும்…
வருமான வரித் துறைக்குப் புகார் அளித்து ஒருவர் மற்றவரைப் போட்டுக் கொடுக்க கூடாது!” – நா தழுதழுக்க வேண்டிக் கொண்டாரே துரைமுருகன்!

அவர் என்ன பாஜக ஆட்களுக்கா அந்த வேண்டுகோளை வைத்தார்? அல்லது அதிமுகவுக்கு வைத்தாரா?

உங்கள் கட்சி ஆள்களுக்குத்தானே அந்த வேண்டுகோளை வைத்தார்?

“யார் யார் தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிட விரும்புகிறீர்களோ – விருப்ப மனு கொடுங்கள் – கட்டணம் செலுத்துங்கள் -நேர்காணலுக்கு வாருங்கள்”- என்று கூப்பிட வேண்டியது!

கண்துடைப்புக்கு ஓரு “நேர்காணல்”!

ஸ்டாலின் தொகுதி – கொளத்தூர் – வரும் போது அவர் ஒருவர் மட்டுமே மனு கொடுத்திருந்தாலும் அவர் எதிரே வந்து மனுதாரர் நாற்காலியில் உட்கார்ந்து கொள்வாராம்!

அவரை எதிரில் உட்கார வைத்து துரைமுருகன் ‘நேர்காணல்’ நடத்துவாராம்!

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி பெயர் வரும்போது உதயநிதி மட்டும் – அல்லது அவர் சார்பில் பலர் – அந்தத் தொகுதிக்கு ஒரே பெயரில் மனு கொடுப்பாங்களாம்!

அவரும் வந்து பவ்யமாக நின்றபடியே ‘நேர்காணலில்’ பங்கேற்பாராம்! பெற்ற தகப்பனே மகனுக்கு அவர் கட்சியில் சேர்ந்த விவரங்கள், கலந்து கொண்ட கூட்டங்கள், கட்சியில் ஆற்றிய பணிகள் இவை பற்றி எல்லாம் மகனிடமே தகப்பன் கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்வாராம்!

அப்படி ஒரு ஜனநாயகமாம் கட்சியில்! என்னமா சீன் காட்டினீர்கள்!!

கடைசியில் வேட்பாளர்கள் பலர் யார்?

காட்பாடி என்றால் 80 வயதுக்கு மேலானாலும் துரை முருகன்தான்!

ஆத்தூரில் (திண்டுக்கல் மாவட்டம்) ஐ.பெரியசாமி -பழனியில் அவர் மகன் பெ.செந்தில் குமார்!

ஒட்டன் சத்திரத்தில் 6 ஆவது முறையாக (1996 -2001 – 2006- 2011- 2016- 2021) சக்ர பாணிதான்!

தூத்துக்குடி என்றால் கீதா ஜீவன்தான் (தூத்துக்குடி பெரியசாமி மகள்)

ஆலங்குளம் என்றால் ஆலடி அருணா மகள் டாக்டர் பூங்கோதைதான்!

மதுரை மத்திய தொகுதி என்றால் PT பழனிவேல் ராஜன் மகன் பழனிவேல் தியாகராஜன்தான்!

திருவெறும்பூர் என்றால் அன்பில் பொய்யாமொழி மகன் மகேஷ் பொய்யாமொழிதான் வேட்பாளர்.

திருச்சி மேற்கு என்றால் நேருதான்!

வீரபாண்டி என்றால் வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகன் செழியனின் உறவினர் தருண்தான்!

திருச்சுழி என்றால் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் மகன் தங்கம் தென்னரசுதான்!

திருநெல்வேலி என்றால் முன்னாள் MLA A.L. சுப்ரமணியம் மகன் ALS லட்சுமணன்தான்!

வில்லிவாக்கம் என்றால் க. அன்பழகன் பேரன் வெற்றி அழகன் என்கிறார்கள்!

தி. நகரில் ஜெ.அன்பழகனின் சகோதரர் ஜெ.கருணாநிதி.

இப்படிப் பல தொகுதிகளை வாரிசுகளுக்கும், மேலும் பல தொகுதிகளை அந்தந்த மாவட்டக் ‘குறுநில மன்னர்களுக்கும்’ – ‘முரட்டு பக்தர்களுக்கும்’- வேண்டப் பட்டவர்களுக்கும் ஒதுக்கீடு செய்துவிட்டு அப்புறம் கண்துடைப்புக்கு ஒரு பிரமாதமான “நேர்காணல்”

பணம் கட்டிவிட்டு சீ்ட்டு கிடைக்காமல் ஏமாந்து போனவன் எத்தனை பேர்?

அவன் என்ன கொள்கைக் கோமானா? அறவழியில் நின்று பொதுச்சேவை செய்யத் துடிப்பவனா?

எனக்கு வாய்ப்புக் கிடைக்கா விட்டாலும் கட்சி நிறுத்திய வேட்பாளருக்குப் பாடுபடுவேன் – கட்சி கட்டளையிடும் பணியைச் செய்வேன் – என்று லட்சிய பூர்வமாக சித்தாந்தத்தால் பிணைக்கப் பட்டவனா?

அரசியல் சீட்டுக்கட்டு சூதாட்டத்தில் மேஜையை விட்டு வெளியேறியவன் – அவ்வளவுதானே?!!

பிரியாணிப் போட்டியில் “தொடை எலும்பு” சுவைக்கக் கிடைக்காமல், குஸ்காவை சுவைக்கும் நிலைக்கு ஆளான “கொள்கைத் திருமகன்” தானே அந்த உடன்பிறப்பு?!!

ஸ்டாலின் மகள் வீட்டிலும், மருமகனிடமுமே வருமான வரித் துறை ரெய்டு வருகிறது என்றால் – துரை முருகன் சொன்னது போல – எவனோ உங்களில் ஒருவன் ஸ்ட்ராங்காகப் போட்டுக் கொடுத்து உள்ளான் என்று பொருள்!

எனவே பாஜகவை நோவதை விட, அந்தக் “கறுப்பு ஆடு” எது?- என்று உங்களிடையே தேடுங்கள்!

கடைசியாக ஒன்று!

நினைவிருக்கிறதா 1971 தேர்தல்?

பெருந்தலைவர் காமராஜர் – “ஆந்திரா பேங்கில் ஒரு கோடி ரூபாய் வைத்து இருக்கிறார்!”- என்று பிரசாரம் செய்தீர்கள்!

அவர் உங்களைப் போலப் பதறவில்லை!

“செக் தருகிறேன் – இருந்தால் போய் எடுத்துக் கொள்!”- என்றார்!

இறக்கும் போது நாலே நாலு வேட்டி சட்டையும், பையில் 130 ரூபாய் பணமும் வைத்திருந்த அந்தத் தலைவனை அப்படிப் பேசினீர்கள்!

சரித்திரம் திரும்புகிறது உடன் பிறப்பே! செய்த பாவம் தீருதடா சிவகுருநாதா!

காமராஜ் உங்களைப் பார்த்துச் சொன்னது போல், வருமான வரி அதிகாரிகளைப் பார்த்து தைரியமாகச் சொல்ல வேண்டியதுதானே?

“இருந்தால் எடுத்துகிட்டுப் போடா!”

அதை விட்டுவிட்டு ஏன் பாஜக தோல்வி பயத்தில் மிரட்டுகிறது என்ற அலறல்?!

  • முரளி சீதாராமன்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version