Home சினிமா மகாமுனி – MAGAMUNI – மெகாமுனி ..!

மகாமுனி – MAGAMUNI – மெகாமுனி ..!

ஏழு ஸ்வரங்கள் தான் இருக்கிறது , அந்த ஏழுக்குள் எப்படி மாற்றி மாற்றி சுவாரசியமாக இசையமைக்கிறோம் என்பது தான் வித்தையே என்று இசைஞானி ஒரு பேட்டியில் சொல்வார் . அதே போல பழக்கப்பட்ட  இரட்டை வேட ஆள் மாறாட்ட ஹீரோ சப்ஜெக்ட்டை  தனக்கே உரிய திரில்லர் திரைக்கதை பாணியில் எட்டு வருட இடைவெளிக்கு பிறகு  மௌன குரு சாந்தகுமார் மகாமுனி யாக தந்திருக்கிறார் …

காசுக்கு அல்லல்படும் கால் டாக்ஸி டிரைவர் கம் கொலைகளுக்கு ஸ்கெட்ச் போட்டுத்தரும் மகாதேவன்  ( ஆர்யா ) , ஆர்கானிக் விவசாயி கம் சமூக சேவை செய்யும் பிரமச்சாரி முனிராஜ்  ( ஆர்யா ) இவர்கள் இருவர் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள் இருவரையும் இடம் மாற்றுகின்றன . அதை ஸ்லோ கம் ஸ்டடி திரைக்கதையில் சொல்வதே மகாமுனி …

தொடர் தோல்விகளுக்கு பிறகு ஆர்யா வுக்கு பெயர் சொல்லும் படம் . இரண்டு கேரக்டர்களுக்குமே அடிப்படையில் பெரிய வித்தியாசம் இருந்தாலும் பயப்படுவதில் ஒன்று போலவே இருக்கிறார்கள் . அதிலும் குறிப்பாக மகா கார் கம்பெனி குமாஸ்தா , மனைவி , அரசியல்வாதி இளவரசு என்று எல்லோரிடமும் பம்மியே பேசுவது நெருடுகிறது . அப்படியிருப்பவர் எப்படி கொலைகளுக்கு ஸ்கெட்ச் போடுவார்  என்ற கேள்விக்கு படத்தில் பதிலில்லை. முனி நல்லவராக இருக்கலாம் ஆனால் சாதியின் விளைவால் தனக்கெதிரான நடக்கும் கொலை சதியை கூட  உணர முடியாத அளவு ரொம்ப நல்லவராக இருக்கிறார் !..

மஹிமா ஜர்னலிஸ்ட் கம் திராவிட சித்தாந்தவாதியாக பாடி லாங்குவேஜில் கலக்குகிறார் . குறிப்பாக தன்னை பெண் கேட்டு  வந்தவனை நோஸ்கட் செய்து அனுப்பிவிட்டு நக்கலாக  நடக்கும் இடம் செம்ம . சாரு நாவல் படிப்பது , அப்பா சரக்கை பிடுங்கி அடிப்பது இதெல்லாம் திராவிட பெண்களின் அடையாளங்கள் போல ?! . இந்துஜா பணம் கேட்டு படுத்தும் போதும் , ஆர்யா முதுகில் ரத்தத்தை பார்த்ததும் உருகும் போதும் , போலீஸ் ஆர்யாவை பிடித்தவுடன் மருகும்  போதும் பரிமளிக்கிறார் . இளவரசு , ஜெயப்ரகாஷ் , பாலாசிங் இவர்கலெல்லாம் அப்படியே கேரக்டருக்குள்  பொதிந்து விடுகிறார்கள் . இளவரசுவின் மச்சான் , க்ரைம் இன்ஸ்பெக்டர் இருவரும் கவனிக்க வைக்கிறார்கள் …

மகா முதுகில் குத்திய கத்தியை ஆப்பரேஷன் செய்து எடுக்க காசில்லாமல் வலியை பொறுத்துக்கொண்டே நண்பனை  ( காளி வெங்கட் )  வைத்து எடுப்பது ,எதிர்கட்சிக்காரன் கழுவி கழுவி ஊற்றிக்கொண்டிருக்கும் போது சோற்றில் சாம்பாரை ஊற்றி இளவரசு பிசைந்து அடிப்பது , பாம்பு கடியில் கதறும் ஆர்யாவை சாதிவெறியன் ஜெயப்ரகாஷ் காப்பாற்றுவது போல நடிப்பது , நம்பிக்கை , சமாதானம் என்று பேசி தனது முதல் காதலை போதையில் இன்ஸ்பெக்டர் விவரிப்பது , எந்த பணத்தை தேடி தேடி சேர்த்தாரோ அதே பணத்துக்கடியில் இளவரசு செத்து கிடப்பது என நிறைய சீன்களில் இயக்குனர் ஸ்கோர் செய்கிறார் …

ஆர்யா எதற்கு மனநிலை காப்பகத்திற்கு செல்கிறார் ? தனது அண்ணனை கொலை செய்தவர்களையே கொடுமையாக பழிவாங்கும் அருள்தாஸ் & கோ கடைசியில் அதற்கு காரணமான இளவரசுவுடன் ஏன் தோழமையோடு  தண்ணியடிக்க வேண்டும் ? கொலை செய்த காசை கேட்டு வாங்க ஆர்யா ஏன் அநியாயத்துக்கு பயப்படுகிறார் ? இவ்வளவு பொறுமையாக ( 2.38 மணிநேரம்) படத்தை காட்டும் இயக்குனர் ஆர்யாவின்  மேல் நடக்கும் கொலை முயற்சியை விசுவலாக காட்டாமல் டம்மியாக ஏன் வாய்வழி மட்டும் சொல்கிறார் ? சிரத்தையாக படத்தை எடுத்து விட்டு ஏதோ அவசர கதியில் ஏன் முடிக்க வேண்டும் என்கிற கேள்விகள் நிறைய படத்தில் இருக்கிறது . நீளமான படமாகவும் , அதே சமயம் அது தெரியாமல்  திரைக்கதை யுக்தியால் நம்மை கட்டிப்போட்ட விதத்திற்காகவும்  இந்த மகா முனி ஒரு மெகா முனி …

ரேட்டிங் : 3.5 * / 5 *
ஸ்கோர் கார்ட் : 44 

  • விமர்சனம்: அனந்து (pesalamblogalam.blogspot.com)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version